புராதனக் கோவில்களில் உள்ள தூண்களின் மகிமை
குழந்தை அழுகின்றது என்றால் குச்சி மிட்டாய் கொடுத்து சமாதானப் படுத்தி சிரிக்க வைத்து விடலாம். ஆனால் தமக்குப் பிறந்த குழந்தைகளுக்குக் குழந்தை பிறக்கும் வயதில் உள்ள பெரியவர்களின் அழுகையினை அதாவது சோகத்தினை அவ்வாறு சமாதானப் படுத்தி நிறுத்துவது என்பது இயலாத காரியம். நம் இருவருக்கும் அதே போன்ற நிலை.
எனக்கு சுமைக்கு மேல் சுமையாக தாங்க முடியாத சுமைகள் ஏறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவருக்கு ஓய்வு பெறும் வயது வரை முழுவதும் உழைத்து கஷ்டப்பட்டு சுமைகளை இறக்கி வைத்து விட்டு நிம்மதியாக ஓய்வு எடுக்க வேண்டிய தருவாயில் மிண்டும் புதியதொரு வாழ்க்கையினை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படுவது என்பது எதிர்பாராத நிகழ்வு.
அவரிடத்தில் உழைப்பும் சுறுசுறுப்பும் திறமையும் இருந்தும் கூட அவருக்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் மரியாதையின் காரணமாக அவரால் அதனை சட்டப்படி பயன் படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார். அவர் வகித்து வந்த பதவியில் செய்த பணிகளின் அனுபவத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சேவையாக செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது. ஆனால் அதற்கு அவர் ஓய்வு பெற்றதிலிருந்து இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனச் சொன்னார். எனக்கு சற்று வருத்தமாக இருந்தது.
அவருடைய மனக் கஷ்டங்களிலிருந்து ஆறுதல் சொல்வதற்கு நான் ஒரு கோவிலுக்கு முன்னர் அமைந்துள்ள மூன்றாவது படிக்கட்டில் அமர்ந்து வேண்டிக் கொண்ட பின்னர் அவரைச் சந்தித்து வந்தேன். நான் அவ்வாறு சந்திக்கும் சமயம் அவரது பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே கலந்துரையாடி விட்டு என்னுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேச விரைவில் என்னைக் காண எனது இல்லத்திற்கு வருமாறு அழைத்து விட்டு வந்தேன்.
எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் நான் அழைத்து விட்டு வந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் வருகை தந்தார். எனக்கு மிக மிக சந்தோஷம். அவர் என் இல்லத்திற்கு வந்த சமயம் வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவருக்கு மிகவும் சந்தோஷமாக அவர் விரும்பி உண்ணுகின்ற சிறப்பு உணவு தயார் செய்து அன்புடன் பரிமாறினேன் வழக்கம் போல. எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எனது இல்லத்தில் ஏற்பட்டுள்ள பணக்கஷ்டம் தொடர்பாகவும் முதல் மகன் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் செல்லப் போவது பற்றியும் அவரிடத்தில் தெரிவித்தேன். அதன் பின்னர் எனது இரண்டாவது மகனின் திருமணம் தள்ளிக் கொண்டே போவது பற்றி அவரிடத்தில் தெரிவித்து அவரது ஆலோசனைகளை மிக மிக கவனமாக கேட்டுக் கொண்டேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தவருக்கு கடவுள் இருக்கும் கோயில் தொடர்பான கட்டுமானம் பற்றிய அனைத்தும் தெரிய வந்திருப்பது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
எனது இரண்டாவது மகனின் திருமணம் நடப்பதில் காலதாமதம் ஆகிக் கொண்டே இருக்கின்றது என கேட்டேன். அதற்கு அவர் திருப்பதி சென்று திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாளை வழிபட்ட பின்னர் கோபுர ஸ்ரீனிவாசப் பெருமாளிடத்தில் கோரிக்கை வைக்குமாறு அறிவுறுத்தினார். அதே போல வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருக்கலாம் எனவும் அந்த குறைபாட்டினை நீக்க திருமலையில் பெருமாருக்கு இடது புறத்தில் உள்ள யோக நரசிம்மர் சன்னதிக்கு வலது புறத்தில் உள்ள ஒரு தூணை குறைந்தது 9 முதல் 21 முறை சுற்றி வருமாறும் அறிவுரை வழங்கினார்.
நான் காரணம் கேட்ட சமயம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாவதற்கு அஸ்திவார பூஜைகள் அங்கு தான் நடை பெற்றதாகவும் அதன் பின்னர் தான் திருமலையில் கோயில் கட்டப் பட்டதாகவும் தெரிவித்தார். அவர் சொன்னவாறு செய்து முடித்து விட்டால் எனது இரண்டாவது மகனுக்கு திருமணம் நடந்தேறி விடும் எனவும் எனது கடமைகள் யாவும் முடிந்து விடும் எனவும் எண்ணி மகிழ்ந்தேன்.
அவர் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியாக கோயில்களின் கட்டுமானம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
தற்போது உள்ளது போல பொறியியல் படித்த பட்டதாரிகள் பழங்காலத்தில் கிடையாது. பொறியியல் தகவல்களும் யாருக்கும் தெரியாது.
ஒரு கோயிலின் பிரம்ம ஸ்தானம் என்னும் நடுப் பகுதியில் முக்கியமான தெய்வத்தின் விக்ரஹம் அமைக்கப்பட வேண்டும். ஒரே ஒரு தெய்வம் என்றால் அந்தக் கோயிலின் மையப் பகுதியில் சதுரமாக கர்ப்பக் கிரஹம் அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் அதாவது சிவன் பார்வதி அல்லது பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அல்லது முருகன் வள்ளி தெய்வயானை என இருந்தால் முக்கியமான விக்ரஹத்தை நடுவிலும் அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த விக்ரஹத்தை ஒன்றாகவோ அல்லது தனித் தனியாகவோ பக்க வாட்டிலும் அமைக்கலாம்.
அவ்வாறு கட்டப்படுகின்ற கர்ப்பக் கிரஹத்தின் உட்புறம் 8 அடிக்கு 8 அடி அல்லது 6 அடிக்கு 6 அடி என்னும் சதுர வடிவில் இருந்தால் அந்தக் காப்பக்கிரஹத்தில் உள்ள கடவுள் விக்ரஹத்தை வழிபடுவோர் கடவுளிடமிருந்து பரிபூரணமாக நல்லாசி பெறுவார்கள். அந்த கர்ப்பக்கிரஹத்தை சுற்றி வருவதற்கு தடங்கல் இல்லாத ஒரே சமதளமாக ஒரே அளவிலான இடைவெளி அதாவது குறைந்தது இரண்டு அடி சுற்றளவு கொண்ட பிரகாரம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு பக்கம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கட்டாயம் இருக்கக் கூடாது. அவ்வாறு அந்த விக்ரஹத்தை சுற்றி வரும் சமயம் ஏற்ற இறக்கங்கள் எக்காரணம் கொண்டும் அமையக் கூடாது.
விக்ரஹத்தை வழிபடுவோர் விக்ரஹத்தின் இரண்டு பக்கங்களிலும் விக்ரஹத்திற்கு நேர் எதிரே சன்னதி விட்டு வழிபட ஏதுவாக இரண்டு புறங்களிலும் போதுமான இட வசதி இருக்க வேண்டும். மூல விக்ரஹத்தை வழிபடுவோரது பாதங்களுக்கு அடியில் மூடப் பட்ட கிணறு அல்லது நீர்த் தொட்டி அல்லது மூடப்பட்ட பள்ளங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அந்த விக்ரஹத்தை வழிபடுவோரது கோரிக்கை கடவுள் விக்ரஹம் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் அந்த விக்ரஹத்தை வழிபடும் பக்தர்கள் ஏற்றம் இல்லாமல் அதாவது வாழ்க்கையில் வழிபாடு நடத்தியும் கூட முன்னேற முடியாமல் இருப்பார்கள்.
ஒரு கடவுள் விக்ரஹத்திற்கு தீர்த்தம் பால் பன்னீர் சந்தனம் விபூதி இளநீர் என பலப்பல அபிஷேகங்கள் செய்து முடித்த பின்னர் ஊதுபத்தி சாம்பிராணி சூடம் ஆகியவைகளால் ஆராதனை செய்து முடித்த பின்னர் நறுமணம் தான் அந்த இடத்தில் இருக்க வேண்டுமே தவிர துர்நாற்றம் வீசக் கூடாது. அவ்வாறு துர்நாற்றம் இருக்கக் கூடிய இடத்தில் எந்த விதமான கோயில் அமைந்தாலும் அவ்வாறான கோயில்கள் அமைப்பதனால் எந்தப் பயனும் இல்லை.
கர்ப்பக் கிரஹத்திலுள்ள கடவுள் விக்ரஹத்திற்கு முன்னரும் பின்னரும் சம அளவு இடைவெளி சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கட்டப்படுகின்ற கோயில்கள் வழிபடுவோருக்கு தகுந்த பலன்களைக் கொடுக்காது. முக்கியமாக கர்ப்பக் கிரஹத்திற்கு நேர் எதிரில் யாக சாலை அல்லது ஹோம குண்டம் தவிர வெப்பத்தை உண்டு பண்ணக்கூடிய அல்லது வெடிக்கக் கூடிய எந்த பொருட்களோ அல்லது கட்டுமானங்களோ கட்டாயம் இருக்கக் கூடாது.
பழங்காலத்தில் தற்போதுள்ள கம்பி கட்டி கான்கிரீட் போடும் முறை கிடையாது. செங்கல் கிடையாது. சிமெண்ட் கிடையாது. எனவே மேற்புற கூறையினை தாங்கிப் பிடிக்க கருங்கற்களால் ஆன சதுர வடிவிலான தூண்கள் அல்லது வட்ட வடிவிலான தூண்கள் அல்லது செவ்வக வடிவிலான தூண்கள் அமைக்கப் பட்டிருக்கும்.
சாதாரணமாகத் தூண்கள் அமைத்தால் வீடுகள் கட்டுமானத்திற்கும் கோயில்கள் கட்டுமானத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். இதனைக கருத்தில் கொண்டு கோயில்களில் உள்ள சதுர வடிவ தூண்கள் அல்லது செவ்வக வடிவ தூண்களில் கடவுளின் வடிவங்கள் சிற்பங்களாக செதுக்கப் பட்டிருக்கும். பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் யாளி செதுக்கப் பட்டிருக்கும்.
சில தூண்களில் விநாயகர் சில தூண்களில் ஆஞ்சநேயர் சில தூண்களில் அம்மன் வடிவங்கள் சில தூண்களில் அஷ்ட லெட்சுமிகள் சில தூண்களில் சப்த கன்னிமார்கள் சில தூண்களில் காளியின் ஊர்த்துவ தாண்டவம் சில தூண்களில் சிவ தாண்டவம் சில தூண்களில் சரபேஸ்வரர் என சிற்பங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்.
உதாரணமாக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு தூணில் சரபேஸ்வரர் வடிவம் செதுக்கப் பட்டிருக்கும். அந்த தூணை வலம் வந்து வழி படுவதால் கடன் தொல்லைகள் நீங்கும்.
அதே போல ஒரு தூணில் கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் பெறுவதற்கு ஒரு அம்மன் வடிவம் செதுக்கப்பட்டிருக்கும் அந்த தூணை முறையான வழிபாடுகள் செய்து வலம் வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் நடைபெற வழி வகைகள் கிடைக்கும்.
ஆஞ்சநேயர் கோயில்களில் உள்ள தூண்களில் அனுமனுக்கு துணையாக இருந்த வாலி சுக்ரிவன் என எட்டு தூண்களில் எட்டு விக்ரஹங்கள் அமைக்கப் பட்டிருக்கும். இராமன் இராவணன் மீது படையெடுக்க இலங்கைக்கு சென்ற சமயம் போர்படைத் தளபதியாக வழி நடத்திச் சென்ற சமயம் பாடு பட்டவர்களின் எட்டு சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும்.
ஆஞ்சநேயர் வடிவம் செதுக்கப்பட்ட தூண்களை சுற்றி வழிபட்டால் எதிரிகளிடமிருந்து தாக்குதல் குறையும். சனி பகவான் தாக்கம் குறையும். எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணத் தடைகள் விலகும். வெளி நாட்டுப் பயணங்கள் சென்று வருவதில் உள்ள தடைகள் விலகும்.
ஆஞ்சநேயரை சநீஸ்வர பகவான் பிடிக்க வரும் சமயம் தாம் நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் பிடித்துக் கொள்ளலாம என சனீஸ்வர பகவானிடம் முறையிட்டு சஞ்சீவி மலையினை தூக்கி வரும் சமயம் சனீஸ்வரனை பிடிக்க வைத்து சனீஸ்வரன் சஞ்சீவி மலையின் பாரம் தாங்க முடியாமல் உடனே விலகினார் என்பதால் ஆஞ்சனேயரை வழிபடுவதால் சனீஸ்வரனின தாக்கம் குறையும்.
அதே போல விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட தூண்களை சுற்றி வலம் வந்து வழிபட்டால் சனீஸ்வர பகவானின் தாக்கம் குறையும். அதற்குக் காரணம் சனீஸ்வரன் விநாயகரைப் பிடிக்க வரும் சமயம் முதுகில் நாளை வருகின்றேன் என சனீஸ்வரன் கரங்களாலேயே எழுத வைத்து சனீஸ்வரன் விநாயகரைப் பிடிக்க வரும்போதெல்லாம் சனீஸ்வரன் அவர் கரங்களால் எழுதியதை அவராலேயே படிக்க வைத்து சனி பகவானால் விநாயகரை பிடிக்க முடியாத மற்றும் சனி பகவானே விநாயகரை சுற்றி வலம் வர வைத்தவர் என்பது தான். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். திருமணத் தடைகள் விலகும். காரணம் முருகன் வள்ளியை காதலிக்கும் சமயம் யானை வடிவில் சென்று வள்ளியை பயமுறுத்தி முருகனுக்கு திருமணம் செய்து வைத்தவர் விநாயகப் பெருமான்.
சில கோயில்களில் காளி மற்றும் சிவ தாண்டவம் செதுக்கப்பட்டு இருக்கும். இவ்வாறான சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்களை வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தாக்கம் குறையும். கோபம் கட்டுப் படுத்தப்படும். சில கோயில்களில் காயத்திரி தேவியின் சிற்பம் செதுக்கப் பட்டிருக்கும்.
பெருமாள் கோயில்களில் தசாவதாரங்களின் வடிவங்கள் தூண்களில் செதுக்கப் பட்டிருக்கும். சிவன் கோயில்களில் சிவனின் 64 திருவிளையாடல்கள் செதுக்கப் பட்டிருக்கும்.
இவைகள் அத்தனைக்கும் மேலாக ஒரு கோயிலில் உள்ள கர்ப்பக் கிரஹத்திற்கு மேல் அமைந்துள்ள விமானம் அல்லது கோபுரம் மிகவும் எடை அதிகமானதாக இருக்கும். அவ்வளவு எடை அதிகமான பாரம் மிகுந்த கோயில் விமானம் கோபுரம் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை தாங்கிக் கொள்ளும் சக்தி அந்தத் தூண்களுக்கு மட்டுமே உண்டு.
கோயில்களில் உள்ள வட்ட வடிவ தூண்களில் அடிப்பகுதியில் தாமரைபோன்று வடிவமைக்கப் பட்டிருக்கும். அவை ஒரு சக்கரம் எனவே வட்ட வடிவ தூண்களை வழிபடுவதன் மூலம் நமது உடலில் உள்ள சக்கரங்களில் உந்துதல் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் நிறையப் பலன்கள் நமக்குக் கிடைக்கும்.
ஒரு கோயிலில் உள்ள கருவறை அதாவது கர்ப்பக் கிரஹத்திலுள்ள மூலவர் என்று சொல்லப் படுகின்ற கடவுள் பக்தர்களுக்கு காட்சியளிக்க வெளியில் செல்ல முடியாது. எனவே உற்சவர் என்று ஒரு பஞ்சலோக விக்ரஹத்தை கோயிலுக்கு வெளியில் வலம் வர வைக்கின்றார்கள். அவ்வாறு ஒரு கோயிலிலிருந்து ஒரு உற்சவர் விக்ரஹம் கோயிலுக்கு வெளியில் வலம் வர வேண்டும் எனில் அந்த கோயிலுக்கு கட்டாயம் கொடி மரம் என்று ஒன்று தேவை.
திருவிழாக் காலங்களில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் செய்து திருவிழா முடிந்த பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கொடி மரத்திலிருந்து கொடியினை இறக்கி திருவிழா முடிவுக்கு வரும்.
அவ்வாறான கொடி மரத்தின் உச்சியிலிருந்து அடிப்பகுதி வரையில் மிகவும் சக்திவாய்ந்த அதிர்வலைகள் இருந்து கொண்டே இருக்கும். கொடிமரத்தின் கீழ்ப்பாகத்தில் கடவுளின் விக்ரஹங்கள் மிக மிக நேர்த்தியாக செதுக்கப் பட்டிருக்கும்.
கோயிலில் உள்ள மூல விக்ரஹத்திற்கும் உற்சவ விக்ரஹத்திற்கும் எவ்வளவு சக்தி உள்ளதோ அதோ போன்றதொரு சக்தி ஒவ்வொரு கோயிலிலுமுள்ள ஒவ்வொரு தூணுக்கும் உண்டு. தூணுக்கு ஸ்தம்பம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
எனவே தான் ஒவ்வொரு கோயிலிலும் உள்ள இடங்களுக்கு தனித் தனி சிறப்புகள் உள்ளன. அவ்வாறான இடங்கள் நாலு கால் மண்டபம் ஆறு கால் மண்டபம் எட்டுகால் மண்டபம் பதினாறு கால் மண்டபம் நூறு கால் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்படுகின்றன.
அதே போல கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். காரணம் ஒரு கோயிலுக்குள் சென்று வந்தால் அந்தக் கோயிலில் உள்ள கடவுளின் அனுக்கிரஹம் மட்டுமே கிடைக்கும். ஆனால் அதே கோயிலில் உள்ள கோபுரத்தில் பலப்பல கடவுள் சிற்பங்கள் அமைந்திருக்கும். நமக்கே தெரியாமல் நாம் அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர வழிபட முடியும் என்றால் அது கோபுர வழிபாடு என்று சொல்லப்படுகின்ற கோபுர தரிசனம் மட்டுமே.
ஒரு ஆன்மீகக் கூட்டம் நடைபெறுகின்ற இடத்தில் இவற்றை நான் கேட்டு இருந்தால் எனக்கு விழிப்பு இருந்திருக்காது. ஆனால் எனக்கு மிகவும் நெருக்கமானவர் எனக்கு மிகவும் பிடித்தவர் சொல்லும் சமயம் நான் பலப்பல கோயில்களுக்கு நேரில் சென்று வருவது போல உணர்ந்தேன்.
கடைசியில் விடை பெறும் சமயம் வந்து விட்டது. நானாகவே அவரிடத்தில் அடுத்து எத்தனை நாட்கள் களித்து உங்களைப் பார்க்க முடியும் என்னும் ஏக்கத்துடன் கேட்ட சமயம் அவர் சொன்ன பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் சொன்னது மீண்டும் நாளை வருகின்றேன் என்பது தான். எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. நிம்மதியான தூக்கம்.