ஆர்வம் இல்லாத வாழ்க்கை
கோடை காலத்தில் விசிறியை தேடுவார்கள். குளிர் காலத்தில் போர்வையை தேடுவார்கள். மழைக் காலத்தில் குடையைத் தேடுவார்கள். ஆனால் எல்லா காலங்களிலும் நான் தேடுவது அவரைத் தான். அவரை மட்டும் தான். அவர் எப்போது என்னுடைய இல்லத்திற்கு வருகை தருவார். நான் எப்போது அவருடன் பேச முடியும் என்பது தான் என்னுடைய தேடலாக இருக்கும்.
முன்பெல்லாம் அவர் வருகின்ற சமயம் நான் மட்டும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பேன். நான் அவரோடு சேர்ந்து சுகமான சோகங்களை பகிர்ந்து கொள்வது கூட ஒரு வகையில் சந்தோஷத்தைக் கொடுக்கும். அச்சமயத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்போது என் கணவர் அவருடன் மிகவும் நெருக்கமாக பேசுவதன் காரணமாக நான் பேசும் நேரம் குறைந்து விடுகின்றது. என் செல்லப் பெண் ஒரு சாக்லெட் பெற்றுக் கொண்டதும் அமைதியாகி விடுவாள். இப்போது என் செல்லப் பெண்ணும் வாயாடி போல அவரிடத்தில் மட்டும் பேச ஆரம்பித்து விட்டாள். வேறு யாரிடத்திலும் அவ்வளவு உரிமையுடன் பேசுவது இல்லை.
இதுவும் தவிர அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொண்டே அவர் எனது வீட்டிற்கு வந்திருக்கும் சமயம் நான் பேச வேண்டும். சில விஷயங்களை என் கணவர் இருக்கும் சமயம் பேச முடியாமல் போய்விடும்.
அவரது வருகைக்காக ஏங்கித் தவிக்கும் காலம் என்பது மாதக் கணக்கில் இருக்கும். ஆனால் அவர் வந்து விட்டால் அவருடன் பேச கிடைக்கும் நேரம் என்பது சில நிமிடங்களாகவே இருக்கும். அவர் வந்து விட்டால் அவருடன் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று மாதக் கணக்கில் திட்டமிட்டிருப்பேனோ அவற்றை எல்லாம் அவர் வீட்டுக்கு வருகை தருகின்ற சில நிமிடங்களில் என்னால் பேசவே முடியாது அல்லது மறந்து விடுவேன். அதனால் அவர் சென்ற பின்னர் இது பற்றிக் கேட்க முடியவில்லையே இது பற்றி அவருடன் பேச முடியவில்லையே என வருத்தப்படுவேன்.
எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்த விட்டன. அவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்து விட்டன. நான் முதலாவதாக ஆண் குழந்தையாக பெற்றிருந்தால் நாம் இருவரும் சம்மந்திகளாகவாவது மாறியிருக்கலாம். ஆனால் இறைவன் அதற்கும் இடம் தரவில்லை. அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்த சமயம் அவருடைய முதலாவது மகளை என்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து என்னிடத்தில் காண்பித்தார்.
எனது மகள் அவரை பாபா என்று அழைப்பது போல அவரது மகள் என்னை அம்மா என்று அழைத்தவுடன் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவரது மகளை என் கரங்களில் ஏந்தி கட்டியணைத்து முத்தம் கொடுத்தேன். அப்போது அவரது மகள் அவரிடத்தில் இவர்கள் யார் எனக் கேட்ட சமயம் நீ என்ன சொல்லி அழைத்தாய் எனக் கேட்டார். அதற்கு அம்மா என்றழைத்தேன் என்று சொன்னவுடன் அப்படியே வைத்துக் கொள் என்று சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷம். என்னுடைய செல்லப்பெண் அவரது மகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள். அதன் காரணமாக நாம் இருவரும் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச முடிந்தது.
அவரிடத்தில் நான் நீங்கள் வேலையில் சேர்ந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். உங்களுக்குத் திருமணமாகி ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்போதைக்காவது உங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும் உங்களது மனைவி பற்றியும் என்னிடத்தில் மனம் திறந்து சொல்வீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர் நீண்ட நாட்கள் கழித்து இன்று என்னுடன் கொஞ்ச நேரம் சந்தோஷமாகப் பேசி விட்டுச் செல்லலாம் என வந்து இருப்பதாகவும் அந்த பாக்கியம் அவருக்கு இல்லை எனச் சொல்லிக் கொண்டே அவர் அவருடைய இல்லற வாழ்க்கை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
இருவருக்கும் திருமணம் நடந்தேறி ஐந்து நாட்களுக்குப் பின்னர் தான் முதலிரவு ஏற்பாடு செய்யப் பட்டது எனவும் அதற்கிடையில் உற்றார் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வந்ததாகவும் சொன்னார். திருமணம் ஆன தினத்திலிருந்து வருகின்ற சம்பளம் போதாது என அவரது மனைவி சொல்ல ஆரம்பித்த காரணத்தால் அன்றே நிம்மதி பறிபோனது எனத் தெரிவித்தார். அதன் காரணமாக தேனிலவு கூட எங்கும் அழைத்துச் செல்லாமல் பணியாற்றும் ஊருக்குத் திரும்பி விட்டதாகத் தெரிவித்த சமயம் நான் சற்று சோகமானேன். சுருக்கமாகச் சொல்லப் போனால் என்னுடன் அவர் ஒரு நாள் பயணத்தின் போதும் ஐந்து நாள் புனித யாத்திரையின் போதும் நாம் இருவரும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோமோ அவ்வாறு கூட இது வரையில் சந்தோஷமாக இருந்ததில்லை எனத் தெரிவித்தார்.
திருமணத்திற்குப் பின்னர் என்னைப் பார்க்க வேண்டும் என அவரது மனைவி கட்டாயப் படுத்தியதின் பேரில் என்னுடைய இல்லத்திற்கு இருவரும் வந்து சென்றதாகவும் அதன் பின்னர் அலுவலகத்திற்கு வந்து அவர் வேலை செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன காரணத்தால் அங்கும் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர் அவரது மனைவி அவரது தாய் தந்தை வீட்டிலேயே இருந்து கொண்டு வீட்டினை மாற்றியே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால் வேறு வழியின்றி மாற்றல் வாங்கிக் கொண்டு வெளியூர் சென்றதாகவும் தெரிவித்து மிக்க வருத்தப் பட்டார்.
திருமணமானவுடன் இந்த ஊரிலிருந்து வெளியூருக்கு பணி நிமித்தமாக சென்றதிலிருந்து இது வரையில் பாதி காலம் அவரது மனைவி குழந்தை பெறுவதற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக தெரிவித்தார். திருமணமான தினத்திலிருந்து தற்போது வரையில் வருகின்ற சம்பளம் போதவில்லை என்று அவரது மனைவி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பதாகத் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் சம்பளத்தை கவரில் போட்டுக் கொடுக்கும் சமயம் ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்து போட்டுத் தான் சம்பளம் வாங்க முடியுமெனவும் அந்த ஸ்டாம்புக்கான காசினைக்கூட பையிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டு மொத்த பணத்தையும் சாமி மாடத்தில் உள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் படங்களுக்கு முன்னர் வைக்கும் பழக்கம் வந்து விட்டது எனவும் தெரிவித்து விட்டு அவ்வாறு விநாயகர் மற்றும் மாரியம்மன் படங்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட சம்பளம் கூட குறைகின்றது எனச் சொல்லும் சமயம் இல்லற வாழக்கையில் வெறுப்பு வருவதாகவும் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட விநாயகர் விக்ரஹத்தை என்னுடன் சேர்ந்து அவர் தேடியலைந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடித்து வழிபடத் தொடங்கிய காரணத்தால் தான் அவருக்கு வேலை கிடைத்தது எனவும் சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தியைக் கூட ஒரு நண்பரிடத்தில் கடன் வாங்கி கொண்டாடியதாகவும் அவர் சொன்ன சமயம் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
அவரது தாயார் மனம் புண்படக் கூடாது என்னும் ஒரே காரணத்துக்காக என் முன்னிலையில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு தற்போது அதன் பலனை அனுபவித்து வருவதாகத் தெரிவிதது விட்டு அக்னி தேவன் சாட்சியாக திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் இல்லற வாழ்க்கையினை தொடர்வதாகத் தெரிவித்தார்.
அவர் சொல்வது எனக்கு மனவேதனையைத் தந்த காரணத்தால் பேச்சினை திசை திருப்ப அவரிடத்தில் இங்குள்ள அலுவலகத்திற்குச் சென்று நண்பர்களைச் சந்தித்து வந்தீர்களா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் இங்குள்ள அலுவலகத்திற்குச் சென்றிருந்ததாகவும் அச்சமயம் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய முஸ்லீம் பெண் தன்னுடைய வங்கிக் கணக்கு புத்தகத்தினைக் காண்பித்து அந்த வங்கிக் கணக்கில் ரூபாய் 7 லட்சம் இருப்பதாகவும் அந்தத் தொகையிலிருந்து ஆறரை லட்ச ரூபாய்க்கு தான் வாங்கி இருக்கும் வீட்டு மனைக்கு அடுத்து உள்ள வீட்டு மனையினை வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாள் எனவும் இங்கேயே வந்து விடுமாறும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் எனச் சொன்னார்.
அது மட்டுமல்லாமல் திருமணத்திற்குப் பின்னர் கூட தாயார் வீட்டில் தன்னுடைய மகள் வாழ்ந்து வருகின்ற காரணத்தால் அவளது திருமண வாழ்க்கையில் தவறு இளைத்து விட்டோம் என்னும் மனக் கவலையில் அவளுடைய தந்தை காலமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.
திருமணமான பின்னர் அவளது கணவர் வெளி நாட்டிலேயே பணியாற்றி வருவதன் காரணமாகவும் ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை மட்டும் வந்து செல்வதால் அவர் அங்கு வந்து விட்டால் பேச்சுத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும் எனவும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதற்கு அவர் அலுவலக சூழ்நிலைகளைக் காரணம் காட்டி மறுத்து விட்ட காரணத்தால் அந்தப் பெண் கூட வருத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது நான் அவரிடத்தில் வேலையில் சேருவதற்கு முன்னர் அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னது போல இன்னும் ஐந்து ஆண்டுகளில் அவருக்கு சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அது சமயம் என்னால் சொந்த ஊருக்கு வரும் சமயங்களில் அவரது இல்லத்திற்கு வரமுடியும் எனவும் ஆறுதல் சொன்னேன்.
இவ்வளவு மனச் சங்கடங்கள் இருந்தாலும் அவர் முன்பு போல என்னுடன் பாதி டம்ளர் காபியினை பருகியது மற்றும் என் மீதுள்ள அன்பு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே வைத்திருப்பது அறிந்து எனக்கு சற்று மன ஆறுதலாக இருந்தது.
அடிக்கடி பணியிட மாறுதல்களின் காரணமாகவும் பதவி உயர்வு காரணமாகவும் ஒரே இடத்தில் இருக்க முடியாமல் பலப்பல ஊர்களுக்கு மாறுதலின் காரணமாக வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலை மற்றும் அதிகப் படியான வேலைப் பளுவின் காரணமாகவும் என்னைப் பலமுறை பார்க்க நினைத்தும் கூட வர முடிவதில்லை எனக்கூறி வருத்தப் பட்டார்.
அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று என்னுடைய மனம் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றது. அவருடன் சில மாதங்கள் மட்டுமே பழகிய முஸ்லீம் பெண்ணுக்கு திருமண வாழ்க்கையில் அவரை அடைய முடியா விட்டாலும் அவர் அருகில் குடி வர வேண்டும் என்பதனை நிறைவேற்ற மறுக்கின்ற காரணத்தால் அந்தப் பெண்ணும் வாழ்க்கையில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றாள். அவருக்கு வந்துள்ள மனைவி அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் இருப்பதால் அவரும் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்.
அவர் பிரிவதற்கு மனமில்லாமல் என்னுடைய இல்லத்திலிருந்து புறப்பட்ட சமயம் என் செல்லப்பெண் அழ ஆரம்பித்து விட்டாள். அவரது மகளுக்கும் அதே நிலை. காரணம் இருவரும் விளையாட ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நன்றாக நெருங்கிப் பழகி விட்டார்கள். எனவே பிரிய மனமில்லை.
நிரம்பிய கண்ணீரோடும் நிறைவில்லா மனதோடும் அவரை வழியனுப்பி வைத்தேன். இரவு படுக்கையில் படுத்த சமயம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தால் இவ்வாறாக எதிலும் ஆர்வமில்லாமல் இருவரும் காலம் முழுவதும் தவிக்க வேண்டியதில்லை அந்த முஸ்லீம் பெண்ணும் நிம்மதியாக இருந்திருப்பாள் என நினைத்து வழக்கம் போல் சில வாரங்கள் என் தலையணைகளை கண்ணீரால் ஈரமாக்கினேன்.