நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உரையாடல்
அவர் என்னைக் காண்பதற்கு கையில் இனிப்புடன் மிக மிக சந்தோஷமான எதிர்பார்ப்புடன் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அந்த சமயம் நான் வீட்டில் இல்லை. எனது உறவினர் இல்லத்திற்கு சென்று தங்கி இருந்தேன். அவருக்குப் பெருத்த ஏமாற்றம்.
நான் அவரைக் காண வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். எனது துரதிர்ஷ்டம் அவரது உறவினரின் மறைவு காரணமாக அவர் வெளியூருக்குச் சென்று விட்டார். எனவே நான் சென்ற சமயம் அவரைக் காண முடியவில்லை.
சில நாட்கள் சென்ற பின்னர் அவர் என்னைக் காண மீண்டும் என் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். எனது இரண்டாவது மகனின் வீடு அவருக்குத் தெரியாது. அவரிடத்தில் ஆலோசனைகள் கேட்டு அதன்படி கட்டி முடித்த வீட்டின் வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு கூட அவரை அழைக்கவில்லை என்ற காரணங்களால் மீண்டும் முதல் மகன் வீட்டுக்கே என்னை பார்க்கச் சென்றுள்ளார். அப்போதும் நான் வீட்டில் இல்லை.
மூன்றாவது முறையாக அவர் எனது இல்லத்திற்கு வந்த சமயம் ஒரே மாதிரியாக அமைந்துள்ள வீடுகளில் எனது வீடு எது என்பதனை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரம் தவித்துள்ளார். கடைசியில் அக்கம் பக்கத்தினரிடத்தில் விசாரித்து எனது வீட்டினை அடைந்துள்ளார்.
அந்த நேரத்தில் முதல் மகனிடத்தில் என்னைப் பற்றி விசாரித்ததற்கு ஒவ்வொரு மகன் வீட்டிலும் இரண்டு மாதங்கள் தங்கி வருவதாகவும் அவர் வந்த சமயம் இரண்டாவது மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்குப் போயிருக்கலாம் எனவும் சொல்லியிருக்கின்றார்கள். அவர் வந்த சமயம் நான் எங்கு இருக்கின்றேன் என விசாரித்து தெரிவிக்குமாறு கேட்டதற்கு எனது இரண்டாவது மகன் விலாசத்தையும் வெளியூரில் உள்ள மகள் விலாசத்தையும் எழுதிக் கொடுத்து விட்டு நேரில் போய் சந்தித்துக் கொள்ளுமாறு அலட்சியமாக சொல்லி இருக்கின்றார்கள். அவ்வாறு சொன்ன சமயம் அனைத்து இடங்களின் தொலை பேசி எண்களையும் அவரிடத்தில் கொடுத்து இருக்கின்றார்கள்.
எனது மற்ற இருப்பிட முகவரிகளை அறிந்து கொண்ட பின்னர் அவர் என்னைச் சந்திப்பதற்கு எனது இரண்டாவது மகன் இல்லத்திற்கு வருகை தந்தார். முதல் கேள்வியாக எங்கே என் சம்மந்தி எனக் கேட்டார். நான் அவர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். மகனும் மருமகளும் அவர்கள் ஊருக்குப் போய் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்தேன். இதன் பின்னர் அவருக்கு வழக்கம் போல் உணவு பரிமாறிவிட்டு அவர் “என் காதலி என் தேவதை” என என்னைப் பற்றி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை படித்ததாகவும் நானும் அதே போல எழுதி வைத்து இருப்பதாகவும் தெரிவித்து அதனையும் அதே போல வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு நான் எழுதிக் கொடுத்த அனைத்தையும் வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்து முடித்து விட்டார்.
அவர் பதிவேற்றம் செய்து முடித்த பின்னர் மீண்டும் என்னைக் காண எனது முதல் மகன் வீட்டிற்குச் சென்று இருக்கின்றார். நான் அவரைக் காணும் பொருட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டேன். எனவே அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர் சில நாட்கள் கழித்து என்னிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் என்னிடத்தில் நான் எழுதிக் கொடுத்த அனைத்தையும் வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டதாகத் தெரிவித்து மேற்கொண்டு எதுவும் எழுதி இருக்கின்றேனா எனக் கேட்டார்.
அதற்கு நான் மேற்கொண்டு எதுவும் எழுதவில்லை எனச் சொல்லிவிட்டு நான் அவரிடத்தில் கடைசியாக அவரைச் சந்தித்த சமயம் அடுத்த ஜென்மத்தில் நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ வேண்டுமெனில் ஹிந்து மத கலாச்சாரத்தின்படி கணவனுக்குப் பின்னால் தான் மனைவி பிறந்திருக்க வேண்டும் எனச் சொல்லிய காரணத்தால் தற்போது உயிர் வாழப் பிடிக்காமல் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் நாம் இருவரும் எப்போது மடியப் போகிறோம் எனவும் கேட்டேன்.
அதற்கு அவர் வலைத் தளத்தில் இதுவரை பதிவேற்றியிருப்பது போல நமது மரணத்தைப் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிட்டு பதிவிடுவதாக உறுதியளித்தார். என்னிடத்தில் அப்போதே சொல்லும்படிக் கேட்டேன். அதற்கு அவர் அவரது மறைவுக்கு முன்னர் கட்டாயம் ஒருமுறை என்னை எங்கிருந்தாலும் நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்தார். நான் எப்போது எனக் கேட்டேன்.
தேவைப்பட்டால் உடனடியாக வந்து சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனே நமது வீட்டில் திருமண வயதில் பிள்ளைகள் இருப்பதால் ஏதேனும் திருமண நிகழ்ச்சியில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தேன். அதற்கு அவர் கிரஹப் பிரவேசத்திற்கே அழைக்க மறந்தவர்கள் மறுத்தவர்கள் இனிமேல் அழைப்பார்கள் என்னும் நம்பிக்கை இல்லை என்பதனைத் தெரிவித்தார். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
நான் அவரிடத்தில் ஒரு முறை ஒரே ஒரு முறை நான் என் விழிகளை மூடுவதற்கு முன்னர் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்னும் வேண்டுகோளை வைத்தேன். உங்கள் வருகைக்கு முன்னர் எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமேயானால் கட்டாயம் தொலை பேசியில் தகவல் தெரிய வரும் எனச் சொல்லி விட்டு தற்போதைய நிலைமையினை தொலைபேசியில் பதிவிடுவதாகத் தெரிவித்தேன்.
அதற்கு அவர் என்னிடத்தில் எப்படி இது சாத்தியம் எனக் கேட்டதற்கு எனது இரண்டாவது மருமகள் நம் இருவருக்கும் சாதகமாகவே இருந்து வருகின்றாள் எனவும் அவள் மூலம் எனது நிலைமை பற்றி தெரிவிப்பதாகவும் சொன்னேன்.
அதற்கு அவர் நான் இரண்டாவது மகன் வீட்டிற்கு வந்து என்னைப் பார்க்கலாமா எனக் கேட்டதற்கு அழையாதார் வாசல் மிதியாதே என்பதனைச் சொல்லி உங்களைக் காணாமல் என் மருமகள் தவிக்க வேண்டும். எனவே எக்காரணம் கொண்டும் எனது இரண்டாவது மகன் வீட்டுக்கு வர வேண்டாம் எனச் சொன்னேன். இரண்டாவது மகன் வீடு கட்டும் சமயம் பணமின்றித் தவித்த போது ஆலோசனைகள் சொல்லிய அனைத்தையும் கேட்டு விட்டு வீடு கட்டி முடித்த பின்னர் கிரஹப் பிரவேசத்திற்குக் கூட அழைக்காதது என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி விட்டது என்பதனைத் தெரிவித்தேன்.
நானும் அவரும் அவரது தாயாரும் ஐந்து நாட்கள் புனித யாத்திரை மேற்கொண்ட சமயம் ஒரு மரத்தைச் சுற்றி வழிபட்ட போது சத்தியவான் சாவித்திரி நோன்பு பூஜை மேற்கொண்ட சமயம் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் உயிர் பிரியாது என அருள்வாக்கு சொன்னதை சுட்டிக் காட்டி நாம் இருவரும் நமது மரணத்திற்கு முன்னர் கட்டாயம் ஒரு முறை சந்தித்தே தீருவோம் என்பதனைத் தெரிவித்தேன்.
அதற்குப் பின்னர் நான் சில தினங்கள் மிக மிக சோகமாக இருந்ததைக் கண்ட எனது இரண்டாவது மருமகள் எனது சோகத்திற்கான காரணம் கேட்ட போது அவரது நினைப்பு வந்து விட்டது எனத் தெரிவித்தேன். உடனே அவள் அப்படியெனில் கைபேசியில் பேச வேண்டியது தானே எனச் சொன்ன சமயம் நான் மறுத்து விட்டேன். அதற்குப் பின்னர் என் மருமகள் என்னிடத்தில் உள்ள கைபேசியினைப் பெற்றுக்கொண்டு என்னுடைய தற்போதைய உண்மையான நிலைமையினை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தினை என்னிடத்தில் தெரிவித்தாள். எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்த வாசகம் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா அல்லது சோகத்தைக் கொடுக்குமா என்பது தெரியாமல் மன நிம்மதி இல்லாமல் சில இருந்தேன்.
உதட்டினில் புன்சிரிப்பு. உள்ளத்தில் அழுகை. இது தான் என் நிலைமை.