நிகழ்வுகளின் பரஸ்பர பரிமாற்றம்.
அவர் என்னிடத்தில் அவரது காதலை வெளிப் படுத்திய நாள் முதல் அவருக்கு வேலை கிடைத்து வேலையில் சேருவதற்கு வெளியூருக்கு புறப்பட்டுச் செல்லும் நாள் வரையில் அவரும் நானும் நகமும் சதையும் போல கண்களும் இமைகளும் போல ஒன்றாக இணைந்து செயல் பட்டோம்.
இரத்த ஓட்டத்திற்கும் இதயத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. இதயம் துடித்தால் மட்டுமே இதயத் துடிப்பின் காரணமாக இரத்தம் உடல் முழுவதும் உள்ள நாடி நரம்புகள் வழியாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் சென்று திரும்பும். இதயத் துடிப்பு நின்று விட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். ஏதேனும் விபத்துகளின் காரணமாக நமது உடலிலிருந்து ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி விட்டால் ரத்தம் குறைந்து விட்டதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத் துடிப்பு குறைவதற்கும் அதன் காரணமாக இதயத் துடிப்பு நிற்பதற்கும் உயிர் பிரிவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ரத்தம் நம் உடலின் உள்ள நாடி நரம்புகளின் வழியாகச் சென்று திரும்புவதால் இதயம் துடிக்கின்றதா அல்லது இதயம் துடிப்பதனால் தான் இரத்த ஓட்டம் நடைபெறுகின்றதா என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இதயத் துடிப்பிற்கும் இரத்த ஓட்டத்திற்கும் எப்படி ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றதோ அது போல நம் இருவருக்குள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத காதல் என்னும் பந்தம் மற்றும் பிரியாத அன்பு இருந்து கொண்டிருக்கின்றது. இதயத் துடிப்பு நான் என்றால் இரத்த ஓட்டமாக அவரும் இரத்த ஓட்டம் நான் என்றால் இதயத் துடிப்பாக அவரும் இருக்கின்றார். நான் இறந்தாலும் சில நேரம் என் இதயம் துடிக்கும். அதன் ரத்த ஓட்டம் அவரிடத்தில் இருக்கின்றது என்னும் காரணத்தால். அதே நிலை தான் அவருக்கும்.
நாம் இருவரும் காதலர்களாக இருந்த சமயம் ஒன்று சேர்ந்து யாருக்கும் தெரியாமல் அடிக்கடி கோயில் குளங்களுக்குச் சென்று வருவோம். நம் இருவரது குடும்பத்தாருடன் திரைப்படத்திற்குச் சென்று வரும் சமயம் மிகவும் சந்தோஷமாக இருப்போம்.
உல்லாசப் பயணம் புனித யாத்திரை என இருவரது குடும்பத்தாரும் ஒன்றாகச் சேர்ந்து சென்று வந்த சமயத்தில் அவருடன் நான் மிக மிக நெருக்கமாக பழகி வந்தேன். அச்சமயத்தில் பலப்பல கோயில்களில் அவருடைய தாயாரும் நானும் சேர்ந்து மாமியாரும் மருமகளும் போல அவருடன் பலப்பல பூஜைகள் செய்து வழி பட்டோம். நான் என்னுடைய வாழ் நாளில் சந்தோஷமாக இருந்தேன் என்றால் அது அவரைச் சந்தித்தது முதல் அவர் பணியில் சேருவதற்குப் புறப்பட்டுச் செல்லும் நாள் வரையில் உள்ள இடைப்பட்ட காலம் தான்.
அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தவுடன் வெளியூரில் கிடைத்துள்ள வேலை உள்ளுரில் கிடைக்குமா என அவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடத்தில் சென்று வந்த அந்த இடைப்பட்ட காலத்தில் கூட மிக மிக சந்தோஷமாக இருந்தேன். வெளியூரில் வேலை கிடைத்த காரணத்தால் நாம் இருவர் மட்டும் தனிமையிலே ஆனந்தமாக இல்லறத்தை அனுபவித்து மிக மிகச் சந்தோஷமாக இருக்க முடியும் என்னும் எண்ணம். ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.
அவரது ஜாதகத்துடன் என்னுடைய ஜாதகத்தையும் அவரது விருப்பப்படி சேர்த்து ஜோதிடரிடத்தில் காண்பித்திருந்தால் நாம் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைவதற்கு ஏதேனும் தடைகள் இருக்கின்றனவா எனத் தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லக் கேட்டு செய்திருப்போம்.
அவர் என்னை மனதார விரும்புகின்றார். அவரது தாயாரும் நம் இருவரையும் இல்லறத்தில் இணைத்து வைக்க ஆசைப் படுகின்றார்கள். என்னுடைய இல்லத்தில் நிறைய செலவு செய்து என்னை அவருக்கு திருமணம் செய்து கொடுத்து வைக்கும் அளவிற்கு நகைகளோ அல்லது பண வசதியோ இல்லாத காரணத்தால் எனது வீட்டார் மறுப்பு எதுவும் தெரிவிக்க மாட்டார்கள். நிச்சயம் நாம் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியும் என்னும் திடமான நம்பிக்கை எனக்குள் இருந்தது. எனவே நான் எனது ஜாதகத்தை கொண்டு செல்ல விரும்பவில்லை.
அவர் வேலையில் சேர்ந்தவுடன் அவரிடமிருந்து பிரிப்பதற்கு என்னை முதலில் வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை அவர் அறிந்து கொண்டு நான் சொந்த ஊரில் இல்லாத சமயத்தில் வந்தால் என்னை சந்திக்க முடியாது என்பதன் காரணமாக நான் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் என்னைக் காணும் பொருட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு முதன் முறையாக பெற்றோர் இல்லத்திற்கு வந்தார்.
வேலையில் சேர்ந்த பின்னர் முதல் முறை பெற்றோர் வீட்டுக்கு வந்த சமயத்திலேயே அவருடைய தந்தையிடம் என்னை திருமணம் செய்து கொள்ள முறையாக அனுமதி கேட்டார். அவரது தந்தை அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த காரணத்தால் என்னை வீட்டிற்கு வெளியே தனிமையில் சந்தித்து அவருடைய தந்தை நம் இருவரது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகச் சொன்னார். ஆனாலும் என்னைக் கைவிடவில்லை
இருவரும் சேர்ந்து அவர் பணியாற்றும் ஊருக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையினை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்து எனக்கும் அவருக்கும் சேர்த்து பயணச் சீட்டினை எடுத்து என்னிடத்தில் கொடுத்து அவருடன் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். நான் சற்று பின் வாங்கினேன். அதன் விளைவு இன்று வரை அவரைப் பிரிந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றேன்.
அவருக்கு வேலை கிடைத்து வெளியூரில் வேலையில் சேர்ந்தவுடன் அந்த நம்பிக்கையை முறியடிக்கும் அளவிற்கு சதி வேலைகளும் என் குடும்பத்தாருக்கு பண உதவிகளும் நடந்தேறிய காரணத்தால் நானும் அவரும் பிரிய நேரிட்டது. நம் இருவரது பிரிவு நமக்கும் அவருடைய தாயாருக்கும் நம் நண்பர்களுக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
எனக்குத் திருமணம் ஆகி விட்ட நிலையில் அவரது நினைவுகளை மட்டும் பின் தொடர முடிகின்றது. அவரை நிஜத்தில் நெருங்கும் தகுதி எனக்கு இல்லாமல் போய் விட்டது. அவர் அருகில் இருக்கும் உரிமை எனக்கு இல்லை. ஆனால் அவரது நினைவுகளோடு இருக்கும் உரிமை எனக்கு எப்பொழுதும் உண்டு.
பேரன் பேத்திகள் எடுத்த பின்னரும் கூட என்னுடன் அவர் பழகிய நாட்கள் இன்னும் இளமையாக வசந்த கால நினைவுகளாக இருக்கின்றன. அவர் என்னைத் தேடி வர முடிகின்றது. ஆனால் நான் அவரைத் தேடிச் செல்ல முடியவில்லை. அவரது வருகையை எதிர் பார்த்து என் மனம் ஏங்கித் தவிக்கின்றது. அவரது வீட்டில் நடைபெற்ற துயர சம்பவத்தால் அவர் மனமுடைந்து விட்டார். எனவே நான் அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என நினைத்து எப்படியாவது சென்று வருவது எனத் தீர்மானித்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றேன்.
வழக்கமாக நான் சொந்த ஊருக்குச் சென்றால் அவரது வீட்டிற்கு நேரடியாக செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் அவரது வீட்டில் அவருக்கு மனைவியுடன் பல பிரச்சினைகள் வரலாம். எனவே அவரது நண்பரான எனது உறவினர் வீட்டிற்குச் சென்று நான் வந்துள்ள விவரத்தையும் தங்கியுள்ள இடத்தின் முகவரியையும் தெரிவிப்பேன்.
சில சமயங்களில் அவர் என் உறவினர் வீட்டுக்கு உடனடியாக நேரில் வந்து சந்திப்பார். மனம் விட்டுப் பேச வேண்டும் என்பதற்காக நானும் அவரும் என்னுடைய உறவினரும் சேர்ந்து மாடிக்குச் சென்று விடுவோம். நான் என் உறவினர் வீட்டிலிருந்து அவரை அழைக்கும் சமயத்தில் வேறு முக்கியமான வேலைகளில் இருந்தால் மாலை வேளையில் நான் தங்கியுள்ள இடத்திற்கு அருகே வந்து நேரில் சந்திப்பார்.
சுமார் ஒரு வார காலம் அவரது வருகைக்காக சொந்த ஊரில் காத்திருந்து விட்டு அவரைக் காண முடியாத ஏக்கத்துடன் மீண்டும் ஊருக்குத் திரும்புவதற்கு பஸ்ஸில் ஏறி அமர்ந்து இருந்தேன். அந்த சமயம் அவர் நேரடியாக பஸ்ஸில் வந்து என்னை சந்தித்தார். எனக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. அவரைக் கண்டவுடன் எனக்கு மிக மிக சந்தோஷம்.
அவர் என்னிடத்தில் என்னைப் பார்க்க என்னுடைய இல்லத்திற்குச் சென்று வந்த விவரத்தையும் அதன் பின்னர் இங்கு என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு எல்லாம் சென்று என்னைத் தேடி வந்த சமயம் எந்த பஸ்ஸில் எப்போது ஊருக்குத் திரும்புகின்றேன் என்னும் விவரத்தை மாத்திரம் தெரிந்து கொள்ள முடிந்ததாகவும் அதன் படி என்னைப் பார்க்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லும் பொருட்டு நான் எனது இல்லத்திலிருந்து சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்ற அதே நேரத்தில் அவர் என்னை சந்தித்து ஆறுதல் பெறுவதற்கு ரயிலில் எதிர் திசையில் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பதனை அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். ஆமாம் என்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு நான் அவரை நாடுகின்றேன் என்றால் அவரது துன்பத்தை நான் தானே களைய வேண்டும். ஆனால் இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகின்ற காரணத்தால் சில நேரங்களில் அவ்வாறான ஆசைகள் நிறைவேறுவது சாத்தியமில்லாமல் போய் விடுகின்றது.
எனது திருமணத்திற்குப் பின்னர் என்னுடைய தாயார் காலமாகி விட்டதாலும் என்னுடைய தங்கையின் வீட்டார் அதிக கடன் சுமை காரணமாக தலைமறைவாகி விட்ட காரணத்தாலும் தாய் வீட்டார் மற்றும் தாய் வழி உறவினர்கள் என்னும் உரிமையுடன் நான் தங்குவதற்கு சொந்த ஊரில் எங்கும் இடம் இல்லாமல் போய் விட்டது. அவரது தாயாரும் காலமாகி விட்ட காரணத்தால் அவரது பெற்றோர் வீட்டுக்கும் சென்று வர முடியாது.
அவர் என்னை நேரில் சந்திக்க வந்த சமயத்தில் எனக்கு பயணத்தின் போது சாப்பிடுவதற்காக சிற்றுண்டியும் பிஸ்கட்டுகளும் குளிர் பானமும் வாங்கி வந்திருந்ததை கொடுத்து விட்டு என்ன விவரம் எனக் கேட்ட சமயம் நான் அவரிடத்தில் நிறையப் பேச வேண்டும் என்பதன் காரணமாக பத்து பதினைந்து நாட்களில் கட்டாயம் என்னைப் பார்க்க என்னுடைய இல்லத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டேன்.
அவர் என்னுடன் அப்போதே வருவதாகச் சொன்னார். நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். காரணம் என்னை வரவேற்க என்னுடைய மகன் மற்றும் மறுமகள் இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்திருப்பார்கள். அப்போது நம் இருவரையும் ஒன்றாதகச் சேர்த்துப் பார்த்து விட்டால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது மற்றும் நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அம்பலமாகி விடக் கூடாது என்னும் எண்ணம்.
எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் எனது இல்லத்திற்கு வந்து என்னை நேரில் சந்திப்பதாகத் தெரிவித்த சமயம் விடுமுறை நாளில் பிற்பகலில் வருமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு காரணம் கேட்டதற்கு அப்போது வீட்டில் உள்ள அனைவரும் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்றிருப்பார்கள் எனவும் அப்போது தான் மனம் விட்டுப் பேச முடியும் எனவும் தெரிவித்தேன். பஸ் புறப்பட்ட சமயம் இருவரும் கையசைத்து விடை பெற்றோம். என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது.
எனது கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு அவர் இரண்டு மூன்று வாரங்களில் என்னைச் சந்திக்க எனது இல்லத்திற்கு வருகை தந்தார். வழக்கம் போல சிற்றுண்டி மற்றும் பானம் மிகச் சந்தோஷமாக பகிர்ந்து உட்கொண்டோம். அதன் பின்னர் பேச ஆரம்பித்தோம்.
முதலில் அவரது இல்லத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் அனைத்தையும் அவர் சொல்ல தெரிந்து கொண்டேன். அதன் பின்னர் என்னுடைய வீட்டில் உள்ள பிரச்சினைகளான பெரிய மகன் வீடு கட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் செல்வது சிறிய மகனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பது மற்றும் சிறிய மகனின் திருமணத்திற்கு ஒதுக்கிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது பற்றிய அனைத்தையும் அவரிடத்தில் எடுத்துக் கூறி அவற்றை சமாளிப்பதற்கான வழி முறைகளை அவர் எடுத்துச் சொல்ல அந்த அறிவுறைகளை கவனமாக மனதில் பதிந்து கொண்டேன்.
அவர் போதுமான வசதிகள் மற்றும் வருமானம் இருந்தும் கூட அவர் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவத்தால் மீண்டும் திருமணம் ஆனவுடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவது போன்றதொரு புதிய வாழ்க்கையினை எப்படி எதிர்கொள்வது என்றும் எதிர் காலத்தை எப்படி சமாளிப்பது என்றும் எண்ணி மன வேதனைப் படுகின்றார். நான் எனது கணவர் உடல் நிலை காரணமாக இருந்த சொத்துக்கள் வருமானம் அனைத்தையும் இழந்து தனி மரமாக எதிர் காலத்தை எண்ணி மன வேதனைப் படுகின்றேன்.
இவ்வாறான இக்கட்டான கால கட்டத்தில் நான் அவருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்டிருந்தால் சந்தோஷம் குறைவில்லாமல் இருந்திருக்க முடியும் எனத் தோன்றுகின்றது. இறைவன் நம் இருவரையும் சோதிக்கின்றான்.
காலைப் பனி மூட்டமும் மஞ்சள் வெயிலும் நீண்ட நேரம் இருக்காது. அது போல அவர் எனது இல்லத்திற்கு வந்து நீண்டநேரம் இருக்க முடியவில்லை. அவர் என்னிடமிருந்து விடைபெற்று திரும்பிய சமயம் மீண்டும் விரைவில் வருமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் இதுவரையில் உத்தியோகத்தில் இருந்த காரணத்தால் அலுவலக வேலை என்று சொல்லி வர முடிந்ததாகவும் இனிமேல் என்ன செய்வது என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது எனவும் சொல்லி விட்டு விடை பெற்றார்.
வழக்கம் போல் சில நாட்கள் தூக்கமில்லாமல் கவலையுடன் இருந்தேன். ஆனால் எதனையும் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.