எதிர் காலத் திட்டங்கள் நிறைவேறவில்லை
நான் என்னுடைய தாயாருடன் இரயிலில் ஏறி அமர்ந்தவுடன் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே நாளை காலை இந்த இரயில் நமது ஊருக்குப் போய் சேர்ந்து விடும். அவர் என்னை வரவேற்க இரயில் நிலையத்திற்கு வந்திருப்பார். அதன் பின்னர் நான் எனது வீட்டிற்குச் செல்வேன். நான் எனது வீட்டிற்குச் சென்றவுடன் என்னுடைய உறவினர்கள் அனைவரும் வந்து என்னிடம் நலம் விசாரிப்பார்கள்.
என்னைப் பார்க்க வராத எனது உறவினர்களையும் எனது நண்பர்களையும் எனது பழைய காம்பவுண்ட் தோழியர்களையும் வரவழைத்து சந்திப்பேன்.
அதே போல் எனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னர் எப்படியாவது அவரது வீட்டிற்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும். ஏனெனில் என்னுடைய தாயார் அவசரப்பட்டு என்னை அந்த நரகத்திற்குள் தள்ளி விடாமல் இருந்திருந்தால் அவரது வீடு தான் என்னுடைய புகுந்த வீடாக இருந்திருக்கும். எனவே ஒரே ஒரு முறை கட்டாயம் அவரது தாயார் விருப்பப் பட்ட படி நான் விளக்கேற்ற முடியாத அவரது வீட்டிற்கு சென்று வர வேண்டும்.
நான் வாழக் கொடுத்து வைக்காத அவரது பெற்றோர் சொந்தமாக வாங்கி கிரஹப் பிரவேசம் செய்துள்ள அவரது வீடு எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வீட்டில் நான் எனது வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு சில நிமிடங்களாவது தங்கியிருந்து எனக்குப் பிடித்தமானவரது வீட்டின் காற்றை முழுமையாக என் ஆசை தீரும் வரை சுவாசிக்க வேண்டும். அதன் பின்னர் தான் எனக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.
பிரசவம் ஆன பின்னர் ஒரே ஒரு முறையாவது அவரது வீட்டிற்குச் சென்று நான் முதல் முதலில் மூன்று மாதம் கர்ப்பம் என்று சொன்னவுடன் தனக்கு மருமகளாக வரவில்லை என்ற வருத்தம் மனதில் தோன்றிய போதிலும் அத்தனை கவலைகளை மனதில் அடக்கிக் கொண்டு அவர் அடிக்கடி சொல்வது போல "உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்" என்னும் பாணியில் எனக்கு தனது கரங்களால் சிற்றுண்டி ஊட்டி அவரும் உண்டு மகிழ்ந்த அவரது தாயாரிடத்தில் அவரது மகனின் நினைவாகவே எனக்குப் பிறக்கும் குழந்தையினை காண்பித்து அவர்களிடம் நல்லாசி பெற வேண்டும்.
அதே போல அவருக்கு வேலை கிடைத்து என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அவருடன் நிறைய கோயில்களுக்குச் சென்று வந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட விநாயகர் விக்ரஹம் அவரது கனவில் வந்து அந்த விநாயகர் விக்ரஹத்தை பல நாட்கள் தேடியலைந்து கண்டு பிடித்த பின்னர் நாம் இருவரும் சேர்ந்து தொடர்ந்து மூன்று மாதங்கள் வழி பட்ட பின்னர் அவருக்கு வேலை கிடைத்த காரணத்தால் அந்த சக்தி வாய்ந்த விநாயகர் விக்ரஹத்திற்கு முன்னர் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பலப்பல எண்ணங்களுடன் நான் சொந்த ஊர் புறப்பட்டேன். இரயிலில் ஏறி அமர்ந்தவுடன் இன்னும் பலப்பல எண்ணங்கள் தோன்றின.
ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. நான் எதிர் பார்த்தது எதுவும் எனக்கு நடக்கவில்லை. நான் ரயிலில் ஏறி அமர்ந்து பயணித்த சமயம் நான் மனக்கோட்டை கட்டிய எண்ணங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் தண்ணீரின் மீது எழுதிய எழுத்துக்கள் போல் மறைந்து விட்டன.
நான் கொஞ்சம் முன்னர் புறப்பட்டுச் சென்றிருந்தால் சொந்த ஊருக்குச் சென்று நான் குழந்தை பெற்றிருக்க முடியும். ஆனால் என்னுடைய தாயாரின் தாமதமான வருகையாலும் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவரது அலட்சிய போக்கினாலும் குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகத் தான் எனது இரயில் பயணத்தை ஆரம்பித்தேன்.
துரதிருஷ்ட வசமாக நான் இரயிலில் பயணிக்க ஆரம்பித்த மூன்று மணி நேரத்தில் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. ஊருக்குப் போய்ச் சேர இன்னும் ஒன்பது மணி நேரமாவது ஆகும்.
டிக்கட் பரிசோதகர் வந்த சமயம் அவரிடம் விவரம் சொல்லி அடுத்து வருகின்ற பெரிய ரயில்வே ஸ்டேஷனுக்கு அவர் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் கொடுத்து அந்த ஸ்டேஷனிலிருந்து மருத்துவ மனைக்கு விவரம் தெரிவிக்கப் பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அந்த ஆம்புலன்சின் மூலமாக நான் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டேன்.
இரயில் புறப்பட்ட ஊருக்கும் செல்ல விருக்கும் ஊருக்கும் இடையிலேயே வந்த பெரிய ஊரில் நான் இரயிலிலிருந்து மருத்துவ மனை ஊழியர்களால் ஸ்ட்ரெட்சர் மூலம் இறக்கப் பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனை கொண்டு செல்லப் பட்டேன்.
யாரும் இல்லாத அனாதை போல இரயிலில் செல்லும் சமயம் நேரங் கெட்ட நேரத்தில் நடு வழியில் இறங்கி முன் பின் தெரியாத ஒரு ஊரில் முன் பின் தெரியாத ஒரு மருத்துவ மனையில் முன் பின் தெரியாத நபர்களின் தயவில் எனக்கு பிரசவம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
என்னுடைய தாயார் என்னை எப்படி அவசர அவசரமாக உறவுகள் யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து வைத்தார்களோ அதே போல அவசர அவசரமாக இரயிலில் சென்று கொண்டிருக்கும் பொழுதே நடு வழியில் இறங்கி அவசர அவசரமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் அவல நிலைமையை எனக்கு என்னுடைய தாயார் ஏற்படுத்தி விட்டார்கள். அதற்கு என்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவர் உடந்தையாக இருந்து துணை போய் விட்டார்.
நான் கர்ப்பிணியாக இருக்கும் சமயம் எனக்கு எது பிடிக்கும் எதனை வாங்கிக் கொடுக்க வேண்டும். என்னுடைய அபிலாஷைகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதனை எனக்கு அவசர கோலமாக திருமணம் செய்து வைத்த என் தாயாரும் நிறைவேற்றவில்லை. என்னைத் தொட்டுத் தாலி கட்டியவரும் நிறைவேற்றவில்லை. நானாகவே கண்ணாடி வளையல்களை உறவுகள் இருந்தும் இல்லாதவள் போல என் கைகளில் போட்டுக் கொண்டேன்.
கர்ப்ப காலத்தில் அவரும் அவருடைய தாயார் ஒரு முறை வந்து பார்த்தாலும் என்னை எப்படி கவனித்தார்களோ அந்த அளவிற்குக் கூட என்னுடைய குடும்பத்தார் கவனிக்கவில்லை.
இருந்தாலும் எனக்கு எங்கோ ஓர் இடத்தில் குழந்தை பிறந்து விட்டது. நானும் என் குழந்தையும் நலமுடன் இருப்பது பற்றி எனக்குச் சந்தோஷம்.
அதே சமயம் இரயிலில் போகும் சமயம் அவசர அவசரமாக வேண்டிய உறவினர்களை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் இரயில்வே நிர்வாகமும் மருத்துவ மனை நிர்வாகமும் என்னைத் தொட்டு தாலி கட்டிய என் கணவருக்கு மட்டும் தகவல் தெரிவித்தனர்.
அவரும் அங்கிருந்து புறப்பட்டு வந்து பிரசவம் முடிந்ததை அறிந்து கொண்ட பின்னர் இரண்டு நாட்கள் லாட்ஜில் தங்கி அவருடைய தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு என்னை சொந்த ஊருக்கு அதாவது தாய் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவதற்குப் பதிலாக மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துச் சென்று விட்டார்.
குழந்தை பிறந்தால் அனைவரும் குழந்தையை கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் லாட்ஜில் தங்கி போதையுடன் மகிழ்ந்தார். பிற்பகலில் ஒரு முறை மட்டும் மருத்துவ மனைக்கு வந்து செல்வார்
இதனால் நான் எனது சொந்தங்களைப் பார்க்க வேண்டும் என்னுடைய பழைய காம்பவுண்ட் தோழியர்களைப் பார்க்க வேண்டும் அவரது பெற்றோர் வாங்கியுள்ள சொந்த வீட்டிற்குச் சென்று அவரது நினைவாகவே உருவான என்னுடைய குழந்தையை எனக்கு மூன்று மாதங்கள் என்று அறிந்தவுடனேயே மிகவும் சந்தோஷப்பட்டு சிற்றுண்டி ஊட்டிய அவரது தாயாரிடம் காண்பிக்க வேண்டும் என்னும் திட்டம் சுக்கு நூறாகி விட்டது.
அவர் என்னிடம் நான் பிரசவத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பயணிக்கப் போகும் இரயில் மற்றும் பெட்டி எண் மற்றும் இருக்கை விவரம் குறித்துக் கொண்டு சென்றார். அவர் எப்படி காத்திருக்கின்றாரோ என்று என் மனம் என்னை வாட்டத் தொடங்கியது.
நல்ல வேளையாக அவருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு உறவினராக இருந்ததினால் அவர் என் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்கள் அனைத்தையும் அவரிடம் தெரியப் படுத்தி விட்டார்.
அத்துடன் அவரது வேண்டுகோளின் பேரில் என்னிடம் முழு விவரங்கள் அறிந்து கொள்வதற்கு என்னுடைய வீட்டிற்கே வந்து விட்டார்.
நான் அவரிடத்தில் சொந்த ஊருக்கு வரமுடியாமல் மீண்டும் வந்த ஊருக்கே திரும்பி விட்டேன் என்றும் நானும் குழந்தையும் மிகவும் நலமாக இருப்பதாகவும் குழந்தை அழகாக இருப்பதாகவும் அவரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். உடனே எனது உறவினர் அவரது நண்பரிடம் அதாவது என்னவருடன் பேசி விஷயங்கள் அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னார்.
நான் அவரது நண்பரிடத்தில் எல்லாம் தெரிவித்து விட்டீர்களா என்று கேட்டதற்கு அனைத்தையும் தெரிவித்து விட்டேன் என்று சொன்னவுடன் அவர் எப்போது வருகிறேன் என்று ஏதும் சொன்னாரா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் தற்போது உன்னுடைய உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவர் வந்து கொண்டிருப்பார்கள். அத்துடன் உன்னுடைய தாய் இருப்பதால் வருவதற்கு தயங்குகிறார். உன்னுடைய தாயார் இது குறைப்பிரசவமாக இருப்பதால் உடனே திரும்ப மாட்டார்கள் என்றும் அவர் இருக்கும் போது வந்து உன்னை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்றும் தெரிவித்து விட்டதாக என்னிடம் சொன்னார்.
என்னுடைய தாயாரும் அவருடைய தந்தையும் சேர்ந்து நம் இருவரையும் பிரித்து விட்டதன் காரணமாக நானும் அவரும் வாழ் நாள் முழுவதும் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து நான் மிகவும் வருத்தப் பட்டேன். என் இதயம் ஒருவருக்கு சொந்தமாக இருக்கும் அதே சமயத்தில் என்னுடைய உடலுக்கு ஒருவர் சொந்தம் கொண்டாடும் உரிமையை என்னுடைய தாயார் ஏற்படுத்தி விட்டதை நினைக்கும் போது என்னுடைய இரட்டை வாழ்க்கை மீது வெறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
என்னைப் பொருத்த வரையில் நான் போட்ட எதிர் காலத் திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. அதன் பாதிப்பு அவருக்கு நிறையவே இருக்கின்றது.
அவருடைய வருகையை எதிர்பார்த்து நான் ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன். அவர் நினைவாகப் பிறந்த குழந்தையை பார்க்க அவர் ஏங்கிக கொண்டிருக்கினறார். நாங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பார்க்கும் பொருட்டு ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை மாறி தற்போது மூன்று பேர் ஒருவருக்கொருவர் பார்க்க ஏங்கும் நிலை உருவாகி விட்டது. அதே சமயம் குழந்தை தாய்ப் பாலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றது. மொத்தத்தில் நான் இருவரின் ஏக்கத்துக்கு ஆளாகி விட்டேன்.