மணமகள் தேடலில் சிரமங்கள்
என்னுடைய உறவினர் அதாவது அவரது நண்பர் என்னையும் என் குழந்தையையும் பார்ப்பதற்காக என்னுடைய இல்லத்திற்கு வந்திருந்த சமயம் அவரும் நானும் எவ்வளவு அன்யோன்யமாக பழகி வந்தோம் எப்படி எல்லாம் எதிர் காலத்தில் வாழ ஆசைப் பட்டோம் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன்.
அந்த சமயத்தில் இவ்வளவு தூரம் பழகி விட்டு இவ்வாறு பிரிந்திருப்பது என்பது நரக வேதனை என அவரது நண்பர் என்னிடம் சொல்லிவிட்டு அவருடைய நண்பர் என்னை பிரிந்து எவ்வளவு கஷ்டப் படுகின்றார் என்பதனை விவரமாக எடுத்துச் சொல்லும் சமயம் நான் அவர் மீது எந்த குற்றமும் இல்லை எனவும் எல்லாம் என்னுடைய தாயாராலும் அவருடைய தந்தையாதும் தான் இருவரும் பிரிய நேரிட்டது என்றும் சொல்லி முடித்தேன்.
அதற்குப் பின்னர் என்னைக் காண அவர் கடைசியாக வந்து சென்ற சமயம் வாங்கிக் கொடுத்த குழந்தைக்கான பரிசுப் பொருட்களையும் எனக்கு வாங்கிக் கொடுத்த சேலையினையும் காண்பித்தேன்.
அவர் எனது திருமணத்திற்குப் பின்னர் அவரது பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த சேலையினை தொட்டிலாக கட்டி என்னுடைய குழந்தை அதில் உறங்குவதாகவும் குழந்தை அவர் வாங்கிக் கொடுத்த சேலையில் உறங்குவதால் பாது காப்பாக இருக்கும் என்று நான் நம்புவதாகவும் குழந்தையை ஒவ்வொரு முறையும் தொட்டிலில் உறங்க வைக்கும் சமயத்திலும் அவர் நம் இருவரையும் அரவணைப்பதாக உணர்கின்றேன் என்றும் தெரிவித்தேன். அதுவும் தவிர குழந்தை அழுகின்ற சமயத்தில் தொட்டிலை ஆட்டும் சமயம் அவரும் சேர்ந்து குழந்தையை தூங்க வைப்பதாக எண்ணுகின்றேன் என்று சொன்னேன்.
எனக்குத் திருமணம் ஆகி ஓராண்டுக்கு மேலாகி குழந்தை ஒன்றும் பிறந்து விட்டது. அந்தக் குழந்தையும் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டது. நான் குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் குழந்தை இன்னமும் பேசவில்லை. நான் எவ்வளவோ முயற்சித்தும் என்னைப் பார்த்து சிரிக்கின்றதே தவிர இன்னமும் பேச ஆரம்பிக்கவில்லை.
இந்த நிலையிலும் நான் அவரை நினைக்கும் பொழுது அவர் அவசர அவசரமாக பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் சென்ற சமயம் நான் அவரை எப்படி பார்த்தேனோ அந்த கால தோற்றம் மற்றும் அந்த கால நினைவலைகளுடன் தான் இருக்கின்றேன்.
நான் வளர்ந்து விட்டேன். எனக்கு இன்னொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. எனக்குக் குழந்தை பிறந்து விட்டது. அது போல அவரும் வேலைக்குச் செல்லுமளவிற்கு உயர்ந்து விட்டார். வேலையில் சேர்ந்து கொண்டு பலப்பல நண்பர்களுடன் புதிதாக அறிமுகமாகியுள்ளார்.
குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த காலம் மாறிப் போய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு ஒரு அரசுப் பதவியில் சேர்ந்து கொண்டு மிகவும் வேலைப் பளுவுடன் இருக்கின்றார் என்பதனை என்னுடைய மனம் ஏற்க மறுக்கின்றது.
நான் எப்படி அவரை முதன் முதலாக பார்க்கும் சமயம் எப்படி மிக நெருக்கமாக கண்ணெதிரில் இருந்தாரோ அந்த நிலையில் தான் நான் அவரை இன்னமும் நினைத்துக் கொண்டு அவர் எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகின்றேன். என்னுடைய எண்ணங்கள் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள் கிணற்றுத் தவளை போலத் தான் இருக்கின்றன. இன்னமும் கூட அவர் எனக்கே சொந்தம் என்னும் எண்ணம் என்னை விட்டு நீங்கவில்லை என்று எனது உறவினரிடம் சொன்னேன்.
நேற்றைய தினம் அவர் இங்கு வரவேண்டிய நாள். ஆனால் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை என்று சொன்னவுடன் அவர் பெண் பார்ப்பதற்காக ஊருக்கு சென்றிருப்பார் என்று தெரிவித்தார். அதற்குப் பின்னர் என்னுடைய உறவினர் அவரை சந்தித்து நான் எதிர் பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றேன் என்று சொல்லி விடை பெற்றுச் சென்று விட்டார்.
அவர் என்னை பார்க்க வருவதில் தாமதம் ஏற்பட்டால் என்னுடைய இதயம் படபடக்கின்றது. அவருடைய உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என என் இதயம் துடிக்கின்றது. நான் அவரைக் காண வேண்டும் என ஏங்கித் தவிக்கின்றேன். ஆனால் அவரைத் தேடி நான் செல்ல முடியாது காரணம் அவர் இருக்கும் விலாசம் எனக்குத் தெரிந்தாலும் அவர் நான் செல்லும் நேரத்தில் அவர் அங்கு இருப்பாரா என்பது எனக்குத் தெரியாது. அவராக வந்து என்னைப் பார்த்தால் தான் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்.
நான் அவரது வருகைக்காக இரண்டு மாதங்கள் காத்திருந்த நிலையில் அவர் வரும் நேரத்தில் நானே அவரை வரவேற்க வாசல் படிக்குச் சென்று காத்திருந்தேன். அவர் எனது வீடு அமைந்துள்ள தெருவிற்குள் நுழைந்தவுடன் நான் மிகவும் சந்தோஷப் பட்டேன்.
அவரை வரவேற்று என் இல்லத்திற்குள் அழைத்துச் சென்று அமர வைத்தவுடன் என் குழந்தையை அவரிடம் கொடுக்க அவர் என் குழந்தையை பெற்றுக் கொண்டு ஆசையாக முத்தமிட்டு விட்டு குழந்தையின் மழலை மொழி கேட்க வேண்டும் என்று சொன்னார்.
நான் என்னால் முடிந்த வரை குழந்தையை பேச வைக்க முயற்சி செய்து பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன் என்று சொன்னேன்.
அதன் பின்னர் குழந்தையை அவர் மடியில் வைத்துக் கொண்டு குழந்தையிடம் அம்மா அம்மா என்று சொல்லிக் கொடுத்தார். அவர் திரும்பத் திரும்ப நான்கைந்து முறை சொன்னவுடன் என்னுடைய குழந்தை அவரைப் பார்த்து பாபா பாபா என்று பேச ஆரம்பித்தது. அவர் திரும்பத் திரும்ப அம்மா அம்மா என்று சொல்லிக் கொடுக்க குழந்தை திரும்பத் திரும்ப பாபா பாபா என்று தான் சொல்லிக் கொண்டிருந்தது. இதுவரையில் என்னிடம் இந்த வார்த்தை கூட சொன்னதில்லை.
உடனே நான் அவரிடத்தில் முதன் முதலாக உங்கள் முகம் பார்த்து தான் குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. இப்போது நீங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பின்னர் தான் பாபா என்று சொல்கின்றது. பாபா என்றால் அப்பா என்று அர்த்தம். குழந்தை கூட உங்களை அப்பா என்று ஏற்றுக் கொள்கின்றது என்று கண் கலங்கினேன். உடனே அவர் குழந்தையின் மழலை மொழி கேட்டு சந்தோஷப் படவேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்று சொன்னேன்.
குழந்தைகளுக்கு ஆரஞ்சு மிட்டாய் அதாவது பஞ்சு மிட்டாய் நிறம் அதிகம் பிடிக்கும் என்பதால் அந்த நிறத்தில் பொம்மைகளை கொண்டு வந்து அவற்றை குழந்தையிடம் நீட்ட கைகளை உயர்த்தி விளையாட ஆரம்பித்தது.
அதன் பின்னர் நான் அவரிடம் சென்ற மாதம் எனது உறவினர் அதாவது அவரது நண்பர் வந்திருந்த சமயம் நீங்கள் பெண் பார்க்கும் பொருட்டு சொந்த ஊர் சென்றிருப்பதாக கேள்விப் பட்டேன் என்றும் பெண் பார்க்கும் நிலை பற்றியும் கேட்டேன்.
அவருடைய தாயார் என்னைப் பார்த்த நாளிலிருந்து நான் தான் மருமகளாக வரவேண்டும் என்று மனக் கோட்டை கட்டியிருந்ததாகவும் இன்று வரையில் நான் மருமகளாக வருவதற்கு எனது தாயாரும் அவரது தந்தையும் தடையாக இருந்தது பற்றியும் என்னைப் போலவே வருகின்ற மருமகள் இருக்க வேண்டும் என்றும் இன்று வரையில் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பெண் பார்க்கச் செல்லும் சில இடங்களில் பெண்ணை என்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய தாயார் வருத்தப் படுவதாகவும் தெரிவித்தார்.
நான் அவருடைய தாயாரருக்கு மருமகளாக கிடைக்கவில்லை என்பதனை ஏற்க முடியாமல் தவிப்பதோடு எனக்கு தன் மகனை திருமணம் செய்து வைக்க முடிக்காமல் துரோகம் இளைத்து விட்டதாக கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
என்னைப் போன்ற குண நலன்கள் கொண்ட அழகான சில பெண்களை அவரது தாயார் குறிப்பிட்டு அந்தப் பெண்களை அவருக்கு மணப் பெண்ணாக தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்வதனை அவரது தந்தை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.
பட்டப் படிப்பு படிக்காமல் புகுமுக வகுப்பு வரையிலேயே படித்து படிப்பினை நிறுத்திய காரணத்தால் பட்டப் படிப்பு படித்த மாப்பிள்ளை தான் வேண்டும் என்று ஒரு சில இடங்களில் படிப்பினை காரணம் காட்டி பெண் வீட்டார் அவரை நிராகரிப்பதாவும் தெரிவித்தார். பட்டப் படிப்பு படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்களை விட குறைவாகப் படித்த வேலையில் இருக்கும் மணமகன்களை பெண் வீட்டார் நிராகரிப்பது சரியல்ல என்பது பலருக்குப் புரியவில்லை என்று நான் சொன்னேன்.
சில இடங்களில் பெண்ணை இளநிலை பட்டப் படிப்பு படிக்க வைத்து விட்ட படியால் வரப்போகும் மணமகன் இளநிலை பட்டப் படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் சொல்லும் சமயம் ஒரு பெண் 6-வது வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து 15 ஆண்டுகள் கல்வி பயின்றால் தான் பட்டம் பெற முடியும் அப்போது அந்த பெண்ணுக்கு வயது குறைந்தது 21 ஆகியிருக்கும். 18 வயதில் பெண்களும் 21 வயதில் ஆண்களும் திருமணம் செய்து கொண்டால் தான் 24 முதல் 30 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்று எதிர்காலத்தில் அவர்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமயம் நோய் நொடியின்றி சந்தோஷமாக கலந்து கொள்ள முடியும் என்று சொன்னேன்.
சில இடங்களில் வரப் போகும் மணமகன் உள்ளுரிலேயே இருக்க வேண்டும் என்றும் வெளியூர் எனில் வேண்டாம் என்றும் சொல்கின்றார்கள் என்று அவர் சொல்லும் சமயம் சீதைக்கு இராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பதனை ஏற்க மறுப்பவர்கள் தான் இப்படி எதிர்பார்ப்பார்கள் என்று சொன்னேன்.
அதே நேரத்தில் அவருடைய தந்தை பல ஜாதகங்களை நிராகரித்து விட்டு ஒரு சில குறிப்பிட்ட பெண்களை பார்ப்பதற்காக செல்லும் சமயத்தில் மணப் பெண்ணின் வீட்டார் என்னையும் அவரையும் சேர்த்து பல முறை தெருக்களிலோ அல்லது கோயில்களிலோ மிக நெருக்கமாக பழகியதைப் பார்த்து இருப்பதனை காரணம் காட்டி அவருக்கு பெண் தர மறுத்துள்ளனர் என்று சொன்னார்.
அது தவிர அவர் பெண் பார்க்கச் செல்லும் அந்த குடும்பத்திற்குள்ளோ அல்லது அந்த குடும்பத்தினருக்கு உறவினர்களுக்குள்ளோ அவருடைய நண்பர் யாராவது ஒருவர் இருப்பதன் காரணத்தால் அந்த நண்பர் மூலமாக அவர் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றிய விவரங்கள் மற்றும் நம் இருவருக்கு இடையே இருந்த நெருக்கம் மற்றும் காதல் தெரிய வருவது போன்ற காரணங்களாலும் அவரது திருமணத்திற்கு சில தருணங்களில் முட்டுக் கட்டையாக இருப்பதாகவும் சொன்னார்.
அப்போது தான் நான் அவருடன் மிக நெருக்கமாக பழகி வந்து இருந்ததனை எத்தனை பேர் அறிந்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது. அதன் பின்னர் அவர் என்னிடத்தில் பெண் பார்ப்பதைப் பற்றியோ அல்லது திருமணத்தைப் பற்றியோ பேசி அவரது சந்தோஷமான சூழ்நிலையினை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பின்னர் அவரது பெற்றோர்கள் சொந்தமாக வாங்கி கிரஹப் பிரவேச நிகழ்ச்சியிலும் கூட கலந்து கொள்ளவில்லை என்று அவரது தாயார் சொன்ன அந்த வீட்டினைப் பற்றிக் கேட்டேன்.
அந்த விவரம் கேட்டவுடன் அவர் இப்போதே சொல்ல வேண்டுமா எனக் கேட்க காபி குடித்து விட்டு பின்னர் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு வழக்கம் போல் அவர் பாதி காபியினை குடித்த பின்னர் மீதி பாதி காபியினை நான் மிகச் சந்தோஷமாக பருகும் சமயம் சொல்ல ஆரம்பித்தார்.
அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி மாலை நேரத்தில் சென்று வரும் சமயம் நண்பரது தங்கையிடம் பேசிப் பழகி வந்ததாகவும் திடீரென ஸ்டவ் வெடித்து தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதித்திருந்த சமயம் அவரது நண்பரின் தங்கையை சென்று பார்த்ததாகவும் தெரிவித்தார்.
அவர் மருத்துவ மனை சென்ற சமயம் அவரது நண்பரின் தங்கை அந்த மருத்துவ மனை அறையில் இருந்த அனைவரையும் வெளியில் அனுப்பி விட்டு அன்றிரவு அவரது உயிர் பிரிந்து விடும் என்றும் எதிர் காலத்தில் தம்முடைய இருப்பிட எல்லைக்குள் தாம் வர நேரிடும் என்றும் அவ்வாறு வரும் சமயம் அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாது காப்பதாக சொன்னதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவரது நண்பர் அவரிடம் நாங்கள் உற்றார் உறவினர் எத்தனை பேர் இருந்தும் அவரிடம் மாத்திரம் இந்த விவரம் தெரிவிப்பதற்கு காரணம் நீ அவரை விரும்பினாயா எனக் கேட்டதற்கு அந்தப் பெண் அண்ணனுடைய நண்பர்களில் மிகவும் பிடித்தமானவர் என்பதால் தான் அவ்வாறு சொன்னேன் என்றும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் சொன்னதாகவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சொன்ன சமயம் எந்தப் பெண் தன்னுடைய எல்லைக்கு எதிர் காலத்தில் வர நேரிடும் என்று சொல்லி விட்டு உயிர் நீத்தாளோ அந்தப் பெண் வசித்து வந்த வீட்டிற்கு நேர் பின் புறம் உள்ள வீட்டைத் தான் அவரது பெற்றோர் வாங்கி இருப்பதாக தெரிவித்தார்.
நான் உடனே அந்த வீட்டில் தங்கி விட்டு வந்தீர்களா எனக் கேட்ட சமயம் ஆமாம் என்றும் இரண்டு இரவுகள் மட்டும் அங்கு தங்கி விட்டு பகல் நேரத்தில் பெண் பார்த்து விட்டு திரும்பியதாவும் தெரிவித்தார்.
நான் உடனே நீங்கள் உங்கள் பெற்றோர் வாங்கியுள்ள சொந்த வீட்டில் உறங்கியிருக்கும் சமயம் ஏதேனும் அமானுஷ்ய சக்திகள் இருப்பதனை உணர்ந்தீர்களா எனக் கேட்டதற்கு ஆமாம் என்றும் கனவில் அவளது மடியில் நான் பத்திரமாக படுத்து இருப்பது போல இருந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த சமயமத்தில் நான் உங்களுடன் பல வருடங்கள் பேசிப் பழகி பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட நேரத்தில் முன்பின் பழக்கம் இல்லாத நெருங்கிப் பழகாத ஒரு நண்பரது தங்கை அவரை பாது காப்பாக வைத்திருப்பேன் என்று சொல்லி விட்டு இறந்த பின்னரும் கூட அவரை மடியில் படுக்க வைத்துக் கொள்ள முடிகின்றது ஆனால் என்னால் முடியவில்லை என்பதனை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று சொன்னேன்.
அதற்குப் பின்னர் நானும் அவரும் சேர்ந்து ஒரு உறவினர் இறக்கும் தருவாயில் அந்த உறவினர் எதிர் காலத்தில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்து விட்டு என்னுடைய தோளில் உயிர் விட்டும் கூட அந்த ஆசி பலிக்கவில்லை என்று சொல்லி விட்டு மீண்டும் இதற்கு எல்லாம் என்னுடைய தாயார் தான் காரணம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் ஊர்க் குருவி எவ்வளவு உயரம் பறந்தாலும் கடைசியில் கூட்டை நோக்கி திரும்பி விடும் என்பது போல சுற்றிச் சுற்றி நம் இருவரது பெற்றோர் செய்த சதிச் செயலுக்கு வருவது கண்ணீர் வடிப்பது வாடிக்கையாகி விட்டது என்று சொன்னார். அவர் சொல்வது முற்றிலும் உண்மை தான். நான் மறுக்கவில்லை.
நான் அவரிடத்தில் திருமணம் என்பது ஆயிரங் காலத்து பயிர் என்பதும் திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பன எல்லாம் பொய் என்றும் திருமணங்கள் வரதட்சினையாலும் வசதி அந்தஸ்துகளாலும் தான் நிச்சயிக்கப் படுகின்றன என்பது தான் உண்மை என்றும் சொன்னேன். வழக்கம் போல கடைசியில் நாம் இருவரும் பிரிவதற்கு என்னுடைய தாயாரும் அவரது தந்தையும் தான் காரணம் என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டேன்.
இரண்டு மாதகால இடைவெளி விட்டு வந்திருந்த போதிலும் என்னுடைய சோகத்தைக் கண்ட அவரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.
என்னைக் காண மிகவும் ஆவலாகவும் மிகவும் சந்தோஷமாகவும் வந்த அவரை ஒவ்வொரு முறையும் கவலையில் ஆழ்த்திவிட்டு என் கண்களில் கண்ணீர் பொங்க வழியனுப்பி வைப்பது வாடிக்கையாகி விட்டது என்பதனை நினைக்கும் போது என்னுடைய நடவடிக்கைகள் மேல் எனக்கே வெறுப்பு வந்து விடுகின்றது.
மாதத்தில் ஒரு முறை அதாவது 30 நாட்களுக்கு ஒரு முறை வரும் அவரால் 30 நிமிடங்கள் கூட சந்தோஷமாக இருக்க முடியாமல் உதட்டில் போலிப் புன்னகையுடன் திரும்பியது கண்டு இரவு முழுக்க தூக்கமில்லாமல் தவிக்கும் சமயம் அடுத்த முறை அவர் வரும் சமயம் கட்டாயம் சந்தோஷமாக திரும்பிச் செல்லும் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் முடிவதில்லை.