பிறந்த நாள் மற்றும் குழந்தைக்குப் பெயர் தேடல்
பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள். அதனை நான் நம்பாமல் இருந்தேன். சென்ற முறை அவர் வந்திருந்த சமயம் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் என்னை திருமணம் செய்து கொள்வது பற்றி ஏன் யோசிக்கவில்லை என்றும் திருமணத்திற்குப் பின்னர் நானாக ஓடி வருகின்றேன் என்று சொல்லியும் என்னை அழைத்துச் செல்லாததற்கு ஆரம்பத்தில் இருந்த தைரியம் குறைந்து விட்டதா அல்லது கோழையாகி விட்டீர்களா என்று கேட்டது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
அவர் எனக்குச் சரியான காரணங்கள் இது தான் என்று எடுத்துக்கூறிய போதிலும் நான் தவறுதலாகக் கேட்டு விட்டேன். எனவே கட்டாயம் அவர் என் மீது கோபம் கொள்வார் என எதிர்பார்த்தேன்.
அவர் வருவாரா அல்லது வர மாட்டாரா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்னால் கடைப்பிடிப்பார். நான் கடைசியாக அவர் என்னிடம் விடைபெறும் சமயம் கேட்டபோது கட்டாயம் அடுத்த மாதம் வருவேன் என்று சொல்லியிருக்கின்றார். எனவே கட்டாயம் என்னைக் காண வருவார் என்று ஏக்கத்துடன் காத்து இருந்தேன்.
நான் எதிர் பார்த்தபடியே அடுத்த மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று அவர் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார்.
ஆனால் அவர் வந்த நாளன்று தமக்கு முக்கியமான அவசர வேலைகள் இருப்பதாகவும் அடுத்த மாதம் வருகின்ற அவருடைய பிறந்த நாளன்று கட்டாயம் திரும்ப வருகின்றேன் என்றும் சொல்லி விட்டு வந்த வேகத்தில் அவசரமாகத் திரும்பி விட்டார். பாதி சாக்லெட்டும் இல்லை. பாதி காபியும் இல்லை. அந்த அவசர வேலை என்னவென்று என்னிடம் சொல்லாமல் போனதால் என் மனம் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையில் நான் கோயிலுக்குச் சென்ற சமயம் கோயில் அர்ச்சகர் பெயர் ராசி நட்சத்திரம் என்று கேட்ட சமயம் அவரது பெயர் ராசி மற்றும் நட்சத்திரத்தினை சொல்லி விட்டேன். நல்ல வேளை அதனை என் கணவர் கேட்கவில்லை. கடவுள் என்னைக் கை விடவில்லை. ஏனெனில் அவருடன் சேர்ந்து கோயில் கோயிலாக சென்று வழிபட்ட காரணத்தால் நான் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லும் சமயம் இறைவன் கோயில் மணியினை ஒலிக்கச் செய்து என்னை அவரிடமிருந்து காப்பாற்றி விட்டார்.
அப்போது மட்டும் உன்னிப்பாக அவற்றை கவனித்திருப்பார் எனில் நான் கனவு கண்டு உளறிய "ஆபீஸ் முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள் உங்களின் வருகைக்காக நான் இங்கு தனியே ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பேன்" என்று சொன்னைதையும் இதனையும் இணைத்து முடிச்சு போட்டு என்னிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்திருப்பார். என்னை காப்பாற்றிய ஆண்டவனுக்கு நன்றி.
நான் ஆவலுடன் அவரது பிறந்த நாளன்று என்னைக் காண வருவார் என்னும் காரணத்தால் அவருக்காக இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் கார வகைகளை நானாகவே பார்த்துப் பார்த்து தயாரித்தேன். குடிப்பதற்கு காபிக்குப் பதிலாக பால் பாயசம்.
அவர் வருவது முன் கூட்டியே என் கணவர் அறிந்திருந்தும் அவர் வீட்டில் இல்லை. இரவு வருவதற்கு தாமதமாகும் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார். எனக்கு மிகவும் வசதியாக போய் விட்டது.
அவர் என் வீட்டில் கால் வைத்தவுடன் எனக்கு எல்லையில்லாத ஆனந்தம். அன்புடன் வரவேற்று அமர வைத்து நான் என் கைகளால் தயாரித்த இனிப்பு கார வகைகளைக் கொடுத்து விட்டு காபிக்கு பதிலாக பாயசம் கொடுத்தேன். அவர் ஆச்சர்யத்துடன் இத்தனை வருடங்கள் கழித்து இப்படியொரு சந்தோஷமான பிறந்த நாளா என்று கேட்டு விட்டு இந்த நேரத்தில் நான் உன்னை திருமணம் செய்திருந்தால் இறுக்க கட்டியணைத்து முத்தமிட்டிருப்பேன் என்று சொன்னதைக் கேட்டவுடன் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இது ஆனந்தக் கண்ணீர்.
இந்த நேரத்தில் அவர் என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்தார். என்னவென்று கேட்டதற்கு எனக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கும் ஒரே உறவு நீ மட்டும் தான். எனவே நான் மட்டும் என்னுடைய பிறந்த நாளுக்கு புத்தாடை அணிவது நல்லதல்ல என்பதால் உனக்கும் சேர்த்து சேலை ரவிக்கை மற்றும் உள்ளாடைகள் வாங்கி வந்துள்ளேன் என்று என்னிடம் கொடுத்து அணிந்து கொண்டு வருமாறு சொன்னார்.
நான் அவர் வாங்கி வந்த ஆடைகளை அணிந்து கொண்டவுடன் என் கண்ணே படும் படியாக இருந்தது. எனக்கு எது உடுத்தினால் நான் அழகாகத் தெரிவேன் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். என்னைப் பெற்ற தாய்க்கும் தெரியாது. தாலி கட்டிய கணவருக்கும் தெரியாது என்று சொல்லிக் கொண்டே அவர் முன்னர் சென்று நின்றேன்.
அப்போது இந்த உடையில் உன்னைப் பெண் பார்க்க வந்திருக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு பரவசமானேன்.
அவராகவே என்னிடம் கேட்டார் உடல் நலம் எப்படியிருக்கின்றது என்று. நான் கொஞ்சம் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி விட்டு எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு நம் இருவரது பெயர்களின் ;முதல் எழுத்துக்களைச் சேர்த்து பெயர் தேட வேண்டும் என்று சொன்னேன். அதன் படி அவரும் நானும் இருவர் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து விஜி என்று சுருக்கமாக அழைப்பது என்றும் முழுப் பெயர் ஆணாக இருந்தால் விஜயன் என்றும் பெண்ணாக இருந்தால் விஜயலெட்சுமி என்றும் முடிவு செய்தோம்.
நீ கருவை சுமப்பதினால் உன் வீட்டிற்கு விருந்தினர்கள் அடிக்கடி வருவார்கள் எனவே இனி வருங்காலங்களில் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வேறு நாட்களில் வருகின்றேன் என்று சொன்னார். அதனைக் கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன்.
இதற்கு இடையில் 10 நிமிடங்களில் திரும்பி வந்து விடுகின்றேன் என்று சொல்லி விட்டுச் சென்றார். பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் எழுந்து சென்றது என்னுடைய சந்தோஷத்தைக் குறைக்கின்றது என் வருத்தப்பட்டேன்.
ஆனால் அவர் சொன்ன படி 10 நிமிடங்களில் திரும்பி விட்டார். இரண்டு கைகளிலும் இரண்டு பைகள். நான் என்னவென்று கேட்டேன்.
நீ கருவை சுமப்பதினால் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவற்றை வாங்கி வந்துள்ளேன் என்றவாறு என்னிடம் கொடுத்தார். நான் அங்கேயே பிரித்துப் பார்த்தால் யாராவது வந்து விட்டால் என்ன செய்வது என்று அவற்றை அப்படியே சமையலறைக்குக் கொண்டு சென்றேன்.
அவரும் என் கூட வந்து எடுத்து வைப்பதில் எனக்கு உதவி செய்தார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பைகளில் இருந்தவற்றில் முக்கியமான ஒரு பொருள் வெள்ளியினால் ஆன குங்குமச் சிமிழ் மற்றும் வகிடு குங்குமம்.
முதன் முதலில் அதனைப் பார்த்தவுடன் அதிசயித்துப் போனேன். என்னவென்று கேட்டேன்.
திருமணமான பின்னர் சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் வகிடு குங்குமம் தலையில் வைக்க வேண்டும். இது வரையில் நீ அதனைக் கடைப் பிடிக்காத காரணத்தால் வாங்கி வந்துள்ளேன் என்று சொன்னார்.
ஆலிலைக் கிருஷ்ணன் டாலருக்கு இரண்டு புறமும் தாலிக்குப் பக்கத்தில் இருக்க வேண்டிய குண்டுகள் ;மற்றும் சொரைகள் அணிந்து இருப்பதனால் நானே உனக்கு வகிடு குங்குமம் வைத்து விடுகின்றேன். இதனால் நீ எப்போது குங்குமம் வைத்துக் கொண்டாலும் என் நினைவு உனக்கு வரும் அந்த நாளில் நான் உன்னுடன் இருக்கின்றேன்; என்று சந்தோஷப் படலாம். என் தலையில் வகிடு குங்குமம் அவர் கையால் வைப்பது தவறு என்று தெரிந்தும் கூட சிசுவினை கருவில் சுமக்கும் நீ மிகவும் சந்தோஷமாக இருக்கும் பொருட்டு நானே செய்கின்றேன் என்று சொல்லி விட்டு என் தலையில் வகிடு குங்குமம் வைத்து விட்டார். அவரது கரங்கள் என் தலையில் பட்டவுடன் எனக்கு புல்லரித்து விட்டது.
ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் என் மீது சிரத்தையுடன் காட்டும் அக்கரையினை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டேன்.
• முந்திரிப் பருப்பு
• கிஸ்மிஸ் பழம்
• அத்திப் பழம்
• பாதாம் பருப்பு
• ஹார்லிக்ஸ்
• போர்ன்விடா
• குளுக்கோஸ்
• பசு நெய்
• பச்சை நிற திராட்சை பழங்கள்
• ஆப்பிள்
• மாதுளை
• ஆரஞ்சு
• நெல்லிக்காய்
• மாங்காய் மற்றும் மாம்பழம் இன்னும் பல
கிஸ்மிஸ் பழம் சாப்பிட்டால் வாந்தி வருவது குறையும் என்று சொன்னார். அதே போல எனக்கு உணவு முறைகள் பற்றி அறிவுறைகள் வழங்கினார்.
தினமும் 6 டம்ளர் பால் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கால்சியம் சத்து கிடைக்கும் என்றும் காரட் மற்றும் பச்சை காய்கறிகள் மற்றும் பழவகைகளை நிறைய சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார். தினமும் சாப்பிடும் சமயம் உப்பினை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அடிக்கடி முருங்கை கீரை சூப் குடிக்குமாறும் இளநீர் அருந்துமாறும் கேட்டுக் கொண்டார்.
லேசாக தலை வலி வந்தால் கூட மருந்து மாத்திரை எதுவும் டாக்டரை கலந்து ஆலோசிக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். சீரகத் தூளுடன் வெண்ணெய் கலந்து உட்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்வளவையும் கேட்ட எனக்கு மீண்டும் இவருக்கு மனைவியாகும் வாய்ப்பினைக் கெடுத்த என் தாயார் மீதும் அவரது தந்தை மீதும் வெறுப்பு வந்து வெளிப்படையாக கோபப் பட்டேன். அதற்கு அவர் உடனே இனிமேல் குழந்தை பிறக்கும் வரையில் சந்தோஷமாகத் தான் இருக்க வேண்டும் பழையனவைகளை நினைத்து கவலைப் படக் கூடாது என்று சொல்லும் சமயம் என்னால் அப்படி இருக்க முடியவில்லை என்று அழுது விட்டேன்.
அவர் வருவார் என்று எதிர் பார்த்து எங்கிக் கொண்டிருக்கும் நாட்களில் பொழுது மெதுவாகப் போகின்றது. ஆனால் அவர் என் இல்லத்திற்கு வந்திருக்கும் சமயம் கண் இமைக்கும் பொழுதில் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் போய் இருட்டி விடுகின்றது.
நான் சென்று வருகிறேன் என்று அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு மீண்டும் சோகம் கவ்விக் கொண்டது.