உறவு வலுவடைந்தது
அவரும் நானும் வீட்டில் இருக்கும் சமயம் என்னுடைய தாயார் மற்றும் என்னுடைய உறவினர்களுக்குத் தெரியாமல் அனைவரும் பகல் உணவு முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் சமயம் நாங்கள் இருவரும் மிக மிக சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்போம்.
ஆனால் அடிக்கடி நான் எனது உறவினர்கள் வீடுகளுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக சென்று தங்கி வரும் நிலை ஏற்பட்ட படியால் நான் வீட்டில் இருக்கும் நாட்கள் மிகவும் குறைந்து விட்டன.
அவர் என்னை எதிர்பார்த்து ஏங்குவதை விட அவரது தாயார் என்னை எதிர்பார்த்து காத்திருப்பது எனக்கு உள்மனதில் உறுத்தலைக் கொடுக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் நான் என் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வது பற்றியும் அந்த இடங்களில் எத்ததை நாட்கள் தங்கப் போகிறேன் என்பது பற்றியும் அவரிடம் நேரில் சொல்ல முடியாவிட்டாலும் அவருடைய தாயாரிடம் கட்டாயம் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு வந்து விட்டது.
அவ்வாறு நான் செல்லும் காலங்களில் அவருடைய தாயார் எனக்கு அறிவுரைகள் நிறைய சொல்லி அனுப்புவார்கள்.
எந்த உறவினர் வீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் புறப்பட்டுச் செல்ல வேண்டாம். கட்டாயம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட அன்றே திரும்பி விட வேண்டும் என்று சொல்வார்கள்.
குறிப்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று எந்த உறவினர் வீட்டிலும் சென்று தங்கக் கூடாது. அதே போல அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை நாளன்று எங்கும் செல்லக் கூடாது என்று சொல்வார்கள்.
அதே போல ஒரு உறவினர்களின் வீட்டிற்கு எந்த நாளில் புறப்பட்டுச் சென்றோமோ அதே நாளில் அதாவது எட்டாவது நாள் அங்கிருந்து திரும்ப புறப்பட்டு வரக்கூடாது. 7 நாட்களுக்கு மேல் தாண்டினால் 10 வது நாளில் தான் திரும்ப வரவேண்டும் என்று அதற்கு உதாரணமாக திங்கள் முதல் திங்கள் வரை 8 நாட்கள் செவ்வாய் 9 புதன் 10 எனக் கணக்கிட்டு ஒரு உறவினர் வீட்டிற்கு இந்த திங்கட்கிழமையன்று சென்றால் அடுத்த வாரம் புதன் கிழமையன்று தான் வரவேண்டும் என்று அறிவுரை சொல்லி அனுப்புவார்கள். நானும் அவரது அறிவுரைகளை தவறாது கடைப்பிடிப்பேன்.
அத்துடன் எனது தங்கை மகளுக்கு வருகின்ற வரன்கள் பற்றிய தகவல்களை அவரது தாயார் உன்னிப்பாக கேட்டறிந்து வந்தார்கள். காரணம் அவர்களின் திருமணம் தடைப்படாது நடந்தேறினால் தான் அவரது தாயார் என்னை தொடர்ந்து கால இடைவெளி இல்லாமல் பார்த்து பேச முடியும்.
நான் எனது உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் விவரத்தினை சில சமயம் முன் கூட்டி அவரிடம் அல்லது அவரது தாயாரிடம் சொல்லி விட்டுச் சென்றாலும் அவர் அந்த உறவினர் வீடுகள் இருக்கும் பக்கம் வரும் சமயம் நான் வாசலில் அமர்ந்து இருந்தால் தான் அவரால் என்னை நேரில் காண முடியும். பேச முடியும்.
என்னுடைய உறவினர் வீட்டிற்கு உள்ளே வந்து உரிமையுடன் அவர் என்னை பார்க்கவோ அல்லது பேசவோ முடியாது. அவ்வாறு வந்து அவ்வாறு பேசுவாரேயானால் அவர் யார் ஏன் வந்திருக்கிறார் போன்ற அனைத்து விவரங்களையும் அதற்கான காரணங்களையும் என் உறவினர்களிடம் நான் தெரியப்படுத்த வேண்டியிருக்கும். அது ஒரு தர்ம சங்கடமான நிலை.
அவருடைய தாயார் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகளான நீயும் அவனும் சேர்ந்து வாழ்வதற்கான முதல் பிரார்த்தனையை நான் உங்களுக்கு அம்மன் கோயிலிலும் கருப்பண சாமி கோயிலிலும் துவக்கி வைக்கின்றேன். நீயும் அவனும் சேர்ந்து வாழ்க்கையில் இணைவதற்கு எல்லா கடவுள்களிடமும் பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். தெய்வத்தால் ஆகாதது ஒன்றும் இல்லை. மனிதன் தடுத்தாலும் தெய்வம் கொடுக்கும். தெய்வத்தை நம்யி முயற்சி மேற்கொள்ளுங்கள். நல்ல முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொன்னார்கள். அதே போல ஆரம்பித்தும்; வைத்தார்கள்
அவரது தாயார் ஆரம்பித்து வைத்த கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடும் பழக்கத்தை என் உறவினர்கள் வீடுகளில் இருக்கும் சமயங்களிலும் கூட தவறாமல் கடைப் பிடித்தேன். அதன்படி நான் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று வர என் உறவினர்களிடம் அனுமதி கேட்டு அங்கு செல்லும் சமயம் இருவரும் சந்தித்து ஒன்று சேர்ந்து மிகச் சிறிய நேரம் ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பேசி உடனடியாக திரும்பி விடுவேன்.
பகல் நேரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இராகு கால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கேற்ற வேண்டும் என்று சாக்குச் சொல்லிவிட்டு நான் கோயிலுக்குச் செல்லும் சமயம் அவர் அந்த கோயிலுக்கு வந்து பூஜைக்கு உண்டான பொருட்கள் அனைத்தையும் அவர் கைப்பட செலவு செய்து வாங்கிக் கொடுத்து என்னுடன் பூஜையில் கலந்து கொள்வார்.
இது போன்ற காரணங்களால் நானும் அவரும் அடிக்கடி கோயிலுக்குச் சென்று வரும் பழக்கம் வழக்கமாகி விட்டது.
அவ்வாறு ஒரு நாள் அவருடன் நான் அருகில் உள்ள மிகச் சிறிய கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் கருவுற்ற பெண்கள் தேங்காய் சிதறுகாய் அடித்தால் கருக்கலைந்து போகும் என்ற தகவலை அருள் சொல்பவர் சொல்லித் தெரிந்து கொண்டோம்.
அன்றைய தினம் நானும் அவரும் வீடு திரும்பும் சமயம் என்னையும் அறியாமல் நான் அவரிடம் சொன்ன இரண்டு வரிகள் என் மனக்கண் முன் எப்போதும் நிலைத்திருக்கும்.
உன்னோடு நான் சேர்ந்து அழுதாலே சொர்க்கம்
நீ இல்லாத சொர்க்கத்தை நினைத்தாலே நரகம்
இவ்வாறு நானும் அவரும் பாதி சந்தோஷத்துடனும் பாதி சோகத்துடனும் எதிர்காலத்தை எண்ணி வந்தோம். வாழ்க்கையில் நிச்சயம் ஒன்று சேர்வோம் என்னும் நம்பிக்கை நம் இருவருக்கும் முழுமையாக இருந்தது.
ஒரு நாள் அதிகாலையில் நான் உடல் நலமில்லாமல் இருக்கும் எனக்கு அடையாளம் தெரியாத அவரது உறவினர் ஒருவருக்குப் பணிவிடை செய்வதாகக் கனவு கண்டேன். எனவே அனைவரும் எழுவதற்கு முன்னர் அவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நான் வந்த சமயம் அவர் எனக்கு முன்னால் எழுந்து எனக்காகக் காத்திருந்தார்.
நான் கண்ட கனவு விவரம் தெரிவித்தேன். அவர் சிறிது நேரம் கழித்து அவ்வாறு ஒன்றும் தன்னுடைய வீட்டில் இல்லை என்று சொன்னார். ஆனால் அன்றைய தினம் பிற்பகலிலேயே அவரது மிக நெருங்கிய உறவினருக்கு உடல் நிலை சரியில்லாத விவரத்தை அறிந்து அவர் என்னிடம் தெரிவிக்க நானும் அவரும் மறு நாள் சென்று அவரைப் பார்த்த சமயம் அவர் எங்களை ஆசீர்வதித்து விட்டு என்னுடைய தோள்களில் சாய்ந்த சமயம் அவரது உயிர் பிரிந்து விட்டது.
ஆமாம் இது வரை எனக்கும் அவருக்கும் இருந்த காதல் அவருடைய தாயாருக்கும் நமது நண்பர்களுக்கு மாத்திரம் தெரிந்திருந்த நிலையில் அவரது உறவினர்கள் அனைவருக்கும் கூட தெரிந்து விட்டது.
ஆனால் அவரது தந்தையோ அல்லது தாயாரோ அதுபற்றி அவரிடமோ அல்லது என்னிடமோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஆனால் அவருடைய தந்தை என்னுடைய தாயாரிடம் நேரில் சந்தித்து பேசி இருக்கின்றார் என்னும் விவரம் மட்டும் எனக்குத் தெரிய வந்தது. என்ன பேசிக் கொண்டார்கள் என்பது நம் இருவருக்கும் சில நாட்கள் புதிராகவே இருந்தது.