மறக்க முடியாத நினைவுகள்.
அவர் எனது இல்லத்திற்கு வந்து சென்றால் சுகமான சோகங்களைப் பகிர்ந்து கொள்வோம். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து அது தோல்வி அடைந்த காரணத்தால் நமக்கிடையே ஏற்பட்ட பிரிவு நம் இருவரையும் வாழ்க்கை முழுவதும் சோகத்தைக் கொடுத்தாலும் அவருடன் அவ்வப்போது பேசுவது எனக்கு ஓரளவு தற்காலிக சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும்.
இரண்டு ஆண்டுகள் கழித்து என் இல்லத்திற்கு வந்தவர் என்னுடைய இதயத்தை இருண்ட இதயமாக மாற்றி விட்டார். அவரது தாயாரின் இறப்பு செய்தி எனக்கு மிகவும் வேதனையையும் துக்கத்தையும் கொடுத்து விட்டது.
என்னையும் அவரையும் திருமண கோலத்தில் கண்டுகளிக்க வேண்டும் என்று நினைத்த ஒரு நல்ல இதயத்தின் துடிப்பு நின்று விட்டது என்பதனை அறிந்த போது எனக்குள் எங்கோ வலிக்கின்றது. ஆனால் வலிக்கின்ற இடம் இது தான் என்பதனை அறிய என்னால் முடியவில்லை. சோகம் என்னை கவ்விக் கொண்டு விட்டது. ஆனால் சோகத்தினைப் போக்குவதற்கான வழி முறைகள் தெரியவில்லை.
யாரிடத்திலும் நான் எதுவும் பேசவில்லை. காரணம் என்னை வருங்கால மருமகளாகவே எண்ணிக் கொண்டு என்னையும் அவரையும் திருமண பந்தத்தில் சேர்த்து வைக்க வேண்டும். அவரது வீட்டில் நான் வலது காலை எடுத்து வைத்துச் சென்று மருமகள் என்னும் அந்தஸ்துடன் விளக்கேற்ற வேண்டும் என்று எண்ணி என்னை பலப்பல கோயில்களுக்கு அழைத்துச் சென்று நம் இருவரது எதிர்கால இல்லற வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என பிரார்த்தனையைத் துவக்கி வைத்து அது தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருந்த அவரது தாயார் என்னுடன் பேசுவதற்கு தற்போது உயிருடன் இல்லை.
அவரது தாயாரின் மறைவு என்னுடைய தாயாரின் மறைவினை விட அதிகமான சோகத்தைக் கொடுத்தது. காரணம் என்னுடைய தாயார் என்னை அவரிடமிருந்து பிரிக்க என்னென்ன சதி வேலைகள் செய்ய முடியுமோ அதனை எல்லாம் செய்து என்னை அவரிடமிருந்து பிரித்து என்னை வாழ்நாள் முழுவதும் சோகத்தில் ஆழ்த்திச் சென்றார்கள்.
நான் அதிகம் பாசம் வைத்திருக்கிற யாரும் கடைசி வரை என் கூட இருந்ததில்லை. இது என்னோட விதி. நானும் அவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி அதற்கான பலப்பல முயற்சிகளை மேற்கொண்ட அவரது தாயார் பற்றிய நீங்காத நினைவுகளின் ஞாபகங்களை மறக்காமல் பொக்கிஷமாய் பூட்டி வைத்து இருக்கிறேன் என் இதயம் என்னும் பெட்டகத்திற்குள்.
நான் முதன் முதலாக அவரது தாயாரைச் சந்தித்த சமயம் என்னுடைய ஆடைகள் மிகவும் நேர்த்தியாக இருப்பதாகச் சொல்லி பாராட்டினார்கள். அதன் பின்னர் அவரது தாயாருக்கு கோயில் பிரசாதம் கொடுத்த சமயம் என்னுடன் கோயிலுக்கு வர ஆசைப் படுவதாகத் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அவர்கள் என்னை தன்னுடன் கோயில்களுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள்.
அவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாத போது ஒரே ஒரு நாள் மட்டும் அவர்கள் வீட்டில் சமைத்தேன். உடல் நலம் சரியில்லாத போதும் கூட வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிடக் கூடிய அளவிற்கு சமையல் சுவையாக இருக்கின்றது என என் சமையலைப் பாராட்டினார்கள்.
இந்நிலையில் அவரது குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நான் பணிவிடை செய்வதாகக் கனவு கண்டு அதனை அவரிடம் தெரிவித்து மறுநாள் காலையில் அவரது தாயாரது தங்கை உடல்நலம் சரியில்லை என்று பார்க்கச் சென்ற சமயம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு நீண்ட காலம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எங்களை வாழ்த்திக் கொண்டே அவர்கள் என் தோழில் சாய்ந்த போது எனது மடியில் அவரது தங்கையின் உயிர் பிரிந்தது என்பதனை அறிந்து கொண்டு அவரது குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள் மீது நான் மிகுந்த அக்கரையுடன் இருப்பதாக முடிவு செய்து என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்து அதற்கான பூஜையினை எனக்குத் தெரியாமலேயே துவக்கி வைத்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் சுற்றுலா பயணமும் அதன் பின்னர் ஐந்து நாட்கள் புனித யாத்திரையும் சென்று வந்த சமயத்தில் அவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் சொந்த மருமகள் போல கவனித்துக் கொண்டு அவருடன் என்னையும் சேர்த்து பல இடங்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வைத்து அதனைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
எனக்கே தெரியாத என்னிடத்தில் உள்ள சில குணங்களை அவர்கள் கண்டறிந்து அவைகளை என்னிடத்தில் சுட்டிக் காட்டி பாராட்டினார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் என்னை ஒரு குடும்ப உறுப்பினராகவே எண்ணி எனக்குத் தனிப்பட்ட அந்தஸ்து கொடுத்தார்கள். அவரது தாயார் நம் இருவரையும் மகனாகவும் மருமகளாகவும் தான் பார்த்தார்கள். ஆனால் அதனை வெளிக் காட்டிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
நான் என்னுடைய உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும் சமயம் அவரைப் போலவே அவர்களும் எனது பிரிவினை எண்ணி வருந்தினார்கள். நான் ஒரு வாரத்திற்கு மேல் செல்லும் சமயம் இத்தனை நாட்கள் என்னைப் பார்க்காமல் எப்படி இருப்பது என வருத்தப் படுவார்கள். அதே போல உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வருவதற்கு இந்த நாட்களில் தான் செல்ல வேண்டும் எனவும் இந்த நாட்களில் சென்றால் இந்த நாட்களில் திரும்பக் கூடாது எனவும் நல்ல நாள் பார்த்து தான் திரும்பி வர வேண்டும் எனவும் அறிவுறைகள் வழங்குவார்கள்.
என் மீது அளவுக்கு அதிகமான அக்கரை காட்டி சந்தோஷப்பட்ட அவரது தாயார் எனக்கு வேறொருவருடன் கட்டாயத் திருமணம் நடந்ததை கேள்விப்பட்டு மிகவும் வேதனைப் பட்டார்கள். நான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் என்னுடைய இல்லத்திற்கு வந்து சென்றார்கள். அதன் பின் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் ஒரு முறை வந்து பார்த்து எனக்குப் பேத்தியாகப் பிறக்க வேண்டிய குழந்தை எனச் சொல்லி கொஞ்சி பரிசுகள் வழங்கினார்கள்.
அதே போல இந்த ஊருக்கு வரும் சமயம் எல்லாம் என் இல்லத்திற்கு வந்து என்னைப் பார்த்தே தீர வேண்டும் என என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என் மீது இவ்வளவு அன்பு செலுத்தியவரை நான் இனிமேல் காண முடியாது என நினைக்கும் சமயம் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
அவரிடத்தில் நான் ஏதேனும் ஒன்றினை மறுத்தால் அது எனக்கு நீண்ட கால துக்கத்தை கொடுக்கின்றது. முதல் முறையாக அவர் பணியாற்றும் ஊருக்கு அழைத்துச் செல்ல டிக்கட் எடுத்துக் கொடுத்த சமயம் பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் ஓடிப் போய் விட்டாள் என்னும் அவப் பெயர் வந்து விடக்கூடாது என்னும் எண்ணத்தில் பெற்றோர் சம்மதம் நிச்சயம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு அவருடன் செல்ல சம்மதிக்கவில்லை. அதன் விளைவு எனக்கு கட்டாயத் திருமணம். அதனால் நான் அவரை நிரந்தரமாகப் பிரிய நேரிட்டது.
இரண்டாவதாக எனக்கு தீபாவளிக்கு புத்தாடை எடுக்காமல் வேறு விசேஷ நாட்களில் எடுக்குமாறும் எனக்கு மட்டும் எடுக்குமாறும் குழந்தைகளுக்கு வேண்டாம் என்றும் சொன்னேன். ஆனால் அவரால் தொடர்ந்து எனக்கு புத்தாடை பரிசளிக்க முடியாமல் போய் விட்டது.
அவருக்கு தீபாவளிப் பண்டிகை கிடையாது. எனவே எனக்கு வழக்கமாக கொடுக்கும் தீபாவளிப் பரிசு கிடைக்கவில்லை. அவரிடமிருந்து பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாதது மற்றும் அதன் காரணமாக அவர் என் இல்லத்திற்கு வர முடியாமல் போனதை நினைக்கும் போது எதனையோ பறிகொடுத்தது போல இருக்கின்றது.
காலாண்டு விடுமுறை அல்லது கோடை கால விடுமுறை என இல்லாமல் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என்னைக் காண அவர் வருவார். நம் இருவருடைய குழந்தைகளும் வளர ஆரம்பித்து விட்டார்கள். எனவே அவரிடமிருந்து பாதி சாக்லெட் அல்லது அரை டம்ளர் காபியினை என்னால் என் குழந்தைகளுக்கு முன்னால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது எனக்கு பெருத்த இழப்பையும் சோகத்தையும் கொடுத்தது என்பதோடு நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் குறைந்து கொண்டே வருவதாக உணர்கின்றேன்.
அவர் என்னுடைய இல்லத்திற்கு வரும் சமயத்தில் நம் இருவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் நமது இருவரது மனங்களும் வேதனைப் படுகின்றது என்பதற்காக வேறு ஏதேனும் பேச வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேறு வேறு சம்பவங்கள் பற்றிப் பேசுவோம். அதனால் என் குழந்தைகளுக்கு நாம் இருவரும் காதலித்தது பற்றியோ அல்லது வேறு எந்தப் பிரச்சினைகளும் தெரிய வராது.
அப்படி ஒரு நாள் நான் அவரிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் சமயம் கர்நாடகாவைச் சேர்ந்த தொலைக் காட்சியில் வருகின்ற அந்தப் பெண்ணுடன் எப்படி நெருக்கம் ஏற்பட்டது எனக் கேட்டேன். அவர் எதனையும் என்னிடத்தில் மறைக்க மாட்டார்.
நம் இருவருக்கு இடையே இருந்த நெருக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பெண் அவரிடத்தில் அன்பு செலுத்த ஆரம்பித்து அதன் பின்னர் அவரிடம் சொந்த ஊருக்குச் செல்லும் சமயம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் மற்றும் சந்தன நிறத்தில் சுங்கடி சேலை வாங்கி வருமாறு சொல்லி இருக்கின்றாள். அதே போல அவருக்கும் அதே நிறத்தில் சட்டை வாங்கிக் கொள்ளுமாறும் சொல்லியுள்ளாள்.
அவரும் அந்தப் பெண் கேட்டுக் கொண்ட படி வாங்கி வந்து கொடுத்த சமயம் நான் ஏன் இவைகளை வாங்கி வரச் சொன்னேன் என்பது புரியவில்லையா எனக் கேட்டுள்ளாள். அவர் ஒன்றும் பேசாமல் இருந்த நேரத்தில் இந்தக் குங்குமத்தை நீங்கள் என் நெற்றியில் வைக்க வேண்டும் எனவும் அவர் வாங்கி வந்த சந்தன நிற சுங்கடி புடவை அவளுக்கு கூரைப் புடவை போல எனவும் சொல்லி விட்டு அவள் மீது வெறுப்பு இல்லை என்றால் அவளது பிறந்த நாளன்று அந்த சட்டையை அணிந்து வருமாறு சொல்லி அவரும் அதே போல அணிந்து சென்ற பின்னர் அவர் மீது அன்பு செலுத்தத் தொடங்கி விட்டாள் என்று சொன்னார். ஆனால் அவளது நெற்றியில் குங்குமம் வைக்க அவரது மனம் இடம் தரவில்லை என்று சொன்னார்.
நானும் அவரும் பலமுறை கோயிலுக்குச் சென்று அவர் எனக்கு பல முறை குங்குமத் திலகத்தை என் நெற்றியில் இட்டு இருக்கின்றார். நானும் அவருக்கு விபூதி குங்குமம் பூசி விட்டு கண்களில் விழுந்து விழாதவாறு அவரது கண்களை என் கைகளால் மறைத்துக் கொண்டு ஊதி விட்டிருக்கின்றேன். ஆனால் அது சமயம் இது போன்ற எண்ணங்கள் எனக்குத் தோன்றவில்லை. இது தான் படித்தவர்களுக்கும் படிக்காத எனக்கும் வித்தியாகம் என்பதனை நீண்ட காலத்திற்குப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.
நான் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள எவ்வாறு முன்வரவில்லையோ அது போல அந்தப் பெண்ணின் தாயார் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தியதன் காரணமாக அந்தப் பெண்ணையும் அவர் மணக்க முடியவில்லை. என்னை விட மிகவும் அழகானவள் நன்றாக படித்தவள். அவளுக்கே இந்த நிலை எனில் என் நிலை எம்மாத்திரம்.
எவ்வளவு தான் சந்தோஷமாக வேறு வேறு விஷயங்கள நாங்கள் இருவரும் பேசிக் கொண்டாலும் அவர் வந்து சென்ற பின்னர் எனக்கு பலப்பல இரவுகள் தூக்கமே இல்லாமல் தவிப்பேன். பல நாட்கள் என் தலையணைகள் கண்ணீரால் நனைந்திருக்கும்.