குடும்ப உறுப்பினர்கள் காரணமாக நெருக்கம் குறைதல்
இரண்டாவது மகனின் திருமணம் நடந்து முடிந்த பின்னர் 4 மாத காலம் கடந்து மிகத் தாமதமாக எனது இல்லத்திற்கு வருகை தந்த சமயம் நான் மிக மிக சந்தோஷப் பட்டேன். எனது மகனும் மருமகளும் அவர் வாங்கி வந்துள்ள திருமண பரிசுப் பொருளினை நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக நின்று ஆசீர்வதித்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட சமயம் என் மருமகள் என்னை தள்ளிக் கொண்டு போய் அவருக்கு அருகில் மிக நெருக்கமாக நிற்க வைத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் உள் மனதில் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நானும் அவரும் சேர்ந்து தம்பதிகள் போல முதல் முறையாக இருவரையும் ஆசீர்வதித்தோம். அவர் நம்மிடத்தில் நீண்ட நேரம் பேசிவிட்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.
அவர் திரும்பிய பின்னர் என் மருமகள் என்னிடத்தில் நம் இருவருக்குமிடையே நெருக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். நான் அவளிடத்தில் இந்தக் கேள்வி எல்லாம் எதற்கு எனக் கேட்ட சமயம் அவர் குடித்த பின்னர் கொடுத்த பாதி காபியினை ஆவலுடன் நான் குடித்ததை கண்ணாடியில் பார்த்து விட்டதாகத் தெரிவித்தாள். அவள் என்னை மிரட்டவில்லை. அவள் என்னிடம் மிகவும் பணிவுடன் கேட்கும் சமயம் எனக்கு தாய் தந்தை இருவரும் இல்லாதது போல அவளுக்கும் தாய் தந்தை இருவரும் இல்லாததால் இருவரும் தாய் வீட்டினை மறந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதனை சுட்டிக்காட்டினாள். என்னைப் போலவே அவளுக்கும் எந்த உறவுகளும் இல்லாத காரணத்தால் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எதுவும் மறைக்காமல் தெரிவித்தேன். அதே போல் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை என்னிடத்தில் மறைக்காமல் தெரிவித்தாள்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவரை என்னவென்று அழைப்பது என அவள் என்னிடம் கேட்டதற்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நான் அவளிடத்தில் அவரை எவ்வாறு அழைக்கத் தோணுகின்றதோ அவ்வாறு அழைத்துக் கொள் எனத் தெரிவித்தேன். அதற்கு அவள் அவரை அங்கிள் என அழைக்கப் போவதாகத் தெரிவித்தாள். நான் அவளிடத்தில் அங்கிள் என்றால் என்ன எனக் கேட்ட சமயம் அங்கிள் என்றால் மாமா என்று அர்த்தம் என்று சொன்னாள். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. அவள் அவரை அங்கிள் என அழைக்கப் போவதாகத் தெரிவித்த சமயம் என் உள் மனதில் என் மகள் அவரை பாபா என்று அழைத்தாள். மருமகள் அங்கிள் என அழைக்கப் போகின்றாள் என்பதனை எண்ணினேன்.
அவரைத் தேடிச் செல்வதற்கு எனக்குச் சிறகுகள் இல்லை. என்றாலும் அவரை எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பதன் காரணமாக நினைத்துக் கொண்டே இருக்க முடிகின்றது. அவரது அடுத்த வருகையினை எதிர்பார்த்து நான் ஆவலுடன் காத்திருந்தேன். எனது காத்திருப்பு வீண் போகவில்லை. எனது இல்லத்திற்கு வந்து சென்ற ஒன்றரை மாத இடைவெளியில் ஒரு நாள் காலையில் 10.00 மணிக்கே அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். என்னால் நம்பவே முடியவில்லை.
நான் அவரை வரவேற்பதற்கு முன்னர் என் இரண்டாவது மருமகள் அவரை வாங்க அங்கிள் என்று சொல்லி வரவேற்று சோபாவில் அமரச் செய்தாள். நான் பேசுவதற்கு முன்னர் என் மருமகள் அவரிடத்தில் பேச ஆரம்பித்தாள். இதுவரையில் இவ்வளவு உரிமையுடனும் உற்சாகத்துடனும் யாரிடத்திலும் அவள் பேசியது கிடையாது. சொல்லப் போனால் எனது முதல் மகனிடத்திலும் சரி மகளிடத்திலும் சரி இவ்வளவு சகஜமாக உரிமையுடன் அவள் பேசியது கிடையாது. ஆனால் அவரிடத்தில் மாத்திரம் பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வுடன் மிக மிக நெருக்கமாக அவள் பேசியது மற்றும் நடந்து கொள்வது எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
எனது மருமகள் அவரிடத்தில் எனது இல்லத்திற்கு வருகின்ற சமயம் ஒரு நாள் முன்னதாக தொலை பேசியில் தகவல் தெரிவித்து விட்டு வர முடியுமா எனக் கேட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு அவர் வேறு வேறு காரணங்களினால் அவசர வேலையாக இந்த ஊருக்கு சற்றும் திட்டமிடல் இல்லாமல் திடீரென வருவதனால் முன் கூட்டியே சொல்லி விட்டு வர முடிவதில்லை எனத் தெரிவித்தார். அதோடு நிற்காமல் வருடத்தில் பல முறை இந்த ஊருக்கு வந்தால் கூட என்றைக்காவது ஒரு நாள் மட்டும் அதுவும் வருடத்தில் இரண்டு முறை மட்டும் இங்கு வந்து செல்வதாகத் தெரிவிததார். வந்த வேலை முடிவடையவில்லை என்றால் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.
அவரது வருகையை எதிர்பார்த்து நான் மாதக் கணக்கில் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் சமயம் என்னைப் பேச விடாமல் என் மருமகள் பேசிக் கொண்டிருப்பது எனக்கு எங்கே நான் பேசுவதற்கு நேரம் கிடைக்காமல் போய் விடுமோ என நினைக்க வைத்தது. எனது மருமகள் அவரிடத்தில் அவள் கைகளால் சமைத்துப் பரிமாறப் போகும் மதிய உணவினை கட்டாயம் சாப்பிட வேண்டும் எனச் சொன்ன சமயம் எனக்கு மிகவும் பொறாமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஏனெனில் அவரை யாரோ ஒருவர் என்று நினைத்து ஒதுக்கி விடாமல் உரிமையுடன் கொண்டாடுவது எனக்கு பக்க பலமாக அமையும் என்பதனை உணர்த்தியது.
அவரது வருகையின் காரணமாக அவளது வளர்ப்புத் தாயாரை ஊரிலிருந்து வரவழைக்கப் போவதாகவும் முன் பின் தெரியாத அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறி கலந்து ஆலோசித்த பின்னர் அவர்களுக்கு தகுந்த அறிவுறைகள் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். இது வரையில் நான் மட்டும் அவரது வருகையினை எதிர்பார்த்து அவருக்கு பிடித்த பாயாசத்துடன் சிறப்பு உணவு தயார் செய்து பரிமாறி சந்தோஷப் பட்டேன். என்னைப் போன்றே என் மருமகளும் அவரை கவனித்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
எனக்கு இரண்டாவது மருமகள் வந்த பின்னர் அவரது வருகையில் என்னை விட அதிக அளவில் அவளது ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு இருப்பதோடு உரிமையும் அதிகமாக எடுத்துக் கொள்வது நன்றாக எனக்குத் தெரிகின்றது. இருந்தாலும் அவளது வீட்டுப் பிரச்சினைகளை என்னால் தீர்த்து வைக்க முடியாது என்பதன் காரணமாக அவரது ஆலோசனைகளை நாடுகின்றாள் என்பதனை அறிந்து கொண்டு மிகவும் சந்தோஷப் பட்டேன்.
ஒரு பக்கம் மதிய உணவு என் மருமகள் கையால் தயாராகிக் கொண்டிருந்தது. நானும் அவரும் மிக மிக சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் இடை இடையே அவளும் உரையாடலில் கலந்து கொண்டாள். சரியான நேரத்தில் பிஸ்கட் மற்றும் தேனீர் கூட கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். இதற்கிடைப் பட்ட காலத்தில் எனது மருமகள் அவளது தாயாருக்கு தொலை பேசியில் அவசரமாகப் புறப்பட்டு வருமாறு தகவல் சொல்லி அவர்கள் ஊரிலிருந்து டாக்சி பிடித்து எனது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு முன்னதாக மதிய உணவு சாப்பிட்டு முடித்து விடலாம் எனத் தீர்மானித்து அனைவரும் என் மருமகள் கையால் சமைத்த சிறப்பு உணவினை திருமண விருந்து போல சாப்பிட்டு மகிழ்ந்தோம்.
மதிய உணவு சாப்பிட்டு முடித்தவுடன் என் மருமகள் அவரிடத்தில் வெற்றிலை பாக்கு வாங்கி வரலாமா அல்லது பீடா வாங்கி வரலாமா எனக் கேட்டாள். அதற்கு நான் என் மருமகளிடத்தில் அதுவெல்லாம் அவருக்குப் பிடிக்காது சாப்பிட மாட்டார் எனச் சொன்னேன். அவளுக்கு ஒரே ஆச்சர்யம். அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஆபீசராக வேலை செய்து வெற்றிலை பாக்கு கூட சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும் எனக் கேட்டாள். இருவரது மௌனமும் பதிலாக அமைந்தது.
அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் என் இரண்டாவது மருமகளின் வளர்ப்புத் தாயாருக்கு உள்ள சொத்துக்கள் மற்றும் வாரிசுகளின் இருப்பிட விவரங்கள் மற்றும் அவரது பிரச்சினைகள் அனைத்தையும் கேட்டறிந்து எல்லாவற்றுக்கும் அவர் அறிவுறைகள் வழங்கினார். அதனைக் கேட்ட எனது மருமகளுக்கும் அவளது வளர்ப்புத் தாயாருக்கும் மிக்க திருப்தி மற்றும் சந்தோஷம். எதனையும் மறைக்காமல் இதனைச் செய்தால் இப்படி நடக்கும் என்றும் அதனால் பிற்காலத்தில் ஏற்படப் போகின்ற சாதக பாதகங்கள் அனைத்தையும் வெளிப் படையாக எடுத்துச் சொல்லி மேற்கொண்டு என்ன செய்யலாம் என சொன்னதைக் கேட்டு வியந்து போனார்கள். ஒரு இடத்தில் கூட அவரது அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் நடைமுறைக்கு மாறாக இல்லாத காரணத்தால் அத்தனையும் சரி என ஏற்றுக் கொண்டார்கள். அவரது அறிவுரைகள் சரியானதாகவும் எதார்த்தமானதாகவும் கடைப்பிடிக்கக் கூடியதாகவும் இருந்த காரணத்தால் அத்தனையும் ஏற்றுக் கொண்டார்கள்.
நான் எனது இரண்டாவது மகனால் வீடு கட்டி முடிப்பதில் சில நிதிப் பற்றாக் குறை சிரமங்கள் இருப்பதை அவரிடத்தில் தெரிவித்த சமயம் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் எங்களுக்கு அவரது ஆலோசனைகளின் படி வீடு கட்டுவதற்கு போதுமான நிதி உதவி செய்யப் போவதாகவும் அதற்கு கைமாறாக அவர்கள் தங்கிக் கொள்வதற்கு ஒரே ஒரு அறையினையோ அல்லது ஒரு பகுதியினையோ அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களின் கோரிக்கை எனக்கும் சரியாகப் பட்டது. காரணம் வீடு கட்டும் பொருட்டு கடனை வாங்கி அதற்கு வட்டி கட்டத் தேவையில்லை. மகனும் மருமகளும் தனியறையில் உறங்கச் சென்று விட்டால் நான் தனியே படுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அவர்களும் என்னுடன் தங்கி விட்டால் பேச்சுத் துணையாகவும் இருக்கும். நன்றாகவும் பொழுது போக்கவும் முடியும் என்னும் எண்ணம் வந்தது. தனியாக இருக்கும் அவர்கள் சமைத்துக் கஷ்டப்பட வேண்டியதில்லை அது எனக்கும் பொருந்தும்.
என் மருமகளின் வளர்ப்புத் தாயாரின் வாரிசுகள் வெளி நாடுகளில் வசிக்கின்ற காரணத்தால் எப்போதும் அவர்கள் தனியாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்ததாகவும் அவர் சொன்ன அறிவுறைப்படி அவர்கள் இங்கு வந்து விட்டால் தனியாக வாழும் கொடுமையிலிருந்து விடுபட்டு அனைவரையும் போல சந்தோஷமாக ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க முடியும் என்பதனையும் அறிந்து கொண்ட அவர்களுக்கு மிக்க சந்தோஷம். அவர்கள் என்னையும் அவரையும் சேர்ந்து அவர்களின் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்கள். காரணம் அவர்களின் வீட்டில் ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதனை அவரது ஆலோசனைப்படி சரி செய்து நிம்மதியினைப் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம். அவர்களின் வீடு வெளியூரில் இருப்பதனைன அறிந்து கொண்ட அவர் இன்னொரு முறை பார்க்கலாம் எனச் சொல்லி சமாளித்து விட்டார்.
அதன் பின்னர் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் அவரிடத்தில் இனிமேல் இந்த ஊருக்கு வருகின்ற சமயம் அவர்கள் உதவியுடன் என் மகன் கட்டப் போகின்ற புது வீட்டில் தான் தங்க வேண்டும் எனவும் அவர்களுடன் நானும் அவரும் சேர்ந்து வரம்பில்லாமல் நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் ஆசைப் பட்டடார்கள். தரைத் தளத்தில் அவருக்காக எப்போதும் ஒரு அறை காலியாக வைத்திருப்பதாகவும் முடிவு செய்து விட்டார்கள். அந்த சமயத்தில் என்னுடன் அவர் மனம் விட்டுப் பேசுவதற்கு தனிமை கிடைக்காமல் போய் விடுமோ என்னும் பயம் நம் இருவருக்கும் வந்து விட்டது.
அதன் பின்னர் நீண்ட நேரம் அனைவரிடத்திலும் அவர் பேசி விட்டு புறப்பட்ட சமயம் எனக்கு ஒரு அதிருப்தி இருந்தது. அது என்னவெனில் நீண்ட நாட்கள் அவரது வருகைக்காக ஏங்கித் தவித்து அவர் வந்த வேளையில் அவருடன் நான் தனிமையில் மனம் விட்டுப் பேசி என்னுடைய சுக துக்கங்களைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லை. அவரது வீட்டில் நடந்த துயர நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அவரது இல்லத்தில் நிலவும் சூழ்நிலை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கின்றது என்பதனையும் அனைவர் முன்னிலையிலும் நேரடியாக கேட்டறிய முடியவில்லை எனவும் வருத்தப் பட்டேன். இருந்தாலும் அவர் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் என்னுடன் பேசுவதற்கு சரியான நேரம் அமையவில்லை என்பதனை நினைத்து இல்லம் திரும்புகின்றார் என்பதனை மட்டும் என்னால் உணர முடிந்தது.
என்னைக் காண என்னுடன் பேச அவர் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த சமயம் நான் அவரிடத்தில் தனிமையில் பேச முடியாமல் நம் இருவரது குடும்பத்தில் நடைபெறும் சில சம்பவங்களைப் பற்றி கலந்தாலோசிக்க முடியாமல் போய் விட்டது. அவர் ஏன் என்னுடைய இல்லத்திற்கு என்னைப் பார்க்க எந்த காரணத்திற்காக வந்தாரோ அது நிறைவேறாதது நம் இருவருக்கும் சங்கடமாக இருந்தது.
அவரை முதல் முதலில் சந்தித்த நாள் முதல் அவர் எனக்கே சொந்தம் என்று நானும் சொந்தமடி நீ எனக்கு என்று அவரும் இருந்தது போய் விட்டது. அவரது வருகையினை இதுவரையில் நான் மட்டும் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போது என்னுடன் என் மருமகளும் சேர்ந்து கொண்டாள். எதிர் காலத்தில் என் மருமகளின் வளர்ப்புத் தாயும் சேர்ந்து கொள்ளலாம். இது ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும் அதே சமயம் அவருடன் என்னால் மனம் விட்டுப் பேச முடியாத நிலை வந்து விட்டது என்பதனை நினைக்கும் போது சற்று வருத்தமாக இருந்தது. எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகமாவதை நான் உணர்கின்றேன்.
அவர் என்னிடம் விடை பெற்றுச் சென்ற பின்னர் அவர் வந்தும் கூட அவருடன் நீண்ட நேரம் பேச முடியவில்லை என்னும் நினைவு என்னை வாட்டிக் கொண்டிருந்தது. நீண்ட நாட்கள் அவரது வருகைக்காக காத்திருந்து அவர் வந்த சமயம் என்னால் அவருடன் மனம் விட்டுப் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால் நான் தூக்கம் வருவதற்கு முன்பாகவே உறங்கச் செல்கின்றேன். காரணம் கனவிலாவது அவருடன் யாருக்கும் தெரியாமல் மிக மிக நெருக்கமாக அமர்ந்து மனம் விட்டுப் பேச முடியும் என்னும் எண்ணம். நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்தும் கூட தூக்கம் வராமல் வெளியில் வந்து பார்க்கும் சமயம் எனக்குத் தூக்கம் வருவதற்குப் பதிலாக சூரியன் கிழக்கில் உதித்து விடுகின்றது. முன்பு போல என் உணர்ச்சிகளை கண்ணீரால் வெளிக் காட்ட முடியவில்லை.