ஹோமங்களும் யாகங்களும்
அவர் எனது இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் அடுத்தடுத்து வந்தது மட்டுமல்லாமல் என் கையால் சமைத்த உணவினை நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதை நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதுவரையில் இவ்வளவு சந்தோஷமாக நான் இருந்தது இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு உணவு சமைத்து பரிமாறும் பாக்கியம் அதாவது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் கிடைத்திருந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்னும் எண்ணம் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
முதல் நாள் அவருடன் நீண்ட நேரம் பேசிய பின்னர் அவர் என்னிடத்தில் விடைபெற்றுச் செல்லும் சமயம் மீண்டும் நாளை வருகின்றேன் எனச் சொல்லிச் சென்றது போல அடுத்த நாளும் எனது இல்லத்திற்கு வந்ததை நினைக்கும் போது என்னிடத்தில் இருந்த கவலைகள் அனைத்தையும் மறந்து காலையில் பத்து மணி வரையில் தூங்கி இருக்கின்றேன் என்றால் என் மனம் எவ்வளவு நிம்மதி அடைந்திருந்தது என்பதனை சொல்ல வேண்டியதில்லை.
இரண்டாவது நாளன்று கூட அதே போன்று அடுத்த நான் எனது இல்லத்துக்கு வருகை தருவேன் எனச் சொல்வார் என நினைத்து எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த சமயம் அடுத்த நாள் ஊருக்குச் செல்கின்றேன் என்று சொல்லி விட்டுச் சென்றது எனக்கு சற்று வருத்தமாக இருந்ததன் காரணமாக இரவு முழுக்க தூக்கமின்றித் தவித்தேன்.
நான் அவரை எதற்காக வரச் சொன்னேனோ அந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் அவர் ஊருக்குத் திரும்பி விட்டார். எனவே மறு படியும் அவரைக் காண வேண்டும். என்னுடைய வீட்டுப் பிரச்சினைகளை அவரிடத்தில் சொல்லி ஆலோசனை பெற வேண்டும் என என் மனம் துடித்துக் கொண்டிருக்கின்றது.
என் வீட்டுப் பிரச்சினைகளை அவரிடத்தில் சொல்லி நான் ஆலோசனை பெற மேலும் குறைந்தது ஆறு மாத காலம் அவர் வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்பதனை நினைக்கும் போது தான் எந்த ஊரில் பிறந்தோமோ அந்த ஊரில் கடைசி வரையில் வாழ வேண்டும் அல்லது நாம் எவர் மீது மிகவும் அன்பாக இருக்கின்றோமோ அவர் எந்த ஊரில் வசிக்கின்றாரோ அந்த ஊரில் நாமும் வாழ வேண்டும் என என் மனம் நினைக்கின்றது.
நான் நினைப்பது போல ஒரே ஊரில் இருவரும் வாழ்ந்து கொண்டு இருந்தால் நினைத்த நேரத்தில் நம்மில் யாராவது ஒருவர் மற்றவர் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வர முடியாத நிலை இருந்தாலும் கூட கோயில் குளங்களிலோ அல்லது திருமணம் சடங்கு போன்ற விசேஷங்களிலோ ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் அடைய முடியும். உடல் நலம் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஒருவருடன் மற்றவர் பேச முடிந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் ஒரே காரணத்தால் அரசாங்க வேலையில் சேர்ந்து வருடத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகி நாடோடி போல வாழ்க்கை நடத்தி வந்ததனை நினைக்கும் போது அதற்குக் காரணமாக நான் தான் இருந்திருக்கின்றேன் என்பதனை நினைக்கும் சமயம் என் மீது எனக்கே வெறுப்பு ஏற்படுகின்றது.
அவரது ஜாதகத்தில் சில வருட காலம் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தான் வாழ வேண்டியிருக்கும் என இருந்தாலும் அரசாங்க வேலையில் சேராமல் இருந்திருந்தால் பெற்றோருடனேயே இருந்திருப்பார். அவ்வாறு பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக பெற்றோரின் தயவில் அவர் இருந்திருந்தால் அவரை நான் கட்டாயம் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது என நாம் இருவரும் அந்தக் காலத்தில் நினைத்தது அவருக்கு அலைச்சலைக் கொடுத்தது என்பது எனக்கு மன வேதனையைக் கொடுக்கின்றது.
என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு அவர் வேலையில் சேர்ந்து என்னையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து நீண்ட நாட்கள் கழித்து சொந்த ஊரில் வேலையில் சேர்ந்து தற்போது ஓய்வு பெற்று இருக்கின்றார். அவர் எதிர்பார்த்தது போல நான் அவருக்கு மனைவியாக கிடைக்கவில்லை. இருந்தாலும் எதனையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் மனதில் துக்கத்துடன் வெளியில் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றார் என நான் உணர்கின்றேன். நான் எப்படி எப்போதும் அவரது நினைவாக இருக்கின்றேனோ அதே போல அவரும் எப்போதும் எனது நினைவாக இருக்கின்றார் என்பதனை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
நான் அவருடன் பழகிய கடந்த கால நினைவுகளைப் பற்றியும் எதிர்காலத்தில் அவருடன் வாழ நினைத்த வாழ்க்கையினைப் பற்றியும் தினம் தினம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் சமயம் திடீரென ஒரு நாள் மாலையில் எனது இல்லத்திற்கு ஒரு மாத காலத்தில் வருகை தந்தார். வந்தவரை வரவேற்று அவருக்கு இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகள் கொடுத்த பின்னர் என் மருமகளிடம் நம் இருவருக்கும் தேனீர் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதன் படி அவர் தேனீர் பருகி முடித்தவுடன் நானும் அவரும் என் மருமகள் முன்னிலையில் உரையாட ஆரம்பித்தோம்.
அதன் பின்னர் அவரிடத்தில் என்னுடைய வீட்டுப் பிரச்சினைகள் பற்றிப் பேச ஆரம்பித்தேன். இரண்டாவது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கு கோயிலுக்குச் சென்று வருமாறு அறிவுறை வழங்கினார். ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் பரிகாரங்கள் செய்யுமாறும் ஜோதிடரிடத்தில் ஜாதகத்தைக் காண்பித்து நடைபெறுகின்ற திசை அல்லது புத்திகளின் படி ஏதேனும் கோயில்களுக்குச் சென்று பூஜை புனஸ்காரங்கள் அல்லது வீட்டினில் ஏதேனும் ஹோமம் செய்ய வேண்டுமெனில் செய்யுமாறும் ஏதேனும் யாகங்களில் கலந்து கொள்ள வேண்டுமெனில் கலந்து கொள்ளுமாறும் சொன்னார்.
அச்சமயம் எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஹோமம் யாகம் இரண்டும் ஒன்று தானே எனக் கேட்டேன். அதற்கு அவர் ஹோமம் என்பது தனி நபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அல்லது ஒரு குறிப்பிட்ட வம்சாவழியினரது முன்னேற்றத்துக்காகவும் தடைகள் ஏதேனும் இருப்பின் விலகுவதற்காகவும் ஆபத்துக்கள் ஏதேனும் இருப்பின் தடுப்பதற்காகவும் செய்யப்படுபவை எனத் தெரிவித்தார்.
யாகம் என்பது உலக மக்களின் ஷேமத்திற்காவும் உலக நன்மைக்காகவும் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுக்கும் சமயம் போரில் வெற்றி பெறுவதற்காகவும் ராஜ்ஜியங்களை சாம்ராஜ்ஜியங்களாக விரிவு படுத்துவதற்கும் மூதாதையர்களால் பழங்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும் யாகங்கள் கோயில்களிலோ அல்லது பொது இடங்களிலோ அனைவருடைய பங்களிப்புடன் அனைவரும் கலந்து கொண்டு பொதுவாக செய்யப்படுவன என்றும் தெரிவித்தார். ஹோமங்கள் மற்றும் யாகங்கள் என்னென்ன செய்யப்படுகின்றன என்பதனையும் தெரிவித்தார்.
ஊர்வன பறப்பன நீந்துவன நடப்பன என புளுக்கள் பூச்சிகள் வண்டுகள் பறவைகள் விலங்குகள் நீர்வாழ் உயிரினங்கள் என பலப்பல ஜீவராசிகள் இந்த பூவுலகில் நம்முடன் வாழ்ந்து கொண்டும் வசித்துக் கொண்டும் வருகின்றன. நமக்கும் அவற்றுக்கும் ஒரே வித்தியாசம் மனிதனாய் பிறந்தவர்களுக்கு ஆறறிவு மனிதனாகப் பிறக்காத அனைத்து ஜீவராசிகளுக்கும் ஐந்தறிவு மற்றும் ஐந்தறிவுக்குக் கீழ் உடையவை.
ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள் தத்தமது இருப்பிடங்களில் வாழ்ந்து கொண்டு வருகின்றன. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் இல்லாத காரணத்தால் எதனைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. மானுடராகப் பிறந்த மனிதர்களுக்கு மட்டுமே சிந்தித்து செயல்படுகின்ற ஆறறிவு உண்டு. இந்தக் காரணத்தால் நாம் நமது கடந்த காலங்களில் நடந்தவற்றை எண்ணிப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டு வாழ்க்கை நடத்த முடிகின்றது.
ஒரு சாய்வான இடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடியிலாலான கோலி குண்டுகளை உருட்டி விடுகின்றோம். இரும்பினாலான குண்டுகள் என்றால் மின் காந்த விசை அல்லது புவி ஈர்ப்பு விசை காரணம் எனக் கூற முடியும். ஆனால் ஓரே நேரத்தில் உருட்டி விடப்பட்ட கண்ணாடிக் குண்டுகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் சென்றடைவதில்லை. இதற்கான காரணங்களை யாராலும் எப்போதும் கண்டு பிடிக்க முடியாது. அதே போல ஒரே இடத்திலிருந்து ஒரே கோலி குண்டினை திரும்பத் திரும்ப உருட்டி விட்டால் கூட அது ஒரே இடத்தினை அடைவதில்லை.
அதே போல ஒரு தாய் வயிற்றில் உருவான இரட்டைக் குழந்தைகள் ஒரே மாதிரியான செயல்களில் ஈடுபட்டு ஒரே மாதிரியான முன்னேற்றம் அடைவதில்லை. ஒரே மாதிரியான ஆற்றல் அறிவுகளுடன் இருப்பதில்லை. ஒரே நேரத்தில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகள் கூட எதிர்காலத்தில் ஒரே மாதிரியாக வாழ்வதில்லை. ஒரே நேரத்தில் ஒரே மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் ஜனன காலத்தில் இராசி நட்சத்திரம் திதி ஆகிய எல்லாம் ஒன்றாக அமைந்தும் கூட ஒரே மாதிரியான வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே பிறப்பிடம் இருந்தாலும் கூட வசதி வாய்ப்புகள் தேக ஆரோக்கியம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை முற்றிலுமாக வேறு படுகின்றன.
இவ்வாறான வித்தியாசங்களின் காரணமாக பலப் பல தடைகள் சோதனைகள் வருவதனை உணருகின்ற மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கை வாழ ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றதா என தேடி அலையும் சமயம் ஹோமங்கள் செய்தால் நிவர்த்தியாகி விடும் யாகங்கள் செய்தால் நிவர்த்தியாகி விடும் எனச் சொல்கின்றார்கள். நிறையப் பேருக்கு ஹோமம் என்றாலும் யாகம் என்றாலும் ஒன்று தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்னும் எண்ணம் உண்டு எனச் சொல்லி அதனை விளக்கினார்.
ஹோமங்கள்
01.கணபதி ஹோமம்: சுப காரியங்கள் தடைப்பட்டு வந்தால் நிவர்த்தியாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
02.நவக்கிரஹ நோமம்: ஜனன காலத்தினைக் கருத்தில் கொண்டு எழுதப்படுகின்ற நமது ஜாதகங்களில் ஏதேனும் கிரஹ தோஷங்கள் இருந்தால் அவை நிவர்த்தியாக தடைப் பட்ட காரியங்கள் நடைபெற்று வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் வியாபாரம் மற்றும் தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு மேன்மை அடைய முடியும்.
03.சுதர்சன ஹோமம்: நம்மை அழிக்க முயற்சிக்கும் பகைவர்களிடமிருந்து நம்மை காக்கவும் அவர்களால் வைக்கப் பட்ட பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றை நீக்கவும் சகல காரியங்களிலும் வெற்றி பெறவும் உதவும்.
04.லட்சுமி குபேர ஹோமம: இல்லாமை என்பது நீங்கி நாம் செல்வச் செழிப்புடன் வாழ்வதற்கு பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். அதனால் உயர்வு கிடைக்கும்.
05.கண் திருஷ்டி ஹோமம்: வளர்ச்சியினைக் கண்டு பொறாமைப் படுவோரிடமிருந்து கண் திருஷ்டி ஏற்பட்டமையால் ஏற்படும் உடல் நலக் குறைவு குடும்பத்தில் பிரச்சினைகள் மற்றும் வியாபாரத்தில் முடக்கம் ஆகியவை நீங்கும்.
06.கால சர்ப்ப ஹோமம்: உத்தியோகம் கிடைக்காமை திருமணத் தடைகள் வியாபாரத்தில் மந்தம் குடும்பத்தில் ஒற்றுமையின்மை உடல் நலக் கோளாறுகள் ஆகியவை நிவர்த்தியாகும்.
07.தில ஹோமம்: நமது முன்னோர்களுக்கு இறப்புக்குப் பின்னர் செய்ய வேண்டிய திதி திவசம் போன்றவைகளை செய்யாமல் விடுகின்ற பட்சத்தில் அவர்களின் சாபத்திலிருந்தும் சனி பகவானால் ஏதேனும் தோஷங்கள் இருப்பின அதிலிருந்தும் காக்கும்.
08.மிருத்யஞ்சய ஹோமம்: பிரோதாத்மாவினால் ஏற்பட்டுள்ள சாபத்தினை விலக்கி திருமணம் நடைபெறுவதில் மாந்தி கிரஹத்தினால் ஏற்படுகின்ற பாதகங்களைத் தடுக்கும்
09.சுயம்வர கலா பார்வதி ஹோமம்: பெண்களுக்கு திருமணத் தடைகள் ஏதேனும் இருப்பின் விலகி திருமணம் விரைவில் நடைபெறும்.
10.ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்: ஆண்களுக்கான திருமணத் தடைகள் விலகி திருமணம் விரைவில் நடைபெறும்.
11.புத்திர காமோஷ்டி ஹோமம்: வாரிசு இல்லாத குடும்பங்களில் குழந்தை பாக்கியம் விரைவில் ஏற்படவும் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் உதவும்.
12.ருத்ர ஹோமம்: முன் கோபம் இருந்தால் அது குறைந்து ஆயுளை அதிகரிக்கும்.
13.ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்: தொழில் வாணிபம் எதிரிகளால் தொல்லை நமக்கு எதிரான பிறரின் சூழ்ச்சிகள் ஆகியவை நீந்கி அனைத்திலும் வெற்றி பெற இது உடவும்.
14.ஸ்ரீ பிரத்தியங்கரா ஹோமம்: உடல் நிலையில் பாதிப்பு எதிரிகளால் வீண் தொல்லைகள் நாட்பட்ட நோய்நொடிகள் ஆகியவைகள் நீங்கும்.
15.சண்டி ஹோமம்: நமக்கு ஏற்படுகின்ற பயத்தின் காரணமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் சமயம் அதிலிருந்து விடுபட்டு எந்தக் காரியத்தையும் பயமின்ற நடத்திட முடியும்.
16.ஆயுஷ் ஹோமம்: மக்கள் நோய் நொடியின்ற தேக ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழும் பொருட்டு ஆயுஷ் ஹோமம் மேற்கொள்ளப் படுகின்றது.
யாகங்கள்
01.புஷ்பயாகம: திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தி விக்ரஹங்களை பொது வழிபாட்டுக்காக வீதிகளில் வலம் வரச் செய்யும் சமயம் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ நடைபெறும் சின்னச் சின்ன தவறுகளையும் குற்றம் குறைகளையும் மன்னித்து அருளுமாறு கடவுளிடம் வேண்டி புஷ்பயாகம் திருவிழாக்கள் முடிந்தவுடன் அந்தந்த திருத்தலங்களில் நடைபெறுகின்றது.
02.சந்தான கோபால யாகம்: குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமான தம்பதியரிடையே உள்ள கருத்து வேற்றுமைகள் விலகி ஒன்று சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
03.புத்திர காமேஷ்டி யாகம்: திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும். இராமாயணத்தில் தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக ராமன் லெட்சுமணன் பரதன் மற்றும் சத்ருக்கணன் ஆகியோர் பிறந்ததாக இதிகாசம் உள்ளது.
04.ராஜ சூய யாகம்: தான் ஒரு மாமன்னர் என்பதை மற்ற மன்னர்களுக்கு உணர்த்துவதற்காகவும் நாட்டிற்கு புதிதாக பட்டம் சூட்டிக் கொள்ளும் பொருட்டும் ராஜசூய யாகம் நடத்தப் படுகின்றது
05.சத்துரு சம்ஹார யாகம்: பகைவர்களிடமிருந்து நாட்டைக் காக்கவும் தீராத நோய்கள் போன்றவற்றிலிருந்து மக்களைக் காக்கவும் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்படுகின்றது.
06.சத சண்டி யாகம: உலக நலனுக்காகவும் உலக மக்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டியும் சத சண்டி யாகம் நடத்தப் படுகின்றது.
07.கனக தாரா யாகம்: கனகதாரா என்பது லெட்சுமியின் இன்னொரு பெயர் ஆகும். அட்சய திரிதியை அல்லது திரிதியை திதியன்று கனகதாரா யாகம் நடத்தப்படுகின்றது. இதனால் வருமைகள் நீங்கி செல்வம் பெருகும். கடன்கள் குறைந்து வருமானம் பெருகும். அஷ்டசித்திகளும் கிடைத்து எல்லா வளங்களும் பெருகுவதற்கு இந்த கனகதாரா யாகம் மிகச் சிறந்ததாகும்.
08.கந்தர்வ ராஜ யாகம்: ஜாதக ரீதியாக தோஷங்களும் சிரஹ ரீதியான தோஷங்களும் நவக்கிரஹ தோஷங்களும் பித்ரு தோஷங்களும் உள்ள ஆண்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.
09.நிகும்பலா யாகம்: நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப் படுகின்றது. யாகத்தில் இடப்படும் மிளகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது மிகச் சிறப்பு. இராமாயணத்தில் இந்திரஜித் பலப்பல மன்னர்களை வெற்றி கொள்ள எட்டுத்திசைகளிலும் மயான பூமியை உண்டாக்கினார். பின்னர் நிகும்பலா தேவிக்கு இ;நத யாகத்தை நடத்தினார். இந்த யாகம் வெற்றிகரமாக முடிந்தால் சிறப்பான அருள் கிடைக்கும். இதனையறிந்த ராமன் பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்மம் தன் பக்கம் இருப்பதனை பிரத்யங்கரா தேவியிடம் எடுத்துரைத்த காரணத்தால் இந்திரஜித் நடத்திய யாகத்தினால் பிரத்தியங்கரா தேவியின் அருள் கிடைக்காமையால் போதுமான பலன் கொடுக்கவில்லை.
10.அமாவாசை நிகும்பலா யாகம்: மேலே சொன்ன நிகும்பலா யாகத்தினை அமாவாசை நாட்களில் செய்வதால் நாக தோஷம் சர்ப்ப தோஷம் செய்வினைக் கோளாறுகள் நீங்கும். பில்லி சூன்யம் அகலும். தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலும். பணப் பிரச்சினை கடன் பிரச்சினை எதிரிகளால் தொல்லை மாங்கல்ய தோஷம் நீங்கும். மரண பயம் நீங்கி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையலாம். உரிய காலத்தில் மழை பெய்து பஞ்ச பூதங்களால் ஏற்படுகின்ற அழிவுகள் குறையும்.
11.அஸ்வமேத யாகம்: பழங்காலத்தில் அரசர்கள் ஒரு குதிரைக்கு பூஜை செய்து அந்தக் குதிரை செல்லுகின்ற இடம் யாவும் தமது கட்டுப் பாட்டின் கீழ் வரும்படிச் செய்து ஆட்சி செய்கின்ற வரம்பினை பெருக்கிக் கொண்டார்கள். இராமாயணத்தில் அசுவ மேத யாகம் செய்து அனுப்பிய குதிரையினை சீதையின் மைந்தர்களான லவ குசா இருவரும் கட்டிப்போட்ட காரணத்தால் ராமனின் மகன்களான லவா குசா ஆகிய இரட்டையர்களுக்கும் ராம லெட்சுமணர்களுக்கும் சண்டை நடந்தது. இறுதியில் சீதாப் பிராட்டி சமாதானம் செய்து சண்டை முடிவுக்கு வபந்தது..
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் சமயம் அவர் கடிகாரத்தினைப் பார்தது விட்டு ரொம்ப நேரமாகி விட்டது எனவும் மிகவும் முக்கியமான விஷயத்தினைப் பற்றி மீண்டும் என்னுடன் பேசுவதற்கு இரண்டு நாட்கள் கழித்து வரப் போவதாகவும் தெரிவித்தார். நான் என்ன விஷயம் எனக் கேட்ட சமயம் இரண்டு நாட்கள் பொறுத்து இருக்குமாறு சொல்லி விட்டு என்னிடத்தில் விடை பெற்றார். அவர் எனது இல்லத்திலிருந்து புறப்படுகின்ற சமயம் எனக்கு எல்லையில்லாத ஆனந்தம்.