திருமணத்திற்குப் பின்னரும் கூட சேலை பரிசு
கண் இமைகளுக்கு கண் மை தீட்டும் குச்சியினை நம் கண்களால் கண் மையினை கண் மை கிண்ணத்திலிருந்து எடுத்து கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் வரை பார்க்க முடியும். கண்களில் மை தீட்டும் சமயம் கண் மை தீட்டும் குச்சியானது நமது கண்களுக்குத் தெரியாமல் மறைந்து விடும். அது அனைவருக்கும் நிகழும் நிகழ்வு.
அது போல கண்ணுக்கு எட்டாத தூரத்தில் அவர் இருக்கும் சமயம் மாதம் ஒரு முறை குறிப்பிட்ட நாளில் அவரை நான் காண முடிந்தது. ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பத்து பதினைந்து வீடுகள் தள்ளி அவர் குடி வந்து விட்டார். அவ்வளவு பக்கத்தில் இருந்தும் நான் அவரைக் காண முடியவில்லை.
இவ்வளவு அருகில் இருந்தும் கூட அவரைப் பார்க்காமல் இருப்பது எனக்கு ஏதோ ஒன்றை இழந்த மாதிரி இருந்தது. எனவே அன்றைய தினம் மாலை நேரத்திற்குள் வராவிட்டால் அவரைத் தேடி நேரடியாக மறு நாள் அவர் வீட்டுக்குச் சென்று வருவது எனத் தீர்மானித்தேன். மிகவும் வேண்டியவர்கள் ஒருவரை நினைத்து ஏங்கும் சமயம் யாரை நினைத்து ஏங்குகின்றார்களோ அவர்களுக்கும் மனதுக்குள் நினைவுகள் தோன்றும் என்று சொன்னது உண்மையாகி விட்டது. நான் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவர் என்னுடைய இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார்.
அவர் வந்தவுடன் என்னுடைய செல்லப் பெண் அவரைக் கட்டிப் பிடித்து அணைத்து முத்தமிட்ட பின்னர் அவரது மடியில் அமர்ந்து கொண்டாள். அதன் பின்னர் வழக்கம் போல் சாக்லெட் பரிவர்த்தனை.
எனக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. அவர் எனது கணவரைப் பற்றி விசாரித்தார். அதற்கு நான் வெளியூர் சென்று இருப்பதாகவும் இரவு நேரத்தில் மிக தாமதமாகத் தான் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தேன்.
இப்போது நான் உங்களுக்கு காபி கொடுக்கின்றேன். அதன் பின்னர் டிபன் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று சொன்னதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் நான் காபி தயார் செய்து கொடுத்தவுடன் பாதி காபியினை குடித்து விட்டு எனக்கு பாதி காபியினை கொடுத்தார். எனக்கு மிக மிக சந்தோஷம். எனது வாழ்க்கை திரும்ப கிடைத்தது போலிருந்தது.
நானாகவே அவரிடத்தில் அவரது மனைவி பற்றி இன்றைக்காவது என்னிடத்தில் மனம் திறந்து சொல்வீர்களா என கெஞ்சலுடன் அன்பாகக் கேட்டேன். அவருக்கு சொல்ல மனமில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவராகவே ஆரம்பித்தார்.
நாம் இருவரும் காதலர்களாக இருந்த சமயம் நகைகளைப் பற்றி நான் என்ன சொல்வேன் எனக் கேட்டார். அதற்கு நான் பொன்னகை வேண்டாம். புன்னகை மட்டும் போதும் என்று சொல்லி விட்டு அதன் பின்னர் ஆங்கிலத்தில் ஏதோ ஒன்று சொல்வீர்கள் அதனைக் கேட்டவுடன் நமது காம்பவுண்ட் தோழிகள் அனைவரும் சிரிப்பார்கள் அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்பது எனக்கு இதுவரை விளங்கவில்லை என்று சொன்னேன். அவர் சொன்னதை மீண்டும் சொன்னார்.
மனமொத்த தம்பதிகளுக்கு காசு பணம் நகை நட்டு எதுவும் தேவை இல்லை. பொன்னகை வேண்டாம் புன்னகை ஒன்றே போதும். என்று சொல்லி விட்டு “Plain is a Jewel” எனச் சொல்வேன்.
“Plain is a Jewel” என்றால் மிக நெருக்கமான அன்பான கணவன் மனைவிக்கு எதுவும் இல்லாமல் இருப்பது கூட ஒரு நகை போலத்தான் என்று சொன்னேன் எனச் சொன்னார். நான் அவரிடத்தில் அதற்கு ஏன் எல்லோரும் சிரித்தார்கள் எனக் கேட்டதற்கு ஒன்றுமே இல்லாமல் என்பதனை நகைக்குப் பதிலாக துணி என்று அவர்கள் எண்ணிக் கொண்டு சிரித்தார்கள் எனச் சொனனார். எனக்கு வெட்கமாக இருந்தது.
நான் மீண்டும் அவரிடத்தில் அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்டேன். அதற்கு அவர் என்னைப் பொறுத்த வரையில் உண்மையான அன்பு குறையாமல் இருந்தால் போதும். நகைகள் தான் நம்மை ஒன்று சேர்த்து வைக்கும் என்பதல்ல என்று சொன்னார்.
கல்யாணத்தின் போது அணிவிக்கப் படுகின்ற நகைகள் மற்றும் வரதட்சணை அனைத்தும் ஒரு முறை பெறக் கூடியது மட்டுமே. அதனை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது. காரணம் நகைகள் குறைந்தால் நான் இவ்வளவு நகைகள் போட்டு என் பெண்ணைக் கட்டிக் கொடுத்தேன் என் பெண்ணை வெறுங் கழுத்தோடு வைத்து இருக்கின்றார்கள் என வாழ் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருப்பார்கள.
உண்மையான உழைப்புடன் கூடிய பரஸ்பர அன்பு இருந்தால் வாழ் நாழ் முழுவதும் தம்பதியார் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதனை உணராதவர்கள் தான் நகை நட்டுக்கு ஆசைப் படுவார்கள் எனச் சொன்னார். அவர் உழைப்பின் மீது இருந்த பக்தியினால் என்னைச் சந்தித்த முதல் நாளன்று சாமி கும்பிடாமல் பிரசாதம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். நானாகவே கொடுத்த சமயம் அவராக எடுத்துக் கொண்டால் பிரசாதம் நான் கொடுத்தால் விருந்தோம்பல் என புது விளக்கம் அளித்தார் என்பதனை இது வரையில் மறக்கவில்லை..
அதன் பின்னர் அவருக்கு வந்துள்ள மனைவி காசு பணம் நகை நட்டு அந்தஸ்து மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றில் தான் குறியாக இருப்பதாவும் என்னைப் போல உண்ணமையான அன்பு செலுத்தாத காரணத்தால் இன்று வரையில் சரியான புரிதல் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். அதே போல இப்போது வாங்கும் சம்பளம் எந்த மூலைக்குப் பத்தும் எனக் கேட்டுக் கொண்டு இருக்கின்றாள் எனச் சொன்னார். அதற்கு நான் வர வர பதவி உயர்வு கிடைக்கும் சமயம் சம்பள உயர்வு கிடைக்கும் என்பது தெரியாதா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் அதனையெல்லாம் அறிந்து கொள்ளக் கூடிய அளவில் மனப் பக்குவம் இல்லை என்று சொன்னார். இது போன்று திருமணத்திற்கு மறு நாளே பேச ஆரம்பித்து விட்ட காரணத்தால் தேனிலவு செல்லக் கூட பிடிக்கவில்லை ஏனெனில் அங்கு சென்றாலும் இதே பேச்சு தான் கேட்ட வேண்டியிருக்கும் எனச் சொன்னார்.
இந்த ஒரு காரணத்தால் தமக்கு உண்மையான அன்பு செலுத்துகின்றவர்கள் மேல் முன்பை விட பன்மடங்கு அன்பு பெருகி வருகின்றது எனச் சொன்னார். உடனே நான் என்னிடத்திலா எனக் கேட்டதற்கு தம்மிடத்தில் உண்மையான அன்பு செலுத்துகின்ற அனைவரிடத்திலும் எனச் சொன்னார். அவர் அனைவரிடத்திலும் என்று சொன்னதில் யாரெல்லாம் வருவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் என்னிடத்தில் ஒரு சேலையையும் ரவிக்கைத் துணியையும் கொடுத்தார். நான் என்னவென்று கேட்டதற்கு அருகில் அமர்ந்து பணியாற்றும் முஸ்லீம் பெண் ஒரே மாதிரி கலரில் இரண்டு புடவைகள் வாங்கி அதில் ஒன்னினை எனக்குப் பிடித்தமானவருக்கு கொடுக்குமாறு கொடுத்துள்ளார். என் மனைவி இன்னமும் என் மனதில் இடம் பிடிக்கவில்லை.
என் மனதில் நிலைத்துள்ளது நீ தான் என்பதால் இது உனக்குத் தான் இது சேர வேண்டும் எனச் சொன்னார். நானும் பெற்றுக் கொண்டேன். அது டார்க் புளு நிறம். இது வரையில் நான் இந்த நிறத்தில் புடவை கட்டி அவர் பார்த்ததே இல்லை. எனவே உடனடியாக உள்ளே சென்று அவர் பெற்று வந்த அந்த புடவையைக் கட்டிக் கொண்டு வந்து அவர் முன்னால் நின்றேன்.
அவருக்கு மிக்க மகிழ்ச்சி. இதனை என்னுடைய மனைவியிடம் கொடுத்தால் முதன் முதலாக பரிசளிப்பது பட்டுப் புடவையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் முதல் புடவையினைக் கூட உங்கள் பெண் தோழி கட்டியுள்ளது போல நான் கட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்றும் சொல்வாள் எனச் சொன்ன சமயம் என்னுள் சற்று வருத்தமாக இருந்தது. அதனை நான் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் நான் அவருக்காக ஸ்பெஷல் டிபன் செய்து பரிமாறினேன். என் செல்லப் பெண்ணுக்கும் எனக்கும் சேர்த்து அவர் ஊட்டி விட்டார். பதிலுக்கு நானும் ஊட்டி விட்ட சமயம் திருமண நாளன்று கூட எனக்கு என் மனைவி ஊட்டவில்லை என்று சொன்ன சமயம் எதற்கு எனக் கேட்டதற்கு அத்தனை பேர் மத்தியில் ஊட்ட மாட்டேன் என மறுத்து விட்டாள் எனத் தெரிவித்தார்.
நான் எது நடைபெற வேண்டும் என ஆசைக் கனவு கண்டேனோ அது கூட அவரது வாழ்க்கையில் திருமண நாளில் நடைபெறவில்லை என்பது எனக்கு மிக்க வேதனையாக இருந்தது.
அதன் பின்னர் அவராகவே தொடர்ந்தார். எனது வீட்டிற்கு வந்து அவரும் அவரது தாயாரும் இரவு டிபன் சாப்பிட்டு விட்டு வந்ததை அறிந்து கொண்ட அவரது மனைவி கட்டாயம் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி வருவதாகத் தெரிவித்து விட்டு வருகின்ற சனிக் கிழமை காலையில் அழைத்து வரப் போவதாகத் தெரிவித்தார். எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த முறை அவர் விடை பெறும் சமயம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காரணம் புடவைப் பரிசு மற்றும் மிக விரைவில் தமது மனைவியுடன் என்னுடைய இல்லத்திற்கு மீண்டும் வருகை தரப் போவது.
நாட்களை எண்ணிக் கொண்டே நான் அன்றிரவு விரைவில் மிகச் சந்தோஷமாகத் தூங்கி விட்டேன். இரவு நேரத்தில் என் கணவர் என் வீட்டிற்கு வந்ததும் தெரியாது எப்போது வந்தார் என்பதும் தெரியாது. அவரும் என்னை எழுப்பவில்லை.
நான் மறு நாள் எழுந்த சமயம் அவர் போதையில் இருந்தார். என்னை எழுப்பினால் எனக்குத் தெரிந்து விடும் என்பதற்காக தூங்கி விட்டார். பிற்பகலில் தான் படுக்கையிலிருந்து எழுந்தார். இந்த நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் நான் அவரைத் திருமணம் செய்திருந்தால் இருந்தால் மதுவைத் தொட்டிருக்க மாட்டார். என்னை விட்டிருக்க மாட்டார் என்பதனை எண்ணிய போது வாழ்க்கை வெறுப்பாக இருந்தது.