தைரியம் இல்லாமையா அல்லது கோழைத் தனமா?
என்னை முதல் முதலாகப் பார்த்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அவர் என்னைத் தான் ரொம்ப பிடிக்கும் காரணம் அவருக்கு ஏற்ற வயது என்று முன் பின் யோசிக்காமல் என்னுடன் கலந்து கூட ஆலோசனை செய்யாமல் உடனே அனைவர் முன்னிலையிலும் தைரியமாக ஒப்புக் கொண்டு அதன் பின்னர் அவர் சொன்னது நிஜமாகவா அல்லது கேலியாகவா என்று கேட்டதற்கு நான் மனதார விரும்புகிறேன் என்று என்னிடம் சொன்னார். அதனை நான் உளமாற ஏற்றுக் கொண்டேன்.
அவர் எவ்வளவு தைரியமாகச் சொன்னாரோ அதே போல நடந்து கொள்ளவும் ஆரம்பித்தார்.
அதே நேரத்தில் அவருடைய தாயாரும் என்னுடன் மிகவும் அன்பாகப் பழகி என்னை வருங்கால மருமகளாகவே பாவித்து என்னைத் தன்னுடன் கோயில் குளங்களுக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் சந்தோஷமடைந்தார். மஞ்சள் நிற கூரைப்புடவையுடன் கழுத்தில் தாலியும் காலில் மெட்டியுடன் வந்து விளக்கேற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
நமது இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து சென்ற உல்லாசப் பயணத்தில் நமது நடவடிக்கைகளை கவனித்த அவரது தாயார் அடுத்து சென்ற நான்கு நாட்கள் புனித யாத்திரையில் என்னை அருகிலேயே அமர வைத்து எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்து சந்தோஷத்தில் மூழ்கடித்தார். அவராகவே என்னை என்னுடைய மருமகள் என்று பல தடவை சொல்லி என்னை மிகவும் சந்தோஷப்பட வைத்தார்.
நான் என்னுடைய தாயாருடன் சென்று துணிமணிகள் வாங்கி வந்ததைப் பார்த்த அவர் என்ன விஷேசம் கேட்ட சமயம் என்னுடைய பிறந்த நாளுக்கு புத்தாடைகள் வாங்கி வந்தோம் என்பதனை அறிந்தவுடன் அவரும் எனக்கு பிறந்த நாள் பரிசாக தங்கத்தினாலான ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை வாங்கிக் கொடுத்தார்.
நாம் இருவரும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு அந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை என் கழுத்தில் அணிந்ததிலிருந்து நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவது பன்மடங்கு பெருகி விட்டது. சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய தாலியை தமது கண்களில் ஒற்றிக் கொள்வது போல அந்த டாலை எனது கண்களில் ஒற்றிக் கொண்டு படுக்கும் பழக்கம் வந்து விட்டது. அதே போல காலையில் எழுந்தவுடன் அந்த டாலருக்கு முத்தமிடும் பழக்கமும் எனக்கு வந்து விட்டது.
இந்த நிலையில் என் கனவில் யாரோ ஒருவர் உடல் நலமில்லாதது போலக் கனவு கண்டு மறு நாள் நான் அவருடன் அந்த உறவினரை சென்று பார்த்த சமயம் அவரது உறவினர் என் தோளில் சாய்ந்து உயிர் விட்டது வரை நம் உறவு எந்த விதமான இடைஞ்சல்களும் இல்லாமல் இருந்தது.
அவரது உறவினர் இறப்புக்குப் பின்னர் என்னுடைய தாயார் அவரிடத்தில் சொன்ன சில விஷயங்களை அவர் என்னுடன் ஆராய்ந்து மிக மும்முரமாக வேலை தேடும் பணியினை ஆரம்பித்து வேலையில் சேர்ந்து கொண்டார்.
எனக்குத் திருமணம் ஆன விவரம் கூட தெரியாமல் என்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு இங்கு வந்து குடியேற வீடு பார்க்கின்ற சமயம் தான் அவரை தீபாவளிக்குப் பின்னர் முதன் முதலாகப் பார்த்தேன்.
இடையில் என்ன நடந்தது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. நம் இருவர் திருமணத்திற்கு என்னென்ன தடைகள் வந்தன. தடைகள் எவ்வாறு வந்தன. தடைகள் யாரால் வந்தன எல்லாத் தடைகளையும் மீறி நாம் ஏன் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்பது போன்ற பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டே இருந்தன.
இவ்வளவு தூரம் நன்றாகப் பழகிய என்னை ஏன் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவருக்கு என்னைக் காதலிக்கும் போது இருந்த தைரியம் போய் விட்டதா அல்லது கோழையாகி விட்டாரா என்று யோசித்தேன்.
அவற்றையெல்லாம் அவரிடத்தில் கேட்டுக் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு வந்தது.
அவரது அடுத்த வருகை காலை வேளையில் இருந்தது. அப்போது என் கணவர் வீட்டில் இருந்தார். எனக்குத் தாலி கட்டிய கணவர் அவர் வந்திருக்கும் சமயம் என்னைப் பெயர் சொல்லியழைத்து “உன்னைத் தேடி யாரோ ஒருவர் வந்திருக்கிறார்” என்று சொல்லி விட்டு திரும்ப படுத்துக் கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்த அவருக்கு பெருத்த ஏமாற்றம்.
நான் என் கைகளால் உணவு பரிமாற வேண்டும் என்று ஆசைப்படும் வேளையில் அவருக்கு அறிமுகம் ஆகாமல் உணவு உண்ண அவர் மறுப்பது என்னை வாட்டியது. இருந்தாலும் பரவாயில்லை என்று அவரிடம் சில கேள்விகள் கேட்பது என அவரை அடுத்த அறையில் அமர வைத்து பேசிச்சினைத் துவக்கினேன்.
என்னை முதன் முதலாகப் பார்த்தவுடனேயே என்னை அதிகம் பிடிக்கும் என்று ஊர்ஜிதப்படுத்தி விட்டு அதன் பின்னர் பிறந்த நாளன்று ஆலிலைக் கிருஷ்ணன் தங்க டாலரை பரிசளித்து இருவரும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்ததையும் உல்லாசப் பயணத்திலும் புனித யாத்திரையிலும் மனம் விட்டுப் பேசி பழகியதையும் என்னால் மறக்கவே முடியவில்லை.
அதே சமயம் என்னுடைய தாயார் நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றும் உங்கள் வசதிக்கேற்ற இடத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னதன் காரணமாக சுய சம்பாத்யத்தில் தான் என்னைக் கரம்பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் வேலை கிடைப்பதற்காக நாங்கள் இருவரும் பிரார்த்தனை மேற்காண்டதையும அதன் பின்னர் வேலை கிடைத்த பின்னர் என்னுடைய வீட்டிற்கு தீபாவளியன்று வந்து சென்றது வரையில் இருந்த தைரியம் எனக்குத் திருமணம் ஆன பின்னர் எனக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெறாத நிலையில் உங்களுடன் வரத் தயார் என்று நான் சொன்ன பின்னர் எங்கே போயிற்று என்று கேட்டேன்.
அதற்கு அவர் அடுத்த அறையில் உன்னுடைய கணவர் இருக்கின்றார் இந்த விஷயத்தை வேறொரு நாளில் பேசலாமே என்று சொன்னவுடன் அவர் குடித்து விட்டு போதையில் படுத்து இருக்கின்றார். இப்போதைக்கு போதை தெளியாது எனவே எனக்கு உடனடியாக பதில் சொல்லுங்கள் என்று வற்புறுத்தினேன். அவர் சற்று தயங்கினார்.
நான் உடனே சமையலறைக்குச் சென்று சுவீட் காரத்துடன் வந்தேன். இருவரும் வழக்கம் போல் உண்ட பின்னர் அவருக்கு மிகப் பெரிய டம்ளரில் காபி கொடுத்ததை அவர் பாதி குடித்து விட்டு என்னிடம் கொடுத்தார். நான் ஆசையுடன் பருகிய பின்னர் அவர் தமது பதிலை ஆரம்பித்தார்.
உன்னுடைய தாயார் நம் திருமணத்திற்கு எதிராக பேசியது என்னுடைய தந்தையின் தூண்டுதலின் பேரில் தான் என்பதனை நான் அறிந்து கொண்டேன். அன்றைக்கே உன்னை திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது உன்னுடைய வயது 18க்கு கீழ் என்பதால் மைனர் விவாகம் செல்லாது என்று சட்டம் நம்மைப் பிரித்து விடும் என்பதால் நான் பின் வாங்கினேன்.
அடுத்த படியாக எனக்கு வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் உன்னை எனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் நம் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியியல்லை என்று சொன்னார்.
நான் உடனே ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டாலும் பின்னர் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.
உதாரணத்திற்கு கம்சன் தன் மனைவியை ஜாதகப் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. ஆனால் அவரது தங்கைக்கு பிறக்கப் போகின்ற எட்டாவது குழந்தையினால் (கிருஷ்ணன்) தாய் மாமனுக்கு ஆபத்து வருகின்றது என்று இருக்கும் சமயம் என் ஜாதகத்தையும் அவள் ஜாதகத்தையும் மாத்திரம் பொருத்திப் பார்த்து அவளை மணந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று சொன்னேன்.
அதே போல இராவணன் ஒரு நல்ல சிவபக்தன். தனது பக்தியின் மூலம் பாட்டுப் பாடி தனது அரண்மனைக்கே கைலாயத்திலிருந்து சிவ பெருமானை வர வைக்கும் அளவிற்கு பக்தியுள்ளவன். இராவணனன் தன் மனைவியின் பிரசவத்தின் போது சிவனிடம் தனக்குப் பிறக்கும் மைந்தன் தேக ஆரோக்கியத்துடன் தம்மை விட ஆற்றல் மற்றும் புகழ் மிக்கவனாகவும் திகழ வரம் வேண்டும் என்று கேட்ட சமயம் சிவன் இராவணனிடம் ஒவ்வொரு குழந்தையின் ஜனன காலத்திலும் நவக்கிரஹங்கள் அமரும் ராசிக் கட்டங்களைப் பொறுத்தே அந்த குழந்தையின் எதிர் காலம் அமையும் என்று சொன்னவுடன் இராவணன் நவக்கிரஹங்களையும் அழைத்து ஆலோசனை செய்கின்றார்.
நவக்கிரஹங்கள் நாங்கள் இந்த இந்த ராசிகளில் இருந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு நல்லது என்று சொன்னதைக் கேட்ட இராவணன் அவர்களை அந்தந்த ராசிக் கட்டங்களில் அமரச் சொல்லிவிட்டு தன் மனைவியைப் பார்க்கச் சென்று விட்ட சமயம் இராவணனுக்கு குழந்தை பிறந்து திரும்பி வருவதற்குள் குரு பகவானும் சனீஸ்வர பகவானும் சேர்ந்து மாந்தி என்னும் புதிய 10 வது கிரஹத்தை உருவாக்கி இராவணனுக்குப் பிறக்கப் போகும் மைந்தன் பற்றிய இராவணனின் எதிர்காலக் கனவை கலைக்கவில்லையா என்று பார்க்க வேண்டும். ஒரு சிவபக்தனான இராவணனுக்கே இந்த கதி எனில் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று கேட்டேன்.
மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் சூரியன் சந்திரன் இருவரையும் ஓரிடத்தில் தந்திரமாக வர வைத்து இன்று அமாவாசை என்று சொல்லி தர்ப்பணம் செய்யவில்லையா என்றும் கேட்டேன்.
இவ்வளவையும் சொல்லி முடித்த பின்னர் ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒரு பரிகாரம் கட்டாயம் இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாம் ஒரு நாள் மட்டுமாவது சந்தோஷமாக வாழ்ந்தோம் என்னும் மனத்திருப்தி நம் இருவருக்கும் கிடைக்கட்டும் என்று சொன்னேன். இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் ஒரு நாளேனும் சந்தோஷமாக நாம் இருவரும் இல்லறம் அனுபவித்து விட்டு சாகத் தயார் என்று கூட சொல்லிப் பார்த்தேன்.
ஆனால் என்னுடைய தந்தை அதனை ஏற்கவில்லை. அத்துடன் உனது குடும்பத்தின் அந்தஸ்து குறைவாக உள்ளது என்றார். அதற்கு பணம் இன்று வரும் நாளை போகும் ஆனால் உண்மையான அன்பு செலுத்தும் மனைவி இவளைப் போல் எனக்குக் கிடைக்க மாட்டாள் என்று கெஞ்சி நம் இருவரது திருமணத்திற்கும் ஒப்புதல் தருமாறு மன்றாடினேன். என் பேச்சு என் தந்தையிடம் எடுபடவில்லை.
அதே சமயம் என்னுடைய தாயார் என்னிடம் அவரும் அவளுடைய தாயரும் அடிக்கடி சேர்ந்து பேசி வருகின்றார்கள். அது உங்களைப் பிரிப்பதற்காகத் தான் இருக்கும் என்று தெரிந்து கொண்டு நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். என் பேச்சையும் உன் தந்தை கேட்க மறுக்கின்றார் என்று சொன்னார்கள்.
அதன் பின்னர் உன்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்த சமயம் உன்னுடைய தாயார் முன் கூட்டியே திட்டமிட்டு உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து நம் இருவரையும் சேர விடாமல் தடுத்து கொண்டிருப்பதையும் அறிந்து கொண்டு உன்னுடைய உறவினர்கள் வீடுகள் அனைத்திற்கும் சென்று ஏமாற்றமடைந்து மீண்டும் பணியாற்றும் ஊருக்கே திரும்பி விட்டேன்.
என்னுடைய வீட்டார் விநாயக சதுர்த்திக்கு வருமாறு அழைத்த சமயம் நீ வெளியூரில் இருப்பது அறிந்து வரவில்லை. என்னுடைய பெற்றோர் விருப்பம் இல்லாமல் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுவது என்றும் உன் தாயார் சம்மதித்தால் அவருடைய நல்லாசியுடன் திருமணம் செய்து கொள்வது என்றும் தீபாவளியன்று உன்னுடைய வீட்டிற்கு வந்தேன்.
ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறு. முதல் முறையாக தீபாவளியை சோகமாக கழித்தேன். அன்றிரவே புத்தாடை கூட உடுத்தாமல் உனக்காக வாங்கியவைகளையும் கொடுக்க முடியாமல் ரத்த காயங்களுடன் என் தாயையும் அழ வைத்து விட்டு இனிமேல் இந்த வீட்டிற்கு எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் அல்லது கெட்ட காரியத்திற்கும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு நான் பணியாற்றும் ஊருக்கே திரும்பி விட்டேன்.
அதன் பின்னர் உன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் தான் தற்செயலாக உன்னைப் பார்த்தேன். உன்னை இந்த ஊரில் பார்ப்பதற்கு முன்னர் என்னுடைய அலுவலகத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனோ அது முற்றிலும் மாறி சோகமாக மாறி விட்டேன்.
அதனை உன்னிப்பாக கவனித்த என்னுடன் என்னுடைய அடுத்த இருக்கையில் பணியாற்றும் கேரளத்துப் பெண் ஒருத்தி என்னிடம் நடந்த விவரங்கள் அனைத்தையும் கேட்டறிந்து விட்டு எனக்கு கீழ்க்கண்டவாறு அறிவுறைகள் சொன்னாள். அது என்னவெனில்:
நீஙகள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பி காதலித்தீர்கள். அதற்கு உனது தாயார் மாத்திரம் ஒப்புதல் கொடுத்து உள்ளார். அவளது தாயாரோ உன்னுடைய தந்தையோ நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் கடைசி வரையில் தடைக் கல்லாக இருந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்
முதலாவதாக அவளது தாயார் மறுப்பு சொன்ன அன்றே அவளை யாருக்கும் தெரியாமல் மணந்து கொண்டு இருக்க வேண்டும். அந்த நேரத்தில் உனக்கு வேலையில்லை. அவளது வயது 18-க்கும் கீழ்; அதாவது மைனர். ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்திருந்தால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும்.
இரண்டாவதாக வேலை கிடைத்தவுடன் உன்னுடைய தந்தையிடம் விவரம் சொல்லி அவர் மறுத்தவுடன் அவளை எங்கேயாவது அழைத்துச் சென்று திருமணம் முடித்து இருக்க வேண்டும். ஆனால் அவள் தங்க வைக்கப் பட்டுள்ள ரகசிய இடம் தெரியாத காரணத்தால் முடியவில்லை.
மூன்றாவதாக தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவோ அல்லது தீபாவளியன்றோ என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்து அவர்கள் மூலமாக திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் உன்னை நடு ரோட்டில் தள்ளி விட்டு அவளை அவரது குடும்பத்தார் வீட்டிற்குள் அழைத்துச் சென்று வீட்டுக் காவலில் வைத்தது போல் அடைத்து விட்டார்கள். நீயும் அவசரப் பட்டு வெறுப்படைந்து ஊருக்குத் திரும்பி விட்டாய். அந்த சமயத்தில் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.
நான்காவது யாருமே எதிர்பார்க்க முடியாத குறுகிய கால இடைவெளியில் உன்னுடைய காதலிக்கு போதுமான கால அவகாசம் அளிக்காமல் மூன்றே நாட்களில் கோயிலில் வைத்து திருமணம் முடித்து விட்டார்கள். அந்த விவரம் கூட தெரியாமல் அவளை பதிவுத் திருமணம் செய்து கொண்டு இங்கு வந்து வாழ்க்கை நடத்த வீடு தேடி அலைந்து கொண்டிருக்கும்; சமயம் தற்செயலாகத் தான் அவளை சந்தித்திருக்கின்றாய்.
ஐந்தாவது அவள் உன்னிடம் நான் உடலளவில் மாற்றமின்றி இருக்கின்றேன் என்று சொன்ன போதிலும் வசதியுள்ள ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதால் அவர்களுக்குள் என்ன தான் மன வேற்றுமை இருந்தாலும் காவல் நிலையத்தில் திருமணமான ஒரு பெண்ணை கடத்தி விட்டதாக வழக்குப் பதிவு செய்து உன்னை மட்டும் சிறையில் அடைப்பார்கள். அது மட்டுமல்லாமல் நீ உயிருக்கு உயிராக காதலித்த உன் காதலியின் தன்மானம் காற்றில் பறந்து விடும். அநத சமயத்தில் அவளது நிலைமை தற்கொலைக்குத் தூண்டச் செய்யும். உன் காதலியை நீ இழந்தாலும் பரவாயில்லை அவளது மானத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும். அத்துடன் நீ பார்த்து வரும் அரசாங்க வேலையும் போய் விடும். காசு பணம் இல்லாமல் இருந்தவளுக்கு வசதியுள்ள ஒருவர் கணவராக அமைந்து விட்டதால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று உங்களை பிரிப்பதற்கு எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்.
ஆறாவது அவள் தன் கணவரது பழக்க வழக்கங்கள் எதுவும் பிடிக்காமல் உன்னுடன் இல்லறத்தில் கணவருக்குத் தெரியாமல் வாழ விரும்பினால் எதிர் காலத்தில் என்னைத் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இப்படித் தான் இருந்திருப்பாளோ என்னும் சந்தேகம் உனக்கு இருந்து கொண்டே இருக்கும். அதே போன்ற சந்தேகம் தான் அவளுக்கும் வரும்.
எனவே இனி வருங்காலத்தில் அவளுக்கு என்னென்ன நல்லன செய்ய முடியும் என யோசித்து அவற்றை மாத்திரம் செய்து வரவேண்டும் எனவும் தகாத உடலுறவு பற்றி சிந்திக்கவே கூடாது என்றும் அறிவுறை வழங்கினாள் என்றும் தெரிவித்தார்.
நான் என்னுடைய கேரளத்துக் பெண் நண்பர் சொன்ன அறிவுறைகளின் படி நடந்து கொள்வது தைரியமின்மையோ அல்லது கோழைத்தனமோ அல்ல என்பதனை நீ இப்பொழுதாவது உணர வேண்டும் என்று சொன்னார்.
இது வரையில் எனக்கு அவரும் அவருக்கு நானும் என்று மட்டும் இருந்தோம். இப்போது அவருக்கு நல்லது எது கெட்டது எது என்று சொல்ல ஒரு தோழி கிடைத்திருக்கின்றாள் என்பதனைத் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர் மீது நான் சந்தேகப் படவில்லை.
ஜாதகப் பொருத்தம் காசு பணம் அந்தஸ்து எல்லாம் சேர்ந்து நம் எதிர்காலக் கனவை சீர்குலைத்து நம்மை இல்லறத்திலிருந்து பிரித்து விட்டது. நம் இருவருக்கும் இடையே உள்ள உண்மையான அன்பு மற்றும் நெருக்கம் மற்றும் காதல் மற்றும் எதிர்காலம் பற்றிய கனவுகள் எல்லாம் வீணாகி விட்டது என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டேன்.
இரண்டு மனங்களின் குமுறல்கள் எரிமலை போல் வெடித்த போதிலும் எனக்குத் தாலி கட்டியவர் போதையில் படுத்திருப்பதைப் பார்த்த அவருக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது என்றால் எனக்கு எப்படி இருக்கும்.
மீண்டும் ஒரு பிரிவு. இவ்வளவு தூரம் பேசிய பின்னர் அவர் மீண்டும் வருவாரா அல்லது வர மாட்டாரா என்பது எனக்குச் சந்தேகமாகி விட்டது. அதனை அவரிடமே கேட்டு விட்டேன்.
அதற்கு அடுத்த மாதம் கட்டாயம் இதே போல மீண்டும் சந்திப்போம் என்று அவர் சொன்னவுடன் சற்று ஆறுதல். அவர் என் வீட்டை விட்டு புறப்படும் சமயம் எல்லாவற்றையும் இழப்பது போன்ற உணர்வு.