மணமகள் தேடல்.
எனக்குக் குழந்தை பிறந்த பின்னர் மூன்று மாதங்கள் கழித்து வந்தாலும் என்னிடமிருந்த கவலைகள் அனைத்தும் நீங்குமளவிற்கு நாங்கள் இருவரும் மிக மிக சந்தோஷமாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
அவர் வரும் சமயம் எனக்குப் பிறந்துள்ள பெண் குழந்தைக்கு புத்தாடைகளையும் வெள்ளியிலானான கால் கொலுசையும் வாங்கி வந்ததோடல்லாமல் எனக்கும் குழந்தை பெற்றமைக்கான பரிசு என்று மிகவும் விலை உயர்ந்த சேலை கூட வாங்கி வந்து இருந்தார்.
எனக்குத் திருமணமான பின்னர் முதல் முறையாக அவர் எனது வீட்டிற்கு வந்த சமயம் அவர் கட்ட வேண்டிய தாலியை வேறு யாரோ ஒருவர் கட்டியிருப்பதை பார்க்க மாட்டேன் என்று சொன்னார். அதன் பின்னர் நான் வற்புறுத்தி திரும்பிப் பார்க்க வைத்த போது தான் அவரது ஆலிலைக் கிருஷ்ணன் டாலரை எப்படி அணிந்துள்ளேன் என்பதனை தெரிந்து கொண்டு என் மீதான கோபம் சற்று தணிந்து மனம் மாறியுள்ளார்.
யாரோ ஒருவரை நான் கட்டாயத் திருமணம் செய்து கொண்ட போது பிறந்துள்ள குழந்தைக்கு இவ்வளவு செய்கின்றார் என்றால் நானே அவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை அவருக்குப் பிறந்திருந்தால் எப்படி எல்லாம் என்னையும் என் குழந்தையையும் கவனித்து இருப்பார் என்று எண்ணிப் பார்த்து நான் அவரை கணவராக அடைய முடியவில்லை என்று மிகவும் கவலைப் படுவேன். அதனால் பல இரவுகள் தூக்கமின்றி தவிப்பேன்.
இன்று இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை. இன்று மாலை கட்டாயம் என்னைக் காண என் இல்லத்திற்கு என் காதலர் வருவார் என்னுடைய குழந்தையைச் கொஞ்சி மகிழ்வார் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.
அவர் வழக்கமாக வரும் நேரத்திற்கு சற்று முன்னால் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் என்னை கோயிலுக்கு அழைத்தார். நான் மதியம் அசைவ உணவு சாப்பிட்டு இருக்கின்றோம். எனவே முதன் முதலாக குழந்தையை கோயிலுக்கு அசைவம் சாப்பிட்டு விட்டு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
வேறு வழியில்லாமல் நான் அவர் என்னைக் காண கட்டாயம் வருவார் என்பது நன்கு தெரிந்தும் கோயிலுக்கு வற்புறுத்தலின் பேரில் சென்று விட்டேன். நான் கோயிலுக்குச் சென்ற பின்னர் அவர் வந்து என்னைக் காண முடியாமல் சோகத்துடன் திரும்பிச் சென்று விட்டார் என்பதனை கீழே உள்ள குடித்தனக் காரர்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டு வருத்தப் பட்டேன். இரவு முழுக்க தூக்கமில்லை.
என் வருத்தத்தைப் போக்கும் வகையில் அவர் அடுத்த நாள் மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் நேரடியாக எனது இல்லத்திற்கு வந்த சமயம் எனக்கு ஓரே ஆச்சர்யம் மற்றும் ஆனந்தம். முந்தின நாள் மாலை முதல் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கி விட்டது.
அவர் எனது வீட்டிற்குள் நுழைந்தவுடன் என்னைப் பார்ப்பதற்கு பதிலாக என்னுடைய குழந்தை உறங்கியிருக்கும் தொட்டிலைப் பார்த்தார். நான் சிரித்துக் கொண்டே அதுவும் நீங்கள் வாங்கிக் கொடுத்த சேலை தான் என்று சொன்னேன். அந்த சமயத்தில் தொட்டிலில் குழந்தை உறங்குகின்றதா அல்லது விழித்துக் கொண்டு இருக்கின்றதா என்று கேட்டார்.
அவர் என் குழந்தையை மடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது எனக்குத் தெரிந்தது. உடனே குழந்தையை தொட்டிலில் இருந்து தூங்கிக் கொண்டு இருந்தாலும் பரவாயில்லை என்று அவரிடத்தில் கொடுத்தேன். குழந்தையை தன்னுடைய நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டார்.
நான் அவரிடத்தில் என்ன வேண்டும் என்று கூட கேட்காமல் காபி மட்டும் கொடுத்தேன். காரணம் நிறைய பேச வேண்டியிருக்கின்றது. வழக்கம் போல் இருவரும் பகிர்ந்து பருகிய பின்னர் சந்தோஷமாக உரையாட ஆரம்பித்தோம்.
முதல் நாள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய விவரம் அவர் சொன்னவுடன் நானே கேட்டுத் தெரிந்து கொண்டேன் எனக் கூறினேன். நான் அவரிடத்தில் நீங்கள் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை தான் வருகின்றீர்கள் என்பதனை எப்படியோ அவர் அனுமானித்து உங்களிடம் என்னை பேச விடாமல் தடுக்க நேற்று என்னை கட்டாயப் படுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்று பின்னர் அறிந்து கொண்டேன் என்று சொன்னேன்.
நான் உங்களுடன் சேர்ந்து கோயிலுக்கு சென்று வந்த உண்மையான சந்தோஷம் நேற்று அவருடன் சென்ற போது இல்லை. கோயில்களில் உள்ளே நுழையும் சமயம் நான் வலது கால் தான் முதலில் வைக்க வேண்டும் என்று சொல்வீர்கள். அதே போல கோயிலுக்குள் செல்வதற்கு முன்னர் கூந்தலில் மலர்கள் இல்லாமல் செல்லக் கூடாது என்பதற்காக கோயில் வாசலில் மல்லிகைப் பூ நீங்கள் வாங்கிக் கொடுக்கும் சமயம் நான் மொட்டுக்கள் உள்ளனவற்றை தேர்ந்து எடுப்பேன். அதற்கு உங்களிடம் ஒரு விளக்கம் சொல்வேன். அதே போல இது வரையில் நீங்கள் என்னை கோயிலுக்கு அழைத்துச் செல்லும் சமயம் பசியுடன் செல்லக் கூடாக என்பதற்காக ஏதேனும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்ட பின்னர் தான் கோயிலுக்குள் அழைத்துச் செல்வீர்கள்.
நேற்று அந்த ஞாபகங்கள் வந்து என்னை துன்பத்தில் ஆழ்த்தின. அவர் எனக்கு பூ கூட வாங்கிக் கொடுக்காமல் குழந்தை பிறந்த பின்னர் முதன் முறையாக கோயிலுக்குச் சென்று சாமிக்கு அர்ச்சனை கூட செய்யாமல் வெறுமனே அழைத்துச் சென்று வந்தார்.
நான் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் முதல் கோயிலுக்குச் சென்று சாமி தர்சனம் செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் வரையில் குழந்தையை நான் மட்டுமே வைத்திருந்தேன். அவர் குழந்தையை கையால் கூட தொடவில்லை. குழந்தை பிறந்து ஏறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. குழந்தை பிறந்த ஐந்தாம் நாளிலிருந்து இங்கு தான் நான் குழந்தையுடன் இருக்கின்றேன். குழந்தைக்கு அருகில் கூட வராமல் தூரத்திலேயே இருப்பார். இன்னமும் கூட குழந்தையை தூக்கிக் கொள்ள பழகவில்லை.
நீங்கள் என்னைக் காண வந்த முதல் நாளன்றே ஏஞ்சல் டிரஸ் போட்டவுடன் குழந்தையை எப்படி முத்தமிட்டு அரவணைத்தீர்களோ அவ்வாறு அவர் இதுவரையில் ஒரு முறை கூட குழந்தையை தொட்டது கிடையாது.
நான் உங்களை பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்திருந்தால் உறவினர்கள் யாரும் வர மாட்டார்கள். எப்படி இருந்தாலும் குழந்தையைப் பார்க்க கட்டாயம் அத்தை ஒரு முறை வந்திருப்பார்கள். நம் இருவரது குடும்பத்தார் இது வரையில் சமாதானம் ஆகாமல் இருந்திருந்தால் கூட உங்களது நண்பர்கள் எத்தனை பேர் வந்து நலம் விசாரித்து இருப்பார்கள் தெரியுமா.
நான் உங்களை திருமணம் செய்திருந்தால் நிச்சயம் குழந்தையை என்னிடம் கொடுக்காமல் நீங்கள் மாத்திரம் தோளில் வைத்து வந்திருப்பீர்கள். நானும் உங்கள் கைகளைப் பிடித்தவாரே கோயிலில் சந்தோஷமாக வலம் வந்திருப்பேன். கோயில் குளக்கரையில் குழந்தை ஒரு தோளிலும் நான் ஒரு தோளிலும் சாய்ந்து கொண்டு மிக மிக சந்தோஷமாக பொழுதினை கழித்திருப்போம். நீங்கள் இல்லாமல் நான் அவருடன் வாழும் போலி வாழ்க்கை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் நானும் நீங்களும் இனிமையாகப் பழகிய அந்த நாட்கள் நினைவுக்கு வந்து என்னை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. என்னால் அவற்றை மறக்கவும் முடியவில்லை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை என்று சொல்லும் சமயம் நான் அழுது விட்டேன்.
அவர் வருகின்ற ஒவ்வொரு முறையும் நான் கண்கலங்குவது கண்டு அவர் மிகவும் வேதனைப் படுகின்றார் என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் அவரிடத்தில் திருமண ஏற்பாடுகள் உங்கள் வீட்டில் எவ்வளவு தூரம் இருக்கின்றது உங்களுக்குப் பெண் பார்க்க உங்களது பெற்றோர் முயற்சி எடுத்தார்களா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் அவரது தாயார் என்னை மருமகளாக அடைய முடியவில்லை என்னும் ஏக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்றும் என்னைப் போன்றே ஒரு மருமகள் தமக்கு வேண்டும் என்றும் சொன்னதாக தெரிவித்தார்.
உடனே நான் அவரிடத்தில் உங்கள் தந்தை என்ன சொல்கின்றார் எனக் கேட்டதற்கு அவர் ஒரு திருமணத் தரகர் வந்து பெண்களுடைய ஜாதகங்களைக் கொடுத்தால் உடனே பல ஜாதகங்களை நிராகரித்து திரும்பி கொடுத்து விடுவார்.
முதலாவதாக பையனுக்கும் பெண்ணுக்கும் ஒரே கோத்திரம் எனவே இருவரும் அண்ணன் தங்கை பாச வளையத்தில் வருவார்கள் என்று நிராகரிப்பார். அது சரி தானே என்னுடைய தங்கையின் கணவரும் நீங்களும் ஒரே கோத்திரம் என்பதனை வைத்துக் கொண்டு தானே என்னுடைய தங்கையையும் அவரது கணவரையும் உங்களது தந்தை எது சொன்னாலும் கேட்கும் அளவிற்கு மூளைச் சலவை செய்து மாற்றினார் என்று சொன்னேன்.
அதற்குப் பின்னர் பெண்களுடைய பிறந்த நட்சத்திரங்களை சொல்லி சில பெண்களின் ஜாதகங்களை நிராகரிப்பார்.
விசாகம் நட்சத்திரம் - கொழுந்தனாருக்கு ஆகாது
கேட்டை நட்சத்திரம் - மாமனாருக்கும் மூத்த மைத்துனருக்கும் ஆகாது
மூலம் நட்சத்திரம் - மாமனாருக்கும் மாமியாருக்கும் ஆகாது
ஆயில்யம் நட்சத்திரம் - மாமியாருக்கு ஆகாது
பையனுக்கும் பெண்ணுக்கும் ஏக ராசி ஏக நட்சத்திரம் இருக்கக் கூடாது என்று சில ஜாதகங்களை நிராகரித்து விடுவார். அதே போல பையனுடைய நட்சத்திரத்துக்கும் பெண்ணினுடைய நட்சத்திரத்துக்கும் இடையே 7 இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்வார்.
இவை தவிர செவ்வாய் தோஷம் ராகு தோஷம் கேது தோஷம் கால சர்ப்ப தோஷம் என்றும் களத்திர தோஷம் உள்ளது என்று பல ஜாதகங்களை நிராகரித்து விடுவார்.
எஞ்சியுள்ள ஜாதகங்களில் பொருத்தம் பார்த்து குறைந்தது ஏழுக்கு மேல் பொருத்தங்கள் பொருந்தியிருந்தால் அதன் பின்னர் அந்த மணப் பெண் வீட்டார் பற்றி கேட்டறிவார்.
மணப்பெண் என்ன படித்து இருக்கிறார் என்பது பற்றியோ மணப் பெணணின் தோற்றம் பற்றியோ அல்லது மணப்பெண்ணின் குண நலன்கள் பற்றியோ எதுவும் கேட்க மாட்டார்.
வருகின்ற மணப்பெண் குடும்பத்தார் வசதியானவர்களாக இருக்க வேண்டும். அந்தஸ்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்று அதற்குப் பின்னர் சொல்வார். அந்த சமயத்தில் பெண் வீட்டார் பெண்ணுக்கு அணிவிக்க இருக்கும் நகைகள் மற்றும் சீர் வரிசைகள் கேட்டறிந்து விட்டு நமது அந்தஸ்துக்கு ஏற்ற இடமாக இல்லை என்று நிராகரிப்பார்.
ஒரு திருமணத் தரகர் கொண்டு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜாதகங்களிலிருந்து மூன்று முதல் ஐந்து வரை தேர்ந்தெடுத்து அந்த பெண்களை எனது பெற்றோர்கள் பார்த்து விட்டு வருவார்கள். அந்த சமயத்தில் இந்தப் பெண்ணை மகனுக்குப் பிடிக்காது என்று சொல்லி அவரது தாயார் நிராகரித்து விடுவார்கள் என்று சொன்னார்.
அதுவும் தவிர என்னுடன் பல வருடங்கள் பழகிய அவருக்கு என்னைப் போன்றே அழகான இனிமையான தோற்றம் கொண்ட அவரைக் கவரக் கூடிய அளவில் பெண் கிடைக்க வேண்டும் என்னும் ஆசை நிறைய இருப்பதாகவும் அவருடைய தாயாரும் அவ்வாறே நினைப்பதாகவும் சொன்னார்.
என்னையும் அவரையும் சேர்த்துப் பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் சொத்து சுகத்திற்கும் நகைக்கும் ஆசைப் பட்டு என்னை மணமுடிக்காமல் கைவிட்டு இன்னொருத்தியை மணந்துள்ளதாக தவறாக யாரும் நினைக்கக் கூடாத அளவிற்கு நல்ல குண நலன்களையாவது கொண்ட பெண்ணை தேர்ந்தெடுக்க ஆசைப் படுகின்றார் என்பதனை மட்டும் தெரிந்து கொண்டேன்.
அதன் பின்னர் நானாகவே அவரிடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களா. உங்களை எங்கேனும் பெண் பார்க்க அழைத்துக் கொண்டு சென்றார்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர் போன மாதம் ஊருக்கு சென்றிருந்த சமயம் ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்ததாக தெரிவித்தார். அதற்கு அவர் என்னைப் பார்ப்பதற்கு முன்னரே அந்தப் பெண்ணைத் தெரியும் என்றும் ஆரம்ப காலத்திலேயே திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருந்ததாகவும் தெரிவித்த சமயம் மீண்டும் சிரித்து விட்டேன்.
அவர் சொன்னதை நான் நம்பாமல் சிரிக்கின்றேன் என்பதனை அறிந்து கொண்டு அவர் என்னிடம் நானும் அவரும் முறையே எனக்கு 14 வயது மற்றும் அவருக்கு 17 வயது இருக்கும் சமயம் சந்தித்தோம்.
ஆனால் அவர் பார்த்து விட்டு வந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் குடியிருந்த வீட்டில் அவர் சிறு குழந்தையாக இருக்கும் சமயம் அவருடைய ஐந்தாவது வயதிலேயே அவரது பெற்றோர்கள் ஒன்றாக குடியிருந்து இருக்கின்றார்கள் என்று சொன்னார்.
அவர் பெண் பார்க்கச் சென்றதும் பெண்ணின் தாயார் அவரை கட்டியணைத்து முத்தமிட்டு சிறு வயதிலேயே என் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதை இப்போது மறுக்க மாட்டான் என்று செல்லமாக சொன்னதாக தெரிவித்தார். இதற்குப் பெயர் தான் பொம்மைக் கல்யாணம் என்பார்கள்.
நான் அவரிடம் பெண்ணின் நிறம் உங்களுக்கு பிடித்திருக்கின்றதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் பெண்ணின் நிறத்தைப் பார்த்து ஒதுக்க மாட்டேன் என்று சொன்னதை கேட்டவுடன் என்னை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவருக்கு விவரம் தெரிந்த நாளில் என்னை முதன் முதலாக சந்தித்த போது அவருக்கு பொறுத்தமான வயதுடைய பெண்ணாகவும் அழகானவளாகவும் வசீகரமிக்கவளாகவும் இருந்தது தான் காரணம் என்பதால் அவருக்கு ஏற்ற பெண் என்று தான் என்னைத் தீர்மானித்ததாகவும் நிறமல்ல என்றும் சொன்னார்.
உடனே நான் பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா என்று கேட்டேன். அதற்கு அந்த பெண்ணின் தாயார் என்னுடைய தாயாரைப் போல் உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று சொல்லாமல் கள்ளங்கபடமில்லாமல் இந்த வயதிலும் என்னை கட்டியணைத்து முத்தமிட்ட சமயம் அவர்கள் என்னுடைய சிறு வயதில் என் மீதுஎவ்வளவு பாசமாக இருந்திருப்பார்கள் என்பதனை எண்ணிப் பார்க்கும் சமயம் அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை என்று தெரிவித்தார். பெண்ணுக்கு கண்களின் நிறம் சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் அழகாகத் தான் இருந்தாள். குண நலன்கள் உடனே தெரியாது திருமணத்திற்குப் பின்னர் தான் அவை பற்றி தெரிய வரும் என்று சொன்னார்.
அவர் தந்தை பெண் வீட்டாரிடமிருந்து அதிகமான நகைகள் எதிர் பார்ப்பதால் அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார்.
அவரது பேச்சினை திசை திருப்ப உங்களது பெற்றோர் வாங்கியுள்ள புதிய வீடு பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை பிரசவத்திற்குப் பின்னர் தெரிவிப்பதாக சொல்லியிருந்தீர்கள். இப்போது நேரமாகி விட்டது. அடுத்த முறை வரும் சமயம் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
இது மாதிரியாக அவருடன் நான் மிக மிக சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் கீழே குடியிருக்கும் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் அவரது குரல் கேட்டு என்னுடைய இல்லத்திற்கு வந்தார். அந்த நேரத்தில் குழந்தையை அவரிடமிருந்து நான் பெற்றுக் கொண்டேன்.
திடீரென மேலே வந்த அவரது நண்பர் என்னிடம் என்ன அண்ணி சௌக்கியமா என்று கேட்டார். நான் அவரைப் பார்த்தேன். அப்போது அவர் அவரது நண்பரிடம் நம் இருவருக்கும் இடையே இருந்த காதல் திருமணத்தில் முடியவில்லை எனவும் ஜாதகம் பொருந்தாத காரணத்தால் இருவரும் வாழ்க்கையில் இணைய முடியாமல் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று சொன்ன சமயம் அவரது நண்பர் எங்களின் பிரிவினை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அடுத்த முறை சந்திக்கும் சமயம் நடந்தவற்றை விவரமாக தெரிவிப்பதாக சொல்லி அவரது நண்பரை அனுப்பி வைத்தார்.
எனக்கு உள்ளுர ஒரு பயம். வந்திருக்கும் அவரது நண்பர் நம்முடைய பழைய கால உறவு பற்றி கீழே இருக்கும் குடித்தனக் காரர்களிடம் தெரிவித்து விட்டால் என் நிலைமை மோசமாகி விடுமே என்று நினைத்தேன். நல்ல வேளை அவர் ஒன்றும் சொல்லாமல் பெருந்தன்மையாக மறைத்து விட்டு எதையும் சொல்லாமல் சென்றுள்ளார்.
இருப்பதற்கு முடியாமல் பிரிவதற்கு மனமில்லாமல் சென்று வருகிறேன் என்று உதடுகள் உச்சரித்தாலும் இருவருடைய இதயங்களும் வெளியில் தெரியாமல் அழுது கொண்டு தான் இருக்கின்றன. மீண்டும் சந்திப்போம் கவலைகளை மறப்போம்.