கோவில்களும் ஆலயங்களும் பள்ளிவாசல்களும் வழிபாட்டுத் தலங்களும்
அவர் என்னிடத்தில் நாளை மீண்டும் வருகின்றேன் எனச் சொன்ன சமயம் எனக்கு எல்லையில்லாத ஆனந்தம். அவரிடத்தில் சொன்னபடி இரவு நிம்மதியான தூக்கம். வழக்கம் போல் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் நீண்ட நேரம் கழித்து தான் கண் விழித்தேன்.
அச்சமயம் எனது இரண்டாவது மகன் வேலைக்கு சென்று விட்டான். என் முதல் மகனும் மருமகளும் தாம் கட்டிக் கொண்டிருக்கும் புதிய விடு எந்த நிலையில் இருக்கின்றது என்பதனைக் கண்டு வருவதற்கு தயாராக இருந்தார்கள். என்னிடத்தில் மதியத்திற்கு ஹோட்டலிலிருந்து ஏதேனும் உணவு ஆர்டர் செய்வதாகச் சொன்னதற்கு நான் மறுத்து விட்டு நானே சமைத்து உண்ணுகின்றேன் எனவும் ஆர்டர் எதுவும் கொடுத்து விட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டேன். அவர்களும் சரியென்று சொல்லி விட்டுப் புறப்பட்டனர்.
கடிகாரத்தைப் பார்த்தேன் மணி காலை பத்து. அவசர அவசரமாக எழுந்து பல் துலக்கி விட்டு குளித்து விட்டு அவர் ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த மஞ்சள் நிற புடவை மற்றும் அதே நிறத்தில் ரவிக்கை அணிந்து கொண்டு டிபன் சாப்பிட்டு முடித்தேன். அவர் வருவதற்குள் சமைத்து முடித்து விட வேண்டும் என்பதன் காரணமாக சமையலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
அந்த நேரத்தில் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். நான் முதலில் அவரிடத்தில் நேற்று கோயில்களில் உள்ள தூண்களைப் பற்றி என்னிடம் விவரமாக எடுத்துச் சொன்னதன் காரணமாகவோ அல்லது நாம் இருவரும் சேர்ந்து நீண்ட நேரம் பேசியதாலோ என்னமோ எனக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் நிம்மதியாக தூக்கம் வந்தது. இதுவரையில் இல்லாத அதிசயமாக காலையில் பத்து மணிக்குத் தான் படுக்கையிலிருந்து கண் விழித்தேன் எனச் சொன்னேன்.
அதன் பின்னர் அவரிடத்தில் மதிய உணவு என் கையால் இன்று இங்கு தான் எனச் சொல்லி அவருக்கு ஒரு டம்ளர் காபி கொடுத்து விட்டு அவரிடத்தில் மீண்டும் பேச ஆரம்பித்தேன். அச்சமயம் நானாகவே இன்றும் கூட நம் இருவரது வாழ்க்கையினைப் பற்றியோ அல்லது நமது பழைய கால சோகங்களைப் பற்றியோ பேசாமல் நேற்று பேசியது போல ஏதேனும் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். என் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு அவர் என்னிடத்தில் அதே மாதிரியான ஒரு பொருள் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரையில் நான் எதுவும் பேசவில்லை. நான் பேசுவதற்கு அவர் எந்த விதமான இடைவெளியும் கொடுக்கவில்லை.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். தமிழில் இந்த வாசகம் சொல்லப் பட்ட காரணத்தால் தமிழ் நாட்டில் கோவில் என்றால் தெய்வத்தை அனைவருமாகச் சேர்ந்து வழிபடுகின்ற இடம் என்னும் காரணத்தால் சொல்லப்பட்டது.
ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் வழி படுகின்ற இடம் கோயில் எனப்படுகின்றது. கிருஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் வழி படுகின்ற இடம் ஆலயம் அல்லது தேவாலாயம் எனப் படுகின்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வழி படுகின்ற இடம் பள்ளிவாசல் என சொல்லப் படுகின்றது. பள்ளி என்றால் கல்வி கற்பிக்கும் இடம் எனவும் வாசல் என்றால் பள்ளிக்குள் செல்லுகின்ற வாயிற் படி எனவும் சிறிய குழந்தைகள் தவறுதலாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பள்ளிவாசல் என்பதனை மசூதி என்றழைத்தார்கள்.
தாகம் தீர்க்கும் தண்ணீர் குளத்திலிருந்து கிடைத்தாலும் சரி. அருவியிலிருந்து கிடைத்தாலும் சரி. நீரூற்றிலிருந்து கிடைத்தாலும் சரி. மழை நீராக இருந்தாலும் சரி அனைத்தும் தண்ணீர் தான். எனவே அனைத்து மதத்தினரும் வழிபடுகின்ற இடங்களை ஒரே பெயரில் பொதுவாக வழிபாட்டுத் தலங்கள் என்று அழைக்கின்றோம்.
மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் நாம் பிறப்பதற்கு நம்மை கருவில் பத்து மாதங்கள் சுமந்து ஈன்றெடுத்தவர் நமது தாயார். அவர் நமக்கு முதல் கடவுள். அதற்கு அடுத்த படியாக நல்லவை எது கெட்டவை எது என நம்மை வழி நடத்துவதற்குக் காரணமாக இருந்து அத்தனை சுமைகளையும் தமது உழைப்பின் மூலம் சாதித்தவர் நமது தந்தை அவர் இரண்டாவது கடவுள். நாம் வாழ் நாழ் முழுவதும் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி விளையாட்டு தொழில் வாணிபம் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பவர் குரு. அவர் மூன்றாவது கடவுள். அனைத்தும் முடிந்த பின்னர் நம்மை நமது உடலிலிருந்து உயிர் பிரியும் வரையில் காத்து ரட்சித்து பராமரித்து நேர் வழியில் நாமும் நமது சந்ததியினரும் நடக்க உறுதுணையாக இருந்து காப்பவர் தான் தெய்வம். அந்த தெய்வம் எந்த உருவத்தில் இருந்தாலும் சரி அல்லது அருவத்தில் இருந்தாலும் சரி. நாம் மனதில் நினைத்து வழிபடுகின்ற அனைத்தும் அணுவிலிருந்து அண்டசராசரம் வரை தெய்வம் தான்.
கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த நாளான கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் வீட்டில் குடில் அமைத்து தமது குழந்தைகள் மற்றும் வாரிசுகள் மற்றும் சொந்தங்களுடன் கூட்டு பிரார்த்தனை மேற்கொள்வார்கள். குறிப்பிட்ட நாட்களில் தேவாலயங்களுக்குச் சென்று கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்வார்கள். இயேசு நாதர் பிறந்த நாளையும் புத்தாண்டு பிறப்பதையும் உலகம் முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள்.
இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுகையினை மெக்கா மதினா அமைந்துள்ள திசை நோக்கி வணங்கி நடத்துவார்கள். உருவ வழிபாடுகள் இல்லை என்றாலும் தமது கடமைகளை எந்த இடத்திலும் இருந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ரமலான் நோன்பினை ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து ஈகையினை நிறைவேற்றி ஹஜ் என்னும் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள்.
ஹிந்துக்கள் தமது தெய்வங்களை வீட்டிலிருந்த படியே வழிபடுவார்கள். ஹிந்துக்களுக்கு உருவ வழிபாடு உண்டு என்பதன் காரணமாக சைவம் வைணவம் என இரண்டு வகையான கோயில்களை உருவாக்கி கோயில்களுக்குச் சென்று வருவார்கள்.
சிவன் கோவில், பெருமாள் கோவில், ராமன் கோவில், முருகன் கோவில், அனுமன் கோவில், மாரியம்மன் கோவில், கருப்பணசாமி கோவில், முனீஸ்வரன் கோவில், நவக்கிரங்கள் கோவில் என பலப்பல பெயர்களில் கோவில்களை உருவாக்கி அவரவர்களுக்கு இஷ்டப்பட்ட கோவில்களுக்குச் சென்று வழிபடுவார்கள்.
அதே போல வீட்டிலும் சாமி மாடம் என்று ஒன்றினை உருவாக்கி அதில் அவரவர்கள் வழிபடும் உருவங்களையோ அல்லது படங்களையோ வைத்து தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை செய்வார்கள்.
பணம் படைத்தவர்கள் கடவுளை வழிபடுவதற்கென்று பூஜை அறையினை தனியாக அமைத்து அதில் அனைத்து கடவுள் படங்கள் அல்லது சிலைகளை வைத்து பூஜை செய்வார்கள்.
இவை தவிர ஹோமங்கள் யாகங்கள் ஆகியவற்றையும் சில சமயங்களில் வேத விற்பன்னர்கள் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனையின் படி வீட்டில் மேற்கொள்வார்கள். குறிப்பிட்ட நாட்களில் உண்ணா நோன்பு விரதம் அல்லது அசைவம் உண்ணாமல் இருத்தல் போன்றவைகளை கடைப் பிடிப்பார்கள்.
அனைவருக்கும் பொதுவான கோவில் என்றால் அது விநாயகர் கோவில் தான். எந்த விதமான வினையாக இருந்தாலும் விநாயகர் தீர்த்து வைப்பார் என்னும் நம்பிக்கையுடன் அனைவரும் விநாயகரை வழி படுவார்கள்.
ஒரு வீடு ஒரு தெருவிற்கு நேர் எதிரே அமைந்து விட்டால் அந்த வீடு தெருக்குத்து உள்ள வீடு எனச் சொல்லி ஒரு விநாயகர் விக்ரஹத்தையோ அல்லது விநாயகர் படத்தையோ அந்த வீட்டின் முன் பக்கத்தில் அனைவர் கண்ணிலும் தெரியுமாறு வைப்பார்கள். அதனால் தெருக்குத்து என்னும் குறை நிவர்த்தியாகி விடும்.
வியாபார இடங்களின் அமைப்பு நுழைவு வாயில் அமைந்துள்ள பக்கம் குறுகலாகவும் உள் பக்கம் விசாலமாகவும் இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகாது. வியாபாரம் பெருகும். அதன் மூலம் லாபம் அதிகம் கிடைக்கும் என்னும் காரணத்தால் அந்த வியாபார இடத்தின் வாசல் அமைந்துள்ள பகுதியில் ஈசான்ய மூலையிலோ அல்லது கன்னி மூலையிலோ விநாயகர் விக்ரஹம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டு வருவது போல வடிவமைப்பார்கள்.
காலையிலும் மாலையிலும் பூஜைகள் நடைபெறும் சமயம் மாத்திரம் அதன் கதவுகளை திறந்து வைத்து மற்ற நேரங்களில் அதன் கதவுகளை அடைத்து வைத்து விடுவார்கள். வியாபார இடத்திற்கு வருகின்ற வாடிக்கையாளர் தமது கால்களில் காலனிகளுடன் உள்ளே வரலாம் என்பதனைக் கருத்தில் கொண்டு கதவுகளை மூடி வைப்பார்கள்.
அதே போல் பல தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் தொழிற்சாலையின் பிரம்ம ஸ்தானம் என்று சொல்லப்படுகின்ற மையப் பகுதியிலோ அல்லது நுழைவு வாயிலிலோ சற்று பெரிய அளவில் கோவில் கட்டுவார்கள். அதனால் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு முன்னர் கடவுளை வழிபட்டு விட்டுச் செல்வதன் காரணமாக விபத்துக்கள் இல்லாமல் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவார்கள்.
தொழிற்சாலைகளின் முன்புறத்தில் பாது காப்பாளர் அறை மற்றும் மின்சாரத்திற்கான இணைப்பு உள்ள இடத்தில் ஜெனரேட்டர் அறை அமைந்திருக்கும். அதன் காரணமாக முன்பக்கும் குறுகலாகவும் பின்பக்கம் விசாலமானதாகவும் தொழிற்சாலை அமையும். எனவே அந்த தொழிற்சாலையில் உற்பத்தி பெருகி மேன் மேலும் விருத்தி அடையும்.
செல்வந்தர்கள் தமது வீடுகளில் சொந்தமாக ஒரு கோவிலை வீட்டின் நுழைவு வாயிலில் அமைத்துக் கொள்வார்கள். வீட்டின் வாயில் மேற்கு திசை நோக்கியிருந்தால் விக்ரஹத்தை வடக்கு திசை நோக்கியும் வீட்டின் வாயில் தெற்கு திசை நோக்கியிருந்தால் விக்ரஹத்தை கிழக்கு கோக்கியும் கன்னிமூலையில் பிரதிஷ்டை செய்வார்கள். அதன் மூலம் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லும் சமயம் வழிபட்டு விட்டுச் செல்ல முடியும் அதே போல வீட்டிற்குத் திரும்பி வரும் சமயம் பாதுகாப்பாக வந்து வணங்கி விட்டு உள்ளே செல்ல முடியும்.
அதே போல வீட்டின் வாயில் வடக்கு திசை நோக்கியிருந்தால் விக்ரஹத்தை மேற்கு திசை நோக்கியும் வீட்டின் வாயில் கிழக்கு திசை நோக்கியிருந்தால் விக்ரஹத்தை கிழக்கு கோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ ஈசான்ய மூலையில் பிரதிஷ்டை செய்வார்கள். முக்கியமான வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள தொகுப்பு வீடுகளில் விநாயகர் விக்ரஹத்தை ஈசான்ய மூலையில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தால் வாகனங்களை நிறுத்தி விட்டு வந்து நின்று வழிபட்டுச் செல்ல வேண்டும். அதன் மூலம் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லும் சமயம் வழிபட்டு விட்டுச் செல்ல முடியும் அதே போல வீட்டிற்குத் திரும்பி வரும் சமயம் பாதுகாப்பாக வந்து வணங்கி விட்டு உள்ளே செல்லலாம்.
எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் சரி வியாபார இடமாக இருந்தாலும் சரி தொழிற்சாலையாக இருந்தாலும் சரி லாப நோக்குடன் விநாயகரை தெற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்ய மாட்டார்கள்.
சமீப காலமாக உருவாகி வருகின்ற அடுக்கு மாடி குடியிருப்புகள் அபார்ட்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற தொகுதி வீடுகள் உள்ள இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதன் காரணமாக ஒரு கோவிலை சிறிய அளவில் நிர்மாணிக்கின்றார்கள்.
அவ்வாறு நிறைய வீடுகளை ஒரே இடத்தில் கட்டிக் கொடுக்கும் சமயம் அந்த இடத்தின் உரிமையாளரோ அல்லது அந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தக் காரரோ கோயிலை தாமாக முன் வந்து கட்டிக் கொடுப்பதில்லை. இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியினை இந்த இந்த பயன் பாட்டுக்காக என்று ஒதுக்கி விடுவார்கள்.
அந்த இடங்களில் பிற்காலத்தில் வீடுகளை சொந்தமாக வாங்குகின்ற வீடுகளின் உரிமையாளர்களோ அல்லது வீடுகளில் வாடகைக்கு குடியிருக்க வரும் வாடகை தாரர்களோ தான் கோவில் கட்டுவதற்கு முயற்சி எடுத்து அந்த காரியத்தை செய்து முடிப்பார்கள்.
கோயிலை கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும் அர்ச்சகர்களையோ அல்லது குருக்களையோ அழைக்காமல் கோவில் கட்டுகின்ற ஆகம சாஸ்திர விதிகள் தெரிந்தவர்களை அழைத்து எந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் அந்த கோயில் எப்படிக் கட்ட வேண்டும் எனக் கலந்தாலோசித்து அதன் படி செயல் படுவார்கள். கோவில் கட்டப்படப் போகின்ற இடங்களில் ஏதேனும் விருட்சங்கள் இருந்தால் அந்த விருட்சங்களை அதாவது மரங்களை ஆகம சாஸ்திரம் தெரிந்தவர்களிடத்தில் கலந்தாலோசித்து அவை தேவைப்படவில்லை எனில் அகற்றுவார்கள்.
அவ்வாறான இடங்களில் கோவில் கட்டப்படும் சமயம் அனைவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே அனைவருக்கும் தெரியப் படுத்தி விட வேண்டும். கோவில் எந்த விக்ரஹத்திற்காக கட்டப் படுகின்றதோ அந்த விக்ரஹத்தின் மீது பக்தியுடையவர் அந்த இடத்தில் ஏழையாகவோ அல்லது பணக்காரனாகவோ இருக்கலாம்.
சிவன் தமது கோயிலுக்கு உள்ளே வந்து தரிசிக்க முடியாதவருக்கு நந்தியை விலகச் செய்து காட்சி கொடுத்த தலங்களும் உண்டு. பக்தனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கடவுளுக்கே கால் வலிக்கும் என ஒரு பக்தன் சொன்ன காரணத்தால் கால் மாற்றி நடனமாடிய நடராஜர் விக்ரஹமும் உண்டு.
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. அகத்தியர் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வட திசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கோவில் கட்ட முயல்பவர்கள் செயல்பட வேண்டும்.
ஆகம சாஸ்திர விதிகளின் படி கோவில்கள் கட்டப்பட்ட பின்னர் சிவாசாரியார்கள் என்று சொல்லப்படுகின்ற வேத மந்திர விற்பன்னர்களை வரவழைத்து கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படப் போகின்ற விக்ரஹங்களை முதலில் பூஜை செய்து அதன் பின்னர் அதனை தீர்த்தத்திலும் அதன் பின்னர் நெல் மற்றும் நவ தானியத்திலும் அதன் பின்னர் சொர்ணம் அதாவது காசு பணம் ஆகியவற்றிலும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வைத்திருந்து பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்து பிரதிஷ்டை செய்வார்கள்.
விக்ரஹம் பிரதிஷ்டை செய்யும் சமயம் பிரதிஷ்டை செய்யப் படுகின்ற விக்ரஹங்களுக்குக் கீழ் அந்த விக்ரஹத்திற்கு உண்டான சக்கரம் மற்றும் பஞ்சலோகம் மற்றும் நவரத்தினங்கள் மற்றும் அந்த சமயத்தில் அங்கு குழுமியிருக்கும் பக்தர்களிடமிருந்து பெறப்படுகின்ற நாணங்கள் ஆகியவற்றை அடியில் வைத்து மந்திரங்கள் சொல்லி முடித்த பின்னர் விகரஹங்களை வைத்து மருந்து என்று சொல்லப் படுகின்ற கலவையை பூசுவார்கள்.
அந்த விக்ரஹங்களுக்கு மேல் விமானம் அல்லது கோபுரம் அமைக்கப் பட்டிருந்தால் அந்த கோபுரங்களில் மேல் உள்ள கலசங்களில் நவ தானிங்கள் குறிப்பாக இடி தாங்கும் சக்தி கொண்ட வரகு மற்றும் அந்த நேரத்தில் அங்கு குழுமியுள்ள பக்தர்களிடமிருந்து பெறப்படுகின்ற நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கோபுர கலசத்தினை கருங்காலிக் கட்டையினால் ஆன குச்சியில் சொருகி அதனை கோபுத்தில் பொறுத்துவார்கள். அதன் பின்னர் கோபுரத்திற்கும் கோபுரத்திற்குக் கீழே குடிகொண்டுள்ள விக்ரஹத்திற்கும் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து கும்பாபிஷேக தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிப்பார்கள். விக்ரஹத்திற்கு கண் திறப்பு வைபவமும் நடைபெறும்.
கட்டப்படுகின்ற கோவிலிலிருந்து நேர் எதிரே எந்த வீடுகளும் அமையக் கூடாது. வீடுகளின் உயரத்தை விட கட்டப்படுகின்ற கோவில்களின் கோபுரத்தின் உயரம் அதிகமாக இருக்கக் கூடாது. அதே போல பிரதிஷ்டை செய்யப் படுகின்ற விக்ரஹத்தின் தொப்புள் வழிபடுவோரது தொப்புளைக் காட்டிலும் அதிக உயரத்தில் இருக்க வேண்டும். விக்ரஹத்தின் தொப்புளை விட அதிக உயரத்தில் அந்த விக்ரஹத்தைச் சுற்றியுள்ள இடங்களில் யாரும் அமரக் கூடாது.
நம்மிடத்தில் உள்ள பணத்தை தான தருமங்கள் செய்து கொண்டே இருந்தால் நாம் விரைவில் அனைத்தையும் இழந்து விடுவோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல கோவிலில் உள்ள விக்ரஹங்கள் வழிபடுவோருக்கு எல்லாம் நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டே இருந்தால் அதன் சக்தி குறைந்து விடும். எனவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புனருத்தாரணம் அல்லது குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம் என கோவிலை புதுப்பித்து உள்ளே உள்ள விக்ரஹத்தின் சக்தியினை மேலும் அதிகரிப்பார்கள். அவ்வாறு செய்யும் சமயம் கருடன் வானில் வட்டமிட்டு ஆசீர்வதிப்பார்.
கோவில் கட்டுவதென தீர்மானித்து அதற்கான விக்ரஹங்களை வாங்க சிற்பிகளிடத்தில் செல்லும் சமயம் அந்த சிற்பி அந்த விக்ரஹம் செதுக்கப்படுவதற்கு முன்னர் கருங்கல்லாக இருந்த காரணத்தால் உளி மற்றும் இதர ஆயுதங்களால் அடித்து சிலைகளை உருவாக்கி இருப்பார். அவருக்கு சிலை வடிப்பது தான் வேலை அதனை அனைவராலும் செய்ய முடியாது. இருந்தாலும் சிலை வடிக்கும் சமயம் அந்த சிலை கல்லாக இருக்கும் சமயம் ஏறி அமர்ந்து மிதித்து செதுக்கிய பாவம் தன்னை தொற்றிக் கொள்ளக் கூடாது எனக் கருதி சுத்தி பூஜை செய்து கொடுப்பார். அதன் பின்னர் கண் திறப்பு என்பதனை அனைவர் முன்னாலும் யாகங்கள் முடிந்த பின்னர் நடத்துதல் வேண்டும்.
ஒரு சிலையினை பிரதிஷ்டை செய்து விட்டு முதலாவது வழிபாடு செய்து முடித்த பின்னர் அந்த சிலையினை அகற்ற வேண்டும் என்றால் பாலாலயம் என்னும் யாகம் செய்து அதன் பின்னர் அதே விக்ரஹத்தின் உருவத்தினை ஓவியமாக வரைந்து அந்த ஓவியத்திற்கு ஒரு மண்டலம் விடாமல் பூஜை புனஸ்காரங்கள் செய்த பின்னர் தான் அந்த இடத்தில் மறு முறை பிரதிஷ்டை செய்ய முடியும். இவ்வாறு தான் கோவில்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. நாம் நமது விருப்பு வெறுப்புகளின் படி எதனையும் செய்வது என்பது இயலாத காரியம். அது தெய்வக் குற்றமாக மாறி விடும்.
அதே போல தமது போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் மூலம் மக்கள் அனைவரையும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஆன்மீகத்தில் மேன்மை அடையச் செய்பவர்கள் குருமார்கள் அல்லது மகான்கள் என ஹிந்துக்களால் போற்றப்படுகின்றனர். அவர்கள் ஜீவசமாதி அடைந்தாலோ அல்லது இயற்கையாக இறைவனிடம் சேர்ந்தாலோ அந்த இடங்களுக்கு அவர்களின் பெயரில் முக்தி ஸ்தலம் என்று உருவாக்கப் பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இஸ்லாமியர்கள் அவ்வாறான இடங்களை தர்ஹா என்றழைக்கின்றார்கள். இவ்வாறான இடங்களுக்குச் சென்று வருவதால் மக்களோடு மக்களாக வாழ்ந்த சமயம் தாம் பட்ட இன்னல்கள் தம்மை நாடி வருவோருக்கு வரக் கூடாது என அவர்களின் ஆன்மா ஆசீர்வதிக்கும்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அடுப்பங்கரையில் சமையல் முடிந்து விட்ட காரணத்தால் நான் குறுக்கிட்டு இப்போது என் கையால் சாப்பாடு அதன் பின்னர் மற்றவை எனச் சொன்னேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார். இருவரும் மதிய உணவினை மிக மிகச் சந்தோஷமாக உண்டு முடித்த பின்னர் சிறிது நேரம் எனது உடல் நலம் பற்றியும் மகள் மற்றும் பேத்தி வருகை பற்றியும் பேசினோம்.
அதன் பின்னர் அவர் என்னிடத்தில் விடைபெறும் சமயம் நானாகவே நேற்று சொன்னது போல நாளை வருகின்றேன் எனச் சொல்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் நாளை ஊருக்கு திரும்பி விடுவேன் எனச் சொன்ன சமயம் எனக்கு சஞ்சலமாக இருந்தது. முதல் நாள் எவ்வளவு நிம்மதியாக தூங்க முடிந்ததோ அந்த அளவிற்கு மறுநாள் தூங்க முடியவில்லை. இவ்வாறான தூக்கமின்மை எனக்கு வழக்கமாகி விட்டது.