திருப்தி இல்லாமல் உரையாடல்
நான் அவருடன் நிறையப் பேச வேண்டும் என்று சென்ற மாதம் காத்திருந்த சமயம் அவருடைய தோழியுடன் வந்த காரணத்தால் என்னால் எதுவும் மனம் விட்டு பேச முடியாமல் அவரை வழியனுப்பி வைத்த போது எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. இனி அடுத்து அவரை சந்தித்துப் பேச மேலும் ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும் என்பதனை நினைத்த போது எனக்கு ஏக்கமாக இருந்தது.
ஆனால் நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் என்னுடைய இல்லத்திற்கு திடீரென ஒரு வாரம் முன்னதாகவே வருகை தந்தார். அப்போது என்னைத் தொட்டு தாலி கட்டிய கணவர் இல்வத்தில் இருந்தார். வந்தவரை வரவேற்று உபசரித்து சோபாவில் அமர வைத்தேன். அப்போது என் கணவர் தமது உறவுக் காரப் பெண்ணை சொந்த ஊரிலும் வரனாக காண்பித்து ஒரு பதிலும் வரவில்லை என்று அவரது உறவினர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அதற்கு அவரால் என்னிடம் மறைத்தது போல மறைக்க முடியவில்லை. அவரது உறவினரது பெண்ணை அவரது பெற்றோர் காண்பித்ததாக தெரிவித்தார். ஏற்கனவே இங்கு வந்திருந்த சமயம் அந்தப் பெண்ணை பார்த்து விட்டதாக தெரிவித்து அந்தப் பெண்ணை வேண்டாம் என்று அவர் சொன்னதை தாயாரிடம் தெரியப்படுத்தி அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு பெண் வீட்டாரிடம் தெரிவித்து விட்டதாகவும் சொன்னார்.
அதன் பின்னர் வேறு வழியில்லாமல் தமக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் திருமணத்திற்கான தேதி குறித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
என் கணவர் அவரிடத்தில் பெண்ணைப் பற்றிய விவரம் ஒவ்வொன்றாகக் கேட்ட சமயம் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ள பெண்ணைப் பற்றிய விவரங்களை தெரிவித்தார். எனக்கும் அப்போது தான் தெரிய வந்தது.
என் கணவர் அவரிடத்தில் பெண்ணைப் பிடித்து இருக்கின்றதா எனக் கேட்க பெற்றோர் ஜாதகப் பொருத்தம் பார்த்து வரன் பார்க்கும் காரணத்தால் தமக்குப் பிடித்தமானபடி பெண் அமைவது கடினம் என்றும் அந்த காரணத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் அவர் அவரது தந்தையிடம் முதலாவதாக சென்று பார்த்து வந்த பெண்ணை அதாவது தாம் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக குடியிருந்ததாகச் சொன்ன அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து இருந்ததாகவும் அந்தப் பெண்ணை மணமுடிக்க நிச்சயதார்த்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதற்கு அவரது தந்தை மறுத்து விட்ட விவரத்தையும் தெரிவித்த சமயம் எனக்கு அடுத்த படியாக அவர் அந்தப் பெண்ணைத் தான் திருமண பந்தத்தில் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது தெரிய வந்தது.
என் கணவருக்கு அவருக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் பலரைத் தெரிந்து இருக்கின்றது. அவற்றை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கேட்ட சமயம் அவரிடமிருந்து சில விவரங்கள் மட்டுமே ஒவ்வொன்றாக அவரது கேள்விகளுக்கு பதிலாக கட்டாயத்தின் பேரில் தெரிய வந்தது. இருந்தாலும் உளமாற சந்தோஷத்துடன் அவருக்கு நிச்சயம் செய்துள்ள பெண்ணைப் பற்றிய விவரங்களை தாமாக முன் வந்து முழுமையாகச் சொல்லவில்லை என்பதனை மட்டும் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் என் கணவர் அவரிடத்தில் அவரது வருங்கால மனைவியை நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் இங்குள்ள வீட்டில் சென்று பார்த்து வந்தீர்களா எனக் கேட்டார். அதற்கு அவர் சென்ற மாதம் கடைசி வாரத்தில் தமது அலுவலகத்தில் கூடப் பணியாற்றும் நான்கு தோழியர்கள் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் சென்று பார்த்து வந்ததாக தெரிவித்தார். எனது கணவர் அவரிடத்தில் சென்ற மாதம் சென்று பார்த்த சமயம் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதேனும் உண்டா என்று துருவித் துருவிக் கேட்டார்.
அப்போது அவர் தம்முடன் பணியாற்றும் நான்கு பெண்களை அழைத்துச் சென்ற சமயம் நால்வரையும் பார்த்து ஒவ்வொருவராக உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா என முதலாவது கேள்வியாக கேட்டார் எனவும் அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களையும் தெரிவித்த சமயம் எனக்கு சிரிப்பாக இருந்தது.
ஒரு தோழி அவருக்கு நிச்சயம் செய்துள்ள பெண்ணிடத்தில் தனக்குத் திருமணம் ஆகி மூன்று மாத கைக்குழந்தை இடுப்பில் இருப்பதாகவும் இன்னொரு தோழிக்கு திருமணம் ஆகி மூன்று மாத குழந்தை வயிற்றில் கருவுற்று இருப்பதாகவும் இன்னொரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்கள் என்றும் தெரிவித்தார்.
என் கணவர் அவரை விடுவதாக இல்லை. இன்னொரு தோழியைப் பற்றி கேட்கவில்லையா என்று கேட்டார். அதற்கும் அவர் பதில் சொன்னார். அவரது தோழி நிச்சயம் செய்துள்ள அந்தப் பெண்ணிடத்தில் அந்தப் பெண் அவரது ஜாதிக் காரப் பெண் என்றும் அவரது மொழி பேசும் பெண் என்றும் அவருக்கு உறவுக் காரப் பெண் என்றும் திருமணம் ஆகாத பெண் என்றும் சொல்லி விட்டு ஏதேனும் சந்தேகப் பட வேண்டும் என்றால் அந்தப் பெண்ணை சந்தேகப் படுமாறும் தெரிவித்து அந்தப் பெண்ணைக் காட்டியதாகவும் தெரிவித்தார். அவர் சொன்ன பதிலிலிருந்து அவருக்கு வரவிருக்கும் மனைவி மிகவும் சந்தேகப் படும் இதயம் கொண்டவளாகவும் குறுகிய வட்டத்திற்குள் இருக்கலாம் என்றும் நான் அறிந்து கொண்டேன்.
அப்போது என் கணவர் அவரிடத்தில் தமக்கு இது போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏதும் இல்லை என்றும் பெண் பார்த்த இரண்டு மூன்று நாட்களில் திருமணம் நடந்து விட்டதாகவும் தெரிவித்து விட்டு கீழே ஒரு வீடு காலியாக இருப்பதாகவும் அங்கு குடிவர விருப்பம் இருந்தால் தெரிவிக்குமாறும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதாகவும் அதற்குள் இங்கு வீடு பிடித்து விட்டால் தனியாக அலுவலகத்திற்கு சென்று வருவது மற்றும் சாப்பிடுவது போன்றவற்றுக்கு கஷ்டமாக இருக்கும் என்றும் சொன்னார்.
நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேனோ அதனை என் கணவர் தாமாகக் கேட்கின்றார். எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் சரி என்று சொல்லி இருந்தால் நான் ஆனந்தக் கடலில் மூழ்கி இருப்பேன். ஆனால் அவர் ஏதோ ஒன்றினை மனதில் வைத்துக் கொண்டு மறுப்பு தெரிவித்து விட்டார். அதற்கு என் கணவர் தனி ஒரு நபருக்கு ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு பெரிதாக வீடு பிடித்தால் வாடகை வீணாகி விடுவதோடு மட்டுமல்லாமல் சாப்பாட்டுக்கும் சிரமப்பட வேண்டி இருக்கும் என்பதனை சொல்லி சரி என ஒப்புக் கொண்டார்.
அச்சமயத்தில் அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய தாயாரிடம் என்னை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு என்னுடைய தாயார் மறுத்து அவரை வீட்டிலிருந்து கீழே தள்ளி விட்டு ரத்த காயங்களுடன் ஊருக்கு திரும்பிய இரண்டு மூன்று நாட்களில் எனக்கு கட்டாயத் திருமணம் நடந்தேறிய சம்பவம் என் கணவர் அவரிடத்தில் பேசிக் கொண்டிருந்த சமயம் என் கண் முன்னே தோன்றியது. என்னால் அழ முடியவில்லை. கண்ணீரை மாத்திரம் துடைத்துக் கொண்டேன்.
அவருடைய கண்கள் என்னுடைய செல்லப் பெண்ணைத் தேடின. நான் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவராகவே கேட்க உறவினர்கள் அழைத்துச் சென்றிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் திரும்பி விடுவாள் என்றும் தெரிவித்தேன். அவள் இல்லாதது அவருக்கு தனிமையை உணர்த்திய போதிலும் அவள் இல்லாமல் இருப்பது தான் அந்த சமயத்தில் நல்லது என்று என் உள்மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. என் செல்லப் பெண்ணுக்காக வாங்கி வந்திருந்த சாக்லெட்டுகளை என்னிடம் கொடுத்தார். நானும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் அவரை வழக்கம் போல உபசரித்து முடித்தேன்.
அவர் சென்ற மாதம் வந்த சமயம் அவரது தோழியுடன் வந்த காரணத்தால் என்னால் அவருடன் மனம் விட்டுப் பேச முடியவில்லை. இந்த மாதம் அவர் வந்திருக்கும் சமயம் என் கணவர் வீட்டில் இருந்ததால் என்னால் மனம் விட:;டுப் பேச முடியவில்லை. அவருக்கும் அதே நிலை. அதுவும் தவிர எனக்கு எவ்வளவு குறுகிய காலத்தில் கட்டாயக் கல்யாணம் நடந்தது என்பதனை என் கணவர் ஏதோ ஒரு வழியில் என் ஞாபகத்திற்கு வரும்படி செய்து விட்ட காரணத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
என்னால் அவருடன் மனம் விட்டு திருப்தியாக பேச முடியவில்லை என்னும் கவலை சூழ்ந்து கொண்டது. அவர் சென்று வருகின்றேன் என்று என்னிடம் கேட்ட சமயம் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்து நின்றேன். உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்று சொல்வது போல நான் என் கணவர் முன் போலியான புன்னகையுடன் அவரை வழியனுப்பி வைத்தேன். அவருக்கும் அதே நிலை.