அவரது தாயார் வருகை
நான் என்னுடைய தங்கையின் மகள்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு சொந்த ஊர் சென்று வந்தேன். அந்த திருமண மண்டபத்தில் அவருடைய தாயார் என்னை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள். என்னை அருகில் காண முயன்று அவரால் என் அருகில் வந்து காண முடியவில்லை.
நானும் தூரத்திலிருந்து அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவரது தாயாரிடத்தில் முன்பிருந்த சந்தோஷம் இல்லை. அவருக்கு அருகில் சென்று பார்த்தால் என்னுடைய கணவர் கூட வந்திருப்பதை பார்த்து விட்டால் தனக்கு மருமகளாக வர வேண்டியவர் வேறு யாரையோ மணந்துள்ள விவரம் தெரிந்து மிகவும் சங்கடப் படுவார்கள் என்பதற்காக நானும் அருகில் செல்லவில்லை. அதன் பின்னர் நான் ஊருக்கு திரும்பி விட்டேன்.
அதன் பின்னர் இரண்டு வாரங்கள் சென்ற பின்னர் திடீரென அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தொலை பேசியில் தன்னுடைய தாயார் என்னைப் பார்க்க வர இருக்கின்றார் எனத் தெரிவித்து எப்போது வரலாம் என்று கேட்டார்.
அதற்கு நான் இன்று நேரமாகி விட்டது. சற்று நேரத்தில் இருட்டி விடும். எனவே இப்பொழுது வந்தால் நீண்ட நேரம் பேச முடியாது. எனவே நாளை மதியம் விருந்திற்கு காலையிலேயே அழைத்து வாருங்கள் என்று சொன்னேன். உடனே அவருடைய தாயாரிடம் கலந்து ஆலோசித்து அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு வருவதாக தகவல்; தெரிவித்தார்.
அவர் சொன்னபடியே அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு அவருடன் அவருடைய தந்தையும் தாயாரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் வருகை தரும் சமயம் என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவர் வீட்டில் இல்லை.
அவருடன் வந்த அவரது தாயாரை வாங்க அத்தை என்றும் அவருடைய தந்தையை வாங்க மாமா என்றும் அழைத்தேன். நான் முன்பு போல அழைத்ததைக் கேட்ட அவரது தாயார் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
அதன் பின்னர் நான் அவருக்கும் அவருடைய பெற்றோருக்கும் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தேன். நான் எப்படி சாப்பிடும் சமயம் அவருக்கு பாதி கடித்துக் கொடுக்கின்றேனோ அதே போல அவரது தாயார் எனக்கு ஒரு முறை ஊட்டி விட்டு அவர் ஒரு முறை சாப்பிட்டார்கள். . என்னுடைய தாயார் கூட இந்த அளவிற்கு பாசத்துடன் எனக்கு ஊட்டியதில்லை. எனவே நான் அவருடைய தட்டில் மேலும் மேலும் இனிப்புகளையும் கார வகைகளையும் அவருக்கே தெரியாமல் வைத்துக் கொண்டே இருந்தேன். என் மீது வைத்திருந்த அன்பும் பாசமும் இன்னமும் சற்று கூட அவருடைய தாயாருக்கு குறையவில்லை என்பதனை அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் காபி சாப்பிட்டு முடித்தவுடன் அவரது தந்தை அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வருகின்றேன் எனக் கூறி விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின்னர் அவரது தாயார் என்னிடம் சற்று சோகமாக பேச ஆரம்பித்தார்கள்.
நாங்கள் புதிதாக ஒரு வீடு வாங்கி புதுப்பித்து கிரஹப் பிரவேசம் செய்யும் சமயம் இவனை அழைத்தோம். மகன்கள் மருமகள்கள் பேரன் பேத்திகள் அனைவரும் வந்தார்கள். ஆனால் இவன் மட்டும் வரவில்லை. பதிலுக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை.
அதன் பின்னர் அவருக்கு அறுபது வயது பூர்த்தியானதை கொண்டாடும் வகையில் அனைத்து உறவினர்களையும் நண்பர்களையும் சுற்றத்தாரையும் வணிகத் தொடர்புடைய வாடிக்கையாளர்களையும் அழைத்துக் கொண்டு இராமேஸ்வரம் சென்று மிகவும் விமரிசையாக சஷ்டியப்த பூர்த்தி செய்து கொண்டோம்.
என்னுடைய அனைத்து மகன்கள் (இவனுக்கும் சேர்த்து) மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கியிருந்தோம்.
ஊரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு மூன்று பஸ்களில் உறவினர்களையும் சுற்றத்தாரையும் அழைத்துச் சென்றோம். வாடிக்கையாளர்கள் நண்பர்கள் தனித் தனியே பஸ்களிலும் இரயில் முலமாகவும் வந்தார்கள்.
சஷ்டியப்த பூர்த்தியின் சமயம் புரோகிதர்கள் மகன்கள் மற்றும் மருமகள்கள் அனைவரையும் அழைத்து புத்தாடைகள் கொடுத்து ஹோமத்தில் அமரச் சொல்லும் சமயம் இவன் மட்டும் இல்லாததால் எனக்கு அழுகை வந்து விட்டது. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன் என்னால் முடியவில்லை.
திருமண மண்டபமே நிறைந்து காட்சி அளித்த போதிலும் என்னுடைய கண்களில் கண்ணீர் இவன் மட்டும் இல்லாத ஒரே காரணத்தால் தாரை தாரையாக வந்தது. அனைவரும் கேட்ட சமயம் ஹோம புகையினால் கண் எரிகின்றது என்று அக்னியின் முன் அமர்ந்து அப்பட்டமாகப் பொய் சொன்னேன். என் உள் மனம் அழுத காரணத்தால் கண்களிலிருந்து வரும் கண்ணீரை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.
அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தை கொடுத்த அந்த சஷ்டிய்ப்த பூர்த்தி விழாவானது எனக்கு மட்டும் சோகத்தைக் கொடுத்ததற்கான ஒரே காரணம் இவன் மட்டும் கலந்து கொள்ளாதது.
தீபாவளியன்று உனது வீட்டிற்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டு வந்த சமயம் என் மகனை உன் தாயார் தள்ளி விட்டு ரத்த காயங்களுடன் அன்றே திரும்பிச் சென்றது மற்றும் முதல் மாத சம்பளம் பெற்றவுடனேயே வீட்டிற்கு வந்து இவனது தந்தையிடம் உன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் கேட்ட சமயம் இவரது தந்தை இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்றும் சமமான அந்தஸ்தில் உன் குடும்பம் இல்லை என்றும் சொல்லி உன்னை இவன் மணக்க எதிர்ப்பத் தெரிவித்தது என இரண்டும் என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டது.
இவனது விருப்பப்படி உன்னை இவனுக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் இராமேஸ்வரத்தில் நடந்த அந்த திருமணம் எனக்கு முழுமையான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்.
ஆனால் எனக்குத் தெரியாமல் உன்னுடைய தாயார் உனக்கு தீபாவளி முடிந்தவுடன் இவனுக்கு ஏற்பட்ட ரத்த காயங்கள் கூட ஆறுவதற்குள் அவசரக் கல்யாணம் செய்து விட்டார்கள் அதற்கு இவரது தந்தை பல வழிகளில் உதவிகள் செய்திருக்கின்றார் என்பதனை அறிந்து நான் மிகவும் வருந்தினேன். அதனால் பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தேன்.
அதே சமயம் இவன் தான் உன் வருங்காலம் என்று நினைத்திருந்த நீ எவ்வாறு கஷ்டப்பட்டிருப்பாய் என்பதனை நினைக்கும் போது எனக்கே உங்கள் இருவரின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று வெறுப்பு வந்து விடுகின்றது. இவனைப் பிரிந்து நீ எவ்வளவு துயரத்தில் அழுதிருப்பாய் என்பதை நினைத்துக் கூட பார்க்க என்னால் முடியவில்லை. எனக்கே இப்படியென்றால் இவன் எப்படி கஷ்டப் பட்டிருப்பான் என்று கற்பனை கூட செய்ய முடியாது.
இவன் தீபாவளியன்று ரத்த காயங்களுடன் செல்லும் சமயம் சொன்னதை அப்படியே கடைப் பிடிக்கின்றான். என்னைப் பொறுத்த வரையில் அனைத்துப் பிள்ளைகளும் சமம். யாரையும் பிரியவும் மாட்டேன். விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.
அப்படி பேசிச் கொண்டிருந்த சமயம் என்னிடத்தில் திருமணத்திற்குப் பின்னர் ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்ட சமயம் ஆமாம் மூன்று மாதம் என்று சொன்னவுடன் அவர் பக்கம் திரும்பி இந்த நல்ல சேதியினை முன்னமே சொல்லியிருந்தால் ஏதேனும் விசேஷமாக வாங்கி வந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.
அப்போது அவர் எனக்கு வேண்டிய சத்தான பொருட்கள் அனைத்தையும் ஆரம்பத்திலேயே வாங்கிக் கொடுத்து விட்டார். காரணம் என் வயிற்றில் கரு உண்டாகியிருப்பதை இவரிடத்தில் தான் முதன் முதலில் சொன்னேன். என் வயிற்றில் வளரும் கருவிற்கு காரணமாக இருந்த என் கணவரிடம் கூட நான் முதலில் சொல்லவில்லை. என்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த தாயாரிடம் கூட நான் சொல்லவில்லை ஏனெனில் என்னை இவருக்கு மணமுடித்து வைக்காததால் என் தாயார் மீது எனக்கு வெறுப்பு அதிகமாகி விட்டது. என் வயிற்றில் கரு உண்டான விஷயத்தை நான் உங்கள் மகனிடம் சொன்னவுடனேயே நாம் இருவரும் சேர்ந்து எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை எவ்வாறு அழைப்பது என்று யோசித்து பெயர் கூட தேர்வு செய்த விட்டோம் என்று சொன்னேன்.
என்னிடம் கர்ப்ப காலத்தில் என்ன என்ன உண்ண வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறை வழங்கியுள்ளார். நீங்கள் கவலைப் பட வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் உண்மையாகவா என்று கேட்ட சமயம் வேண்டுமானால் சமையலறைக்கு வாருங்கள் அவர் வாங்கிக் கொடுத்துள்ள பொருட்களைக் காண்பிக்கின்றேன் என்று சொன்னேன்.
அப்போது என் வீட்டை சுற்றிக் காட்டுமாறு கேட்டுக் கொண்டு சமையலறைக்குள் வந்தார்கள். அங்கு நானும் அவரது தாயாரும் மட்டும் தனியே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் மாத்திரம் ஹாலில் அமர்ந்து இருந்தார். அவர் என் வீட்டிற்கு வந்தால் நான் எதிரில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராத காரணத்தால் அவர் தனியே அமர்ந்து சலிப்படைந்து விட்டார்.
அப்போது உங்கள் மகன் என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளாமல் உயிரோடு இருக்கின்றேன். அவரைப் பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று சொன்னேன்.
நான் வருமையில் இருக்கும் காரணத்தால் அவரது தந்தை என் தாயாரிடம் ஐந்து பவுன் தங்க செயினை இரவலாகவோ அல்லது கடனாகவோ கொடுத்து உதவி செய்திருக்காமல் அரை பவுன் தங்க தாலி கூட இல்லாமல் வெறும் மஞ்சளை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி என் கழுத்தில் கட்டச் சொல்லியிருந்தால் நான் என்னுடைய இறுதி மூச்சு வரை உங்களுடைய மறுமகளாக வந்து உங்களுக்கு பணி விடை செய்து இருப்பேன் என்று சொன்னேன்.
அதன் பின்னர் அவர் வாங்கிக் கொடுத்த ஆலிலைக் கிருஷ்ணன் தங்க டாலரைக் காண்பித்து அது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் சொல்லி விட்டு அவருடைய பிறந்த நாளன்று நான் வகிடு பொட்டு வைக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக் கொடுத்த வெள்ளியிலானான குங்குமச் சிமிழையும் குங்குமத்தையும் காண்பித்தேன். சுமங்கலிப் பெண்கள் தலையில் வகிடு பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டு அவரே என் தலை வகிடில் குங்குமம் வைத்து விட்டதையும் சந்தோஷமாக தெரிவித்தேன்.
நீண்ட நேரமாகியும் நாம் இருவரும் திரும்பாத காரணத்தால் அவர் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தார். அவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் என் மகன் தற்சமயம் யார் பேச்சையும் கேட்க மாட்டான். நீ சொன்னால் மட்டுமே அவன் என்னைப் பார்க்க வருவான் என்று கொல்லிக் கொண்டே என் மகனை என்னிடம் மடிப்பிச்சையாக கேட்கிறேன். தயவு செய்து கொடுத்து விடு என்று சொன்னது கேட்டு ஆச்சர்யமடைந்தார்.
அப்போது என் மகனுக்கு உன்னைத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்னும் என்னுடைய ஆசை பகல் கனவாகி விட்டது. இருந்தாலும் இவன் சாமியாராகவோ சன்னியாசியாகவோ போய் விடாமல் இருக்கவும் வேறு ஏதேனும் விபரீத முடிவுகள் எடுப்பதிலிருந்து காப்பாற்றவும் இவனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதனை நீ தான் நிறைவேற்ற வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள்.
உடனே நான் அவரிடம் நம் இருவருக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஆசைப் பட்டவர் தான் என்னுடைய அத்தை அதாவது உங்களின் தாயார். நம் திருமணத்திற்கு ஆதரவாக இருந்தவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. எனவே உங்கள் குடும்பத்தார் மீது உள்ள வெறுப்பினை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு உங்கள் தாயாரிடத்தில் மட்டுமாவது அன்பாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று சொல்லிக் கொண்டே இருவரையும் அருகருகே நிற்க வைத்து இருவரது கால்களில் விழுந்து மன்றாடினேன்.
அந்தச் சமயம் இவ்வாறு முன் பின் யோசிக்காமல் காலில் விழுந்தால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி விட்டு என் தாயாரின் விருப்பப்படி உன்னுடைய ஆசையை நிறைவேற்ற நான் இனிமேல் என்னுடைய வீட்டிற்கு சென்று வருகின்றேன் என்று அவருடைய தாயார் முன்னிலையில் என்னிடம் ஒப்புக் கொண்டார்.
அவர் அப்படிச் சொன்ன மறுகணமே அவரது தாயார் முகத்தில் மீண்டும் பழைய படி இருந்த சந்தோஷம் லேசாகப் பார்க்க முடிந்தது.
அப்போது அவருடைய தாயார் அவரிடம் எப்போது என்னைக் காண வீட்டிற்கு வருகின்றாய் எனக் கேட்ட சமயம் மாதத்தில் இரண்டு மூன்று முறை வந்து கொண்டு தான் இருக்கின்றேன் இந்த முறை வரும் சமயம் கட்டாயம் வருகின்றேன் என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவரது தாயார் நீ மாதா மாதம் இரண்டு மூன்று முறை ஊருக்கு வந்தும் கூட என்னைப் பார்க்க வரவில்லையா என்று கேட்ட சமயம் தான் தீபாவளிக்குப் பின்னர் அவர் பல முறை ஊருக்குச் சென்றிருந்தும் ஒரு முறை கூட வீட்டிற்குச் சென்று தாயாரைப் பார்க்கவில்லை என்பது அறிந்து மிகவும் வருந்தினேன்.
அந்த நேரத்தில் அவரது தந்தை திரும்ப வந்து என்ன புறப்படலாமா என்று கேட்டவுடன் அனைவரும் புறப்பட்டனர்.
அவர் என் வீட்டிற்கு வந்து திரும்பும் சமயம் நான் வருத்தப் படுவேன் அவரும் வருத்தமாகத் தான் செல்வார். ஆக மொத்தம் இரண்டு இதயங்கள் வருந்தும்.
ஆனால் இந்த முறை நான் வருத்தத்துடன் வழியனுப்பி வைக்க அவரும் அவரது தாயாரும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். தற்சமயம் மூன்று இதயங்கள் வருத்தத்துடன் பிரிகின்றன. பார்த்த என் கண்களில் வழக்கம் போல் கண்ணீர். என்னுடைய சோகத்தை அடக்க முடியாமல் சோபாவில் படுத்து விட்டேன்.