மீண்டும் ஏக்கம்
தங்கம் பிளாட்டினம் பித்தளை செம்பு வெண்கலம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களுக்கு இடையே நான் விலை மலிவான இரும்பாக பிறப்பெடுத்து விட்டேன். தங்கத்திற்கும் பிளாட்டினத்திற்கும் கொடுக்கும் மதிப்பினையும் மரியாதையினையும் இரும்பிற்கு யாரும் கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் காந்தத்திற்கு அருகில் எந்த உலோகங்களை கொண்டு சென்றாலும் இரும்பைத் தவிர வேறு எந்த உலோகத்தையும் ஏற்றுக் கொள்ளாது. இரும்பு என்றால் மட்டுமே தன் வசம் ஈர்த்துக் கொள்ளும் சக்தி காந்தத்திற்கு உண்டு. காந்தம் தாம் ஈர்க்கும் உலோகத்தின் விலை மதிப்பினைப் பார்ப்பதில்லை. அதே போல இரும்பு புதியதா அல்லது பழையதா என்பதனைக்கூட காந்தம் பார்ப்பதில்லை.
காந்தம் இரும்பினை ஈர்ப்பது போல அவர் என்னை ஈர்த்து விட்டார் நானும் இரும்பைப் போல அவரிடம் ஒட்டிக் கொண்டேன். அப்போது எங்களுக்கு இடையே படிப்போ அந்தஸ்தோ ஜாதகப் பொருத்தமோ எதுவும் தெரியவில்லை. எனக்கு அவர் அவருக்கு நான் என்னும் உணர்வு மட்டுமே நம் இருவருக்கு இடையே இருந்தது. நிச்சயம் நாம் வாழ்க்கையில் திருமண பந்தத்தில் இணைந்து இணை பிரியாத தம்பதிகளாக கடைசி மூச்சு வரை வாழ்வோம் பிரிய மாட்டோம் என்னும் எண்ணங்கள் தான் மேலோங்கி இருந்தன.
ஆனால் கற்பனை வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே மிகுந்த வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. காரணம் எனது தாயாரும் அவரது தந்தையும் தான்.
சேற்றில் முளைத்த செந்தாமரை இறைவனது பாதத்தை சென்றடையும். செந்தாமரை சேற்றில் முளைத்தது என்று யாரும் உதாசீனப் படுத்த மாட்டார்கள். இறைவன் காலடியில் சேர்ப்பார்கள. ஆனால் நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த காரணத்தால் இவருடன் சேர முடியவில்லை.
எனக்குத் திருமணம் ஆகி எனக்குப் பிறந்துள்ள குழந்தை பேசிப் பழகி நடக்கவும் ஆரம்பித்து விட்டது. ஆனாலும் என் மீது அவர் கொண்டுள்ள அன்பு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கின்றது. தவறான உறவு முறை எதுவும் இல்லை.
அவருடைய தாயார் என்னுடைய இல்லத்திற்கு வந்து தன் மகனை தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்லுமாறு என் முன்னிலையில் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்தால் என்னுடைய வற்புறுத்தலின் பேரில் அவர் மீண்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் அவருடைய விருப்பப்படி பெண்ணைத் தேர்வு செய்யாமல் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்து தேர்வு செய்தமையாலும் அவரது தந்தை அவரது விருப்பத்தை நிறைவேற்ற மறுத்து விட்ட காரணத்தாலும் தாயாருடைய மனம் புண்படக் கூடாது என்பதனால் அவர்கள் காட்டிய பெண்ணை மணமுடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பதனை அறிய முடிகின்றது.
நான் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் கூட நிச்சயதார்த்தம் செய்துள்ள பெண்ணை பிடித்து இருக்கின்றது என்றோ அல்லது பிடிக்கவில்லை என்றோ ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருக்கின்றார்.
வழக்கமாக அவர் எனது இல்லத்திற்கு வருகை தரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று அவரது வருகையை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் என் செல்லப் பெண்ணோ அவரது வருகையை எதிர்பார்த்து அடிக்கடி வீட்டு வாசல் வரை சென்று வந்து கொண்டிருக்கின்றாள்.
நான் எதிர்பார்த்த நேரத்தில் அவர் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். இந்த முறை அவர் தனியாக வரவில்லை. எனக்கு நன்கு அறிமுகமான அவருடைய உறவுக்காரப் பெண் ஒருவரோடு அவர் என்னுடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஒரே சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
என்னுடைய செல்லப் பெண் அவரிடத்தில் இந்தப் பெண்ணைப் பார்க்கத் தான் அடிக்கடி ஊருக்கு போனீர்களா பாபா என்று கேட்டாள். அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அப்போது அந்தப் பெண் என் செல்லப் பெண்ணிடம் உன்னுடைய பாபாவை நான் கல்யாணம் பண்ணிக்கவா என்று கேட்டதற்கு நான் விட மாட்டேன். பாபா என் அம்மாவைத் தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்னுடனேயே இருக்க வேண்டும் என்று சொல்வி விட்டு அவரது மடியில் அமர்ந்து கொண்டாள்.
நான் அந்தப் பெண்ணிடம் நீங்கள் எப்படி இவருடன் இங்கு வந்து இருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் நான் இங்கு வரக் கூடாதா அவர் மட்டும் தான் வர வேண்டுமா எனக் கேட்டாள். அதற்கு நான் அப்படியில்லை நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வருவதில் எனக்கு மிக்க சந்தோஷம். நான் கேட்டது அந்த அர்த்தத்தில் அல்ல. இந்த ஊருக்கு எப்படி வந்தீர்கள் எனக் கேட்டேன்.
அதற்கு அந்தப் பெண் எனக்கு இவர் பணியாற்றும் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு வேலை கிடைத்து விட்டது. நானும் அதே அலுவலகத்தில் பணியில் சேர்ந்து கொண்டேன். இவர் எனக்கு இவருடைய 40-க்கு மேற்பட்ட பெண் சிநேகிதிகள் பட்டாளத்திற்கு அறிமுகம் செய்து வைத்து அவர்களுடனேயே தங்குவதற்கு அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று சொன்னாள்.
வழக்கம் போல என் செல்லப் பெண்ணிடத்தில் அவர் சாக்லெட் கொடுக்க ஒன்றை தன்னிடம் வைத்துக் கொண்டு இன்னொன்றை கூட வந்துள்ள பெண்ணிடத்தில கொடுத்து விட்டு எனக்கும் அவருக்கும் சேர்த்து ஒரு சாக்லெட் கொடுத்து விட்டு என்னிடத்தில் பாபாவுக்கு பாதி சாக்லெட் கொடு என்று கட்டளையிட்டது. நானும் வழக்கம் போல் பாதி சாக்லெட்டை கடித்து விட்டு மீதி பாதியை அவரிடத்தில் கொடுத்தேன். வழக்கம் போல காபியினையும் பாதி அருந்தி விட்டு அவர் என்னிடத்தில் கொடுத்தார். நானும் மிக சந்தோஷமாக பருகினேன். அந்த செய்கையினை அந்தப் பெண் உற்று கவனித்துக் கொண்டு இருந்தாள்.
நீங்கள் இவரிடத்தில் எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் கோயில் குளங்களுக்குச் சென்று வருவதை என் கண்களால் அடிக்கடி பார்த்து இருக்கின்றேன். அப்போது உங்கள் இருவருக்கும் இடையே இருந்து வந்த காதலையும் நெருக்கத்தையும் புரிதலையும் கண்டு நான் பல முறை வியந்து இருக்கின்றேன்.
இவரைப் பிரிந்து நீங்கள் இன்னொருவரை மணந்து வாழ்க்கை நடத்துவது கேள்விப்பட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அலுவலகத் தோழிகள் யாரும் உங்களை நேரில் பார்க்காத போதும் கூட அனைவரும் உங்களைப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அனைவருக்கும் உங்கள் இருவருக்கிடையே இருந்த காதலைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லியும் கூட இவர் மீது இன்னமும் சிலர் அன்பு செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால் திருமணத்திற்கு கூட தயாராக இருக்கின்றார்கள் தெரியுமா எனக் கேட்டாள். அதற்கு நான் எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அந்த விவரங்கள் அனைத்தையும் என்னிடத்தில் சொல்லி இருப்பதாகவும் தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் பெண்ணை நேரில் கூட அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தேன்.
அப்போது அந்தப் பெண் நீங்கள் இருவரும் இணை பிரியாத காதலர்களாக இருந்த காரணத்தால் சொந்த ஊரில் இருக்கும் சமயம் கட்டாயம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் விதி சதி செய்து விட்டது போலும்.
தற்போதும் கூட எனக்கு இவர் மேல் ஒரு சபலம் இருக்கின்றது. இவரை நான் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என நினைக்கின்றேன். ஆனால் இவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதால் என்னால் மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியவில்லை.
இவருடைய தந்தை என்னுடன் பிறந்த தங்கையின் உறவினர் என்ற போதிலும் இரண்டு குடும்பத்தாருக்கு இடையே பேச்சு வார்த்தை கிடையாது. ஜென்ம விரோதிகள் போல நடந்து கொள்வார்கள். எனவே நான் இவர் மீது உண்மையான அன்பு செலுத்தினாலும் அது நிறைவேறாது என்பது உண்மை.
நான் இவருடைய நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் பணியில் சேர்ந்த காரணத்தால் என்னால் இவரை அடைய முடியாமல் போய் விட்டது. இவருடைய திருமண நிச்சயதார்த்தத்துக்கு முன்னால் எனக்கு வேலை கிடைத்து இருந்தால் நிச்சயம் நான் இவரை அடைய முயன்று இருப்பேன் என்று என்னிடம் நேரடியாக தெரிவித்தாள்.
அப்போது நான் அந்தப் பெண்ணிடத்தில் இவரது வருங்கால மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடத்தில் இது வரை சொல்லவில்லை. உங்களிடத்தில் ஏதேனும் தெரிவித்துள்ளாரா எனக் கேட்டேன். அந்தப் பெண்ணைப் பற்றி இவரிடத்தில் நான் மட்டுமல்ல இவரை வாடா போடா என்று நெருக்கமாக உரிமை கொண்டாடி பேசும் அளவிற்கு பழகி வருகின்ற 40 பெண்களுக்கு மேல் துருவிததுருவி கேட்டுப் பார்த்தும் கூட யாரிடத்திலும் சொல்லவில்லை என்று சொன்னாள்.
எனவே அனைவரும் சேர்ந்து சென்று இவருக்கு நிச்சயம் செய்துள்ள அந்தப் பெண்ணைப் பார்த்து வருவது என முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தாள். இன்றைய தினம் இவருடைய வருங்கால மனைவியின் வீட்டிற்கு நானும் மற்ற பெண் சிநேகிதிகளும் இவருடன் சேர்ந்து பார்த்து வருவது என ஆலோசனை செய்த போது அந்தப் பெண்கள் அனைவரும் இவரது வருகைக்காக நீங்கள் இன்றைய தினம் ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பீர்கள் எனவும் இந்த வாரத்திற்கு பதிலாக அடுத்த வாரம் செல்லலாம் என முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தாள்.
என்னை விரும்பிய அவர் அவரை விரும்பும் வேறு ஒரு பெண்ணுடன் என் வீட்டிற்கு வந்திருப்பதால் நான் அவரிடத்தில் அந்தரங்கமாக மனம் விட்டு எதுவும் பேச முடியவில்லை. எனவே அவர்கள் சென்று வருகிறோம் என்று விடைபெற்ற சமயம் நான் அழுது விட்டேன்.
காரணம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல அவர் என் வீட்டிற்கு வந்தும் கூட என்னால் அவரிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை என்பது தான்.
இவருவம் என்னுடைய வீட்டை விட்டுப் புறப்படும் சமயம் பிரிவதற்கு மனம் இல்லாமல் அவரை வழியனுப்பி வைத்தேன். வழக்கம் போல் என் உள் மனம் ஏக்கத்துடன் வருந்திக் கொண்டு இருக்கின்றது. அதே நிலை தான் அவருக்கும்.