எதிர் காலக் கனவுகள்
அவர் தம்முடைய தாயாரிடம் என்னைப் பற்றி பேசியிருக்கின்றார்.
அதற்கு அவருடைய தாயார் அவரிடம் நான் அழகாக இருப்பதாகவும் மிகவும் பிடித்திருப்பதாகவும் தெய்வ பக்கி மிகுந்தவளாக இருப்பதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை ஏதாவது கோயிலுக்குச் சென்று வரும் சமயம் அவளை மஞ்சள் நிற தாவணி அல்லது மஞ்சள் நிற பாவாடை அல்லது மஞ்சள் நிற ரவிக்கையில் பார்க்கும் சமயம் அவளை முழுவதுமாக மஞ்சள் நிற கூரைப் புடவையுடன் தன் வீட்டிற்கு மருமகளாக அழைத்து வரவேண்டும் என்னும் எண்ணம் தமக்கு வருவதாகவும் அதற்கு அந்த கடவுள் தான் வரமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாக சொன்னார்.
அவர் என்னை நினைக்கின்றாரோ இல்லையோ அவரது தாயாருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. நான் கூரைப்புடவையுடன் அவர் வீட்டில் விளக்கேற்றும் அளவிற்கு என்னை அவரது தாயார் உயர்ந்த நிலையில் என்னை வைத்துள்ளார் என்பதறிந்த எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நான் அவருடன் இல்லறத்தில் சேர முடியும் என்பதற்கான நம்பிக்கை வந்து விட்டது. எனவே அவருடன் மேலும் நெருங்கி பழக ஆரம்பித்தேன். அதனால் அவர் தன்னுடைய நண்பர்களுடன் ஊர் சுற்றும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தை என்னுடன் கழிக்க ஆரம்பித்தார். எனவே எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
அதே போல அவரது நண்பர்கள் அவரைப் பார்க்க வரும் சமயம் என்னையும் பார்த்துச் செல்லும் அளவிற்கு நான் உயர்ந்து விட்டேன். அவர் வீட்டில் இல்லாமல் வெளியில் சென்றிருக்கும் சமயம் அவருடைய நண்பர்கள் அனைவரும் என்னிடம் அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில் அவர் என் குடும்பத்தாருடன் சற்று நெருக்கமானார். இதன் காரணமாக அவர் என் குடும்பத்தாருடன் திரைப்படங்களைக் காண எங்களுடன் வர ஆரம்பித்தார். அதே நேரத்தில் அதே காம்பவுண்டில் உள்ள மற்றவர்களும் எங்களுடன் வர ஆரம்பித்தார்கள்.
திரைப்படம் முடிந்து வீடு திரும்பும் சமயம் என் குடும்பத்தார் பின்னே வர நானும் அவரும் மற்றவர்களும்; வேகமாக நடந்து வருவோம். சில நேரங்களில் நானும் அவரும் மாத்திரம் முன்னதாக வேகமாக நடந்து வந்து கொண்டிருப்போம். காரணம் நாம் இருவரும் பேசிக் கொள்வதை என் குடும்பத்தார் கேட்கக் கூடாது என்பது தான்.
விடுமுறை நாட்களில் அனைவரும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம் என் குடும்பத்தாரும் அவரது குடும்பத்தாரும் பகல் தூக்கத்தில் இருக்கும் சமயம் நானும் அவரும் மாத்திரம் திண்ணையில் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருப்போம். எல்லாம் நம் எதிர் காலம் பற்றித்தான்.
அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பல சமயங்களில் நான் அவரிடம் என்னிடம் உள்ள குறைகளைப் பற்றி சொல்வேன்.
அவரது உயரத்திற்கு ஏற்ற உயரத்துடன் கூடிய துணையாக இல்லை என்பேன். அதற்கு அவர் அலட்டிக் கொள்ளாமல் இல்லறத்தின் போது கட்டிலில் உயரம் ஒரு தடையாக இருக்காது என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.
நான் சார்ந்து இருக்கும் என் குடும்பம் அவரது குடும்பத்திற்கு ஏற்றார் போல வசதி இல்லாதது என்பேன். அதற்கு அவர் கடுமையான உழைப்பும் திறமையும் இருந்தால் பணம் காசு தானாக வரும். அப்போது ஊதாரித் தனமாக செலவு செய்யக் கூடாது எனவே அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்று சொல்வார்.
நான் உயரம் குறைவாக பருமனாக இருக்கின்றேன் என்பேன். அதற்கு அவர் நான் என் உயரத்தைக் குறைத்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால் நான் உன் கையால் உணவு சமைத்து பரிமாறும் சமயம் உன் அளவிற்கு பருமனாகி விடுவேன் என்று சொல்வார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு என்பேன். அதற்கு அவர் வேண்டுமானால் நானும் அம்பிகை பக்தனாகி விடுகின்றேன் அதாவது என்னுடைய பக்தன் ஆகி விடுகின்றேன் என்பார்.
எனக்கு படிப்பறிவு கிடையாது. உங்கள் அளவிற்கு எனக்கு பேச வராது என்பேன். அதற்கு அவர் நீ உன் குடும்பத்தாருடன் மட்டுமே இருந்து வந்த காரணத்தால் இவ்வாறு இருக்கின்றாய். என்னோடும் தற்போது உள்ள நண்பர்களோடும் சேர்ந்து பேசிப் பழக ஆரம்பித்தால் இங்குள்ள அனைவரும் ஆச்சர்யமடையும் அளவிற்கு மாறி விடுவாய் என்பார்.
உதாரணமாக சீட்டாட்டத்தில் ஜெயித்தவர் சாக்லெட் கொடுக்கும் சமயம் நம் இருவருக்கும் சேர்த்து ஒன்று கொடுத்த போது வாதாடிய விதத்தை சுட்டிக்காட்டி இது போன்று பலதருணங்களில் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பேச்சுத் திறமை தானாக வளர்ந்து விடும் என்று எப்பொழுதும் என்னை உற்சாகமூட்டிக் கொண்டேயிருப்பார்.
இதே காம்பவுண்டில் என்னைவிட திறமையான அழகான படித்த பெண்கள் இருப்பதைப் பார்க்கும் போது என்னை மாத்திரம் நீங்கள் தேர்ந்து எடுத்தமைக்கு என்ன காரணம் என்று கேட்பேன். அதற்கு அவர் எனக்கு ஏற்றார் போல் உள்ள உன்னுடைய வயது. உன்னுடைய வசீகரம் மற்றும் கள்ளங்கபடமற்ற அன்பு என்பார்.
உங்களுடைய தாயாருக்கு இந்த காம்பவுண்டில் உள்ள வேறு எந்தப் பெண்ணையும் பிடிக்காததற்கு காரணம் என்னவென்று கேட்டபேன். அதற்கு உன்னுடைய அழகு. உன்னுடைய ஆடைகளின் நேர்த்தி உன்னிடத்தில் உள்ள கடவுள் பக்தி மற்றும் பெரியவர்களிடம் குறிப்பாக என் தாயாரிடம் நீ காட்டும் மரியாதை என்று சொல்வார்.
அவர் மும்முரமாக வார இதழ்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அவர் அளவிற்கு எனக்கு வேகமாக படிக்க முடியாது. இருந்தாலும் அவர் ஒரு கார் விளம்பரத்தைக் காண்பித்து நாம் வாங்கப் போகும் கார் இந்த அளவிற்கு இருக்கலாமா என்பார்.
அதற்கு நான் சிறிய கார் முன்பக்கம் மாத்திரம் கதவு இருக்க வேண்டும். நமது குழந்தைகள் பின் சீட்டில் அமர நான் இறங்கி அவர்களுக்கு வழி விட வேண்டும். அப்போது தான் நம் குழந்தைகள் பத்திரமாக இருப்பார்கள் என்று சொல்வேன். அதற்கு அவர் நம் குடும்பம் பெரிதாகி விட்டால் என்ன செய்வது என்பார். அதற்கு நான் நம் குடும்பம் பெரிதாகும் வரையில் ஒரே காரை வைத்திருப்போமா குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகும் சமயம் கட்டாயம் பெரிய கார் வாங்கிக் கொள்ளலாம் என்பேன்.
இவ்வாறு சந்தோஷமாக உரையாடும் சமயம் அவருக்கு தந்தையின் பணிகளில் உதவிட நேரமாயிற்று என்று பிரிய மனமில்லாமல் மாலையில் புறப்படுவார். அவர் திரும்ப பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது அறிந்த பின்னர் தான் எனக்கு தூக்கம் வரும்.