அழகான ஆடை அணிந்து கொள்ளுதல்
சென்ற முறை அவர் வந்திருந்த சமயம் நீண்ட நேரம் பேச வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தும் உறவினர்கள் வந்து விட்ட காரணத்தால் அவரது மடியில் உறங்கிக கொண்டிருந்த குழந்தையைப் பெற்று உறவினர்களிடம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிலேயே அவரை வழியனுப்ப வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டமைக்கு நான் மிகவும் வருத்தப் பட்டேன்.
அவர் சொல்லிய படி இரவு 7.00 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக் காட்சியை பார்த்தேன். அவர் சொன்ன அந்த கர்நாடகாவைச் சேர்ந்த பெண் சமையல் கலை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குவதற்கு வந்தார். அவள் கொள்ளை அழகு. எலுமிச்சம் பழம் போன்ற நல்ல நிறம். கர்நாடகாவைச் சேர்ந்த பெண் என்பதே தெரியாமல் தமிழை அவ்வளவு அழகாக நேர்த்தியாக உச்சரித்தது கண்டு வியந்து போனேன்.
அவருடைய நண்பரான அந்தப் பெண் மிகவும் அழகாக இருக்கின்றாள். சாதாரணமான சேலை அதற்கு மேட்சான ரவிக்கை. ஒரே ஒரு மைனர் செயின். ஒரே ஒரு வளையல் மற்றும் வாட்ச். காதுகளில் ஜிமிக்கி கம்மல். நெற்றியல் மேல் நோக்கிய ஸ்டிக்கர் பொட்டு. அழகாக மை தீட்டிய கண்கள் மற்றும் புருவங்கள். மைனர் செயின் போட்டிருப்பதை உற்றுப் பார்த்தால் தான் தெரியும் காரணம் அவளது நிறமும் செயினின் நிறமும் ஏறக்குறைய ஒன்று போலத் தான் இருந்தது.
அந்தப் பெண்ணைப் பார்க்கும் சமயம் எனக்கு ஒன்று தோன்றியது. என்னவெனில் அவர் என்னை காதலிப்பதற்கு முன்னால் அவருடைய தாயார் அந்தப் பெண்ணைப் பார்த்திருந்தால் நிச்சயம் அவளைத் தான் தன்னுடைய மருமகளாக தேர்ந்து எடுத்து இருப்பார்கள். அவ்வளவு அழகாக தங்கச் சிலை போல இருக்கின்றாள். அவருடைய சிநேகிதி கொள்ளை அழகு மற்றும் குடும்பப் பாங்கு. என்னுடைய திருஷ்டியே பட்டு விடும் போலிருக்கின்றது.
இவ்வளவு அழகான பெண் அவருடைய உடல் நலனில் காட்டும் அக்கரை மற்றும் அவருக்காக உணவு கொண்டு வந்து கொடுத்து பரிமாறுதல் என்பதனை நினைத்துப் பார்க்கும் போது நான் அவர் மீது இன்னும் அதிகமான அளவில் அன்பாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
அந்தப் பெண்ணால் அவருடன் சண்டை போட்டுக் கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசாமல் இருக்க முடியாத அளவிற்கு அவள் அவர் மீது அன்பு செலுத்த ஆரம்பித்து இருக்கின்றாள். இவ்வளவு அழகான கண்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் தோழிகள் கிடைத்தும் கூட என்னை மட்டும் மறவாமல் என் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு என்னைக் காண வருவதற்கு ஒரே காரணம் அவர் சொன்னது போல முதலாவது காதல் மற்றும் முதலாவது ஸ்பரிசம் மற்றும் எனக்குச் செய்து கொடுத்த முதலாவது சத்தியம்.
அவருடைய பெண் சிநேகிதி ஒவ்வொரு வாரமும் எப்படியெல்லாம் உடைகள் உடுத்தி வருகின்றாள். எப்படி நிகழ்ச்சியினைத தொகுத்து வழங்குகின்றாள் என்பதனை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். நானும் அவளைப் போலவே அழகாக உடைகள் உடுத்தி மிடுக்காக தோற்றமளிக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு வந்து விட்டது. நான் எவ்வளவோ முயன்றும் அந்த அளவிற்கு அழகான தோற்றம் எனக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் என் மீது கொண்டுள்ள காதல் கொஞ்சம் கூட குறையாமல் இருக்கின்றது.
அடுத்த முறை அவர் வரும் சமயம் நான் இது வரையில் இல்லாத வகையில் வித்தியாசமாக உடைகள் உடுத்தியிருந்தேன். அவர் எனது வீட்டிற்குள் நுழைந்தவுடன் என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை பார்த்தார். காரணம் என் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
இது வரையில் நான் மட்டும் தான் அவருக்காக காத்துக் கொண்டு இருந்தேன். இப்போது என்னுடைய குழந்தை. அவர் வந்தவுடன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி தன்னை தூக்கிக் கொள்ளுமாறு அவரிடம் சைகை காட்டியது. அவர் முதலில் குழந்தையை தூக்கி நெஞ்சோடு அரவணைத்து முத்தம் கொடுத்தார்.
அதன் பின்னர் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். என்னுடைய குழந்தை அவரது மடியில் அமர்ந்து கொண்டு என்னிடம் கைகளை அசைத்துக் காட்டியது. அதனைப் பார்க்கும் போது என்னுடைய இடத்தினை என் குழந்தை பிடித்துக் கொண்டது என்று சொல்வது போல் இருந்தது. அவரது மடியில் சென்றவுடன் குழந்தைக்கு ஒரே சந்தோஷம்.
நான் சமையலறைக்குள் சென்று அவருக்கென்று ஸ்பெஷலாக தயார் செய்திருந்த கோக்கோ காபியினை கொண்டு வந்து அவரிடத்தில் ஒரு டம்ளர் கொடுத்தேன். என்னிடத்திலும் ஒரு டம்ளர் இருந்தது.
அவர் என்னவென்று கேட்டார். உங்களது கர்நாடகாவைச் சேர்ந்த பெண் சிநேகிதி தொலைக் காட்சியில் கற்றுக் கொடுத்த கோகோ காபியினை தயார் செய்துள்ளேன். அவளைப் போன்றே அவள் கற்றுக் கொடுத்த காபி செய்யும் முறை மிகவும் நன்றாக இருக்கின்றது காபியும் நன்றாக இருக்கின்றது என்று சொன்னேன். உடனே அதற்காக நான் முழுவதும் குடிக்க வேண்டுமா என்று அவர் கேட்டார். அதற்கு நான் உங்களிடத்தில் உள்ள டம்ளரில் பாதியை குடித்து விட்டு என்னிடம் தாருங்கள். என்னிடத்தில் உள்ளதில் பாதியை குடித்து விட்டு உங்களிடத்தில் தருகின்றேன். ஏனெனில் சுவையாக இருப்பதை முழுவதுமாக குடிக்க வேண்டும். எனவே இந்த ஏற்பாடு என்று சொன்னேன். வழக்கம் போல் காபிக்குப் பதிலாக புதிய பானம் கோகோ காபி. அவரும் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டினார்.
நான் இன்று தான் உங்களுக்கு கோகோ காபி கொடுத்து இருக்கின்றேன். ஆனால் உங்கள் சிநேகிதி ஏற்கனவே உங்களுக்கு அடிக்கடி கொடுத்து இருப்பாள் என நம்புகிறேன் என்று சொன்னதற்கு அவர் அவளது வீட்டிலிருந்து வித விதமாக சைவ உணவு மட்டும் கொண்டு வருவாளே தவிர வேறு எதுவும் கொண்டு வர மாட்டாள் என்றும் சமையல் கலை எல்லாம் தொலைக் காட்சியோடு சரியென்றும் சொன்னார்.
அதன் பின்னர் அவர் எனது ஆடை அலங்காரம் வித்தியாசமானதாக இருப்பது பற்றி கேட்டார். நான் விளக்கமளித்தேன். அவர் உடனே இவ்வாறு அவர் வரும் சமயம் மாத்திரம் இருப்பது நல்லதல்ல என்றும் எப்போதும் போலவே அவர் வரும் சமயம் இருக்க வேண்டும் இல்லையெனில் எப்போதும் இது போன்றே சர்வ அலங்காரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அபபோது தான் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் என்றும் அறிவுரை கூறினார். அது முழுக்க முழுக்க உண்மை தான். நானும் சரியென்று ஒப்புக் கொண்டேன்.
நான் அவரிடத்தில் அந்த முஸ்லீம் பெண் கூட இதே நிறம் தானா என்று கேட்டேன். இல்லை அவள் யானை தந்தம் போன்ற வெண்மை நிறம் என்று சொன்னது கேட்டுவிட்டு உங்கள் சிநேகிதிகள் அனைவரும் இப்படித் தானா என்று கேட்டேன். அதற்கு அவர் யானைக்கு தந்தம் மட்டும் வெள்ளையாக இருக்கும் அந்த நிறம் கொண்டவள் அந்த முஸ்லீம் பெண். யானையின் நிறத்திலும் பற்கள் மட்டும் யானை தந்தத்தின் நிறத்திலும் எனக்கு சிநேகிதிகள் இருக்கின்றார்கள் என்று சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டேன்.
இவ்வளவு சந்தோஷமாக நான் சிரிப்பதைப் பார்த்து என்னுடைய குழந்தையும் என்னவென்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தது.
இது தான் நல்ல சமயம் என்று நினைத்து பெண் பார்க்கும் படலம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் மாதத்தில் மூன்று நான்கு முறை சொந்த ஊருக்கும் இதர நாட்களில் தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கும் சென்று வருவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்றும் சொந்த ஊருக்குச் சென்றிருக்கும் சமயம் பெண் பார்க்க அழைத்துச் செல்லாமல் நல்ல நாள் நல்ல நட்சத்திரம் பார்த்து பெண் வீட்டாரிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர் அவரை வரச் சொல்கின்றார்கள் என்றும் சொன்னார்.
அதே சமயம் ஜாதகப் பொருத்தம் பார்த்து பெண் பார்க்கச் செல்லும் சமயம் அவரது தாயாருக்கு என் அளவிற்கு எந்தப் பெண்ணையும் பிடிக்காததால் அவருடைய மற்ற உறவினர்கள் மாத்திரம் சென்று பெண் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் அவருடைய தந்தை அவருக்கு பெண் பார்க்கச் செல்வதற்கு முன்னர் பெண்ணைப் பெற்ற தாயும் தந்தையும் இருக்க வேண்டும் என்றும் பெண்ணைப் பெற்ற தாய் காலமாகி அவளது தந்தை இரண்டாம் திருமணம் செய்திருந்தால் அந்த வீட்டுப் பெண்ணை வேண்டாம் என்று சொல்வதாகவும் தெரிவித்தார். அதே போல தந்தை இல்லாத பெண்ணையும் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவதாக தெரிவித்தார்.
அவருக்கு அதில் உடன் பாடு இல்லை. தாயில்லாத அல்லது தந்தையில்லாத பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை யாருமே இல்லாத அநாதைப் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்றும் அது போன்ற பெண்களால் மட்டும் கணவன் மீது அதிகமாக அன்பு செலுத்த முடியும் என்றும் நினைக்கின்றார்.
தொடர்ந்து பெண் பார்ப்பது பற்றி பேசினால் அவர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக பேச்சினை மாற்ற வேண்டி அவருடைய பெண் நண்பர்களைப் பற்றி பேச ஆரம்பித்தேன். அவர் உடனே நான் அவர்களுடன் தான் பகல் முழுவதும் மாதம் முழுவதும் வேலை செய்கின்றேன் இங்கு வந்த பின்னர் கூடவா அவர்கள் பற்றி பேசி பொழுதினை வீணாக்க வேண்டும் என்று கேட்டு விட்டு நாம் நம்மைப் பற்றி மட்டும் பேசலாமே என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் நீண்ட நேரம் உரையாடிய பின்னர் பிரிவதற்கு மனமில்லாமல் வழக்கம் போல் இரண்டு கால்கள் முன்னே செல்ல இதயத்தை என்னிடம் விட்டு விட்டு என்னைக் கண்ணீரில் ஆழ்த்தி விட்டு விடை பெற்றுத் திரும்பினார்.