இரட்டிப்பு சந்தோஷம்.
எட்டு மாதங்கள் கழித்து வந்தாலும் என்னுடைய எட்டாம் மாதத்தில் எனக்கு தம்முடைய சம்பளத்திலிருந்து ஒரு சேலை வாங்கி வந்து பரிசளித்து விட்டு மீண்டும் இரண்டு மாதங்களில் என்னைப் பார்க்க வருவதாகக் கூறிச் சென்றது முதல் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. மீண்டும் அவரை இன்னும் இரண்டு மாதங்களில் நான் காணப் போகின்றேன்.
அவரிடத்தில் நான் ஏற்கனவே தெரிவித்தது போல எனக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது. அருகில் இருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத போதிலும் அவரது நினைவு எனக்கு உறுதுணையாக இருக்கின்றது. குழந்தை பிறந்து 16 நாட்கள் ஆகி விட்டது. அவர் குழந்தை பிறப்பதற்கு முன்னரோ அல்லது குழந்தை பிறந்த பின்னரோ வருவதாக என்னிடம் சொல்லிச் சென்றார். அவரை எதிர் பார்த்து என் கண் விழிகள் காத்திருக்கின்றது.
திடீரென முற்பகல் வேளையில் அவரது குரல் எனக்குக் கேட்டது. நான் என் செல்லப் பெண்ணிடத்தில் யார் வந்திருக்கின்றார்கள் பார் எனச் சொன்னேன். உடனே என் செல்லப் பெண் என்னிடத்தில் பாபா வந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே அவரிடத்தில் எனக்கு ஒரு தம்பி பாப்பா விளையாட கிடைத்து விட்டது என மிக்க சந்தோஷமாக சொன்னது.
சற்றும் எதிர்பாராமல் அவரது தாயார் நான் படுத்திருந்த சமயம் திரையினை விலக்கி என் அருகில் வந்து அமர்ந்தார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தேன். உடனே அவர்கள் கஷ்டப்பட வேண்டாமே என்று சொன்னார்கள். நான் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டே அவரைப் பார்த்தேன். அவருக்கு புன்சிரிப்பு.
அவருடைய தாயார் என்னிடத்தில் குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் ஆகின்றது எனக் கேட்டார்கள். இன்று 16-வது நாள் என்று சொன்னேன். அப்படியெனில் பொட்டு வைத்து முடித்து விட்டீர்களா எனக் கேட்டார்கள். நான் இல்லையென்று பதில் சொன்னேன். அவர்கள் ஏன் என வினவியதற்கு கைக் குழந்தையை குளிப்பாட்டும் அளவிற்கு எனக்கு இன்னமும் உடல் நிலை இடம் தரவில்லை எனச் சொன்னேன்.
என் தாயாரைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்கள் மறைந்து விட்டார்கள் எனச் சொன்ன சமயம் மிகவும் வருத்தப் பட்டார்கள். தங்கை வீட்டாரும் இல்லை. தாயும் இல்லை. பிரசவத்தை யார் பார்த்துக் கொண்டார்கள் எனக் கேட்ட சமயம் கீழே குடியிருப்பவர்களும் கணவரும் தான் எனச் சொன்னேன். வேறு உறவினர்கள் யாரும் இல்லையா எனக் கேட்டார்கள். நான் எதுவும் சொல்ல முடியவில்லை.
இந்த நேரத்தில் என் கணவர் வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்து சேர்ந்தார். உடனே அவரது தாயார் என் கணவரிடத்தில் பிறந்த குழந்தைக்கு 11-ம் நாளன்று தீட்டுக் கழித்து குளிப்பாட்டி பொட்டு வைக்க வேண்டும். அந்த சடங்கினை இன்னமும் செய்யவில்லையா எனக் கேட்டார்கள். என் கணவர் முதல் குழந்தைக்கே செய்யவில்லை என பதிலளித்தார்.
உடனே அவரது தாயார் பிறந்த குழந்தையை அப்படியே வைத்து இருக்கக் கூடாது எனவே நானே குளிப்பாட்டி விடுகின்றேன் எனச் சொன்ன சமயம் என் கணவர் ஒன்றும் சொல்லாமல் சரி எனச் சொல்லி விட்டார். உடனே அவரது தாயார் அவரது மகனிடத்தில் என் சார்பாக பிறந்த குழந்தைக்கு ஒரு செட் புத்தாடையினை வாங்கி வருமாறு சொல்லி அவரும் கடைக்குச் சென்று விட்டார்.
அவர் சென்றவுடன் என்னிடத்தில் முதலில் நீ குளித்து முடித்து விடு. அதன் பின்னர் குழந்தையை குளிப்பாட்டலாம் எனச் சொன்னார்கள். எனக்கு வெந்நீர் வைத்துக் கொடுத்தார்கள். நானும் அவ்வாறே முதலில் குளித்து முடித்து விட்டேன். நான் குளித்து முடிப்பதற்குள் குழந்தைக்கு தேவையான வெந்நீரை தயார் செய்து குளிப்பாட்டத் தயாராகி விட்டார்கள்.
கடைக்குச் சென்றவர் குழந்தைக்கு பேபி சோப் பவுடர் கண்மை சூரிய சந்திர உருவங்கள் போல பொட்டு வைக்கும் அச்சு மற்றும் புத்தாடையினை கடையிலிருந்து கொண்டு வந்தார். பிறந்த குழந்தைக்குப் புத்தாடை வாங்கும் சமயம் என் செல்லப் பெண்ணுக்கும் சேர்த்து புத்தாடை வாங்கி வந்திருந்தார். அதனால் அவரது தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதன் பின்னர் அவர்களே அவர்கள் கையால் என் குழந்தையை திறந்த வெளிக்கு கொண்டு சென்று மனைப் பலகை மீது அமர்ந்து கொண்டு சோப்பு போட்டு குளிப்பாட்டி தலைக்கு சாம்பிராணி புகை காட்டினார்கள்.
அதன் பின்னர் குழந்தைக்கு பவுடர் பூசிவிட்டு நெற்றியின் நடுவில் வட்ட வடிவ கண்மை பொட்டும் வலது மற்றும் இடது புறங்களில் கண் புருவங்களுக்கு மேலே சூரிய சந்திர பொட்டுகளும் வைத்தார்கள். குழந்தையின் கன்னத்தில் வட்ட வடிவ திருஷ்டி பொட்டும் வைத்தார்கள். அதன் பின்னர் அவர் கொண்டு வந்திருந்த புத்தாடையினை குழந்தைக்கு அணிவித்தார்கள். அந்தச் சமயம் என்னிடத்தில் நீயும் ஏதேனும் புத்தாடை உடுத்திக் கொள் எனச் சொன்னார்கள்.
நானும் அவர் தீபாவளிக்கு முன்னர் வந்த சமயம் அவர் வாங்கிக் கொடுத்துச் சென்ற அந்த புத்தாடையினை உடுத்திக் கொண்டேன். என்னை சோபாவில் அமர வைத்து குழந்தையை என் கையில் கொடுத்து இருவருக்கும் திருஷ்டி எடுத்தார்கள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சொர்க்கமே என்னைத் தேடி வந்து எனக்குப் பணிவிடை செய்வது போன்ற உணர்வு என்னிடத்தில் இருந்தது.
இவைகள் நடந்து கொண்டிருக்கையில் என் கணவர் இருவரும் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கட்டாயப் படுத்தி அனைவருக்கும் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கி வரச் சென்று விட்டார்.
அவர் சென்ற சமயம் அவரது தாயார் என்னிடத்தில் இரண்டு பேரும் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் ஒரே நேரத்தில் பிரசவம் எனவும் என் மகன் தெரிவித்த காரணத்தால் உன்னைப் பார்த்தே தீரவேண்டும் என வந்தேன். நல்ல வேளை வந்த இடத்தில் எனக்குப் பிறக்க வேண்டிய பேரனுக்கு நானே குளிப்பாட்டி பொட்டு வைத்து என் சார்பில் புத்தாடை வாங்கிக் கொடுத்துள்ளேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது எனச் சொன்னார்கள்.
நான் மெதுவாக தற்போது நான் உடுத்தியுள்ள சேலை கூட உங்கள் மகன் எனக்கு தீபாவளியின் போது வந்த சமயம் வாங்கிக் கொடுத்தது தான் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அப்போது உடுத்தவில்லையா எனக் கேட்டதற்கு இந்த சேலையினை நீங்கள் வரும் சமயம் நான் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று அதனை நீஙகள் பார்த்து ரசிக்க வேண்டும் என கொடுப்பனை இருந்திருக்கின்றது எனச் சொன்னேன்
இது வரையில் அவர் என்னிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பின்னர் தனக்குப் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு தன்னுடைய தாயார் வந்திருப்பதாகவும் தனது பெண் குழந்தைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதே சடங்கினை செய்து முடித்ததாகவும் தெரிவித்தார். அது சமயம் அவரது தாயார் அடுத்த நாள் ஊருக்குச் செல்லப் போவதாகவும் அவர் இன்றே ஊருக்கு திரும்பி விடப் போவதாகவும் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் நான் அவரது தாயாரிடத்தில் அவரை பொங்கலுக்கு வரும் ச்மயம் இங்கு வரச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவர் அறிநது கொண்டார்.
நான் அவருடைய தாயாரிடத்தில் உங்கள் வீட்டிற்கு நான் வர வேண்டியது. ஆனால் இறைவன் என்னை உங்கள் வீட்டிற்கு வர விடாமல் தடுத்து விட்டான் எனச் சொன்னதற்கு உனது தாயார் மற்றும் எனது கணவர் செய்த தவறுக்கு இறைவனை பழிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். அதன் பின்னர் நீ எங்கு வாழ்க்கைப் பட்டாலும் என்னுடைய மருமகள் தான் என்பதனை மனதில் வைத்துக் கொள் எனச் சொன்னது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
அதற்குள் என் கணவர் ஹோட்டலிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து விட்டார். யாரும் யாருக்கும் பரிமாறாமல் ஒரே டேபிளில் அமர்ந்து கொண்டு அவரவர்களே பரிமாறிக் கொண்டு விருந்தினை முடித்தோம்.
என்னைப் பார்க்க அவரும் அவரது தாயாரும் சேர்ந்து வந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஒரே வருகையில் தமது சொந்த மருமகளின் குழந்தைக்கும் நானே மருமகளாக வரவேண்டும் என அவரது தாயார் நினைத்த எனது குழந்தைக்கும் பொட்டு வைத்து விட்டதில் அவரது தாயருக்கு இரட்டிப்பு சந்தோஷம். அவருக்கும் எனக்கும் ஒரே மாதத்தில் குழந்தைகள் பிறந்ததில் நம் இருவருக்கும் இரட்டிப்பு சந்தோஷம். இதனை நாம் மூவரும் நமது கடைசி மூச்சு நிற்கும் வரை மறக்கவே முடியாது.
இருவரும் என்னிடத்தில் சென்று வருகின்றோம் எனச் சொன்ன சமயம் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சோகமும் ஆனந்தமும் கலந்த இரட்டைக் கண்ணீர். நமக்கு கிடைத்த இது போன்ற பாக்கியம் உலகில் வேறு எவருக்கும் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது.