சந்தோஷத்தைக் கெடுக்கும் சந்தேகம்.
சந்தையில் ஒருவருடைய கால் நடையினை இன்னொருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு அழைத்துச் செல்கையில் பாசமுள்ள அந்த கால் நடை தன்னை வளர்த்து ஆளாக்கியவரைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டே பிரிய மனமில்லாமல் பணம் கொடுத்து வாங்கிய முன் பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் செல்லும்.
அதே போல என்னைப் பிரிவதற்கு மனமில்லாமல் அவர் சென்றதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் மல்கியது. ஆனாலும் நான் வெளிக் காட்ட முடியவில்லை. எனக்குப் பதிலாக என் செல்லப் பெண் அதனை வெளிக் காட்டி அழுது கொண்டு இருக்கின்றாள். அவர் செல்லும் சமயம் மாலையில் வருகின்றேன் எனச் சொல்லிச் சென்றார் ஆனால் இன்னும் வரவில்லை ஏன் என்று எனது செல்லப் பெண் என்னிடம் கேள்வி கேட்டு என்னை துயரத்தில் ஆழ்த்தி வருகின்றாள்.
அடுத்த நாள் திங்கட் கிழமையன்று அவர் அலுவலகம் செல்லும் நேரத்தில் அவரைப் பார்க்க முடியும் என்ற ஆவலுடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைக் காண முடியவில்லை. எனவே அவருக்கு ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என்னும் அச்சம் என்னை தொற்றிக் கொண்டது. எது எப்படி இருந்தாலும் அவர் என்னைக் காண வர வேண்டும் என்னும் ஏக்கத்துடன் இறைவனிடம் பிரார்த்தித்து நான் காத்திருந்தேன்.
அவரைக் கண்டவுடன் வெகு தூரத்தில் இருக்கும் கன்றுக் குட்டியினை அவிழ்த்து விட்டவுடன் தாய்ப் பசுவைத் தேடிச் செல்வது போல என்னுடைய செல்லப் பெண் அவரை மாடிப் படி வரைக்கும் சென்று வரவேற்று கட்டிப் பிடித்து முத்தமிட்டு அவரை சோபாவில் அமரச் செய்து அவளும் அவரது மடியில் அமர்ந்து கொண்டாள்.
எதிர் பாராத நேரத்தில் வெள்ளிக் கிழமையன்று மாலையில் நான் விளக்கேற்றி அவரது ஆலிலைக் கிருஷ்ணன் டாலரில் குங்குமம் வைத்து வழிபாடு செய்து முடிக்கும் தருவாயில் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்குப் பிரசாதம் வழங்கினேன். எனக்கு ஒரே ஆச்சர்யம்.
மாலையில் வருகிறேன் என்று சொல்லிச் சென்று விட்டு ஏன் வரவில்லை எனக் கேட்டுக் கொண்டே நானும் அம்மாவும் உனக்காக அழுது கொண்டிருந்தோம் தெரியுமா என என் செல்லப் பெண் அவரிடத்தில் கேட்டாள். அவரது கண்களில் கண்ணீர் மல்கியது.
அப்போது அவர் என் செல்லப் பெண்ணிடத்தில் இப்போது கரண்ட் போய் இருட்டி விட்டால் உனக்கு பயமாக இருக்குமா இருக்காதா எனக் கேட்டார். அதற்கு என் செல்லப் பெண் இருட்டு என்றால் எனக்கு பயம் என்று சொன்னாள். உடனே அவர் நான் இங்கு வந்து கொண்டிருக்கும் போது திடீரென கரண்ட் போய் விட்டது நானும் இருட்டுக்குப் பயந்து திரும்பி சென்று விட்டேன் என சமாளித்தார். அதன் பின்னர் வழக்கம் போல் சாக்லெட் பரிவர்த்தனை.
அவராகவே என்னிடத்தில் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே காபி சாப்பிட்டு விடலாமே ஏனெனில் எனக்கு லேசான தலை வலியாக இருக்கின்றது என்று சொன்னார். நானும் உடனே சென்று இரண்டு டம்ளர்களில் காபி போட்டுக் கொண்டு வந்தேன்.
உடனே அவர் நான் மனைவியுடன் வந்து சென்ற காரணத்தால் உனக்குத் தனியாக எனக்குத் தனியாக என காபியினை பிரித்து விட்டாயா எனக் கேட்டார். அப்படியில்லை தலை வலி என்று சொன்ன காரணத்தால் ஒரு டம்ளர் முழுவதையும் நீங்கள் குடித்து விட்டு இன்னொரு டம்ளரில் உள்ளதிலிருந்து எனக்குப் பாதி கொடுங்கள். அப்போது தான் தலை வலி சீக்கிரம் தீரும் எனச் சொன்னேன். அவரும் அப்படியே செய்தார்.
நான் திங்கட் கிழமையிலிருந்து உங்களைப் பார்க்க வேண்டும் என பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என்ற கவலையில் இருந்தேன் எனச் சொன்னேன்.
அதற்கு அவர் திங்கட் கிழமையன்று காலையில் நான் அலுவலகம் செல்லும் சமயம் அவளது பெற்றோர் நேரில் வந்து அவரையும் அவரது மனைவியையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள் எனத் தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலையில் அவர் அலுவலகத்திலிருந்து நேரடியாக மாமனார் வீட்டிற்குச் சென்று தமது மனைவியை வீட்டிற்கு அழைத்த போது வர மறுத்து விட்டதாகத் தெரிவித்தார் அதற்குக் காரணம் அவரும் நானும் என் குழந்தையும் மிகவும் நெருக்கமாக இருப்பதைக் கண்ட அவரது மனைவி அவர் மீது சந்தேகத்துடன் கோபம் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அது சமயம் வீடு பார்த்ததற்கும் மாப்பிள்ளைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நாமாகத் தான் வீடு பார்த்து அங்கு குடி வைத்தோம். வீடு குடி போகும் வரையில் எந்த வீட்டிற்குச் செல்லப் போகின்றோம் என்பதனை ஒரு வார்த்தை கூட அவர் கேட்கவில்லை. தனிக் குடித்தனம் எங்கு சென்றாலும் சரி என்னும் நிலையில் நாமாகத் தான் வீடு பார்த்தோம் என்று அவரது மாமனார் மற்றும் மாமியார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து விட்டதாகத் தெரிவித்தார். இந்த காரணத்தால் தான் அவர் கீழே உள்ள போர்ஷனுக்கு குடி வருவதற்கு ஆரம்பத்திலிருந்து யோசித்ததாகச் சொன்னார்.
அவர் என்னை காதலித்து ஏமாற்றி விட்டு பெற்றோர் கட்டாயத்தின் பேரில் நகை நட்டு வரதட்சணைக்கு ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்டுள்ளதாக அவரது மனைவி சொல்லி வருவதாகவும் அவர் வாழ்க்கையில் நடந்தவற்றை அப்படியே சொல்லியும் கூட நம்ப மறுத்து என்னை ஏமாற்றியதாகவே நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அந்த சமயத்தில் என்னுடைய தாயாரும் அவருடைய தந்தையும் செய்த தவறு அவரது வாழ்க்கையில் அவருக்கு நிம்மதியில்லாமல் செய்து வருவதனை அறிந்து வருத்தமடைந்தேன்.
தொடர்ந்து அவர் கூறுகையில் அவர் எனது இல்லத்திற்கு வந்து சென்ற பின்னர் அவர் பணியாற்றும் அலுவலகத்திற்கு வந்தே தீர வேண்டும் என அவரது மனைவி அடம் பிடித்த காரணத்தால் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமது மனைவி மற்றும் மாமனார் மாமியார் அனைவரையும் சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்று அவர் பணியாற்றும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அங்குள்ள அலுவலகத் தோழிகள் அனைவரும் அவருடன் மிக மிக நெருக்கமாக பழகுவதைப் பார்த்து அந்த காரணத்தாலும் கோபமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு அவரது மாமனார் அலுவலகத்தில் அவர் செய்யும் வேலைக்கு எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழக வேண்டியிருக்கும் பேச வேண்டி இருக்கும் நாம் வீட்டில் இருப்பது போல அமைதியாக பேசாமல் இருக்க முடியாது என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை என்பதனையும் தெரிவித்தார்.
என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஓரிரு வாரங்கள் உங்கள் அண்ணன் வீட்டிலே இருவரும் தங்கி அதன் பின்னர் நல்ல முடிவாக எடுக்கலாமே என அறிவுறை வழங்கியதற்கு அதனையும் சொல்லிப் பார்த்து விட்டதாகவும் அதனையும் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரும் அவரது குடும்பத்தாரும் சேர்ந்து புனித யாத்திரை சென்ற சமயத்தில் முதலாவது நாளன்று சென்று தரிசனம் செய்த கோயில்கள் உள்ள ஊரில் பணியாற்றி வந்த காரணத்தால் ஒவ்வொரு முறையும் அந்தந்த இடங்களைக் காணும் சமயம் பழைய கால நினைவுகளை வசந்த கால காதல் நினைவுகளாக நினைத்து ரசித்து வந்ததாகவும் என்னைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் என்னுடன் மீண்டும் அங்கே சந்தோஷமாக சுற்றித் திரிய முடியும் என்னும் எதிர்பார்ப்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் தீபாவளிக்கு வந்து கோபத்துடன் திரும்பிய பின்னர் திடீரென எனக்குத் திருமணம் நடந்து முடிந்து விட்ட விவரம் தெரிய வந்த காரணத்தால் மீண்டும் மீண்டும் அந்த இடங்களைக் காண வெறுத்து இந்த ஊருக்கு வந்ததாகவும் தெரிவித்தார். இந்த விவரங்களை இதுவரையில் அவர் என்னிடத்தில் சொல்லவில்லை.
இந்த ஊரில் நான் வாழ்க்கைப் பட்டு வந்திருப்பது அவருக்குத் தெரியாத காரணத்தால் இங்கு வந்து வேலையில் சேர்ந்த பின்னர் முதன் முறை பார்த்தவுடன் மீண்டும் மனமுடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த ஊரில் என்னை முதன் முதலில் பார்த்தவுடன் நான் மீண்டும் சேர்ந்து வாழலாம் எனவும் இன்னமும் கூட பழைய காதலியாகவே இருக்கின்றேன் என்று சொன்னதையும் கூட நினைவு படுத்தி விட்டு அந்த சமயத்தில் இருவரும் சேர்ந்து ஒரு தவறான முடிவு எடுக்காமல் மாதா மாதம் வந்து சந்திப்பது என்று சோகமான முடிவினை எடுத்தது பற்றியும் சொன்னார்.
திருமணமே வேண்டாம் என்று இருந்த நிலையில் எனது வற்புறுத்தலின் பேரில் அவரது தாயார் முன்னிலையில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட ஒரே காரணத்தால் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால் அதிலும் நிறைய சிக்கல்கள். அவர் எதிர்பார்த்த பெண் அவருக்குக் கிடைக்கவில்லை.
அவருக்கு ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகளாகவே வருகின்றது. அவரே எதிர்பார்க்காமல் சோதனைகள் வருவதனை அவரால் சமாளிக்க முடியவில்லை. இப்போது குடும்பத்தில் பிரச்சினை. முதலாவது பிரச்சினைக்கு காரணம் என்னுடனான உறவு அது நிறைவேற தடையாக இருந்த அவரது தந்தையும் என்னுடைய தாயாரும். அடுத்து அவர் அனைவரிடத்திலும் எளிதில் சகஜமாகப் பழகும் விதம் அதனால் இரண்டாவது சிக்கல்.
அத்தனைக்கும் மேலாக தாலி கட்டிய கணவன் பேச்சினையும் கேட்காமல் பெற்றோர் அறிவுறைகளையும் செவி மடுக்காமல் எந்த முடிவுக்கும் வரவிடாமல் அவருக்கு மிகவும் மனக் கஷ்டத்தை மாத்திரம் கொடுத்து வரும் அவரது மனைவியை அவர் எப்படி சமாளிக்கப் போகின்றார் என்பது தெரியவில்லை.
அதன் பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னர் அவர் என்னிடத்தில் இதே ஊரில் பணியாற்றினால் வாழ்நாள் முழுவதும் ஒரே அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று மேன் மேலும் உயர முடியும். ஆனால் பதவி உயர்வு சற்று கால தாமதமாகும். ஆனால் சம்பளம் நிறைய கிடைக்கும்.
அதே நேரத்த்pல் முன்னர் வேலை செய்த பணியில் மீண்டும் சேர்ந்து கொண்டால் விரைவில் பதவி உயர்வுகள் மேலும் மேலும் கிடைக்கும். சம்பளமும் உயர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பலப்பல ஊர்களுக்கு வருடா வருடம் மாறுதலாகிச் சென்று கொண்டிருக்க நேரிடும் என்பதனைத் தெரிவித்தார். எதுவாக இருந்தாலும் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு செய்யப் போவதாகவும் அவர் எந்த விதமான முடிவினை எடுத்தாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன் மூலம் அவரது மனைவி தமது சொல் பேச்சினைக் கேட்டு அடங்கியிருந்தால் தொடர்ந்து இதே ஊரில் பணியாற்றுவது இல்லையேல் பழைய ஊருக்கே போய் விடுவது என்னும் முடிவில் இருக்கின்றார் என்பதனை சூசகமாகத் தெரிவித்து விட்டார்.
அவர் என்னிடத்தில் விடை பெற்றுச் செல்லும் சமயம் ஒரு கலக்கத்தைக் காண முடிந்தது. ஆனால் விரைவில் அவர் மீண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவர் செல்லும் சமயம் நான் அழுது விட்டேன்.
ஆண்டவா என்னை அவரிடமிருந்து பிரித்து விடாதே என என் மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டேன். அவர் இங்கேயே தொடர்ந்து பணியாற்றி மாதா மாதம் என்னை வந்து காண்பதற்கு அருள் புரிய வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல் வைக்க ஆரம்பித்து விட்டேன்.