நெருக்கமான உறவு
தான் விரும்பிய பெண் தனக்கு மனைவியாகக் கிடைக்கவில்லை என்று நினைக்கும் ஆண்கள் ஏராளம். அதே போல தான் விரும்பிய ஆண் தனக்கு கணவராகக் கிடைக்கவில்லை என்று நினைக்கும் பெண்கள் ஏராளம்.
தனது மகன் ஒரு பெண்ணை விரும்புகின்றான் என்னும் விவரம் தெரிய வருவதற்கு முன்னரே அந்தப் பெண் தனக்கு மருமகளாக கிடைக்க வேண்டும் என நினைத்து அதற்காக கோயில்களில் வழிபாடுகளைத் துவக்கி வைக்கும் அன்புள்ளம் கொண்ட அன்னையரைக் காணவே முடியாது. அதே நேரத்தில் அந்தப் பெண்ணையே தனது மகன் விரும்புகின்றான் என்பதனையும் காதலிக்கின்றான் என்பதனையும் அறியும் சமயம் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்து வைத்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மிகும். அவ்வாறான அவர்களின் ஆசை நிறைவேறாவிட்டால் அந்தத் தாயின் மனது படும் வேதனை மிகவும் கொடியதாக இருக்கும்.
நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று நாம் இருவரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நான் தான் மருமகளாக வரவேண்டும் என நினைத்த அவரது தாயாரின் விருப்பம் நிறைவேறாத போதிலும் கூட என்னையே தன்னுடைய மருமகளாக இதய பூர்வமாக இன்று வரையில் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நான் அவருக்கு மருமகளாகக் கிடைக்கவில்லை என்பதனை அறிந்து அதற்காக கவலைப் பட்டு அதன் காரணமாக உடல் நிலை பாதிக்கப்படும் அளவில் இருக்கின்றார்கள்.
என்னுடைய திருமணத்திற்குப் பின்னர் அவரது தாயார் முதன் முறையாக நான் கருத்தரித்த சமயம் என்னை நேரில் வந்து பார்த்தார்கள். அதன் பின்னர் முதலாவாது பெண் குழந்தை பிறந்த பின்னர் ஒரு முறை வந்து என்னையும் எனக்குப் பிறந்த குழந்தையையும் பார்த்தார்கள். என் குழந்தையைக் கையிலெடுத்து என் குடும்பத்துக்கு வாரிசாக வர வேண்டியவள் எனக் கொஞ்சினார்கள்.
அதே போல எனக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததனைக் கேட்டறிந்து என் குழந்தையைப் பார்த்தே தீர வேண்டும் என்று என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னையும் என் குழந்தையையும் பார்த்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்த சமயம் எனக்கு தாயார் வழி உறவினர்கள் யாரும் இல்லை என்பதனை அறிந்து மிகவும் வருத்தப் பட்டார்கள்.
தமது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டோம் அந்த மருமகளுக்கும் குழந்தை பிறந்து விட்டது என்ற போதிலும் கூட எனக்குப் பிறந்த குழந்தையை பார்த்தே தீர வேண்டும் என எண்ணி என்னுடைய இல்லத்திற்கு வந்து குழந்தை பிறந்தவுடன் முதலாவதாகக் குளிப்பாட்டி பொட்டு வைத்து தீட்டுக் கழிக்கும் சடங்கினை அவர்களே அவர்கள் கரங்களால் செய்து முடித்ததோடு இரண்டு குழந்தைகளுக்கும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்கள். என்னையும் புத்தாடை உடுத்திக் கொள்ளச் சொல்லி என்னை சோபாவில் அமர வைத்து என் கரங்களில் குழந்தையைக் கொடுத்து திருஷ்டி கழித்தார்கள். மற்ற சடங்குகளையும் நிறைவேற்றினார்கள்.
அவர்கள் என்னிடத்தில் நான் எங்கு வாழ்க்கைப் பட்டுச் சென்றாலும் அவர்களுடைய மருமகள் தான் என்று சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது போல இருந்தது. அவரது மகனை நான் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் நான் எங்கு வாழ்க்கைப் பட்டாலும் அவருடைய மருமகள் தான் என்று அவரது தாயார் சொன்னதை நினைத்து நான் மிக்க சந்தோஷம் அடைகின்றேன் அந்த அளவிற்கு அவர்கள் மனதில் நான் இடம் பிடித்துள்ளேன்.
அவரது பிரிவு என்னை வாட்டினாலும் அவரது தாயாரின் மனதில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இடம் இன்னும் நிலையாக இருக்கின்றது என்பதனை நினைக்கும் சமயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. அவரைப் போன்ற ஒரு தாயுள்ளம் கொண்டவரை நான் மாமியாராக அடைய முடியவில்லை என்பதனை நினைக்கும் போது அதற்குக் காரணமானவர்கள் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்படுகின்றது.
எனக்குக் குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவருக்கும் குழந்தை பிறந்த காரணத்தால் அவரது மனைவியையும் குழந்தையையும் ஐந்து மாத காலம் தாய் வீட்டில் வைத்திருந்து அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அவரது மாமனார் வீடு இதே ஊரில் இருப்பதால் தனது மனைவியையும் குழந்தையையும் பார்க்க வரும் சமயம் என்னையும் அவர் பார்க்க வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆமாம் ஆறு மாத காலத்தில் மாதா மாதம் தனது மனைவியையும் குழந்தையையும் பார்க்க வரும் சமயம் என்னையும் பார்க்க வந்தது எனக்கு மிக்க சந்தோஷத்தைக் கொடுத்தது.
என்னுடைய திருமணத்திற்குப் பின்னர் என் கணவர் வீட்டில் இருக்கும் நேரத்தில் என்னை அவர் முதலாவதாக காண வந்த சமயம் என் கணவர் யாரோ ஒருவர் வந்திருக்கின்றார் எனக்கூறி என்னை சங்கடத்தில் ஆழ்த்தினார். இரண்டாம் முறை என்னைப் பார்க்க வந்த சமயம் எனக்கு தெரிந்தவர் வந்து இருக்கின்றார் எனச் சொல்லி வேதனையில் ஆழ்த்தினார். மூன்றாவது முறை அவர் என்னைப் பார்க்க வரும் சமயம் என்னைப் பார்க்க எனக்கு வேண்டியவர் வந்திருக்கின்றார் எனச் சொன்ன சமயம் என்னை யோசிக்கச் செய்தார்.
எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயம் என்னைப் பார்க்க வந்த அவரது தாயார் என்னுடைய குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்து தீட்டுக் கழித்து என் குழந்தைக்கு புத்தாடை வாங்கி வருமாறு சொன்னதையும் அவர்கள் என்னிடத்தில் அன்புடன் நடந்து கொண்டதையும் கண்ட என்னுடைய கணவருக்கு அவரது தாயார் மேல் தனி மரியாதை வந்து விட்டது.
அதன் பின்னர் நானும் என் கணவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம் நான் அவரது தாயாருடன் எவ்வளவு நெருக்கமாக இருந்து இருக்கின்றேன் எனக் கேட்டறிவார். எங்கள் குடும்பத்தாரும் அவரது குடும்பத்தாரும் புனித யாத்திரை சென்று வந்த சமயம் அவரது தாயார் என்னை கவனித்துக் கொண்ட விதம் பற்றித் தெரிவிப்பேன்.
அவ்வாறு நான் பேசும் சமயம் எனக்கும் அவரது தாயாருக்கும் உள்ள நெருக்கத்தினை என் கணவரிடத்தில் தெரிவிக்கும் சமயம் அவர் என்னைக் காதலித்தது பற்றியோ அல்லது அவரது தாயார் என்னை மருமகளாக அடைய விரும்பினார் என்பது பற்றியோ சொல்லாமல் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் மறைத்து விடுவேன்.
இருந்தாலும் அதனையும் மீறி அவருக்கு நம் உறவு நிலை தெரிய வந்தால் என்ன செய்வது என்னும் பயம் எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
அவரது தாயார் என் குழந்தைக்கு பொட்டு வைத்து தீட்டுக் கழித்த நிகழ்விற்குப் பின்னர் அவர் வருகின்ற சமயம் முன்பு போல இல்லாமல் அவருக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்று அமர வைத்து அவருடன் பேச ஆரம்பித்ததை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. என் கணவருக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம் மிகவும் அதிகரித்து உள்ளது.
எனக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்னர் அவர் வெளியூருக்கு மாற்றல் வாங்கிச் சென்று விட்ட நிலையில் என் கணவர் என்னிடத்தில் பேசும் சமயம் இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட அவரது தாயாருக்கு நல்ல வேளையாக எனது உறவினரது மகள் மருமகளாக அமையவில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் அவரது மனம் மிகவும் புண்பட்டிருக்கும் என வெளிப்படையாக சொன்ன சமயம் எனக்கு ஒரு பக்கம் மிக்க சந்தோஷமாக இருந்தது. மறுபக்கம் அவரது தாயார் ஏன் என்னை இவ்வளவு அன்பாக கவனித்து வருகின்றார்கள் என்பது என் கணவருக்குத் தெரியாதது தான் அவர் இவ்வாறு பேசுவதற்கு காரணம் என்பதனை நான் அறிந்து கொண்டேன்.
அவர் எனது இல்லத்திற்கு வந்து சந்தித்து பேசி விட்டு திரும்பும் சமயம் நான் அவரது அடுத்த வருகை எப்போது எனக் கேட்டு வந்ததற்குப் பதிலாக என் கணவர் அதனைக் கேட்டறிந்து மிக்க சந்தோஷப் பட ஆரம்பித்து விட்டார். எனக்கும் கூட மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறான நிலையில் நாம் இருவரும் ஏற்கனவே முடிவு எடுத்தது போல ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை வந்து செல்லப் போவதாக என்னிடத்தில் தெரிவித்து அதனை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இரண்டு குழந்தைகளுடன் பொழுது போக்கிக் கொண்டு இருந்த காரணத்தால் நான் அவரை இழந்து விட்டேன் என்னும் சோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தேன்.
ஆறு மாதத்திற்கு மேல் அவரது வருகை தள்ளிப் போய் விட்டால் என் கணவர் அவர் வரவில்லையா எனக் கேட்கும் அளவிற்கு எனது வீட்டின் நிலைமை மாறி விட்டது. இவ்வாறு என் கணவர் என்னிடத்தில் கேட்பது அவரை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்துவது போலாகி விட்டது.