முதன் முறையாக அவரது தாயாருடன் கோயிலில் வழிபாடு
வெள்ளிக் கிழமையன்று கோயிலுக்குச் சென்று வந்து பிரசாதத்தைக் கொடுக்கச் சென்ற சமயம் அவரது தாயார் என்னை தன்னருகில் அமர வைத்து என்னைப் பற்றியும் என் குடும்பம் பற்றியும் விசாரித்து நான் அழகாக இருப்பதாகவும் மிக நேர்த்தியாக ஆடைகள் அணிந்துள்ளதாகவும் தெரிவித்த சமயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதன் பின்னர் நான் கொடுத்த பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
நான் கொடுத்த அம்மன் படத்தினை அவர்தம் கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டு பின்னர் அதனை தங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது பெட்டகத்திலோ வைக்காமல் அந்த அம்மன் படத்தினை தன் மகனிடம் கொடுத்து விட்டார் என்பதனை அறிந்து கொண்டேன். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
நான் கொடுத்த அந்த அம்மன் படத்தை அவரது தாயார் அவரிடம் கொடுத்த காரணத்தால் மிக மிக பத்திரமாக தன்னுடைய சட்டைப் பையிலுள்ள பர்சில் வைத்துக் கொண்டுள்ளார். ஆம் அவருடைய இதயத்திலே நான் இருக்கின்றேன் நான் முதன் முதலாக கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வந்து அவரது தாயாரிடம் கொடுத்த அம்மன் படம் அவருடைய இதயத்தை வருடிக் கொண்டு இதயத்திற்கு மிக அருகாமையில் பத்திரமாக உள்ளது.
அவருக்கு கடவுள் மீது அவ்வளவாக நம்பிக்கை கிடையாது இருந்த போதிலும் நான் கொடுத்துள்ள அம்மன் படத்தினை இதயத்திற்கு அருகில் வைத்துள்ளதால் அவருக்கும் கடவுள் மீது நம்பிக்கை கட்டாயம் வரும் என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது.
அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை. காலையில் நான் கோயிலுக்குச் செல்லவில்லை. அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னைப் பார்க்காமல் பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது நான் சென்று இன்று கோயிலுக்கு மாலையில் செல்லப் போவதாகத் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஏதேனும் உடல் நலம் சரியில்லையா என விசாரித்தார். அப்படி ஒன்றும் இல்லை. இன்று உறவினர்கள் வருவதால் ஸ்பெஷல் சாப்பாடு தயார் செய்ய வேண்டியுள்ளது என்று சொன்னேன். அவர் நிம்மதிப் பெருமூச்சுடன் பள்ளிக்குப் புறப்பட்டார்.
மாலையில் அவர் பள்ளியிலிருந்து திரும்பி வழக்கம் போல் வெளியே சென்று விட்டு விட்டார். அப்போது அவரது தாயார் தமது வீட்டில் பூஜை செய்து சாமிக்கு படைக்கப்பட்ட நாட்டுச் சக்கரை கலந்த பொட்டுக் கடலை பிரசாதத்தை எனக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அந்த பிரசாத தட்டினை என்னிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது தாயார் அந்த காம்பவுண்டில் உள்ள பெண்கள் வேறு எவருக்கும் சொல்லாமல் என்னிடம் ஒரு சிறு வேலை சொன்னதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். அவரது தாயார் கொடுத்ததை வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளித்தேன்.
அப்போது இன்று என்ன விசேஷம் எங்கேயோ செல்ல தயாராக இருக்கின்றாய் எனக் கேட்க நான் அம்மன் கோயிலுக்கு செல்லப் போவதாக தெரிவித்தேன். அதற்கு அவர்கள் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் தாமும் கூட வந்திருப்பேன் என தெரிவித்தார். அதற்கு நான் நானும் என் தங்கையும் நடந்து சென்று அம்மனை வழி பட்டு வருவோம் எனவும் நீங்கள் நடக்க முடியுமா என்றும் கேட்டேன்.
அதற்கு அவர்கள் என்னுடன் வரும் சமயம் ரிக்க்ஷாவில் அல்லது குதிரை வண்டியில் சென்று வரலாம் என்று தெரிவித்தார். அதற்கு நான் நீங்கள் கோயிலுக்குச் செல்லும் சமயம் என்னை அழைத்தால் நான் கூட வருகிறேன் உங்களுடன் சேர்ந்து சாமி கும்பிட்ட பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று சொன்னேன்.
அதற்குள் திண்ணையில் சபை களைகட்டி விட்டது. நானும் என் தங்கையுடன் கோயிலுக்குச் சென்று அவைரும் படித்து முடிப்பதற்குள் திரும்பி விட்டேன்.
வழக்கம் போல அவர் வீடு திரும்பிய பின்னர் தம் வீட்டிற்குள் சென்று தந்தையிடம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் சொல்லி முடித்து விட்டு வெளியே வந்தார்.
என்னையும் அவரையும் சேர்த்து மீண்டும் கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். அவருடைய தாயார் என்னிடம் பூஜை பிரசாத்ததை அனைவருக்கும் கொடுக்கும் வேலை சொன்னது பற்றியும் என்னுடன் சேர்ந்து அவரது தாயார் கோயிலுக்கு வர பிரியப்பட்டது பற்றியும் தெரிவித்தார்கள். அவருக்கு உள்ளுர மகிழ்ச்சி. அதனைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அனைவர் முன்னாலும் என்னைக் காட்டி எப்படி என்னுடைய தேர்வு என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அனைவரும் நாங்களும் அழகாகத்தான் இருக்கின்றோம். உனக்கு அவளைப் பிடித்து விட்டது. அந்த விவரம் எப்படியோ உன் தாயார் அறிந்து கொண்டு உன் மனம் குளிரும்படி இப்படி நடந்து கொள்ளலாமே என்று கேட்டார்கள். அதற்கு அவர் இந்த குழுவில் அனைவரும் அழகாகத்தான் இருக்கின்றீர்கள். ஆனால் என் தாயாரைக் கவரும் அளவிற்கு வசீகரம் அவளிடத்தில் இருக்கின்றது. அழகு என்பது வேறு வசீகரம் என்பது வேறு. அதே போல ஈர்ப்பு என்பது வேறு கவர்ச்சி என்பது வேறு என்று பேச ஆரம்பித்தார்.
உடனே நான் என்னை வைத்துக் கொண்டு இப்படி ஒரு பட்டிமன்றம் நடத்தி என்னை இந்த குழுவினர் வெறுக்கும் படி செய்து விடாதீர்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
அதற்கு அடுத்த நாள் காலையில் அவருடைய தாயார் என் வீட்டிற்கு வந்து அவர்கள் கோயிலுக்குச் செல்லப் போவதாகவும் என்னை அவர்களுடன் அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ள நானும் அவருடைய தாயாருடன் கோயிலுக்கு சென்று வந்தேன். என்னுடைய தாயார் காரணம் கேட்டதற்கு அவருடைய தங்கை வராத காரணத்தால் என்னை அழைப்பதாக தெரிவித்தார்கள்.
அப்போது நான் பச்சை நிறத்தில் பாவாடையும் இளமஞ்சள் நிறத்தில் தாவணியும் போட்டுக் கொண்டு சென்றேன். என்னை அந்த உடையில் பார்த்தவுடன் என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு எந்த உடையிலும் நீ ஜொலிக்கிறாய் என்று என் குடும்பத்தினர் முன்னிலயில் பாராட்டினார்கள்.
பள்ளியிலிருந்து அவர் திரும்பியவுடன் அவரிடம் நான் கோயிலுக்குச் சென்று வர எனக்கு ஒரு துணை கிடைத்து விட்டது எனக்குக் கவலையில்லை என்று தெரிவித்ததாக என்னிடம் அவர் சொன்னது கேட்டு மிக்க மகிழ்ச்சி. கோயிலுக்கு மட்டும் துணையாக இல்லாமல் வாழ்க்கையிலும் துணையாக எனக்கு அவர் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் வளர ஆரம்பித்தது.
ஆமாம் குதிரை வண்டியில் என்னை கோயிலுக்கு அழைத்துச் சென்று வந்த அவரது தாயார் நிச்சியம் இரண்டு குதிரைகள் பூட்டப் பட்ட சாரட்டு வண்டியில் என்னை தன்னுடைய மருமகளாக அழைத்துச் செல்வார்கள் என்னும் நம்பிக்கை உள்மனதில் ஏற்பட்டது.