கண்ணீர் இல்லாமல் நீண்ட உரையாடல்
எனக்குத் திருமணமான பின்னர் அவர் எனது இல்லம் தேடி வருகின்ற ஒவ்வொரு முறையும் நான் கண்ணீர் விட்டு அழுது அவரையும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு பிரிய மனமில்லாமல் என்னிடத்தில் அவர் விடைபெற்றுச் செல்வது எனக்கே பிடிக்கவில்லை. அவர் வருகின்ற ஒவ்வொரு முறையும் நான் என்னுடைய தாயார் பற்றியும் அவருடைய தந்தை பற்றியும் அவரிடத்தில் பேசி அவருடைய மனதினை வேதனையில் ஆழத்தி வருகின்றேன் என்னும் காரணத்தால் இனி வருங்காலங்களில் பழையனவற்றைப் பேசாமல் சந்தோஷமாகப் பேசி மகிழ்ச்சியாக விடை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்து அவருடைய வருகைக்காக எதிர் பார்த்துக் காத்திருந்தேன். எனக்குப் பிடித்தவரைக் காண்பதற்காகக் காத்திருப்பதில் ஏற்படுகின்ற ஏக்கம் அவரைக் கண்டவுடன் காணாமல் போய் விடுகின்றது.முன்னேற்பாடாக அவர் என் வீட்டிற்கு வரும் சமயத்தில் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் என்னை வேறு எங்கேனும் அழைத்துச் சென்று விடக் கூடாது என்றும் என்னை காண வருபவர் என்னைக் காண முடியாமல் ஏக்கத்துடன் திரும்பும் நிலைமை வரக் கூடாது என்றும் காலையிலேயே இறைவனிடம் பிரார்த்தனை வைத்தேன்.
நீண்ட நாட்கள் கழித்து என்னைக் காண வருகின்ற அவருடைய மனம் புண்படக் கூடாது என்பதற்காக என் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் பிற்பகல் நேரத்தில் எனக்கும் என் குழந்தைக்கும் தனிமையைக் கொடுத்து அருள் பாலித்தார்.
நான் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில் அவருடைய வருகை இருந்தது. அவர் எனது இல்லத்தில் நுழையும் சமயம் என் குழந்தை அழுது கொண்டிருந்தது. ஆமாம் அவரைப் பார்த்து நான் ஒவ்வொரு சந்திப்பின் போதும் கவலைப்பட வேண்டும். இந்த முறை என் குழந்தை. காரணம் தடுப்பூசி போட்டு வந்தது.
தடுப்பூசி போட்டு வந்த காரணத்தால் குழந்தை அழுகின்றது என்று சாக்குச் சொல்லிவிட்டு என்னைத் தொட்டுத் தாலி கட்டியவர் குழந்தையை சமாதானப் படுத்தாமல் வெளியே சென்று விட்டார். அவர் வந்தவுடன் குழந்தையைப் பெற்றுக் கொண்டு சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் குழந்தை அழுது கொண்டே அவரது மடியில் உறங்கி விட்டது.
அவர் வந்த பின்னர் காபி அல்லது டீ தயாரித்தால் பேசக்கூடிய நேரம் குறைந்து விடுகின்றது என்பதற்காக முன் கூட்டியே தேனீர் தயாரித்து விட்டேன். அதனை நானும் அவரும் வழக்கம் போல் பருகினோம்.
நானே முதலில் பேச ஆரம்பித்தேன். இன்று நான் உங்களிடம் நமது கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது காதலில் ஏற்பட்ட தோல்வி பற்றியோ பேசி உங்கள் மனதைப் புண்படுத்த மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இந்த இல்லத்தை விட்டு வெளியேறும் சமயம் தான் அந்த முடிவு நிறைவேறுகின்றதா என்பது தெரிய வரும் என்று சொன்னார்.
நான் முதலாவதாக அவரிடத்தில் அவரது அலுவலகத்தில் கூட பணியாற்றும் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா எனக் கேட்டதற்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்று சொன்னார்.
நான் உடனே அவர்களுக்குள் பெண் நண்பர்கள் எத்தனை பேர் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னுடன் பணியாற்றும் ஆண் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பெண் நண்பர்களைப் பற்றி மட்டும் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா எனக் கேட்டார்.
நானும் ஆமாம் பெண் நண்பர்களைப் பற்றி மட்டும் சொல்லுங்கள் ஆண் நண்பர்களைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். காரணம் கேட்டார். அதற்கு உங்களிடம் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்களால் ஆண் நண்பர்கள் எப்போதும் உங்களுடன் சேர்ந்தே இருக்க மாட்டார்கள் என்றும் பெண் நண்பர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக மாறாமல் இருப்பார்கள் என்றும் சொன்னேன்.
நான் பேசி முடித்த பின்னர் அவர் என்னிடத்தில் அவரது பெண் நண்பர்கள் பற்றி விவரமாக சொல்லப் போவதாகவும் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் குறுக்கே கேள்விகள் எதவும் கேட்காமல் அழாமல் இருக்க வேண்டும் என்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கடைசியில் தான் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் அவரது பெண் நண்பர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
நான் வேலையில் சேரும் சமயம் எனக்கு இடது பக்கத்தில் கேரளத்துப் பெண் ஒருத்தி என்னுடன் பணியாற்றினாள். அவள் வக்கீலுக்குப் படித்தவள். நான் வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் மிகவும் சந்தோஷமாக அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு வந்தேன்.. அதன் பின்னர் வந்த விடுமுறையில் இதே ஊரில் உன்னைச் சந்தித்தவுடன் எனது மனது சங்கடப்பட்டு ரொம்பவும் கவலைப் பட்டேன். அப்போது அவள் வேலையில் சேர்ந்த சமயம் இருந்த உற்சாகம் மற்றும் சந்தோஷம் குறைந்ததற்கான காரணம் என்னவென்று கேட்டாள்.
அப்போது நான் உன்னை பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும் உன்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல கோயில் குளங்களுக்குச் சென்று பல விதமான பூஜைகள் செய்து அரசாங்க வேலையில் சேர்ந்துள்ளதாகவும் என்னை உன்னோடு மணமுடிக்க உன்னுடைய தாயாரும் என்னுடைய தந்தையும் மறுத்து விட்ட காரணத்தால் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு அழைத்து வர வீடு பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் உன்னை இந்த ஊரில் திருமணமான நிலையில் சந்தித்தமையால் மனவருத்தம் அடைந்து என்னுடைய வாழ்க்கையே பறி போய் விட்டது என்று எண்ணிய சமயத்தில் நீ என்னுடன் வருவதாகச் சொன்னதை அப்படியே அவளிடம் தெரிவித்தேன்.
அவள் வக்கீலுக்குப் படித்தவள் என்பதால் அவள் சட்ட பூர்வமான ஆலோசனைகள் தனக்கு வழங்கினாள். அதனால் தான் அவளுடைய ஆலோசனைகளின் படி நான் இங்கு இரண்டாவதாக வந்து உன்னை சந்தித்த சமயம் அடிக்கடி உனது வீட்டிற்கு வந்து செல்வது என்ற ஒரு நல்ல முடிவு எடுக்க முடிந்தது. அதே போல நீ என்னிடம் ஒரு முறை ஆரம்பத்தில் இருந்த தைரியம் போய் கோழையாகி விட்டீர்களா என்னும் கேள்விக்கு சட்ட பூர்வமாக பதில் சொல்ல முடிந்தது.
அந்த கேரளத்துப் பெண் என்னுடன் எப்போதும் மலையாளம் கலந்த தமிழில் பேசிக் கொண்டே தான் இருப்பாள். அவள் பேசுவது பக்கத்தில் உள்ள யாருக்கும் கேட்காது. அதற்குக் காரணம் அவளது பேச்சு கிசுகிசுப்பது போல இருக்கும். எப்போதும் தலையைக் குனிந்து கொணடு பேசிக் கொண்டே இருப்பாள். அதன் பின்னர் அவளாகவே என்னிடத்தில் உனக்குத் திருமணம் ஆன பின்னரும் கூட நம் இருவரிடையே உள்ள அன்பு குறையாத காரணத்தால் அவள் என்மீது அன்பு செலுத்த ஆரம்பித்தாள். அதே சமயம் நீ என்னைச் சந்திப்பதற்கு முன்னர் அவள் என்னை சந்திக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டாள்.
அவள் பதவி உயர்வு பெற்று சென்று விட்ட பின்னர் அவளுக்கு பதில் கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடத்துப் பெண் அந்த பணியில் சேர்ந்து கொண்டாள். அவள் தமிழ் நாட்டில் பட்டப் படிப்பு படித்தவள். அவள் எனது பிரிவுக்கு வந்து சேர்ந்தவுடன் அவளது இருக்கையை சற்று தள்ளி தூரத்தில் போட்டுக் கொண்டாள்.
அதன் பின்னர் கேரளத்துப் பெண் வந்து அவளிடம் பேசிச் சென்ற பின்னர் எனக்கு வலது பக்கமாக அவளது இருக்கையை மாற்றிக் கொண்டாள். காரணம் கேட்டதற்கு அவள் எப்போதும் எனக்கு வலது பக்கத்தில் அமருவதற்கு ஆசைப் படுவதாக தெரிவித்தாள். ஆனால் உண்மையான காரணம் அவளது அழகு. அவள் சினிமா நடிகைகளை விட மிகவும் அழகாக இருப்பாள் எனவே அவளை பார்க்க தினமும் ஒரு கூட்டம் வரும். அதிலிருந்து தப்பிக்க எனது வலது புறத்தில் இருக்கையை மாற்றிக் கொண்டால் கொஞ்சம் மறைவாக இருக்கும்.
நான் உனக்குத் திருமணம் ஆன பின்னரும் கூட உன் மீது அன்பு செலுத்தி வருவதால் அதனை தெரிந்து கொண்ட அவளும் உன்னைப் போல நெருக்கமாகப் பழக வேண்டும் என விரும்பினாள். அலுவலகத்தில் எல்லோரும் அவளிடம் பேச பயப்படுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பத்து ஆண்கள் ஒரு பெண்ணுக்குச் சமம். பத்து பெண்கள் அவளுக்குச் சமம். அந்த அளவிற்கு வாயாடி. ஆனால் அவள் என்னருகில் அமர்ந்து இருக்கும் சமயம் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பாள்.
அவள் எல்லோரிடத்திலும் வாயாடி என்று பெயர் எடுத்திருந்தாலும் அவள் என்னிடத்தில் பேசும் தன்மை மற்றும் மென்மையான குரலைக் கண்டு அனைவரும் பொறாமைப் படுவார்கள். அந்த அளவிற்கு அவள் என்னிடத்தில் அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பாள். அவள் என்னுடன் எப்போதும் பேசிக் கொண்டே தான் இருப்பாள். அதனால் என்னுடைய வலது காது மட்டும் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கும் அவ்வளவு அருகில் வந்து காதருகே பேசுவாள். அவள் பேசும் சமயம் அவள் முகத்தில் பூசியுள்ள குடிகுரா மற்றும் கோகுல் சாண்டல் முகப் பவுடரின் வாசம் கவர்ந்திழுக்கும். அவள் சுத்த சைவம்.
நான் இரண்டு முறை தும்மி விட்டால் போதும். உடனடியாக அவள் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காண்பித்து அவர் கொடுக்கும் மாத்திரைகளில் ஒரு செட்டினை முதலில் அவள் சாப்பிட்டு விட்டு அதன் பின்னர் எனக்குக் கொடுப்பாள். நான் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று டாக்டர் கொடுத்த மாத்திரைகளை நீ ஏன் சாப்பிடுகின்றாய் எனக் கேட்டால் இந்த மாத்திரைகளை சாப்பிட்டு உனக்கு ஏதாவது ஆகி விட்டால் எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று சொல்லி விட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் நமது சாதத்தினை ஏதாவது பறவைகளுக்கு வைக்கின்றோம் என்று சொல்வாள். வயிற்றில் புண் ஆகி கஷ்டப்பட்ட சமயம் அவளது தாயாரின் சம்மதத்துடன எனக்கும் சேர்த்து அவளது வீட்டிலிருந்து உணவு தனியாக கொண்டு வருவாள்.
அந்த அலுவலக வளாகத்தில் பணியாற்றும் பெண்கள் அனைவருடனும் அவள் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாலும் அவள் என்னுடன் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு எப்போதும் பேசிக் கொண்டிருப்பதாலும் அந்த அலுவலக வளாகத்தில் உள்ள எல்லா பெண்களுக்கும் என்னைத் தெரியும்.
அவளுடைய நண்பர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்களாகி விட்டார்கள். அவளை விட்டு விட்டு யாரும் தேநீர் அருந்துவதற்கு கூட செல்ல மாட்டார்கள். அனைவரும் ஒன்று கூடி தேநீர் அருந்த செல்லும் சமயம் நானும் கட்டாயம் செல்ல வேண்டும். இல்லையெனில் அவள் கோபித்துக் கொண்டு இரண்டு மணி நேரம் என்னுடன் பேசாமல் இருந்து விடுவாள். அதற்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியாது. எனவே எனக்கு அந்த அலுவலகத்தில் ஆண் நண்பர்கள் மிக மிக குறைவு. பெண் நண்பர்களே அதிகம்.
அதே நேரத்தில் எனக்கு இடது பக்கத்தில் முஸ்லீம் பெண் ஒருத்தி அமர்ந்து இருப்பாள். அவளும் அதே போல என்னுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாள். அவளும் என்னுடைய காதருகே வந்து உருது மற்றும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மொத்தம் ஆறு மொழிகள் பேசத் தெரியும். அவளிடத்தில் மோஜோ மற்றும் இண்டிமேட் என்னும் சென்ட்களின் வாசம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
அந்த முஸ்லீம் பெண் எனக்காகவும் சேர்த்து அதிகமாக அசைவ உணவு கொண்டு வருவாள். நானும் அவளும் அருகருகே ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் என்னுடைய தட்டினை அவளே கொண்டு போய் சுத்தம் செய்து கொண்டு வருவாள். அவள் மாலையில் வீடு திரும்பும் சமயம் நேராக வீட்டிற்கு செல்ல மாட்டாள். என்னுடன் சேர்ந்து ரொம்ப தூரம் நடந்து வந்து அவளும் நானும் பஸ்ஸில் ஏறி அவளது வீடு உள்ள பஸ் நிறுத்தத்திற்கு அடுத்த நிறுத்தம் வரை சென்று இறங்கி இருவரும் நடந்து வந்து அவள் அவளது வீடு உள்ள சந்தில் சென்ற பின்னர் நான் எனது அறைக்கு நடந்து வர வேண்டும். காரணம் அவள் என்னுடன் தனிமையில் பேச வேண்டும் என்று நினைப்பது. அலுவலகத்தில் இரண்டு பேர் பேசும் சமயம் அவளால் சரியாகப் பேச முடியாது என்பதால் மாலையில் என்னுடன் பேசி மகிழ்வாள். இது எனக்கு நடைப் பயிற்சி போல இருக்கும்.
வலது பக்கம் முகப் பவுடர் வாசம் இடது பக்கம் சென்ட் வாசம். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல இரண்டு பேரும் என்னுடன் ஏதாவது ஒரு காரணத்தால் அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஒருத்தி வரலெட்சுமி நோன்பு அல்லது சுமங்கலி பூஜை என்று ஏதாவது பண்டிகைகளின் சமயம் நோன்புக் கயிறு கட்டி விட்டு மூன்று நாட்கள் ஆச்சார அனுஷ்டானத்துடன் இருக்க வேண்டும் என்பாள். இன்னொருத்தி அசைவம் கொண்டு வந்து கொடுப்பாள். நான் சாப்பிட்டால் நோன்புக் கயிறு கட்டிக் கொண்டு அசைவம் தொடக் கூடாது என்று சொல்வாள். உடனே இன்னொருத்தி 10 பைசா கயிறு கட்டி விட்டு உண்பதில் கட்டுப் பாடு விதிக்கக் கூடாது என்று சொல்வாள்.
இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரும். அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் சமயம் நான் யாருக்காவது ஆதரவாக பேசிவிட்டால் இருவரும் சமாதானம் ஆகி என்னுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். எனவே நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருப்பேன்.
இரண்டு பேருக்கும் நடுவே நான் அமர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பேன். நான் இரண்டு பேர் பேசுவதையும் கேட்கத் தான் முடியுமே தவிர இருவரும் என்னைப் பேச விட மாட்டார்கள். நானும் நீயும் எப்படி ஆரம்பத்திலிருந்து பழக ஆரம்பித்தோம் என்று சொன்னால் அதனை மட்டும் கேட்டு ரசிப்பார்கள். இரண்டு பேருக்கு நடுவில் நான் அமர்ந்து பணியாற்றி வருவதன் காரணமாக நான் என் இஷ்டத்திற்கு வெளியில் செல்ல முடியாது. நான் எழுந்தாலே இருவரில் ஒருவர் எங்கே போகின்றீர்கள் என்று கேட்பார்கள். அவர்களிடத்தில் பதில் சொன்ன பின்னர் இருவரில் ஒருவராவது வழி விட்டால் தான் நான் வெளியில் வர முடியும். அவ்வளது நெருக்கத்தில் அமர்ந்து இருப்பார்கள்.
உனது மடியில் உயிர் விட்ட எனது உறவினரது கணவர் நான் பணியாற்றும் அலுவலகத்திற்கு வரும் சமயம் அவருடன் மதிய உணவு சாப்பிடவோ அல்லது டிபன் சாப்பிடவோ நான் செல்லும் சமயம் அவர்களும் கூட வருவார்கள். அவர்கள் இருவரும் அவரை விழுந்து விழுந்து கவனிப்பது போல் இருக்கும்.
அதே போல நான் இல்லாத சமயங்களில் அவர் வருவாரேயானால் என்னுடைய இருக்கையில் அவரை அமரச் சொல்வார்கள். இரண்டு பெண்களுக்கு இடையே அவர் அமர்வதற்கு கூச்சப்பட்டால் கூட விடாமல் அமர வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். அதே போல திங்கட் கிழமைகளில் நான் மிக முக்கியமான நபரை சந்திக்க சென்று விடுவதன் காரணத்தால் அந்த நேரத்தில் அவர் வருவாரேயானால் அவர்களே அவரை அழைத்துக் கொண்டு போய் அவருக்கு டீ அல்லது காபி மற்றும் டிபன் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
சில சமயங்களில் நான் அவரை தேநீர் அருந்த அழைத்துக் கொண்டு செல்லும் சமயம் என்னுடைய பெண் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அவர்கள் இஷ்டப்படும் உறவு முறைகளில் அதாவது அங்கிள் என்றோ மாமா என்றோ அல்லது அப்பா என்றோ சித்தப்பா என்றோ அழைப்பார்கள். அவர் அப்படியே என்னுடைய வீட்டிற்குச் சென்று எனது பெற்றோரிடம் நீங்கள் பார்க்கும் எந்தப் பெண்ணையும் அவனுக்குப் பிடிக்காது. இங்கு இருந்த போது நெருங்கிப் பழகிய பெண்ணை விட மிகவும் அழகான படித்த பெண்கள் அவனுக்குத் துணையாக கிடைத்து விட்டார்கள் மிக மிக நெருக்கமாகவும் இருக்கின்றார்கள் என சொல்லிக் கொண்டிருப்பார். அவரை மரியாதையாக அழைக்கும் அனைவரும் என்னை வாடா போடா என்றும் நான் அனைவரையும் வாடி போடி என்றும் பேசுவதை வியப்புடன் காண்பார்.
நான் வேலையில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. நான் பணியாற்றும் அலுவலகத்தில் அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதியினரும் அனைத்து மாநிலத்தவரும் அனைத்து மொழியினரும் ஒன்றாக வேலை செய்கின்றார்கள.. நீண்ட நாட்கள் பணி புரிந்தவர்கள் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழை சரளமாகப் பேசுவார்கள். நிறைய பேருக்கு தமிழ் சரளமாக பேச வராது.
அனைவரும் ஒற்றுமையாகவும் மிக நெருக்கமாகவும் இருப்பதற்கு காரணம் யாரும் யாருக்கும் மதிப்பு கொடுக்க மாட்டோம். மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவும் மாட்டோம். யாருக்காகவும் யாரையும் விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும் எப்படி சமாதானம் ஆனோம் என்பது யாருக்கும் தெரியாது. யாரும் மரியாதை எதிர்பார்க்க மாட்டார்கள். அதே போல மரியாதை கொடுக்கவும் மாட்டார்கள். வாடி போடி வாடா போடா என்னும் வார்த்தைகள் சரளமாக வரும். அதனால் எங்களுக்குள் மிக மிக நெருக்கம் இருக்கும். இதற்கு மற்றொரு காரணம் முக்கால் வாசிப் பேருக்கு தமிழ் தெரியாது. எனவே இலக்கணம் மற்றும் மரியாதை எதிர்பார்க்க முடியாது.
அனைவரது வயதும் 30க்குள் தான் இருக்கும். திருமணம் ஆனவர் யார் திருமணம் ஆகாதவர் யார் என்பதனை கண்டு பிடிக்கவே முடியாது. காரணம் சிலர் தாலியை செயினில் போட்டு இருப்பார்கள். சிலர் மோதிரம் போட்டு இருப்பார்கள். சிலர் பர்தா அணிந்து இருப்பார்கள். எனவே திருமணம் ஆனவரா திருமணம் ஆகாதவரா என்பதனை கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று பேசி முடித்தார்.
அவர் சொல்லிய அனைத்தையும் பொறுமையாக இடை மறிக்காமல் கேட்டு விட்டு கடைசியில் நான் பேச ஆரம்பித்தேன்.
நான் உங்கள் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் சிநேகிதியைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருக்கின்றது என்று சொன்னேன். அதற்கு அவர் காரணம் கேட்டார். அதற்கு நான் இது வரையில் நான் தான் அழகு என்று சொல்லி வந்த அவர் இன்றைக்கு முதல் முறையாக என்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை அழகு என்று சொல்வதாலும் அவளது வீட்டிலிருந்து வருகின்ற உணவினை விரும்பி சாப்பிடுவதாலும் அவளைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக சொன்னேன்.
உடனே அவர் இன்று ஞாயிற்றுக் கிழமை. இரவு 7.00 மணிக்கு தூர் தர்ஷன் தொலைக் காட்சியில் சமையல் கலை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்க வருவார். வாரா வாரம் மாலை 7.00 மணிக்கு வீட்டிலிருந்த படியே அவளை நீ தொலைக் காட்சியில் பார்க்கலாம் என்று சொன்னார். நானும் சரியென ஒப்புக் கொண்டேன். நடுவிலே ஒரு உறவினரின் அன்புத் தொல்லை.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர் எனது இல்லத்திற்கு வந்து முதல் முறையாக இருவரும் சந்தோஷமாக விடை பெற்று தனது இல்லம் திரும்பினார். அவர் மட்டும் தான் சந்தோஷமாக திரும்பினார். ஆனால் நான் அவரது பிரிவைத் தாங்க முடியாமல் வருத்தப் பட ஆரம்பித்து விட்டேன்.