தூங்குவதற்கு முன் எனது எண்ணங்கள்
தீபாவளிப் பண்டிகை நெருங்க நெருங்க அவரது தந்தை அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து என் குடும்பத்தாருடன் அதிலும் முக்கியமாக என்னுடைய தாயாருடன் பேசுவதற்கு வருவது வழக்கமாக இருந்தது.
தங்கையின் மகள்களுக்கான திருமண பத்திரிக்கை முதல் பிரதி வந்ததை அவரது தந்தையிடம் காட்டி சரியாக இருக்கின்றது என்று சொல்லக் கேட்ட பின்னர் என் வீட்டார் சந்தோஷப் பட்டனர். இதுவும் தவிர திருமணத்திற்கு வந்து கட்டாயம் கலந்து கொண்டு மண மக்களை ஆசீர்வதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட சமயம் திருமண பத்திரிக்கைக்கு பூஜை போட்டவுடன் தாம் வரும் சமயம் இங்கேயே அழைக்குமாறும் வீட்டிற்கு வந்து அழைக்க வேண்டாம் என்றும் சொன்னது என் செவிகளில் விழுந்தது.
வீடு மாற்றிய விவரம் ஏற்கனவே தெரிவித்து விட்டார். எனவே புது வீட்டு விலாசம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீட்டிற்கு வந்து அழைக்க வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அவரது தந்தை எங்கள் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருக்கின்றார் என்னவென்றே தெரியவில்லை.
மேற்கொண்டு என்ன பேசுகின்றார்கள் என்று அறிந்து கொள்ளும் பொருட்டு அருகில் இருந்து நான் பார்க்கும் சமயம் என்னைப் பற்றியோ அல்லது அவரைப் பற்றியோ எதுவும் பேசாமல் வேறு ஏதேனும் விஷயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப் போனால் சில சமயங்களில் மொட்டை மாடிக்குச் சென்று தனியே பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடன் துணைக்கு என் தங்கையின் கணவர் சேர்ந்து கொள்வார்.
என்ன பேசுகின்றார்கள் என்று நான் என் தங்கையிடம் கேட்டால் அது எனக்குத் தேவையில்லாத விஷயம். நான் எதிலும் தலையிட மாட்டேன். எதனையும் கண்டு கொள்ள மாட்டேன் என்று எடுத்தெறிந்து பேசுவார்.
என்ன பேசுகின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஒரு புறம். நம்மைப் பிரிக்க ஏதேனும் சதித் திட்டம் தீட்டுகின்றார்களா என்னும் சந்தேகம் எனக்கு மறு புறம்.
இதனால் எனக்கு சரியாக தூக்கம் வராது. இருந்த போதிலும் எனது பிறந்த நாள் பரிசாக எனக்கு முதல் முதலில் வாங்கிக் கொடுத்து முதன் முதலில் நாங்கள் இருவரும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்ட பின்னர் நான் மிகவும் சந்தோஷமாக அணிந்து கொண்ட அந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை என் இரண்டு கண்களிலும் ஒற்றிக் கொண்டு தான் படுக்கையில் படுப்பேன்.
படுக்கையில் படுத்தவுடன் அவர் தீபாவளிக்கு வந்து ஓரிரு நாள் முன்னதாக என்னைப் பார்க்க வருவார். அவருடன் பேசி மகிழலாம் என்று சந்தோஷப் படுவேன்.
தீபாவளியன்று புத்தாடைகள் உடுத்தியவுடன் நான் அவருடன் சேர்ந்து எனது வீட்டாருக்குத் தெரியாமல் அவரது வீட்டிற்குச் சென்று அவரது தாயார் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். அதே சமயம் அவரது தந்தை நம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதால் அவர் காலிலும் விழுந்து ஆசி பெற வேண்டும் என்னும் கற்பனைக் கோட்டையுடன் நீண்ட நேரம் கழித்து உறக்கம் வரும் வரையில் ஏதேனும் நினைத்துக் கொண்டிருப்பேன்.
அவர் அடிக்கடி சொல்வது என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். என்னவெனில்
பொன்னகை வேண்டாம். புன்னகை போதும்.
அதே போல ஆங்கிலத்தில் எனக்குப் புரியாவிட்டாலும் அவர் சொல்லும் வார்த்தைகள் எனக்கு மனப் பாடம். அது என்னவெனில் பிளைன் இஸ் எ ஜூவல் ( Plain is a Jewel). அதனைக் கேட்கும் எனது தோழியர் கேலி செய்வார்கள். அவர்கள் ஏன் கேலி செய்கின்றார்கள் எனபது எனக்குப் புரியாது.
தாயின் மடியிலும் உனது அரவணைப்பிலும் கிடைக்கும் சுகம் லட்ச ரூபாய் போட்டு கட்டில் பஞ்சு மெத்தை தலையணை வாங்கினாலும் கிடைக்காது. இன்னும் சொல்லப் போனால் உன்னோடு நான் சந்தோஷமாக இருக்க கோரப் பாயும் தலையணையும் மட்டும் போதும்.
தங்க நகைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் வேண்டவே வேண்டாம்.
சொந்தமாக தங்குவதற்கு இடமும் உண்பதற்கு உணவும் பரிமாற நீயும் பார்ப்பதற்கு வெளிச்சமும் இருந்தால் போதும்.
சொத்துக்களும் ஆடை ஆபரணங்களும் நகை நட்டுகளும் ரொக்கமும் நிறைய இருப்பதை விட தேக ஆரோக்கியம் மட்டும் நமது வாழ்நாள் முழுவதும் இருந்தால் நன்கு உழைத்து நீண்ட நாட்கள் நானும் நீயும் நமது பிள்ளைகளும் சந்தோஷமாக இருக்கலாம்.
நமக்கென்று வாரிசுகள் பேரன் பேத்திகள் இருந்தால் போதும் என்று நமது எதிர் காலத்தை திட்டமிடும் சமயம் உடல் நல ஆரோக்கியம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் நிறைய ஆசைப்பட மாட்டார்.
என்னுடைய ஆள் காட்டி விரலை அவரது ஆள் காட்டி விரலால் தொட்டுவிட்ட ஒரே காரணத்தால் பிறர் தவறு என்று சொல்கின்ற அல்லது நினைக்கின்ற எந்த விதமான கெட்ட பழக்கங்களுக்கும் அவர் அடிமையாகவில்லை.
எனவே தேக ஆரோக்கியம் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை என்னும் எண்ணங்களுடன் எனது இரண்டு கண்களும் உறக்கத்தை தழுவும்.
தினமும் காலையில் உறக்கத்திலிருந்து எழும் சமயம் அவரது ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை ஒரு முறை முத்தமிடுவேன். அன்றைய நாள் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
என் அருகில் வேறு யாரேனும் இருந்தார்கள் என்றால் டாலரை முத்தமிட முடியாது அன்று எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். எனவே எனது வீட்டில் உள்ள மற்றவர்கள் துயிலெழுமுன்னர் டாலரை முத்தமிட நான் முதலில் எழுந்து விடுவேன்.