என் உறவினருடன் காதல் தோல்வி பற்றிய உரையாடல்
எனக்குக் கட்டாயத் திருமணம் விருப்பம் இல்லாமல் நடந்தேறிய போதிலும் திருமணத்திற்குப் பின்னர் அவர் என்னை மாதா மாதம் தவறாமல் வந்து சந்தித்து வந்தது சந்தோஷத்தைத் தந்தது என்றாலும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவில்லை என்பது தான் உண்மை. காரணம் அவர் என்னிடம் எவ்வளவு தான் அன்பு குறையாமல் பழகி வந்தாலும் என்னால் அவரை திருமண பந்தத்தில் அடைய முடியவில்லை என்னும் ஏக்கம் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
அதே சமயம் அவருக்கு என்னை விட அழகான நன்கு படித்த வேலை பார்த்து சம்பாதின்ற என்னை விட அவரைப் பற்றி நன்றாக உணர்ந்து கொண்டு மனப் பக்குவத்துடன் அன்பு செலுத்தி காதலிக்கும் அளவிற்கு நெருக்கமாகப் பழகி வரும் பெண்களின் உறவு கிடைத்தும் கூட அவற்றைப் பொருட்படுத்தாமல் என்னிடம் கொஞ்சம் கூட அன்பு குறையாமல் நடந்து கொள்வது என்பது அவருக்கு உள்மனதில் ஏதோ ஒரு மூலையில் நான் அவருக்கு மனைவியாக கிடைக்கவில்லை என்னும் ஏக்கம் தான் என்பதனை நான் உணர முடிகின்றது.
இந்த நிலையிலும் நான் கேட்டுக் கொண்ட ஒரே காரணத்தால் அவரது தாயாரின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து அரை மனதுடன் நிச்சயதார்த்தத்துக்கு சம்மதம் தெரிவித்து உள்ளார் என்பதனை நான் அறிய முடிகின்றது. அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் முதல் முறை அவரது தோழியுடன் வந்தமையாலும் இரண்டாம் முறை வந்த சமயம் என் கணவர் வீட்டில் இருந்தமையாலும் என்னால் அவருடன் மனம் விட்டுப் பேச முடியவில்லை.
இன்று அவர் வர வேண்டிய நாள். ஆனால் அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக என்னுடைய உறவினர் அதாவது அவருடைய நண்பர் என் இல்லத்திற்கு வந்தார். அவரிடம் நான் விசாரித்த சமயம் திருமண பத்திரிக்கைக்கு பூஜை போடுவதற்காக பெற்றோரின் அழைப்பின் பேரில் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக அறிந்து கொண்டேன். இந்த முறையும் எனக்கு ஏமாற்றம் தான்.
எனக்கு உள்மனதில் இப்போதே அவரை நான் காண முடியவில்லையே அவருக்கு திருமணம் ஆன பின்னர் அவரை நான் சந்திக்க முடியுமா அவர் என் மீது முன்பு போல அன்புடன் இருப்பாரா என்பதனை நினைக்கும் போது எனக்கு ஏன் இந்த வாழ்க்கை என்று வெறுப்பாக இருக்கின்றது.
எனது உறவினரிடத்தில் அவர் அலுவலகத்திற்கு சென்று பார்த்து இருக்கின்றீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் அவரது நண்பரை அலுவலகத்தில் சென்று பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் பணியாற்றும் அலுவலகத்தில் நுழைவதற்கு அனுமதிச் சீட்டு பெற்றுத் தான் உள்ளே செல்ல வேண்டும் அதுவும் அவர் வேலை பார்க்கும் இடம் மிகவும் பாது காக்கப் பட்ட இடம் எனவே பல சோதனைக்குப் பின்னர் தான் அவரைப் பார்க்க முடியும்.
அவ்வாறு பார்த்தாலும் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சுதந்திரமாகப் பேச முடியாது. காரணம் அவருடன் பேசுவதற்கு ஒருவர் பின் ஒருவர் என நிறையப் பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே அவரைக் காண அவரது அலுவலகத்திற்குச் செல்லும் சமயம் தொலை பேசியில் அவரை அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு வரவழைத்து தான் பேச முடியும்.
ஆனால் அவர் வரும் சமயம் அவருடன் அவருடைய பெண் தோழிகள் நிறையப் பேர் வருவதால் அங்கும் கூட பேச முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவரும் அவருடன் ஒருவர் மாற்றி ஒருவர் ஏதோனும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவரால் அவர்களுக்கு பதில் சொல்ல நேரமின்றி தவிப்பார் என்றும் தெரிவித்தார். அவருடன் நீண்ட நேரம் பேச வேண்டும் என்றால் அவர் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று இரவு தங்கினால் தான் முடியும் என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்டதும் நான் அழுது விட்டேன். அவர் காரணம் கேட்டார். எனக்காக வருத்தப்படும் எனது ஒரே உறவினர் அவர் தான் என்பதால் என்னால் மறைக்க முடியவில்லை.
நான் அவரைக் காதலிக்கும் சமயம் சொந்த ஊரில் ரேடியோவில் ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டு “மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம். மறு நாள் எழுந்து பார்ப்போம்” என்பது அந்தப் பாட்டை அவரிடத்தில் நான் பாடிக் காட்டுவேன் நான் பாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் என்னிடத்தில் இப்படி சும்மா தூங்கிக் கொண்டிருப்பதற்கு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. நமக்கு வாரிசுகள் வேண்டும் என்றால் சற்று நேரமாவது முழித்திருக்க வேண்டும் என்பார். உடனே நான் அந்த முதல் வரிகளை மாத்திரம் கேட்காதீர்கள் கடைசியில் வரும் பாடல் வரிகள் வரையில் முழுமையாகக் கேளுங்கள் என்பேன்.
நான் அவரது தோள்களில் சாய்ந்து கண் மூட நினைப்பேன். சற்று நேரம் அல்ல. என் கண்கள் இறுதியாக மூடும் வரையில் என்று நான் சொன்ன சமயம் அவரது நண்பரான எனது உறவினரின் கண்கள் கலங்கின.
இவ்வளவு சந்தோஷமாக இருந்த நாம் இருவரும் வாழ்க்கையில் இணைவதற்கு மாதா அதாவது என்னுடைய தாயார் பிதா அதாவது அவருடைய தந்தை குரு அதாவது அவருடைய மற்றும் என்னுடைய குடும்பாத்தாருக்கு அறிவுறை சொல்லக்கூடிய பெரியவர்கள் தெய்வம் அதாவது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த எங்கள் இருவரது வழிபாட்டினையும் அடிக்கடி கண்ணுற்ற தெய்வம் என யாரும் துணை நிற்கவில்லை என்பதனை நினைக்கும் போது எனக்கு எல்லோர் மீதும் வெறுப்பு தான் வருகின்றது என்று சொன்னேன்.
அதன் பினனர் நான் அவரது நண்பரிடத்தில் அவர் படிக்கும் போதிருந்தே எப்போதும் சுறு சுறுப்பாக ஏதேனும் வேலை செய்து கொண்டு தான் இருப்பார். என்னுடன் பேசுவதற்கு மாத்திரம் அவர் நேரம் ஒதுக்குவது என்பது இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கோயிலுக்கு சென்று குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சமயம் நம்மை யாரும் பார்க்காவிட்டாலும் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் கலந்த சந்தோஷத்துடன் நீண்ட நேரம் பேசக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். நேரம் போவதே தெரியாது. அவர் என்னிடம் உன்னை வீட்டில் தேடுவார்கள் புறப்படலாம் என்று சொல்லும் சமயம் எனக்கு கடிகாரத்தின் மேல் கோபம் வரும்.
அதே போல சாமி தரிசனம் செய்த பின்னர் பிரகாரத்தை சுற்றி வரும் சமயம் மற்றும் சிற்றுண்டி சாப்பிட ஹோட்டலுக்குச் செல்லும் சமயம் தான் மனம் விட்டுப் பேச முடியும் என்று தெரிவித்தேன். கோயிலில் உள்ள குளக்கரையில் அமர்ந்து கொண்டு நம் இருவருக்கும் திருமணம் நடந்த பின்னர் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அது பற்றியே பேசிக் கொண்டு இருப்போம் என்றும் அது போன்ற வசந்த காலம் எனக்கோ அல்லது அவருக்கோ இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்றும் தெரிவித்தேன்.
அப்போது என்னை அறியாமலேயே என் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது. அதனைக் கண்ட என் செல்லப்பெண் அம்மா கண்களைத் துடைச்சிக்கோ அழுவாதே என்று சொன்னது கேட்டு நான் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விட்டேன். அவரை இழந்த சோகம் என் உறவினர் முன்னிலையில் என் திருமணத்திற்குப் பின்னர் முதல் முறையாக வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
அப்போது உங்களைப் பெண் கேட்டு உங்கள் வீட்டிற்கு அவர் வந்த சமயம் உங்களின் தாயார் சம்மதம் தெரிவித்திருந்தால் இருவருக்கும் இந்த நிலைமை வந்திருக்காது என்று சொன்ன சமயம் அவரிடத்தில் எனக்கு தீங்கு செய்த என்னுடைய தாயாரைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று சொன்னேன். எனக்கு என் தாயார் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கின்றது என்பதனை அவர் அறிந்து கொண்டார்.
அதன் பின்னர் அவருக்கு சிற்றுண்டி கொடுத்து உபசரித்தேன். என் செல்லப் பெண் உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை. என் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்து என் செல்லப் பெண் அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் அழுகின்ற நேரத்தில் கூட அவள் எனக்கு ஆறுதல் சொன்னாள். அம்மா அழுவாதே. பாபா கட்டாயம் எனக்கு சாக்லெட்டுடன் நம்மைக் காண வருவார்.
எல்லாவற்றையும் கண்ட அவரது நண்பர் நான் ஊருக்கு திரும்பியவுடன் நேரில் அவரது வீட்டிற்குச் சென்று உங்களைக் காண செல்லுமாறு அறிவுறுத்துகின்றேன் என்று சொன்னார். அவர் என்னிடம் விடைபெறும் சமயம் அடுத்த மாதம் ஞாயிற்றுக் கிழமை வரையில் காத்திராமல் இடையிலேயே என்னை சந்திக்க வரச் சொல்லுங்கள் என்று சொல்லி வழியனுப்பி வைத்தேன்.
அச்சமயம் அவர் வரவில்லை என்னும் துக்கமும் அவர் விரைவில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்னும் ஏக்கமும் தான் இருந்தது.