மகள்களின் திருமணங்கள் மற்றும் உடல் நலக் குறைவு
என் செல்லப் பெண் திருமணத்திற்காக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை அழைப்பதற்காக சொந்த ஊர் சென்றிருந்த சமயம் அவருடைய இல்லத்திற்குச் சென்று திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என என் கணவர் மிகவும் ஆசைப்பட்டார். அந்த சமயம் நான் அவர் வீட்டிற்கு இந்த நேரத்தில் சென்றால் அலுவலகத்திற்குச் சென்றிருப்பார் என்றும் அவர் வீட்டில் இல்லாத போது சென்று அவர் குடும்பத்தாரை அழைப்பது சரியாக இருக்காது எனவும் என் கணவரிடத்தில் தெரிவித்தேன்.
அதற்குக் காரணம் அவர் குடியிருந்து வரும் அவரது வீட்டினைப் பார்த்த மாத்திரத்தில் குடிசையாக இருந்தாலும் சரி மாளிகையாக இருந்தாலும் சரி நான் வாழ்க்கைப் பட வேண்டிய இல்லம் என்னும் எண்ணம் எனக்குள் ஏற்பட்டு என் இதயம் சுக்கு நூறாக வெடித்து விடும் என்பதும் அதன் பின்னர் என் சோகங்களை கட்டுப் படுத்த முடியாமல் நான் அழ ஆரம்பித்து விடுவேன் என்பதும் தான்.
இதற்கிடையில் எனது உறவினரான அவரது நண்பர் வீட்டிற்கு அழைக்கச் சென்றோம். அப்போது அவரது நண்பரை மட்டும் வேறு உறவினர்களின் விலாசம் தெரிந்து கொள்ளும் சாக்கு சொல்லி தனியே அழைத்து அவரிடத்தில் அவரும் நானும் நம் இருவர் குடும்பத்திற்குள் நடக்கும் எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம் எனவும் அதன் காரணமாக அவர் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றும் சொன்னேன்.
அது தவிர அவருக்குத் திருமணம் முடிந்தவுடன் ஒரே ஒரு முறை எனது இல்லத்திற்கு அவரது மனைவியுடன் வந்து சென்ற பின்னர் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அதனை அவரது மனைவியின் பெற்றோர் தீர்க்க முடியாத நிலையில் மனமுடைந்து வெளியூருக்கு மாற்றல் வாங்கி வந்து விட்டார் எனவும் சொன்னேன்.
எனவே தற்போது திருமணதிற்கு அவரது வீட்டிற்கு அழைக்கச் சென்றால் அவரது மனைவியால் அவருக்கு ஏதேனும் மனச் சங்கடங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தேன். அது மட்டுமல்லாமல் அங்கேயிருந்து இங்கு வந்துமா எனது நிம்மதியைக் கெடுக்கின்றீர்கள் என்று என் கணவர் முன்னிலையில் ஏதேனும் தகாத வார்த்தைகள் பேசினால் என் கணவரது மனது சங்கடப்படும் எனவும் தெரிவித்தேன்.
அப்போது அவரது நண்பர் அப்படியெனில் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைக்கலாமே எனத் தெரிவித்த சமயம் எனக்கு அவர் வேலை செய்யும் அலுவலகத்தைப் பார்த்தால் மதிப்பு மரியாதையுடன் அலுவலகத்தில் வேலை செய்து வரும் அவரை நான் திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே என்னும் ஏக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக எனக்கு இன்னும் கவலைகள் அதிகமாகி விடும் எனச் சொல்லி விட்டு ஏதேனும் சாக்கு சொல்லி என் கணவரை சமாளிக்கும் படி கேட்டுக் கொண்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்டார்.
எனது உறவினரை திருமணத்திற்கு அழைத்து முடித்தவுடன் என் கணவர் என் உறவினரிடம் அவரது வீட்டிற்கு அடுத்ததாக அழைக்கச் செல்லப் போவதாகத் தெரிவித்தார். உடனே அவரது நண்பரான எனது உறவினர் இங்குள்ள அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு விட்டதா எனவும் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தங்க போகிறீர்கள் எனவும் கேட்டார். அதற்கு என் கணவர் அனைவரையும் அழைத்து முடித்து விட்டதாகவும் அன்றைய தினம் இரவு ஊருக்கு திரும்பிச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனே அவரது நண்பரான எனது உறவினர் அவருக்கு அழைப்பு கொடுக்க அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் எனவும் குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருப்பதாகவும் வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்து அவரது திருமண அழைப்பிதழை அவரிடத்தில் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன் படி என் கணவர் திருமண பத்திரிக்கையை என் உறவினரிடத்தில் கொடுத்து அவரிடம் நாம் இருவரும் நேரில் அழைப்பது போல அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
இரயிலில் நானும் என் கணவரும் பயணித்த சமயம் நம் செல்லப் பெண்ணுக்கு திருமணத்திற்காக ஜாதகத்தை தரகரிடத்தில் கொடுத்த சமயம் அவர் கொண்டு வந்த பலகாரங்களை வைத்து தான் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்ததாகவும் அவரது ஆலோசனைகளின் படி தான் மாப்பிள்ளையை தேர்வு செய்துள்ளதாகவும் அவரை நேரில் அழைக்க முடியாதது சற்று வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆமாம் அவர் என்னிடத்தில் கடற்கரையினை ஒட்டியுள்ள நகரத்தில் தான் மாப்பிள்ளையின் பணி புரியும் இடம் அமைந்திருக்கும் என்று சொன்னது சரியாக உள்ளது என்பதனை நான் மனதில் நினைத்து நம் இருவரது பிரிவு பற்றி நினைத்து கவலைப் பட ஆரம்பித்தேன். விடிந்ததும் வீட்டிற்குத் திரும்பிய சமயம் என் செல்லப் பெண் அவரைப் பற்றி மிக முக்கியமாக விசாரித்தாள்.
என் உறவினரான அவரது நண்பர் திருமண பத்திரிக்கையை அவரிடத்தில் சேர்த்து விட்டதாகவும் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கும் மிக்க மகிழ்ச்சி. நான் என் கணவரிடத்தில் உடனே தெரிவிக்காமல் ஐந்து நாட்கள் கழித்து தான் தெரிவித்தேன். ஒரு உண்மையை மறைக்க பல பொய்கள் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கின்றது என்பது எனக்குள் ஒரு உறுத்தலாக இருந்தது.
என் செல்லப் பெண்ணின் திருமணம் இனிதே நடந்தேறியது. என் செல்லமகள் திருமணத்திற்குப் பின்னர் புகுந்த வீடு சென்று பின்னர் அங்கிருந்து அவரது கணவர் பணியாற்றும் ஊருக்கு சென்றடைந்தாள். அதன் பின்னர் மகளைப் பார்க்க நானும் என் கணவரும் சேர்ந்து மகள் வீட்டிற்குச் சென்று வந்தோம். மகள் தன் கணவருடன் மிகவும் அன்பாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றாள். எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மன ஒற்றுமையுடன் கருத்து வேற்றுமை எதுவும் இல்லாமல் இனிதாக வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.
ஆனால் என் கணவர் தினந்தோறும் தொலைக் காட்சியில் செய்திகளை காணும் சமயம் வானிலை அறிக்கையினை கேட்கும் போது என் மகள் வாழ்ந்து வரும் ஊரில் கடல் கொந்தளிப்பு கனமழை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறைக்காற்று புயல் தாக்குதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படப் போவது பற்றி முன் கூட்டியோ அல்லது இயற்கை சீற்றங்கள் நடந்தவைகளையோ காட்டும் சமயத்திலோ அதனைப் பார்த்து அவருக்கு மனக் கவலை ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது.
நாமே நம் மகளை இயற்கையின் சீற்றத்துக்கு பலி கொடுக்க திருமண ஏற்பாடுகள் செய்து விட்டோமோ என்னும் கவலையில் என் கணவர் படுத்த படுக்கையாகி விட்டார். என் கணவரால் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு உடல் நிலை மோசமாகி விட்டது. ஆனால் செல்லப் பெண்ணின் ஜாதகத்தில் அப்படித் தான் உள்ளது என்பது அவர் ஜோதிடரிடம் ஏற்கனவே காண்பித்து எனக்குத் தெரிவித்து விட்டார் என்பது என் கணவருக்குத் தெரியாமல் நான் என் மனதுக்குள் புதைத்து வைத்துள்ள ரகசியம்.
என் கணவரது உடல் நிலை காரணமாக வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மருத்துவச் செலவிற்காக நிறைய வாடகை வந்து கொண்டிருந்த காம்பவுண்ட் வீட்டினை விற்கக் கூடிய சூழல் ஏற்பட்டு விட்டது. தற்போது மிஞ்சியுள்ளது வாழ்ந்து வரும் சொந்த வீடு மற்றும் அதன் தரைத் தளத்தில் வசிப்பவர்களிடமிருந்து வருகின்ற வாடகை வருமானம் மட்டுமே. போதாக் குறைக்கு அவ்வப்போது மகள் உதவி செய்வாள். இப்படியே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்று விட்டன.
இந்த இடைப்பட்ட காலங்களில் அவர் சொல்லி வந்த காசு பணம் அந்தஸ்து இன்று வரும் நாளை போகும் உழைப்பினால் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் என்பதும் அவரிடத்தில் கடுமையான உழைப்பு மற்றும் வெற்றி பெற முடியும் என்னும் நம்பிக்கை நிறைய இருக்கின்றது எனவும் என்னிடத்தில் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது எனவும் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கடின உழைப்புடனும் கடவுள் நம்பிக்கையுடனும் பரஸ்பர ஒற்றுமையுடனும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியும் எனவம் அடிக்கடி சொல்வது எனது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.
அதே போல திருமணத்தின் போது அணிவிக்கப்படும் நகைகள் மற்றும் வரதட்சணை ஒருமுறை மட்டும் தற்பெருமைக்காக செய்யப்படும் சம்பிரதாயம் எனவும் அது வாழ்க்கை நடைமுறைக்கு உதவிகரமாக இருக்காது எனவும் சொல்வார். ஏதேனும் அவசர காலங்களில் அந்த நகைகளை அடகு வைக்க நேரிட்டாலோ அல்லது விற்கும் நிலை வந்தாலோ உறவினர்கள் அனைவரும் குத்திக் காட்டிப் பேசி பலப்பல நஷ்டங்களுக்கிடையே மனக் கஷ்டங்களையும் உண்டாக்கி மேலும் சங்கடத்தில் ஆழ்த்துவார்கள் என்று சொன்னது முற்றிலும் உண்மை என்பதனை உணர்ந்தேன்.
இந்த நிலையில் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் வந்தவுடன் அவரை சோபாவில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். அப்போது அவர் என் கணவர் தூங்கிக் கொண்டிருக்கின்றாரா என என்னிடத்தில் சைகையில் கேட்டார். நான் என் கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் படுத்து இருக்கின்றார் எனவும் தூங்கவில்லை எனவும் தெரிவித்தேன். அச்சமயத்தில் என் கணவர் அவர் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார். எழுந்திருக்க முடியவில்லை.
அச்சமயம் அவரிடத்தில் என் கணவர் மகளின் திருமணத்திற்கு அவரது வீட்டிற்கு நேரில் அழைக்க விரும்பியதாகவும் அச்சமயத்தில் குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்று விட்ட காரணத்தால் அவரது வீட்டிற்கு நேரில் வந்து அழைக்க முடியவில்லை எனவும் நேரில் அழைக்காத காரணத்தால் தான் வரவில்லையா எனவும் கேட்டார். அச்சமயம் அவர் சுதாரித்துக் கொண்டு எனது மகளின் திருமணத்தின் போது அவரது தந்தையை மருத்துவ மனையில் சேர்த்து இருந்த காரணத்தால் அருகில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனச் சொல்லி நாம் இருவரும் எந்த ஒரு விசேஷத்திலும் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்ததைச் சொல்லாமல் சமாளித்து விட்டார்.
அதன் பின்னர் அவர் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து விட்டதாகச் சொல்லி தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாத காரணத்தால் என்னை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அவரிடத்தில் நான் அவரது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பெற்றுக் கொண்டேன். அவர் சம்பிரதாயப்படி எப்படி அழைக்க வேண்டுமோ அவ்வாறு அழைத்து முடித்தார்.
திருமண அழைப்பிதளை நான் பெற்றுக் கொண்டவுடன் திருமணப் பத்திரிக்கையில் தங்கள் வருகையினை அன்புடன் எதிர்பார்க்கும் என்னும் வார்த்தைகளுக்குக் கீழ் இருக்கும் அவரது பெயரினை என் வலது கை விரல்களால் தடவிக் கொண்டே அருகில் என் பெயர் இல்லையே என நினைத்த சமயம் என் கண்களில் கண்ணீர் பெருகியது. திருமண பத்திரிக்கையினை பார்த்த போதே இந்நிலை என்றால் திருமணத்திற்குச் சென்றால் என்னுடைய நிலை எப்படி இருக்கும் என்பதனை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அதன் பின்னர் நான் அவரிடத்தில் அவரது வருங்கால மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தேன். அச்சமயம் அவரது விருப்பம் வேறு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதும் வீட்டில் உள்ள சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு வழியின்றி உடனடியாக திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
நான் நேரடியாக மகளுக்கு ஏதேனும் காதல் போன்ற பிரச்சினையா எனக்கேட்ட சமயம் அவ்வாறில்லை எனவும் தந்தையும் உடன் பிறந்தவர்களும் மனைவியும் தான் காரணம் எனவும் ஜோதிடர் மகளின் ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த வரன் வேண்டாம் என்று சொன்னதை அவரால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். நான் மேற்கொண்டு கேட்டால் அவருக்கு மனக் கஷ்டமாக இருக்கும் என்பதனால் மௌனமாக இருந்து விட்டேன். ஆனால் ஜோதிடர் சொன்ன விவரங்களை பின்னர் சொல்கின்றேன் எனச் சொன்னார். நானும் சரியென்று சொல்லி விட்டேன்.
அதன் பின்னர் வழக்கம் போல் அவருக்கு டிபன் கொடுக்க முயன்றேன். அவர் டிபன் வேண்டாம் என்றும் காபி மட்டும் போதும் என்றும் சொன்னார். அதற்குள் என் மகன்கள் கல்லூரிகளிலிருந்து திரும்பி விடவே அனைவரும் சேர்ந்து காபி சாப்பிட்டோம்.
நானும் அவரும் ஏற்கனவே பேசிக் கொண்டபடி அவரது இல்லத்தில் நடைபெறும் விசேஷத்தில் கலந்து கொள்ளாமல் என் கணவருக்கு பக்கத்தில் இருந்து கொண்டு என் கணவரது உடல் நலத்தை கவனித்துக் கொண்டேன். இருந்தாலும் என்னுடைய எண்ணங்கள் யாவும் அவரது மகளின் திருமணத்தைப் பற்றியே இருந்தது.
அவரது மகளின் திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் அவரது நண்பரான எனது உறவினரிடம் தொலைபேசியில் திருமணம் நடந்த விவரம் கேட்ட சமயம் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்ததாகவும் உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் அவரிடத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் என திருமண மண்டபம் நிரம்பி வழிந்ததாகத் தெரிவித்தார்.
இவ்வளவு சந்தோஷமான செய்தியினை நான் கேட்டு சந்தோஷப் படுவதற்கு முன்னர் அவருக்கு திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளுர் டாக்டரிடம் காண்பித்தால் நெஞ்சு வலி வந்த விவரம் உடனடியாக அனைவருக்கும் தெரிந்து விடும் என்னும் காரணத்தால் அந்த விவரத்தை மறைக்க உள்ளுர் டாக்டரிடம் காண்பிக்காமல் வெளியூரில் உள்ள டாக்டரிடம் காண்பித்து வந்ததாகத் தெரிவித்தார்.
திருமணம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு சக்கர வாகனம் கூட ஓட்டக்கூடாது என மருத்துவர் சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வளவு நடந்தும் கூட திருமணம் முடிந்து ஒரு வார காலத்திற்கு மேலாகியும் அவர் குடும்பத்தில் யாரிடத்திலும் நெஞ்சு வலி ஏற்பட்டு டாக்டரிடம் போய் வந்த விவரத்தை தெரிவிக்கவில்லை எனவும் சம்மந்தி வீட்டார் சீர் வரிசை தொடர்பாக ஏதோ பிரச்சினை செய்வதாகவும் தெரிவித்தார்.
நான் அவரது உடல் நிலை பற்றி மேலும் விசாரித்த போது அளவுக்கு அதிகமான சோகம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக நெஞ்சு வலி வந்ததாகவும் மிகவும் விலை உயர்ந்த ஊசியினைப் போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து உள்ளதாகவும் எக்காரணம் கொண்டும் வெயிலில் செல்லக் கூடாது மற்றும் நீண்ட தூர பயணம் பகல் நேரத்தில் மேற்கொள்ளக் கூடாது எனவும் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று சொன்னதாகவும் இதே போல மீண்டும் ஆறு மாதத்துக்குள் நெஞ்சு வலி வருமேயானால் உயிருக்கு ஆபத்து என்றும் டாக்டர் சொன்னதாக தெரிவித்த சமயம் நான் அழுது விட்டேன்.
எனக்கு உடனே அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை. காரணம் எனது கணவரும் படுத்த படுக்கையாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகின்றார்.
நெஞ்சு வலி ஏற்படுகின்ற அளவிற்கு அவருக்கு மன அழுத்தம் மற்றும் சோகத்திற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அவர் எனது இல்லத்திற்கு வரும் சமயம் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு என் கணவரது உடல் நலத்தையும் கவனித்துக் கொண்டேன்.
என்னுடைய மகளுக்கும் திருமணம் செய்து முடித்து விட்டோம். அதே போல அவரது மகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார். இருவருக்கும் மிகப்பெரிய கடமைகள் முடிந்து விட்டன என்பது ஒருபக்கத்தில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல என்னைக் கரம் பிடித்தவருக்கும் உடல் நலக் குறைவு. என்னைக் காதலித்தவருக்கும் உடல் நலக் குறைவு.
அவருக்கு மருத்துவர் சொன்ன ஆலோசனைகளின் படி முன்பு போல நினைத்த நேரத்தில் தனியே என்னுடைய இல்லத்திற்கு வர முடியாது என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. எதனையோ இழக்கின்றோம் என்னும் எண்ணம் என் உள்மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது.