எதிர்பார்ப்புகளின் முதல் வெளிப்பாடு
நானும் அவரது தாயாரும் கோயிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அந்த காம்பவுண்டில் இருந்தவர்கள் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர் பார்ப்பு நிலவத் துவங்கியது.
அன்றைய தினம் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் சிறுவர்களுக்கு விடுமுறை. பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள். மதியம் விடுமுறை.
வழக்கம் போல் மாலையில் திண்ணையில் சபை களை கட்டியது.
அவர் வரும் வரையில் நான் அங்கிருந்தவர்களிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் வரும் வரையில் என்னிடம் கோயிலுக்குச் சென்று வந்த விஷயம் பற்றியோ அல்லது வேறு ஏதேனும் விஷயம் பற்றியோ எதுவும் பேசவில்லை. பொதுவான் விஷயங்களைத் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர் வந்தவுடன் என்னிடமும் அவரிடமும் பேசும் பொருள் மாறியது.
என்னிடம் இன்று காலையில் நீ இவனுடைய தாயாருடன் கோயிலுக்குச் சென்று வந்துள்ளாய். முதலில் அவர்களைப் பிடித்துக் கொண்டு பின்னர் இவரைப் பிடிக்க முடியும் என்று காய் நகர்த்துகின்றாயா என்று கேலி செய்தனர்.
உடனே நான் அப்படி ஒன்றும் இல்லை. வெள்ளிக்கிழமை மாலையில் நானும் என் தங்கையும் கோயிலுக்குச் செல்வதைப் பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன் என்று இவரது தாயார் என்னிடம் கூறினார்கள். ஆனால் நாங்கள் நடந்து செல்வோம் என்று சொன்னவுடன் அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லி விடடார்கள்.
அதன் பின்னர் இன்று சனிக் கிழமை என்பதால் முறையாக என்னுடைய தாயாரிடம் என்னை கோயிலுக்கு தம்முடன் அனுப்பும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் நான் அவர்களுடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தேன் என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள் உடனே அவரது தாயார் உனக்கு முத்த மழை பொழிந்தார்களாமே என்று கேட்டனர். அதற்கு நான் அது உண்மை தான். நான் பச்சை நிற பாவாடையும் மஞ்சள் நிற தாவணியுடன் இரவிக்கை போட்டிருப்பதைப் பார்த்து எந்த உடையிலும் நீ ஜொலிக்கின்றாய் என்று கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இதில் என்ன தவறு. அவர்கள் என் உடையைப் பாராட்டி இருக்கின்றார்கள் அவ்வளவு தான் என்று சொன்னேன்.
இந்த நேரத்தில் அனைவரும் அவரிடம் நீ நன்றாக கிண்டலடித்து சொல்வாயே. அதுபோல் இவளுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு பற்றி சொல் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
உடனே அவர் முதன் முதலாக என்னைப் பார்த்ததும் என்ன நினைத்தார் என்பதை கவிதையாக சொல்லட்டுமா என்று கேட்டார். அதற்கு அனைவரும் நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம் அது என்ன நிலையில் இருக்கின்றது என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் அனைவரிடமும் என்னைப் பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் என்ன நினைக்கின்றோம் என்பதனை அவள் கூறிய ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதனை அடுத்த வாரம் அனைவரிடமும் காட்டி விடுகின்றேன் என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் என்னைப் பற்றி என்ன எழுதியுள்ளீர்கள் என்பதனை நானாவது முன் கூட்டியே பார்க்க முடியுமா என்று கேட்டேன்.
அப்போது உடனிருப்பவர்கள் தனியாக காட்டக்கூடாது அனைவர் முன்னிலையில் தான் அவளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக கூறி விட்டார்கள்.
அனைவரும் மீண்டும் அவரைப் பார்த்து இவளுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு பற்றி ஓரிரு வார்த்தைகள் உடனே சொல் என்று கட்டளையிட்டனர்.
உடனே அவர் என்னைப் பார்த்ததும் என்ன நினைத்தார் என்று அவர்களிடம் கீழ்க் கண்டவாறு தெரிவித்தார்.
அன்று நாள் காலை விடியற் கால வேளை
கண்டேன் ஒரு கன்னிப் பெண்ணை தந்தேன் என் இதயம் தன்னை.
நான் ரோமியோவாக நினைக்கின்றேன்.
அவள் ஜூலியட்டா என்பது எனக்குத் தெரியாது
நான் அம்பிகாபதியாக நினைக்கின்றேன்
அவள் அமராவதியா என்பது எனக்குத் தெரியாது
நான் சலீமாக நினைக்கின்றேன்
அவள் அனார்க்கலியா என்பது எனக்குத் தெரியாது
ஆனால் இவர்களைப் போல்
காதலில் தோல்வியடைந்து
அது ஒரு காவியமாகி
நம் இருவர் மனங்களையும்
புண்படுத்துவதை விரும்பவில்லை.
முருகன் வள்ளியைக் கரம் பிடித்தது போல
அவளை வாழ்க்கையில் கரம் பிடித்து
நீண்டகாலம் இணைந்து வாழ ஆசைப்படுகின்றேன்.
நான் அனைவரிடமும் நான் அவர் அளவிற்குப் படிக்கவில்லை. அவரைப் போல எனக்கு உவமை எல்லாம் காட்டி எழுத வராது. என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். அதற்கு அவர்கள் விடவேயில்லை.
அவரைப் பற்றி நீ என்ன நினைக்கின்றாயோ அதனை சொல்லித் தான் ஆக வேண்டும். ஏதேனும் பிழை இருந்தால் திருத்திக் கொள்ளலாம். நீ சொல்வது எங்களுக்குப் புரியவில்லை என்றால் அவர் விளக்கிச் சொல்லி எங்களுக்குப் புரியச் செய்வார் என்று கூறினார்கள்.
நானும் வேறு வழியில்லாமல் கீழ்க் கண்டவாறு தெரிவித்தேன்.
எத்தனை பேர் வேண்டுமானாலும் அவருக்கு வலது கரமாக இருக்கலாம். ஆனால் நான் மட்டும் தான் அவருடைய வலக்கரம் பற்றி அவருக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி நிறுத்திக் கொண்டேன்.
உடனே என்னிடம் அனைவரும் விளக்கம் கேட்டார்கள். என்னால் சொல்ல முடியவில்லை. அதற்கும் அவரே விளக்கம்; அளித்தார்.
என்னுடைய வாழ்க்கையில் எனது முன்னேற்றத்திற்கும் எனது கட்டளைகளை மேற்கொள்வதற்கும் எனது உயர்விற்கும் என்னைக் காப்பாற்றுவதற்கும் எனக்கு உதவுவதற்கும்; எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் இருக்கலாம். அத்தனைக்கும் மேலாக திருமண மேடையில் வலப்புறம் அமர்ந்து எனது கரங்களால் தாலி கட்டிக் கொண்டு என்னுடைய் வலக்கரம் பற்றி வாழ் நாள் முழுவதும் இல்லறம் மேற்கொண்டு என்னுடன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து எப்போதும் என்னுடைய வாழ்க்கைத் துணையாக இருக்க அவள் ஆசைப்படுவதை இரண்டே வரிகளில் சுருக்கமாகச் சொல்லி இருக்கின்றாள் என்று நீண்ட நெடிய விளக்கத்தினை அவர் கூறினார். அவர் கூறியதைக் கேட்க எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
அனைத்தையும் கேட்ட அவர்கள் மீண்டும் கிண்டலடித்தார்கள். அவள் சொல்வதை உனக்குச் சாதகமாக எடுத்துச் சொல்ல உன்னால் தான் முடியும் எங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி “ஜாடிக்கேத்த மூடி” என்று கிண்டலடித்தார்கள்.