அன்னை இல்லம்
அவர் என்னிடத்தில் சொந்த ஊருக்கு பெண் பார்ப்பதற்கு சென்று வர இருப்பதாக சொல்லி விடை பெற்றுச் சென்றார். எனக்கு அது பற்றிய நினைவாகவே இருந்தது. ஆனால் எப்போது செல்லப் போகின்றார் எத்தனை நாள் தங்குவார் என்ற விவரம் எதுவும் என்னிடத்தில் சொல்லவில்லை.
இதற்கிடையில் எனது உறவினர் ஒருவர் சொந்த ஊரில் உடல் நலம் சரி இல்லாமல் இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வருமாறும் தந்தி வந்த காரணத்தால் நானும் என் கணவரும் என் குழந்தையுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றோம். சிகிச்சை பெற்று வரும் உறவினரை மருத்துவ மனையில் பார்த்து நலம் விசாரித்தவுடன் என் கணவர் திரும்ப ஊருக்கு தனியே வந்து விட்டார். நானும் என் குழந்தையும் மாத்திரம் சொந்த ஊரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம்.
நான் என் குழந்தையுடன் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்ற பின்னர் திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அவரது குடும்பத்தார் அனைவரும் ஒரு பெண்ணைப் பார்த்து விட்டு திரும்பும் சமயம் நான் சந்திக்க வேண்டியதாயிற்று.
என்னைப் பார்த்தவுடன் அவரது தாயாரும் அவரது அண்ணியும் என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். நான் கையில் குழந்தையுடன் இருப்பதால் என் குழந்தையைப் பெற்றுக் கொண்டு கொஞ்சி என் மகனுக்குப் பிறக்க வேண்டிய குழந்தை இடம் மாறி பிறந்துள்ளது என்று வருத்தப் பட்டார்கள்.
அவரது தாயார் என்னிடத்தில் கட்டாயம் குழந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள். நான் அவர்கள் புதிதாக வாங்கி குடியேறி உள்ள வீடு தெரியாத காரணத்தால் மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் அவர்களுடனேயே சென்று விட்டேன்.
அப்போது அவரது தாயார் என்னிடத்தில் உன்னை அவனுக்கு மணமுடித்து இருவரையும் ஆரத்தி எடுத்து வலது காலை வீட்டிற்குள் வைத்து வரச் சொல்லும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அழைத்துச் சென்றார்கள். அந்த சாக்கில் அவரது புதிய வீட்டின் முகவரி அறிந்து கொண்டேன்.
அந்த வீட்டில் நான் கால் வைத்தவுடன் நான் இந்த வீட்டிற்கு மருமகளாக வருகின்ற பாக்கியம் கிடைக்கவில்லையே என்று உள்ளுர வருத்தப் பட்டேன். அதே சமயம் அவர் என்னிடத்தில் ஒரு பெண்ணைப் பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது ஆனால் பயம் வரவில்லை. காரணம் அந்தப் பெண்ணுக்கு அவர் மீது அளவு கடந்த அன்பு மற்றும் பாசம் ஆனால் காதல் இல்லை. எனவே. அந்தப் பெண்ணுக்கு அவரைப் பிடித்து இருந்தால் அவருக்குப் பிடித்தமான என்னையும் கட்டாயம் பிடிக்கும். எனவே அந்தப் பெண்ணின் ஆவி என்னை ஆசீர்வதிக்கும் என்னும் திடமான நம்பிக்கை.எனக்கு உருவானது..
அவர்களது வீட்டிற்குச் சென்றவுடன் அவரது தாயார் நேரடியாக சமையலறைக்கு அழைத்துச் சென்று என் குழந்தையை பெற்றுக் கொண்டு கொஞ்சிவிட்டு எங்கள் வீட்டில் எனக்குப் பேத்தியாக பிறக்க வேண்டிய குழந்தை என்று மீண்டும் ஒரு முறை சொந்தம் கொண்டாடினார்கள்.
கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்துக் கொண்டு சோகத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்கள். நான் மருமகளாக அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்னும் சோகம் இருந்து கொண்டே இருப்பதாகச் சொல்லும் சமயம் என்னை திருமண பந்தத்தில் அவர் அடைய முடியாத காரணத்தால் அவர்கள் மகனை இழந்து விடுவோமோ என்று பயப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் அவர்கள் பார்த்து வந்த பெண்ணைப் பற்றிய விவரம் என்னிடம் சொன்னவுடன் நான் அவர்களிடத்தில் அந்தப் பெண்ணை என்னுடைய வீட்டிலேயே அவர் பார்த்து விட்டார் என்று தெரிவித்தேன்.. அவருக்குப் பிடித்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்றும் அவர் ஒன்றும் சொல்லவில்லை என்றும் அவர்களிடத்தில் தெரிவித்தேன். இருந்தாலும் என்னுடைய கணவர் அவருடைய உறவுக் காரப் பெண்ணாக இருந்தாலும் அந்தப் பெண் வேண்டாம் என்று அவரிடத்திலேயே சொல்லி விட்டு அதற்கான காரணத்தையும் அவரிடமே தெரிவித்து விட்டார் என்றும் சொன்னேன். உடனே அவரது தாயார் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டவுடன் அந்த காரணத்தை சொல்லி விட்டேன். அவர்களும் மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள்.
எங்களுக்குப் பெண்ணைப் பிடித்த பின்னர் அவருக்கு காட்ட இருந்ததாக சொல்லி விட்டு நான் வேண்டாம் என்று சொல்லி விட்ட காரணத்தால் கட்டாயம் அவர் வேண்டாம் என்று மறுத்து விடுவார் எனவும் வேறு பெண்ணை பார்த்து முடித்த பின்னர் பிடித்திருந்தால் வரச் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
நான் அவர்களிடத்தில் அவர் இன்னும் ஊருக்கு வரவில்லையா என்று கேட்டதற்கு அடுத்த வாரம் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் தான் வர இருப்பதாக தெரிவித்தனர். நான் வருத்தத்துடன் என் இருப்பிடம் சென்றடைந்தேன். சொந்த ஊருக்கு வந்தும் அவரைக் காண முடியவில்லையே என்னும் ஏக்கம் எனக்குள் இருந்தது. இருந்தாலும் அனைத்து உறவினர் வீடுகளுக்கும் ஒரு முறை சென்று வருவதற்குள் அவர் வந்து விடுவார் கட்டாயம் அவரைக் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இருந்தது.
இதற்கு இடையில் என்னுடைய தங்கை தமது மகள்களின் திருமணத்தை முடித்து விட்டு அதனால் ஏற்பட்ட கடன் சுமைகளால் சொந்த வீட்டை விற்று பாதி கடன்களை அடைத்து விட்டு வெளியூருக்குச் சென்று விட்டார்கள் எனவும் மேலும் கடன் காரர்கள் கடனைத் திருப்பிக் கேட்க தேடிக் கொண்டு இருப்பதால் அவர்களின் இருப்பிட முகவரி தெரியாமல் தலைமறைவாகி விட்டார்கள் என்பதும் தெரிய வந்தது.
அந்த வீடு அமைந்திருக்கும் தெருவில் நான் குழந்தையுடன் நடந்து வந்த சமயம் என்னுடைய தாயார் அவரை வெளியே தள்ளி விட்டு ரத்த காயங்களுடன் திரும்பியது எனக்கு நினைவுக்கு வந்தது. அதனை எண்ணும் போது என் கண்களிலிந்து நீர் பெருக்கெடுத்தது. அந்த வீட்டிற்கு புதிதாக வாங்கியுள்ள சொந்தக்காரர் பெயர் வைத்து இருந்தார்.
என்னுடைய தாயார் அவர் பெண் கேட்டு வந்த சமயம் வெறித் தனமாக நடந்து கொண்டதோடு அல்லாமல் இரத்த காயம் படும் அளவிற்கு வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்ட காரணத்தால் அவர் பண்டிகை கூட கொண்டாடாமல் திரும்பிச் சென்றதும் அதற்குப் பின்னர் எனக்கு கட்டாயத் திருமணம் நடந்தேறியதும் அந்த வீட்டில் வசிக்கும் போது தான்.
எந்த வீட்டில் வசிக்கும் சமயம் நான் என்னுடைய தாயாரால் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப் பட்டேனோ அந்த இல்லத்திற்கு புதிதாக வாங்கியுள்ள வீட்டின் உரிமையாளர் வைத்துள்ள பெயர் “அன்னை இல்லம்”. பொதுவாக அன்னை இல்லம் என்று பெயரினைப் பார்த்தால் அனைவருக்கும் தாய் மீது உள்ள அன்பு மற்றும் பாசம் நினைவுக்கு வரும்.
நான் அந்த வீட்டில் வசிக்கும் சமயம் என் அன்னையின் தவறாக செய்கையினால் நான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப் படுவதற்கு காரணமாக அமைந்த அந்த வீட்டிற்கு வைக்கப் பட்டுள்ள அன்னை இல்லம் என்னும் பெயர் மிகவும் வெறுப்பைத் தந்தது. பெற்ற தாயை அநாதை இல்லங்களில் தங்க வைத்து விட்டு வீட்டிற்கு மட்டும் அன்னை இல்லம் என்று பெயர் வைப்பார்கள் என்பது போன்ற வெறுப்பினை அந்த பெயர் பலகை எனக்குத் தந்தது.
ஒரு வார காலம் தங்கி இருந்த பின்னர் நானாகவே அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவரது தாயாரிடம் அவரது வருகை பற்றி விசாரித்ததில் என்னுடைய வீட்டில் அவருக்குக் காண்பித்த பெண்ணை அவருடைய தந்தை பெண்ணின் குடும்ப அந்தஸ்து மற்றும் சொத்தின் காரணமாக மணமுடித்து வைக்க விரும்புவதாகவும் அதனை அவரது தாயார் ஏற்காத காரணத்தால் வேறு பெண்களை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் இன்னமும் அமையவில்லை என்ற காரணத்தால் அவரது வருகை தள்ளிப் போய் விட்டது எனவும் தெரிவித்தார்கள்.
எங்கு சென்றாலும் அவருடைய நினைவுகள் மற்றும் அவருடன் உல்லாசமாக சுற்றித் திரிந்த தருணங்கள் கண் முன் தோன்றி மறைந்த காரணத்தால் மேற் கொண்டு தங்க மனமின்றி மீண்டும் ஊருக்குத் திரும்பி விட்டேன்.
வீட்டிற்குத் திரும்பியவுடன் என் குழந்தை என்னிடம் கேட்ட முதல் கேள்வி பாபா எப்போது வருவார் என்பது தான். சொந்த ஊருக்குச் சென்று என் குழந்தை கேட்கும் பாபாவைத் தான் நான் தேடினேன் என்பது என் குழந்தைக்குத் தெரியாது. நல்ல வேளையாக நான் என் செல்லப் பெண்ணிடம் பாபா வீடு இது தான் என்று சொல்லவில்லை. சொல்லிலியிருந்தால் என் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும்.