இழப்பு போன்ற கவலை
திருமண அழைப்பிதழை என்னுடைய இல்லத்திற்கு அவரும் அவரது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சேர்ந்து வந்து கொடுத்து விட்டுச் சென்ற பின்னர் நான் வாழ்க்கையில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து விட்டது போல மிகவும் கவலையுடன் இருந்தேன். என்னை அறியாமலேயே என் கண்களில் நீர் ததும்பியது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த என் செல்லப் பெண் என்னிடத்தில் உடம்பு சரியில்லையா ஏன் அழுற என்று மழலைக் குரலில் கேட்டது. என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நான் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன் முடியவில்லை. நான் அழ ஆரம்பித்து விட்டேன்.
ரத்தக் காயங்கள் ஏற்படுமளவிற்கு அவரை என்னுடைய வீட்டிலிருந்து என்னுடைய தாயார் வெளியே தள்ளி விட்டு இரண்டு மூன்று நாட்களில் சற்றும் எதிர்பாராத கட்டாயத் திருமணம் எனக்கு நடந்தேறிய போதும் கூட நான் அந்த அளவிற்கு அழவில்லை. காரணம் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் எனக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்து அந்தக் குழந்தையும் பேச ஆரம்பித்த பின்னர் கூட அவருக்கு திருமணம் நடக்க இருக்கின்றது என்பதனை நினைக்கும் போது என் மனம் கதறி அழுகின்றது.
நானும் அவரும் ஒரே வீட்டில் குடியிருந்த சமயம் மிகவும் சந்தோஷமாக இருப்போம். அப்போது அவரது வீட்டிற்கோ அல்லது எனது வீட்டிற்கோ வந்துள்ள திருமண அழைப்பிதழ்களை நானும் அவரும் அருகருகே அமர்ந்து கொண்டு இந்த இடத்தில் எனது பெயரும் இந்த இடத்தில் அவரது பெயரும் இருந்தால் எப்படியிருக்கும் என்று ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டுக் கொண்டு எதிர் காலத்தைப் பற்றி மனக் கோட்டை கட்டி மிகவும் சந்தோஷமாக இருப்போம்.
ஆனால் என்னுடைய கல்யாணத்திற்கு திருமண பத்திரிக்கையே இல்லாமல் கட்டாயத் திருமணம் முடிந்து விட்டது. அதே சமயம் அவருடைய திருமணத்திற்கு உறவினர்களுக்கு கொடுப்பதற்கு மஞ்சள் நிறத்தில் திருமண அழைப்பிதளும் நண்பர்களுக்கு கொடுப்பதற்கு அதிகமான விலை கொண்ட பலப் பல வண்ணங்களில் பல நிறங்கள் கொண்ட எழுத்துக்களுடன் பத்திரிக்கைகளும் கொடுக்கப்பட்டதை பார்த்து அவருடைய திருமண அழைப்பிதளில் என் பெயரினை சேர்த்துப் பார்க்க முடியவில்லையே என்னும் ஏக்கம் அழுகையாக மாறி கண்களில் நீர் பெருக்கெடுக்கின்றது.
நானும் அவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்னும் எதிர்காலக் கனவுகளுடன் உரையாடிய சமயம் மிகவும் சந்தோஷமாக இருப்போம். அந்த சந்தோஷம் எனக்கு இந்த ஜென்மத்தில் இல்லை என்பது எனக்குத் தெரிந்தும் கூட அதனை ஏற்றுக் கொள்ள என் மனம் மறுக்கின்றது. என்னுடைய எண்ணம் எல்லாம் அவர் திருமணத்திற்குப் பின்னர் என்னை சந்திக்க வருவாரா மாட்டாரா என் மீது அவர் அன்பு செலுத்துவாரா மாட்டாரா இதுவரை பழகி வந்தது போல இனிமேல் என்னுடன் பழகுவாரா மாட்டாரா என்பன போன்ற கேள்விகள் தான் என்னுள் இருந்தன.
எல்லோரும் தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றது என்று எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டிருப்பார்கள். நாங்கள் இருவரும் அப்படித் தான் சந்தோஷமாக இருந்தோம்.
ஆனால் அவருடைய திருமணப் பத்திரிக்கை என்னுடைய கைக்கு வந்த பின்னர் அதில் குறிப்பிடப் பட்டுள்ள திருமண நாள் வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றது என்று நான் மிக்க கவலையுடன் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டேன்.
காரணம் அவர் என்னை மறந்து விடுவாரோ என்னும் எண்ணம். அவர் என்னை மறக்காவிட்டாலும் நான் அவரை அடைய முடியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் என்னை மறந்து விடக் கூடாது. என்னைப் பார்க்காமல் இருந்து விடக் கூடாது என்னும் எண்ணங்கள் என்னுள் மேலோங்கி இருந்தன.
அவரது திருமணத்திற்கு சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் அவருடைய உறவுக் காரப் பெண் மாத்திரம் என்னுடைய இல்லத்திற்கு வந்தாள். நான் அவளிடத்தில் அவர் வரவில்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர் நான் உடல்நலமின்றி இருக்கும் ஒருவரைப் பார்ப்பதற்காக இந்தப் பக்கம் வந்த சமயம் என் ஞாபகம் வந்த காரணத்தால் என்னைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது அந்தப் பெண் என்னிடத்தில் எனக்கு வேலைக்கான ஆணை ஒருசில வாரங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தால் நிச்சயம் அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டிருப்பேன். ஆனால் அவரது நிச்சயதார்த்தத்துக்கு பின்னர் பணியில் சேர்ந்ததால் என்னால் அவரை அடைய முடியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னது கேட்ட எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
காரணம் அவள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பது போல தற்போது தான் சந்தித்து இருக்கின்றாள். ஆனால் நானோ அவருக்கு அரும்பு மீசை முளைப்பதற்கு முன்னரே அவருடைய 17 வது வயதிலிருந்து (எனக்கு 14 வயது தான்) என் கணவராகவே பாவித்துக் கொண்டு வருகின்றேன். அப்போது நான் அந்தப் பெண்ணிடத்தில் அவருக்கு அவரது அலுவலகத்தில் ஒரு கர்நாடகத்துப் பெண்ணும் ஒரு முஸ்லீம் பெண்ணும் மிக நெருக்கமாக இருப்பார்களே அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கேட்டேன். அப்போது அந்தப் பெண் அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்டபோது அந்தப் பெண்களில் ஒருவர் ஏற்கனவே ஒரு முறை என் வீட்டிற்கு வந்து சொல்லி விட்டார்கள் என்று சொன்னேன்.
அதன் பின்னர் அவருடைய திருமணத்திற்கு அவர் புறப்படும் சமயம் அவருடன் சேர்ந்து தாமும் பயணம் செய்யப் போவதாகவும் தெரிவித்து அதுவே அவருடன் செல்லும் முதலும் கடைசியுமான பயணமாக இருக்கலாம் என்று சொல்லிய சமயம் நான் எப்போது புறப்படுகின்றீர்கள் எனக் கேட்டேன். அவள் சொன்ன தேதிக்கு முன்னர் அவர் என்னை கட்டாயம் காண வருவார் என்னும் ஏக்கத்துடன் நான் காத்துக் கொண்டிருந்தேன்.
பல நாட்கள் இரவு தூக்கமில்லை. என் கண்ணீரை என் தலையணை துவட்டிக் கொண்டு இருந்தது.