பள்ளிகள் திறந்தமையால் தனிமை
முதல் நாள் இரவு முழுவதும் தூக்கமின்மை காரணமாக அடுத்த நாள் காலையில் சற்று தாமதமாக படுக்கையிலிருந்து எழுந்தேன்.
அதன் பின்னர் காலை சிற்றுண்டி முடிந்த பின்னர் நான் வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்த்த சமயம் காம்பவுண்டே வெறிச் சோடிக் கிடந்தது. காரணம் அனைவரும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று விட்டனர். நானும் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதனை எண்ணி வருத்தினேன்.
அன்று பகல் முழுவதும் எனக்கு பொழுது போவது மிகவும் கடினமாக இருந்தது மாலையில் முதலில் ஒருவர் பின் ஒருவராக சிறுவர்கள் வர ஆரம்பித்தார்கள். பின்னர் எனக்குச் சமமான வயதுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் வந்து சேர ஆரம்பித்தார்கள்.
பள்ளியிலிருந்து திரும்பிய சிறுவர்கள் மாலையில் சிற்றுண்டியை வெகு சீக்கிரம் முடித்துவிட்டு விளையாட ஆரம்பித்து விட்டனர். அவர்கள் தற்போது விளையாடும் விளையாட்டினை நான் ரசிக்கத்தான் முடியுமே தவிர விளையாட முடியாது. காரணம் நான் அந்த வயதுகளை தாண்டி விட்டேன். அப்படி அவர்கள் என்னதான் விளையாடினார்கள்.
குண்டுகளை நடு மையத்தில் கொண்டு வருதல்: ஒரு வட்ட வடிவத்தில் மூன்று அல்லது நான்கு வட்ட வடிவ வரிசைகள் அமைந்திருக்கும். அதில் கடைசி வட்டத்திற்குள் இருக்கும் குண்டுகளை நடுவில் உள்ள சிறிய வட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும்.
பழைய டயர்களை உருட்டுதல்: பழுதாகிவிட்ட பழைய சைக்கிள் டயர்களை ஒரு குச்சியைக் கொண்டு உருட்டிக் கொண்டே செல்லுதல். இதனால் கால்களுக்கு நல்ல பயிற்சியும் ஓட்டத்திற்கான வேகமும் கிடைக்கும்.
கண்ணாமூச்சி: இரண்டு கண்களையும் ஒரு துணியால் மூடிக் கொண்டு விளையாட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரைத் தொட வேண்டும். யாரையாவது தொட்டு விட்டால் அவர் கண்களை மூடிக் கொண்டு மற்றவர்களைத் தொட வேண்டும்.
மறைந்திருப்பவரைக் கண்டு பிடித்தல்: ஒரு குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவரும் ஒருவருடைய இரண்டு கண்களையும் மூடிக் கொள்ளச் சொல்லி விட்டு மற்ற அனைவரும் வெவ்வேறு இடங்களில் மறைந்து கொள்வார்கள். அனைவரையும் கண்டு பிடிக்கும் வரை விளையாட்டு தொடரும். அனைவரையும் கண்டு பிடித்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.
இரயில் வண்டி விளையாட்டு: குழுவில் உள்ள அனைவரும் ஒருவர் பின் ஒருவர் பிடித்துக் கொண்டு இரயில் போல சுற்றி வருவார்கள். இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது. ஒற்றுமையான நடை மற்றும் ஓட்டம் சாத்தியமாகும்.
காசு சுண்டுதல்: சுண்டு விரலில் ஒரு காசினை வைத்துக் கொண்டு அதனை கட்டை விரலால் சுண்டி விட்டு கீழே விழும் சமயம் எந்த பாகம் தெரியும் பூவா தலையா என்று கேட்டு ஆடும் ஆட்டம். இதில் வெற்றி தோல்வி உண்டு.
உயரத் தாவுதல்: முதலில் ஒருவர் தமது கால்களை நீட்டிக் கொண்டு அமருவார். அதனை மற்றவர்கள் தாண்ட வேண்டும். அதன் பின்னர் அவருக்கு எதிரே மற்றவர் அமர்ந்து கொண்டு அவரது கால்களை எதிரில் உள்ளவர் கால்களுக்கு மேலே வைப்பார். அப்போது உயரம் கூடும் அதனையும் தாண்ட வேண்டும். அதன் பின்னர் ஒரு கையை அகல விரித்து அந்த கால்கள் மீது வைத்து உயரத்தை கூட்டுவார்கள் அதனையும் தாண்ட வேண்டும். அதன் பின்னர் நான்கு கைகளை வைத்து உயரம் அதிகமான பின்னர் யார் தாண்ட முடியவில்லையோ அவர் தோற்றவராகக் கருதப்படுவார்.
பச்சைக் குதிரை தாண்டுதல்: ஒருவர் குனிந்து கொண்டு மற்றவர் குனிந்துள்ளவரைத் தாண்ட வேண்டும். தாண்டும் சமயம் குனிந்து இருப்பவர் முதுகில் கைகளை வைத்து தாண்டலாம்.
ஊஞ்சலாட்டம்: ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் அதிக முறை அசைந்தாட வேண்டும் இதில் கால்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். கைகளுக்கு நல்ல பிடிமானம் கிடைக்கும்.
இவற்றில் ஒருவர் மீது மற்றொருவர் கரங்கள் படும் விளையாட்டினை விளையாட என்னுடைய தாயார் அனுமதிக்க மாட்டார். காரணம் நான் சமீபத்தில் பூப்பெய்தியுள்ளது தான். நான் சிறுமியாக இருந்திருந்தால் அனைத்தையும் விளையாடி மகிழ்ந்திருப்பேன்.
மாலையில் வீடு திரும்பிய என் வயதுடைய அனைவரும் தமது படிப்பில் கவனம் செலுத்தினர். யாரும் விளையாட்டில் அக்கரை காட்டவில்லை. நான் அவர்களுடன் பேச முடியாமல் அவர்கள் படிப்பதையும் எழுதுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
நான் வயதுக்கு வந்து விட்டதால் சிறுவர்கள் விளையாடிய அந்த விளையாட்டுகளை விளையாட விட்டு விட்டேன் என்னும் ஏக்கம் எனக்கு வந்து விட்டது. அத்துடன் என்னுடைய வருமை நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டதால் இவர்களுடன் சேர்ந்து படிக்க முடியவில்லையே என்னும் சோகம் என்னைத் தொற்றிக் கொண்து.