புனித யாத்திரை மூன்றாம் நாள்
புனித யாத்திரையின் மூன்றாம் நாளன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து முதலில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலிலுக்குச் சென்று வழிபாடு செய்தோம்..
அன்றைய நாளில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு காளஹஸ்தி மற்றும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வது என முன்னமே முடிவு செய்யப் பட்டிருந்தது.
திருவண்ணாமலை கோயிலுக்கு முன்னர் உள்ள கடைகளில் எனக்கு வேண்டிய பொருட்கள் ஏதேனும் வாங்கிக் கொள்ளுமாறு அவரது தாயார் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் எனக்கு எதிலும் விருப்பமில்லை. திருப்பதியில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவரது தாயாரிடம் சொல்லி விட்டேன்.
ஆனால் திருவண்ணாமலை கோயிலிலுக்கு முன்னர் உள்ள கடைகளில் மஞ்சள் நிற நூல் கண்டுகளை நிறைய பேர் வாங்குவதைப் பார்த்த காரணத்தால் ஏனென்று தெரியாமலே நான் வாங்கும்படி கேட்டுக் கொண்ட படியால் அவரது தாயார் வாங்கி விட்டார். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஐந்து.
வாகன ஓட்டுநர் திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய நிறைய நேரமாகும் எனவே அனைவரும் வேகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே வழியில் வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் நேராக காளஹஸ்தி சென்றடைந்தோம். காளஹஸ்தியில் நடைபெறும் பரிகார பூஜையில் என் தங்கையில் மகள்கள் அமர்ந்து கொள்ள பெரியவர்கள் அருகில் அமர்ந்து கொண்டனர். இடம் கிடைக்காதவர்கள் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நானும் அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து அங்கேயே இருக்கும் கண்ணப்ப நாயினார் சன்னதிக்கு சென்று சந்தோஷமாக வழிபாடு செய்து வந்தோம். பரிகார பூஜைகள் நிறைவடைந்தவுடன் அனைவரும் சேர்ந்து காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள கடவுள்களை வழிபட்டு அந்த இடத்திலேயே மதிய உணவு உட்கொண்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
அப்போது திருப்பதி செல்லும் வழியில் பல இடங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் மரங்களை சுற்றி வழி பாடு செய்வதனைக் கண்டோம். ஒரு இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள்.
அப்போது அவரது தாயார் இது என்ன பூஜை என்பதனை ஒரு முறை இறங்கி பார்த்து விட்டுச் செல்லலாமே என்று சொன்னார்கள். உடனே அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி பார்த்த சமயம் மரங்களைச் சுற்றி மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்வது தெரிய வந்தது.
உடனே அவரது தாயார் என்னிடம் நாம் வாங்கிய நூல் கண்டுகள் இதற்குத் தான் என்பது நமக்கு வாங்கும் போது புரியவில்லை. இப்போது புரிந்து விட்டது எனக்கூறி அந்த நூல் கண்டுகளை எடுத்து வருமாறு அவரிடம் கூற அவரும் அந்த நூல் கண்டுகளை எடுத்து வந்தார். பெரிய மரமாக இருந்ததால் அவர் நூலின் ஒரு நுனியினைப் பிடித்துக் கொள்ள நான் அந்த மரத்தினை சுற்றி வந்து நூல் கண்டிலிருந்து நூலால் மரத்தை சுற்றினேன். உடனே அவரது தாயார் அந்த நூலின் இரண்டு நுனிகளையும் முடிச்சு போட்டு சேர்த்தார்.
அதன் பின்னர் அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்ட பின்னர் அங்கேயே சற்று நேரம் அமர வேண்டும் என்று அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது அந்த பூஜை ஏன் என்று அவரது தாயார் என்னிடம் சொன்னார்கள்.
சத்யவான் அரச மரத்தடியில் இருக்கும் சமயம் அவனது உயிர் சாவித்திரியின் மடியில் பிரிந்து எமதர்மன் சத்யவானின் உயிரினை கொண்டு செல்லும் சமயம் சத்யவானின் மனைவி சாவித்திரி எமதர்மனிடம் தனது மாமனாரின் சந்ததிகள் அழியாமல் இருக்கவும் சத்யவான் மூலமாக தமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்று சத்தியவானின் வாரிசுகள் இராஜ்யத்தை ஆளவும் வரம் கேட்க எமதர்மன் சாவித்திரியின் பதிபக்தியை கருத்தில் கொண்டு சாவித்திரிக்கு சத்யவானை உயிருடன் கொடுக்கின்றான்.
எனவே அந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு அரச மரத்திற்கு மஞ்சள் நூல் சுற்றி பிரார்த்தனை மேற்கொள்கின்றார்கள். அரச மரத்தின் அடிப்பகுதி சிவ லிங்கமாக கருதப்படுகின்றது. இந்த பூஜையின் மூலம் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்று கூறிய போது என் உடல் சிலிர்த்தது.
அதே போல என்னுடைய தங்கையும் அவரது குடும்பத்தாரும் வேண்டுதல் மேற்கொண்டனர்.
அப்போது அவர் கடைக்குச் சென்று ஒரு மணியினை வாங்கி வந்தார். அந்த மணியினை என்னிடம் அவர் தாயார் கரங்களால் கொடுக்க வைத்து அருகில் உள்ள மரத்தில் கட்டி வழிபட்டு வரச் சொன்னார். நானும் அவ்வாறே செய்தேன். எனக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
அதன் பின்னர் நாம் வாகனத்தில் ஏறச் செல்லும் சமயம் அனைவரும் திருமணம் ஆக வேண்டும் என்றும் திருமணம் ஆனவர்கள். சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றும் மரத்தில் மஞ்சள் நூல் கட்டி வழிபாடு செய்கின்றார்கள். ஆனால் நம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக மணியினைக் கட்டி பிரார்த்தனை மேற்கொள்ள வைத்துள்ளேன் என்பதனை அவர் என்னிடம் சொல்ல கேட்கும் போது எனக்கு வாழ்க்கையில் முதல் முறையாக வெட்கம் கவ்விக் கொண்டது.
நாம் பயணித்த வாகனம் திருமலை மீது செல்வதற்கு முன்னர் அந்த வாகனத்தில் உள்ள இஞ்சின் சூடு குறைய வேண்டும் என்று காரணம் கூறி ஒரு கோயிலுக்கு முன்னர் ஓட்டுநர் நிறுத்தி அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு டிபன் சாப்பிட்டு விட்டு வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
அனைவரும் இறங்கி கோயிலுக்குள் செல்லும் சமயம் கோயில் வாசலில் ஒரு பெரிய மணி கட்டப்பட்டிருந்தது. அந்த மணியினை அனைவரும் ஒலிக்கச் செய்த பின்னர் கோயிலுக்குள் நுழைந்தனர்.
எனக்கும் அவரது தாயாருக்கும் அவர் பாணியில் சொல்லப் போனால் உயரம் குறைவு என்பதால் மணி நமக்கு எட்டவிட்லை. எனவே அவரது தாயார் அந்த மணியினை நம் மூவருக்காகவும் மூன்று முறை ஒலிக்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறு மூன்று முறை மணியினை ஒலிக்கச் செய்தார். அதன் பின்;னர் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு விட்டு அமர்ந்தோம்.
அமர்ந்தவுடன் நான் அவரது தாயாரிடம் கோயில் வாசலில் மணியினைக் கட்டி ஓசை எழுப்புவதன் நோக்கம் என்ன என்று கேட்டேன்.
ஒரு கோயிலில் உள்ள கர்ப்பக்கிரஹத்தில் நாம் சாமி கும்பிட நுழையுமுன்னர் நாம் மணியினை ஒலிக்கச் செய்வதால் தீய சக்திகள் அனைத்தும் விரட்டப் படுகின்றன. அதன் மூலம் அங்குள்ள கடவுள் சந்தோஷமடைகின்றார்.
ஒரு முறை ஒலிக்கப்பட்ட மணி ஓசையானது குறைந்த பட்சம் 7 விநாடிகள் கேட்கும். அவ்வாறான மணி ஓசை ஒலி கேட்கப் படுவதால் இடது பக்க மூளையிலும் வலது பக்க மூளையிலும் ஒரே நேரத்தில் அதிர்வலைகள் சென்றடைந்து தீய எண்ணங்களிலிருந்து விடுவித்து கடவுளை வழிபட வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தை ஊக்குவிக்கின்றது. அதுவும் தவிர செவித்திறன்; மேம்படுகின்றது. கோயில்களில் தொங்கவிடப் பட்டிருக்கும் மணிகள் அழகுப் பொருட்கள் அல்ல.
சில கோயில்களிலும் தேவாலயங்களிலும் மணியோசைகள் காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் ஒலிக்கும் சமயம் சுற்றுப்புறச் சூழலில் மாற்றம் ஏற்பட்டு அனைவரது மனத்திலும் நல்லெண்ணத்தை உருவாக்குகின்றது. நீண்ட நேரம் ஒலிக்கக் கூடிய சில மணி ஓசைகள் ஓம் என்னும் புனிதமான பிரணவ மந்திரத்தை ஒலிக்கச் செய்கின்றன என்பதனை கூர்ந்து கேட்டால் உணர முடியும். மணியோசைகள் கடவுளை வழிபட வருமாறு பக்தர்களை வேண்டுகின்றன. மணியோசைகள் நம் உடலில் உள்ள மூலாதாரச் சக்கரங்களை எழுப்புகின்றது.
கோயில்களில் தீபாராதனை மேற்கொள்ளும் சமயம் எழுப்பப்படும் மணியோசைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தீபாராதனையின் சமயம் எழுப்பப்படும் மணியோசைகள் ஓங்கார ஒலியுடன் ஒலிப்பதால் தீய சக்திகள் அனைத்தும் விரட்டப்பட்டு நல்ல சக்திகள் அந்த இடத்தில் குவிகின்றன. அந்த சமயங்களில் அங்கு திரண்டிருக்கும் பக்கர்களின் ஆழ்மனதில் தெய்வ பக்தி தூண்டப்பட்டு மன ஒருமைப்பாட்டுடன் கடவுளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது.
அதன் பின்னர் அந்த கோயிலிலிருந்து வெளியே வந்து ஹோட்டலில் சிற்றுண்டி முடித்த பின்னர் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றோம்.
வாகன ஓட்டுநர் அடிக்கடி திருப்பதி சென்று பழக்கப்பட்டவர் என்பதால் திருமலை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கான டோக்கனை கீழ் திருப்பதியிலேயே போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி நாங்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையான தரிசிக்க டோக்கன் போட்ட சமயம் சாமி தரிசனம் மறு நாள் தான் செய்ய முடியும் என்று தெரிய வந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து அனைவரும் டோக்கன் போட்டுக் கொண்டு பின்னர் மேல் திருப்பதி என்னும் திருமலை சென்றடைந்தோம்.
தங்குவதற்கான அறைகள் ஏற்பாடு செய்து நமது உடைமைகளை அதில் இறக்கி வைத்த பின்னர் மாலையில் திருமலைமயின் அழகை கண்டு ரசித்தோம். இரவு நேரங்களில் கூட கடைகளில் இவ்வளவு கூட்டமா என்று பிரமித்துப் போனேன்
எனக்கும் அவருக்கும் ஒரு நாள் பயணம் கூடி விட்டதால் மிக்க சந்தோஷம். காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டு என்றால் அது இது தான் என்று அவர் என்னிடம் சொன்னபோது நான் உண்மை தான் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அதே போல எனக்குத் தேவையான பொருட்களை அவரும் அவருடைய தாயாரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொடுத்தனர். எனக்கு மிகவும் சந்தோஷம்.
குடியிருக்கும் வீட்டுக் காம்பவுண்டில் இருக்கும் தோழர்கள் மற்றும் தோழியர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து கருப்பு மற்றும் சிகப்பு கயிறுகளை மொத்தமாக வாங்கிக் கொண்டோம்.
நடு நிசி வரையில் திருமலையில் பொழுது போக்கி விட்டு தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.