இரண்டாவது மகிழ்ச்சியான சந்திப்பு
அவர் வேலையில் சேர்ந்த பின்னர் அவரைச் சந்திக்க விடாமல் தடுத்த என்னுடைய தாயாரின் மீதும் அதற்கு பக்க பலமாக இருந்த அவரது தந்தையின் மீதும் இருந்த கோபம் மற்றும் ஆவேசம் எனக்கு நடந்த கட்டாயத் திருமணத்திற்குப் பின்னர் பன்மடங்கு பெருகி இருந்தது.
தீபாவளியன்று என்னுடைய தாயார் கீழே தள்ளி விட்டதால் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்குமோ என்னும் சந்தேகம் அவரை நேரில் கண்ட பின்னர் முற்றிலுமாக நீங்கியது.
அவரது தாயாரிடம் சொல்லி வந்தது போல எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் கெட்ட காரியத்திற்கும் நான் திரும்ப வர மாட்டேன் என்று கோபத்தில் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கின்றார் என்றும் அறிந்து கொண்டேன்.
இதனால் கஷ்டப் படப் போவது அவர் மட்டுமல்ல. என்னை மருமகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அவரது தாயாரும் தான் என்பதனை என்னால் நன்றாக உணர முடிந்தது.
எனவே அடுத்த முறை அவர் வரும் சமயம் கட்டாயம் ஒரு முறை ஊருக்குச் சென்று அவரது தாயாரை மட்டுமாவது பார்த்து விட்டு வாருங்கள் என்று கேட்டுக் கொள்வது என்று தீர்மானித்தேன்.
அடுத்து அவர் எப்போது வருவார் அவரைக் காண நான் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்னும் கற்பனைகள் ஓட ஆரம்பித்து விட்டது.
எனக்குத் திருமணம் ஆகி விட்டது. நான் இன்னொருவருக்குச் சொந்தமாகி விட்டேன். இதற்குப் பின்னர் அவரை நினைப்பது தவறு என்பதனை என் மனம் ஏற்க மறுக்கின்றது.
அதே போல அவரும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்னும் எண்ணமும் என்னிடத்தில் வரவில்லை. இன்று வரையில் அவர் எனக்கே சொந்தம் என்னும் எண்ணம் தான் என் மனதில் மேலோங்கி இருக்கின்றது.
என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை அதே சமயம் தாலி கட்டியவரை மனப்பூர்வமாக கணவராக ஏற்கவும் முடியவில்லை. நான் மதில் மேல் பூனையாக என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
அவரைப் மீண்டும் பார்த்த நாளன்று எனக்கு ஏற்பட்ட மன வேதனையில் நாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது எப்படி இருந்தேனோ அதே போலவே இருக்கின்றேன். எனக்கு மனதளவிலும் உடலளவிலும் எந்த விதமான மாற்றங்களும் இல்லை என்று கன்னி கழியாத விஷயத்தைக் கூட ஜாடையாக சொல்லி அவருடன் அப்போதே சென்று விடலாமா என்று கூட யோசித்து அவரிடம் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கத் தயார் என்று வாய் விட்டுச் சொல்லியும் கேட்டு விட்டேன். ஆனால் அதற்கு அவர் பதில் எதுவும் பேசவில்லை.
எனக்கு அவரைப் பார்த்த பின்னர் தான் நன்றாகத் தூக்கம் வந்தது. தூக்கத்திலும் அவர் கனவு.
கனவில் அவரை நான் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து உறவினர்கள் நண்பர்கள் சுற்றத்தார் புடை சூழ திருமணம் செய்து கொள்கின்றேன். முதலிரவில் நான் அவரிடத்தில் வெட்கப்பட்டு பேசும் பேச்சினை என்னையும் அறியாமல் நான் உறக்கச் சொன்னதை அதே அறையில் படுத்திருந்த எனக்குத் தாலி கட்டியவர் கேட்டு என்னை தட்டி எழுப்பி என்ன திடீரென நாம் முதலிரவு அனுபவிப்பது போல கனவா என்று கேட்டதற்கு என்னால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.
மீண்டும் உறங்கி விட்டேன். உறக்கத்தில் மீண்டும் கனவு. உறக்கத்தில் வந்த அடுத்த கனவில் அவருக்கு நான் உணவு பரிமாறுவது போலவும் அவர் போதும் போதும் என்று சொல்வது போலவும் நான் மேலும் மேலும் அவரை உண்ணும்படி வற்புறுத்த இன்னும் ஒரு இட்லி இன்னும் ஒரு பூரி இன்னும் ஒரு தோசை என்று சொல்வதை மீண்டும் உறக்கச் சொல்லி விட்டேன். திடீரென தூக்கம் கலைந்து விட்டது. ஆமாம் தூக்கத்திலும் கூட அவரோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். அப்போது தான் நான் கண்டது கனவு என்பதனை அறிந்து கொண்டேன்.
அருகில் படுத்துக் கொண்டிருந்தவர் இவளுக்கு இதே வேலையாகப் போய் விட்டது என்று சொல்லிக் கொண்டே வேறு பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார்.
மறு நாள் காலையில் என்னிடம் உன்னுடைய உறவினர்கள் அனைவரும் ஊருக்குத் திரும்பி சென்று விட்ட பின்னர் தான் நன்றாக கனவுகள் வரும் அளவிற்கு உறக்கம் வருகின்றதா எனக் கேட்டார். அதற்கும் நான் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் உண்மை அதுவல்ல.
தூக்கத்தில் நான் என்னை அறியாமல் பேசிய வார்த்தைகளைக் கேட்டவுடன் எனக்கு உடல் நிலை பூரணமாக குணமாகி விட்டது என்று எண்ணிக் கொண்டு பொங்கலுக்குப் பின்னர் சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்து தேதி குறித்து விட்டார்கள். என்னால் எதுவும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அவர் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் பொங்கல் முடிந்து காணும் பொங்கலன்று தான் மீண்டும் என் இல்லத்திற்கு வந்தார்.
காணும் பொங்கலன்று வந்த அவர் எனக்காக இனிப்புகளும் புத்தாடைகளும் வாங்கி வந்து இருந்தார். அவர் வேலைக்குச் சென்ற பின்னர் தீபாவளிக்காக எனக்கு வாங்கியிருந்த புத்தாடைகளை என்னிடம் கொடுக்க முடியாமல் எடுத்துச் சென்றதை மீண்டும் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். எனக்குப் பிடித்தமான டிசைன் கலர் மற்றும் சைஸ். என்னை இன்னமும் இரட்டை சடை பின்னலுடன் பாவாடை தாவணி ரவிக்கையுடன் தான் ரசித்து வருகின்றார் என்பதனை உணர்ந்தேன்.
அவர் எனக்காக ஆசை ஆசையாக வாங்கிய தீபாவளிக்கான புத்தாடைகளை காணும் பொங்கலன்று உடுத்தி அவர் கண் முன் வந்து நின்றேன். அவரும் புத்தாடை உடுத்தியிருந்தார். நம் இருவருக்கும் அன்று தான் தீபாவளி போல இருந்தது. அவர் மீண்டும் ஒரு வசந்தம் என்று சொல்லிக் கொண்டே என்னை ரசித்தார்.
சென்ற முறை அவர் வந்து சென்ற பின்னர் எனது வீட்டில் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் அவர் உன்னிப்பாக கவனித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நான் மீண்டும் நாம் இருவரும் இணைய முடியுமா என்று கேட்டதற்கு அவ்வாறு செய்வது சரியல்ல என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் நாள் நட்சத்திரம் பார்த்து குறித்துள்ள தேதியில் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் படி கேட்டுக் கொண்டார்.
அப்போது நான் உங்களைத் தவிர வேறொருவருடன் என் படுக்கையை பகிர்ந்து கொள்வதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் நீயும் நானும் காதலித்தோம். ஆனால் திருமணம் செய்து கொண்டு இல்லற சுகம் காணும் பாக்கியம் நம் இருவருக்கும் கிடைக்கவில்லை.
உன்னிடம் இல்லற சுகம் காணும் பாக்கியம் எனக்கில்லை. அதே போல என்னுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உனக்கில்லை.
ஒரு முறையாவது இல்லற சுகம் அனுபவிக்க வேண்டும் என்று நாம் இருவரும் ஆரம்பத்திலிருந்து நினைத்திருந்தால் அதற்குப் பெயர் காதல் அல்ல காமம். நாம் இருவரும் இல்லறத்தில் இணைய முடியவில்லை என்னும் ஒரே காரணத்துக்காக நான் உன் மீது வைத்துள்ள அன்பும் நீ என் மீது வைத்துள்ள அன்பும் குறையப் போவதில்லை. எனவே என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரையில் நீ என்னுடைய அன்பான காதலி தான் என்று சொன்னார். நானும் அவர் சொன்னதை மனதார ஏற்றுக் கொண்டேன்.
இவற்றையும் மீறி நாம் இருவரும் நடந்து கொண்டால் நம் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் சந்தேகப்படும் நிலை தான் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருக்கும் என்று சொல்லி விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் நிறுத்திக் கொண்டார்.
அவருக்கு நான் உணவு சமைத்துப் பரிமாற நினைத்தமைக்கு உன்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் அவ்வாறு செய்வது தவறு என்றும் அவருக்கு அறிமுகமான பின்னர் உணவு உண்பதாகவும் சொன்னார்.
அதன் பின்னர் சாக்லெட்டை என்னிடம் நீட்ட நான் பாதி கடித்துக் கொடுத்து அதனை அவர் உண்ட பின்னர் சற்று நேரம் கழித்து காபியினை அவர் குடித்து கொடுத்த பின்னர் நான் குடித்ததன் மூலம் எனக்கு சந்தோஷம் கிடைத்தது.
நான் அவரிடத்தில் வீட்டிற்குச் சென்று அவரது தாயாரை ஒரு முறையாவது பார்த்து எனக்குத் திருமணம் ஆகி விட்டது என்னும் விவரத்தை தெரியப் படுத்தி வாருங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு நான் மட்டும் வருத்தப் படுவது போதும். என் தாயாரையும் உனக்குத் திருமணம் ஆகி விட்டது என்று சொல்லி வருத்தப் பட வைக்க நான் விரும்பவில்லை என்று சொன்னதைக் கேட்ட எனக்கு அதுவும் சரியாகத் தான் தோன்றியது.
அப்படியானால் அவர் எப்போது தான் தன் பெற்றோருடன் சகஜ நிலைக்குத் திரும்புவார் என்பதனை என்னால் எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. எனக்குத் திருமணமான காரணத்தால் அவர் தனியே கஷ்டப் படுகின்றார். நானும் திருமண வாழ்க்கை பிடிக்காமல் ஏற்றுக் கொள்ள கஷ்டப் படுகின்றேன்.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் என்னை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை மறுத்த காரணத்தால் அவரது தாயாரும் குடும்பமும் கஷ்டப் படுகின்றது என்பதனை நினைக்கும் போது அனைத்துக்கும் நான் தான் காரணம் அந்த பாவம் எல்லாம் எனக்குத் தான் வந்து சேரும் என்பதனை அறிந்து கொண்டேன்.