முதல் வார்த்தை
முதன் முதலாக நான் அவரிடம் உங்களுக்கு இந்த குழுவில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டதற்கு அவர் தயங்காமல் உடனடியாக எனக்கு உன்னைத் தான் அதிகம் பிடிக்கும். ஏனெனில் நீ புது வரவு. அத்துடன் எனக்குப் பொருத்தமான வயது என்றார்.
அனைவர் முன்னிலையிலும் எனக்கு உன்னைத் தான் அதிகம் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் என்னை அவருடன் இணைத்து கலாட்டா செய்ய ஆரம்பித்தனர்.
அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவருக்கு எப்படி என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
நான் சக தோழியரிடம் என்னைப் பற்றியும் அவரைப் பற்றியும் இணைத்து பேசாதீர்கள். அவர் என் மீது கோபம் கொள்ளப் போகிறார் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அவன் ஒரு முடிவு செய்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டான். எதனையும் யோசிக்காமல் சொல்ல மாட்டான். அவன் சொல்லும் பொழுதே எனக்குப் பொருத்தமான வயது என்று கூட அனுமானித்து தான் சொல்லி இருக்கின்றான். எனவே அவன் மனதில் நீ இடம் பெற்று விட்டாய். இதனை யாராலும் மாற்ற முடியாது என்று சொன்னார்கள்.
எனக்கு பயமாக இருக்கின்றது. அவர் என் மீது கோபப் படப் போகிறார் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து அவர் உன்னிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று நீ சொல்வதன் அர்த்தம் உன்னிடம் அவர் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அவர் உன்னை வெறுத்து ஒதுக்கி விடக் கூடாது என்பது தானே. உனக்கும் அவர் மேல் அன்பு வந்து விட்டது. அவருக்கு ஏற்கனவே உன் மேல் அன்பு வந்து வெளிப்டடையாக எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டார். எனவே இதில் பயப்படுவதில் அர்த்தம் இல்லை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சமயம் அவர்கள் அனைவரும் அவரிடமும் என்னிடமும் ஒரு கேள்வி என்று சொன்னார்கள். அவர் அவர்களிடம் என்ன என்று ஆவலாகக் கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம் நீ இவளை இந்த குழுவில் அதிகம் விரும்புவதாகவும் அதற்குக் காரணம் இருவருக்கும் பொருத்தமான வயது என்றும் கூறினாய். நீ உண்மையாக சொன்னாயா அல்லது வேடிக்கையாக சொன்னாயா என்று தெரிந்து கொள்ள நாங்கள் ஆசைப் படுகின்றோம் என்று சொன்னார்கள்.
உடனே அவர் நான் உளமாற இதயபூர்வமாகத் தான் சொன்னேன். அது உண்மை தான். வேடிக்கை இல்லை என்று ஆணித் தரமாக ஒப்புக் கொண்டார்.
உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து இருவருக்கும் ஒரு போட்டி என்று சொன்னார்கள். போட்டி என்னவெனில் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் என்ன நினைக்கின்றீர்கள் என்பதனை எழுதிக் காண்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு நான் 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு படிப்பினை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அவர் அளவிற்கு நான் படிக்கவில்லை. சிந்திக்கவும் தெரியாது எழுதவும் வராது என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து உனக்கு எழுத வராது என்றால் நீ என்ன நினைக்கின்றாயோ அதனை அவனிடம் சொல்லி எழுதிக் கொடுக்கச் சொல் நாங்கள் பார்த்து முடிவு செய்கின்றோம் என்று சொன்னார்கள்.
அவர் சரியென்று ஒப்புக் கொண்டார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பயமாக இருந்தது. நான் என்ன எழுதலாம் என்று அவரிடமே கேட்டு விட முடிவு செய்து அவரது தனிமைக்காக காத்திருந்தேன். அனைவரும் சென்ற பின்னர் அவர் மாத்திரம் தனிமையில் இருந்தார்.
இருவரும் முதன் முதலாக தனிமையில் இருந்த அந்த நேரத்தில் அவரை நோக்கி “என்னங்க” என்று சொன்னேன். உடனே அவர் கலகலவென சிரித்தார் சந்தோஷம் பொங்க. சிரிப்புக்கான காரணம் என்னவென்று தெரியாமல் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் நான் உன்னை எனக்கு மிகுவும் பிடித்திருக்கின்றது என்று சொன்னேன். அதற்குள் நீ என்னவளாகவே மாறி விட்டாயே என்று சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்.
அதன் பின்னர் எனக்கு எழுத வராது. நான் உங்களைப் பற்றி என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் என்று ஒரு குறிப்பு தாருங்கள் என்றேன்.
அதற்கு அவர் உன்னைப் பற்றி நானும் என்னைப் பற்றி நீயும் என்ன எழுத முடியும் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் அன்பானவர். அழகானவர். அடக்கமானவர் என்று எழுதலாமே என்று சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. சரியென ஒப்புக் கொண்ட அவர் நானும் அதே போல உன்னைப் பற்றி எழுதி விடுகின்றேன் உனக்காகவும் சேர்த்து என்று சொல்லி என்னை பரவசத்தில் ஆழ்த்தினார்.