முதலாவது அறிவுறை மற்றும் பிறந்த நாள் பரிசு
குடும்ப சூழ்நிலை காரணமாக நான் அடிக்கடி எனது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று தங்குவது வழக்கமாகி விட்டது. அந்த காரணத்தால் நான் மாதத்தில் நான்கைந்து நாட்கள் மட்டுமே என்னுடைய வீட்டில் இருக்க முடிந்தது.
அப்போதும் கூட நான் அவருடன் மனம் விட்டுப் பேசக்கூடிய அளவிற்கு சூழல் இருக்காது. காரணம் காம்பவுண்டில் உள்ள அனைத்து தோழர்களும் தோழியர்களும் மாலையில் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய காரணத்தால் அவரது நண்பர்கள் கல்லூரிக்குச் சென்ற காரணத்தால் நண்பர்களின் வருகை பகலில் குறைந்து விட்டது.
அவர் தந்தை கொடுக்கும் வெளியில் செல்லும் வேலைகளை பகலில் முடித்து விட்டு நீண்ட நேரம் அந்தக் கூட்டத்தில் இருந்தால் கூட நான் தனிப்பட்ட முறையில் அவருடன் மனம் விட்டுப் பேச முடியாது.
அதோடு அவரது படிப்பினை பாதியிலேயே நிறுத்திய காரணத்தால் அவர்கள் அனைவரும் அவரது தந்தையை மாறி மாறி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அவரால் எதுவும் பேச முடியாது. ஏனெனில் அவரது எதிர்காலக் கனவு பலிக்கவில்லை என்னும் ஏக்கம்.
எப்போதாவது எங்கள் இருவருக்கும் தனிமை கிடைக்கும் சமயம் என்னுடைய குடும்பத்தார் நெருப்பு வளையம் போல அங்கு இருந்து நம் இருவரையும் மனம் விட்டுப் பேச முடியாதவாறு தடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர் என்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து திரைப்படம் காண வருவதை ஆரம்பம் முதல் வழக்கமாக வைத்திருந்தார். நல்ல வேளையாக அவர் அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நானும் அவரும் ஒன்றாகவே என் குடும்பத்தாருடன் திரைப்படத்திற்குச் சென்று வந்தமையால் திரைப்படம் முடிந்து வீட்டிற்கு வரும் சமயம் மாத்திரம் மனம் விட்டுப் பேசிக் கொண்டே நடந்து வரும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
அவற்றைக் கூட என்னுடைய தங்கையின் மகள்கள் கூட வந்து நாம் இருவரும் மனம் விட்டுப் பேச முடியாத அளவிற்கு அரணாக இருப்பார்கள். சில சமயங்களில் நாம் என்ன பேசினோமோ அப்படியே அவற்றை என்னுடைய தாயாரிடம் சொல்லி விடுவார்கள். அதனால் நான் என் தாயார் என்னிடம் கோபப் படுவார்.
அவர் கல்லூரிக்குச் செல்வதை தடுத்து விட்டார்கள். அவர் மேற்கொண்டு படித்தால் கூட நம் இருவரது பிரச்சினைகளை மறக்கும் ஒரு சந்தோஷம் அவருக்கு கிடைத்திருக்கும். மேற்கொண்டு படிக்கவும் முடியாமல் என்னோடு மனம் விட்டுப் பேசவும் முடியாமல் அவர் கண் கலங்குவது கண்ட அவருடைய தாயாரின் மனம் வேதனைப்பட்டது.
நம் இருவருக்கே இப்படியெனில் அவருடைய தாயாருடன் நான் பேசச் செல்லும் சமயம் அவரது தந்தையின் பேச்சு மிகவும் கடுமையாக இருக்கும்.
இந்த நிலையில் அவரது தாயார் அவரது தந்தை இல்லாத சமயத்தில் என்னை வரவழைத்து உன்னுடன் பேச முடியாமல் என் மகன் கஷ்டப்படுவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. எனவே உன்னுடைய பிரிவால் அவன் ஏதேனும் விபரீத முடிவுக்கு வந்து விடுவான் போலத் தெரிகின்றது.
எனவே அவனை எப்படியாவது அடிக்கடி சந்தித்து அவனை சந்தோஷமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு நான் அவர் என்னை விரும்புவதை நேரடியாக தெரிவித்து கொண்டு விட்டார். நானும் என்னுடைய முழு சம்மதத்தை தெரிவித்து விட்டேன். எனவே அவர் எந்த ஒரு தவறான முடிவுக்கும் கட்டாயம் வர மாட்டார்.
அவ்வாறு அவர் ஏதேனும் ஒரு விபரீத முடிவு எடுப்பாரேயானால் அந்த முடிவு நம் இருவருக்கும் சேர்ந்தே இருக்கும் என்று சொன்ன சமயம் அவரது தாயார் கண்ணீர் விட்டு அழுது விட்டார்கள்.
என் மகனும் நீயும் திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு நீ மருமகளாக வரும் நாளை நான் விரைவில் எதிர்பார்க்கின்றேன். அதற்காக நீயும் அவனும் என்ன செய்தாலும் சரி பரவாயில்லை. நீங்கள் இருவரும் என் கண் முன்னிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு இனிமேல் நானும் அவரும் எப்படியாவது எங்கேயாவது அடிக்கடி சந்தித்து அவரது மனம் வேதனைப் படாமல் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னேன்.
அப்போது அவரது தாயார் என்னிடம் இப்போது அவன் கல்லூரிக்குச் செல்வதைகூட அவரது தந்தை தடுத்து நிறுத்தி விட்டார். எனவே அவனுக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். அந்த ஓய்வு நேரத்தில் அவனை நீ சொன்னது போல எப்படியாவது எங்கேயாவது சந்தித்து அவனது மனம் சந்தோஷப்படும் படியாக நடந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.
நான் ஒன்றைச் சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்கின்றேன். என்னவெனில் அவனுக்கு ஆரம்பமுதல் கடவுள் பக்தியே இல்லாமல் இருந்தது. நாம் அனைவரும் சேர்ந்து புனித யாத்திரை சென்று வந்த பின்னர் தான் அவனுக்கு கடவுள் நம்பிக்கை தலை முடி காணிக்கை செலுத்தும் அளவிற்கு முதன் முதலாக ஏற்பட்டுள்ளது. அதுவும் உன்னால் தான்.
எனவே ஒரு நல்ல நாள் பார்த்து என்னுடைய கழுத்து வலி குறைய நீ சூடம் ஏற்றி வழிபட்ட அந்த கருப்பண சாமியை வழிபட கோயிலுக்கு உன்னை என்னுடன் அழைத்துச் செல்வதாக உன் வீட்டாரிடம் சொல்லி அழைத்துச் செல்கின்றேன். என்னுடன் உன்னை அனுப்புவதற்கு உன் தாயார் எதுவும் சொல்ல மாட்டார்கள். அவனும் யாருக்கும் தெரியாமல் இடையில் சேர்ந்து கொள்வான்.
நீயும் அவனும் சேர்ந்து வாழ்வதற்கான முதல் பிரார்த்தனையை நான் அதன் மூலம் உங்களுக்கு அம்மன் கோயிலிலும் கருப்பண சாமி கோயிலிலும் துவக்கி வைக்கின்றேன்.
நீயும் அவனும் சேர்ந்து வாழ்க்கையில் இணைவதற்கு எல்லா கடவுள்களிடமும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். தெய்வத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. மனிதன் தடுத்தாலும் தெய்வம் கொடுக்கும். தெய்வத்தை நம்பி முயற்சி மேற்கொள்ளுங்கள். நல்ல முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொன்னார்கள்.
அத்துடன் என்னுடைய ஆசிர்வாதத்துடன் நீங்கள் ஆரம்பிக்கப் போகும் பிரார்த்தனை நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும் என்று அறிவுறை கூறினார்கள்.
அதற்கு அடுத்த நாள் நான் என்னுடைய தாயாருடன் வெளியே சென்று வருவதைப் பார்த்த அவர் என்ன விசேஷம் என்று கேட்க என்னுடைய பிறந்த நாளுக்காக புத்தாடைகள் வாங்கி வந்தோம் என்று கூறினேன்.
அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளுக்காக ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.
அவரிடத்தில் உள்ள மனக்கஷ்டத்தினை நன்றாக அறிந்த நான் வேண்டாம் என்று சொல்லாமல் சரியென சம்மதித்து அவருடன் சென்ற சமயம் நானே எதிர்பார்க்காத அளவிற்கு எனக்கு தங்கத்தினால் ஆன ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை வாங்கிக் கொடுத்து சந்தோஷத்தில் மூழ்கடித்து விட்டார்.
எனது பிறந்த நாளன்று நான் புத்தாடை உடுத்திக் கொண்டு அவருடன் யாருக்கும் தெரியாமல் முதன் முறையாக கோயிலுக்குச் சென்று அவர் வாங்கிக் கொடுத்த ஆலிலைக் கிருஷ்ணன் தங்க டாலரை அம்மன் முன்னிலையில் கடவுள் சாட்சியாக கோயிலில் என் கழுத்தில் பிறர் கண்களுக்குத் தெரியாத வண்ணம் அணிந்து கொண்டேன்.
கோயிலில் அமர்ந்து இருந்த சமயம் அவரது தாயார் சொன்ன விஷயங்களை அப்படியே அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
அவர் வாங்கிக் கொடுத்த முதலாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் வாங்கிக் கொடுத்த அவருக்கு நான் அணிந்து கொண்டதில் இரட்டிப்பு சந்தோஷம்.
அன்று முதல் நான் படுப்பதற்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் சுமங்கலிப் பெண்கள் தங்களது தாலியை கண்களில் ஒற்றிக் கொள்வது போல அவர் நலமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் இருவரும் இல்லறத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடவுளிடம் கோரிக்கை வைத்துவிட்டு தான் உறங்குவேன்.
நல்ல நாள் பார்த்து அவரது தாயார் என்னை தன்னுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்று நாம் இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கான பிரார்த்தனையை ஆரம்பித்து வைத்தார்கள்.
கோயில்களில் முதன் முறையாக நாம் மூவரும் சேர்ந்து வழிபட்டது என் குடும்பத்தார் யாருக்கும் தெரியாது. குறிப்பாக அவருடைய தந்தைக்கு தெரியாது.