முதல் விருப்பம்
புதிய வீட்டிற்கு குடிவந்ததில் எனக்கு மிக்க சந்தோஷம். காரணம் எனக்குச் சமமான வயதுடையவர்கள் சகஜமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி சந்தோஷமாக உரையாடி வருகின்றார்கள். என்னையும் அதில் சேர்த்துக் கொண்டார்கள்.
நான் புதிதாக வந்திருப்பதால் என்னிடம் அவர்கள் மிக மிக அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். நான் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தேன். காலையில் வீட்டு வேலையில் எனது தாயாருக்கும் எனது தங்கைக்கும் உதவியாக இருந்து வந்தேன். பகலில் உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பது போல நன்றாக எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன் சேர்ந்து நானும் உறங்கி விடுவேன்.
அந்த காம்பவுண்டில் இருக்கும் சிறுவர்கள் சிறுமியர் மற்றும் என் வயதுடையவர்கள் அனைவரும் பள்ளிகளில் படித்து வந்தனர். காலையில் 9 மணிக்குள் அனைவரும் பள்ளிகளுக்குச் சென்று விடுவார்கள். மாலையில் நான்கு மணிக்கு மேல் ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்பி அவரவர் வேலைகள் முடிந்த பின்னர் மாலை 5.30 மணிக்கு மேல் நோட்டு புத்தகம் பேனா பென்சில்களுடன் திண்ணைக்கு வந்து மும்முரமாக படிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அனைவரும் படித்து முடித்து விடுவார்கள்.
அதன் பின்னர் அனைவரும் அரட்டை அடிக்க ஆரம்பித்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அனைவரும் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர் மட்டும் இருக்க மாட்டார். காரணம் அவர் அவரது தந்தை செய்யும் தொழில் தொடர்பான பணிகளைக் கவனிக்க வெளியே சென்று விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அனைவரும் படித்து முடிக்கும் நேரம் வீட்டுக்குத் திரும்புவார். இந்த விவரம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது.
அந்த சமயத்தில் எனக்கு 14 வயது அவருக்கு 17 வயது.
அவர் வந்தால் படிக்க முடியாது என்றும் அவர் வருவதற்குள் படித்து முடித்து விட வேண்டும் என்றும் அவசர அவசரமாக அனைவரும் படித்து முடிப்பார்கள். ஏனெனில் அவர் படிப்பது அதிகாலையில் தான்.
அவர் வந்தவுடன் வீட்டிற்குள் சென்று தனது தந்தை சொல்லிய வேலைகளை செய்து முடித்து விட்ட விவரம் சொல்லி அதன் பின்னர் திண்ணையில் நடக்கும் உரையாடலில் பங்கு கொள்ள வருவார். அவர் வரும் வரையில் அமைதியாக அடக்கமாகப் படித்து வந்த அனைவரும் நோட்டு புத்தகங்களை ஒதுக்கி விட்டு பேச ஆரம்பிப்பார்கள். பொழுது போவதே தெரியாது.
ஆரம்பத்தில் எனக்கு எப்படி பேசுவது என்பது தெரியாது. அனைவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன். அனைவரும் என்னையும் பேசுமாறு வற்புறுத்தியதன் பேரில் நானும் அவர்களுடன் பேச ஆரம்பித்தேன்.
அப்போது முதன் முதலாக நான் அவரிடம் உங்களுக்கு இந்த குழுவில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் தயங்காமல் உடனடியாக எனக்கு உன்னைத் தான் அதிகம் பிடிக்கும். ஏனெனில் நீ புது வரவு. அத்துடன் எனக்குப் பொருத்தமான வயது என்றார்.
உடனே மற்றவர்கள் எது சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருப்பாள். எதிர்த்துப் பேச மாட்டாள். ஏனெனில் எதிர்த்துப் பேசும் அளவிற்கு பேச்சுத் திறன் தற்போது வளரவில்லை என்பதால் தானே என்று கேட்டார்கள் அவரும் வேறு விவரம் எதுவும் சொல்லாமல் சரி தான் என்று ஒப்புக் கொண்டார்.
அவர் கட்டாயத்தின் பேரில் மற்றவர்களின் கேள்விக்கு ஆம் என்று சொல்லி ஒப்புக் கொண்டாரோ இல்லையோ எனக்கு அவரை ரொம்பவும் பிடித்திருந்தது. காரணம் அவர் உழைப்பின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அதிகாலையில் எழுந்து படித்து முடிக்கும் ஆர்வம். அதுவும் தவிர அவர் வந்தவுடன் அனைவரும் சந்தோஷமடையும் விதமாக நடந்து கொள்ளும் விதம்.
எது எப்படியோ அத்தனை பேருக்கு மத்தியில் என்னைத் தான் அதிகம் பிடிக்கும் என்று சொன்னது என் உள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஆனால் அவர் மனதில் உண்மையில் யார் இருக்கின்றார்கள் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.