கடந்த காலங்களின் நினைவு
எனக்குத் திருமணம் ஆன விவரம் தெரியாமல் அவர் என்னுடைய வீட்டிற்கு தற்செயலாக வந்ததும் அதன் பின்னர் காணும் பொங்கலன்று எனக்காக புத்தாடைகளுடன் வந்து தலை தீபாவளி போல கொண்டாடி மகிழ்ந்ததும் என் நினைவுக்கு திரும்பத் திரும்ப வந்து என்னை இன்பக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. அது ஒரு பக்கம் சந்தோஷத்தைத் தந்தது.
இருந்தாலும் நான் அவருடன் பழகிய சமயம் எப்படி இருந்தேனோ அதே போலத் தான் இருக்கின்றேன். உடலளவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே நான் உங்களுடன் வரத் தயார் என்று மறைமுகமாகத் தெரிவித்த போதும் கூட அழைத்துச் செல்ல விரும்பாமல் என்னை என் கணவருடன் சாந்தி முகூர்த்தம் நடை பெற மறுக்க வேண்டாமென அறிவுறுத்தியது எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தந்தது.
அவர் முதல் முதலாக வேலையில் சேர்ந்ததாகச் சொன்னது ஒரு ஊர் இப்போது நான் வசிக்கும் ஊருக்கே வந்து இங்கு வீடு பார்ப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இந்த ஊருக்கு மாற்றலாகி வரப் போகிறாரா அல்லது வந்து விட்டாரா என்னும் விவரத்தினை நான் அப்போதே கேட்க மறந்து விட்டேன். அடுத்த முறை அவர் வரும் சமயம் நான் முதலில் அவர் எந்த ஊரில் பணியில் சேர்ந்தார் என்னும் விவரம் கேட்க வேண்டும்; என்று மனதில் பதிந்து கொண்டேன்.
அடுத்த மாதம் அவர் வருகின்ற நாளை நான் எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாளன்று பிற்பகலில் எனது இல்லத்தில் அவரது கால்கள் பதிந்தன. அப்போதும் நான் மட்டுமே இருந்தேன். வேறு யாரும் வீட்டில் இல்லை.
அப்போது என்னைப் பற்றி நலம் விசாரித்தார். நான் அடுத்க கணமே அழுது விட்டேன். என்னுடைய இந்த செயலை அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவர் என் அழுகைக்கு காரணம் கேட்டார்.
அதற்கு நான் நீங்கள் என்னுடைய ஆள் காட்டி விரலை ஒரே ஒரு முறை தொட்ட காரணத்தால் வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற எந்த கெட்டபழக்கமும் இல்லாமல் இருக்கின்றீர்கள். ஆனால் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவரிடம் நான் அனைத்து கெட்ட பழக்கங்களையும் ஒரு சேர கண் கூடாகக் காண்கின்றேன்.
எனக்குத் திருமணம் ஆகியிருந்தால் கூட கன்னித் தன்மை மாறாமல் இருந்த காரணத்தால் உங்களுடன் ஓடி வந்து விடலாம் என்னும் முடிவில் இருந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவருடன் அவர் குறிப்பிட்ட நல்ல நாளில் சாந்தி முகூர்த்தத்துக்கு தடங்கல் செய்ய வேண்டாம் என்று சொன்னதன் அடிப்படையில் நானும் பேசாமல் இருந்து விட்டேன்.
அவரிடம் முதல் நாளன்று படுக்கையை பகிர்ந்து கொண்ட சமயம் எனக்கு மிகவும் அறுவறுப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கினை புது மணத் தம்பதிகள் கட்டாயம் போட வேண்டும் என்று அவர் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் என்னையும் சாப்பிடச் சொன்னார். எனக்குத் தெரியாமல் சற்று நேரம் வராண்டாவுக்குச் சென்று சிகரட் பிடித்து விட்டு வந்தார். முதலிரவன்றே கட்டிலுக்கு அடியில் மது பாட்டில் இருந்ததை கண்ட எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதே போல இதயம் முழுவதும் உங்களை நினைத்துக் கொண்டு அவருடன் முதலிரவு அனுபவிப்பது என்பது எனக்கு நரக வேதனையாக இருந்தது. உங்களை என்னால் மறக்கவே முடியவில்லை.
அடுத்த நாள் இரவே எனக்கு வெற்றிலை பாக்கு சிகரட் வாடை பிடிக்காத காரணத்தாலும் அவரை என் கணவராக ஏற்றுக் கொள்ள என் மனம் இடம் கொடுக்காததாலும் தாம்பத்தயத்தில் வெறுப்பு ஏற்பட்டு நான் முன்னமேயே தூங்கி விட்டேன்.
நான் தூங்கியவுடன் மீண்டும் கனவு. அதில் நீங்கள் என்னிடம் அலுவலகம் சென்று வருகின்றேன் என்று கேட்டு விடை பெறுகின்றீர்கள். நானும் ஆபீஸ் முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள் நான் இங்கு தனியாக உங்களுக்காக ஏங்கி காத்துக் கொண்டிருப்பேன் என்று என்னையும் மீறி தூக்கத்தில் உரக்கமாகச் சொல்லி விட்டேன்.
அதனைக் கேட்ட அவருக்கு என் மீது லேசான சந்தேகம் வந்த போதிலும் என்னிடம் கேட்க முடியாமல் என்ன மீண்டும் கனவா என்று மட்டும் கேட்டார். அந்த அளவிற்கு நான் உங்களுடன் இரவு பகல் எந்த நேரத்திலும் விழித்திருக்கும் போதிலும் தூக்கத்திலிருக்கும் போதிலும் இணை பிரியாது வாழ்ந்து வருகின்றேன். என் உண்மையான இதயம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது என்று சொன்னேன்.
என்னைத் தொட்டு தாலி கட்டிய கணவரையும் பிடிக்கவில்லை. அவருடன் வலுக் கட்டாயமாக வாழும் தாம்பத்ய வாழ்க்கையும் பிடிக்கவில்லை. எனவே எனக்கு இதற்கு மேல் இரட்டை மனத்துடன் உயிர் வாழ விருப்பமில்லை என்று சொன்னேன். எல்லாவற்றையும் கேட்ட அவர் நான் எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் சொல்லாமல் எல்லாம் சில நாள் தான். அதன் பின்னர் சரியாகி விடும் என்று சொன்னதைக் கேட்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நானும் அவரும் இவ்வாறு மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் என்னைத் தொட்டுத் தாலி கட்டியவரைத் தேடி ஊரிலிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் சமயத்தில் நாம் இருவரும் இருந்ததைப் பார்த்தவர்கள் எங்களிடம் நண்பர்களுக்குக் கூட ஒரு தகவலும் தெரிவிக்காமல் இப்படி திடீரென திருமணம் செய்து கொண்டு இங்கு வந்து குடும்பம் நடத்துகின்றீர்கள். நாங்கள் என்ன அவ்வளவு வேண்டாதவர்களாகப் போய் விட்டோமா என்று கேட்டார்கள்.
அந்த சமயத்தில் நான் என்னுடைய எதிர்கால வாழ்க்கை என்னவாகுமோ என்று ஒரு நிமிடம் பதறிப் போய் விட்டேன்.
அந்த சமயத்தில் அவர் அந்த இரண்டு நபர்களையும் பெயர் சொல்லி அழைத்து நாங்கள் இருவரும் காதலித்ததை மாத்திரம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆனால் எங்கள் காதலை எங்கள் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர்களாகப் பார்த்து என்னவளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இந்த காரணத்தால் இவள் என் மனைவியாக முடியவில்லை.
இருந்தாலும் இன்று நான் இங்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் சமயம் நாங்கள் ஒன்றாக இருந்ததைப் பார்த்ததினால் உங்களுக்கு அவ்வாறு தோன்றி விட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த போதிலும் மணமுடிக்க முடியவில்லை என்று அவர் சொன்னதைக் கேட்ட அவரது நண்பர்கள் நாங்கள் இதற்கு மேல் இங்கு இருக்க விருப்பமில்லை. உங்கள் தனிமையில் தலையிட்டதற்கு மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டு இனி மேல் இந்த வீட்டிற்கு நாங்கள் வரவே மாட்டோம் என்று சொல்லி விட்டு புறப்பட்டனர்.
இப்படியே இவருடன் நான் சேர்ந்து ஊர் சுற்றுவதைப் பார்த்த நண்பாகள் அல்லது உறவினர்கள் யாராவது வந்து கொண்டேயிருந்து எனது காதல் விவகாரம் தாலி கட்டியவருக்குத் தெரிந்தால் என் கதி என்னவாகும் என்னும் கவலை என்னைத் தொற்றிக் கொண்டது.
அதன் பின்னர் நான் ஏற்கனவே யோசித்து வைத்திருந்த படி இந்த ஊருக்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு அவர் நீயும் நானும் நமது குடும்பத்தாருடன் சேர்ந்து புனித யாத்திரை மேற்கொண்ட சமயம் நாம் இருவரும் வழி பாடு செய்த ஒரு ஊரில் தான் எனக்கு வேலை கிடைத்தது. நான் கோயிலுக்குச் செல்லும் சமயம் நீயும் நானும் வழி பட்ட இடங்கள் என்னுடைய தாயரருடன் நீ அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடங்கள் என்பன மாறி மாறி என் கண்முன் தோன்றி என்னை துக்கத்தில் ஆழ்த்தின.
இதற்கு இடையில் என்னுடைய தந்தை நம் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை. உன்னுடைய குடும்பம் என் குடும்பம் உள்ள அந்தஸ்துக்கு ஈடாக இல்லை என்று சொல்லி திருமணம் செய்து வைக்க மறுத்த காரணத்தால் அந்த இடங்களைப் பார்த்தாலே எனக்கு துக்கம் கவ்விக் கொள்ளும்.
எனவே அந்த ஊரில் பணியாற்றி வந்த நான் இந்த ஊருக்கு மாறுதல் ஆகி வந்து விட்டேன். ஊருக்கு வந்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் உன்னை பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தேன். இதற்கு இடையில் உங்களது வீட்டார் சம்மதம் சொன்னால் உங்கள் வீட்டாரின் ஒப்புதலுடன் எங்கள் வீட்டாருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள தீபாவளியன்று முறைப்படி உன் தாயாரிடம் பெண் கேட்டதற்கு உன் கண் முன்னால் என்ன நடந்தது என்று உனக்கே தெரியம்.
உனக்குத் திருமணம் ஆகி இந்த ஊருக்கு வாழ்க்கைத் துணையுடன் தங்கி இருக்கும் விவரம் எனக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் நான் இந்த ஊருக்கு மாறுதல் கேட்டிருக்கவே மாட்டேன்.
சுகமான சோகங்களையும் சோகமான சுகங்களையும் தாங்கிக் கொண்டு நாம் இருவரும் வழிபட்ட அந்த கடவுள்களிடம் எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிவலோக பதவி அல்லது வைகுண்ட பதவி உயர்வு கேட்டு வழிபட்டு கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் உன்னுடைய நினைவாகவே இருந்திருப்பேன் என்று அவர் சொன்னதைக் கேட்ட எனக்கு பேச்சே வரவில்லை.
நான் என் மனதில் இவரை இப்படியே விட்டால் ஏதேனும் விபரீத முடிவுகள் மேற்கொள்ளக் கூடும் என்பதால் இவரிடம் அடிக்கடி பேசி இவர் மனதை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
வழக்கம் போல் நான் அவருக்குக் கொடுத்த பானத்தில் பாதியினை குடிததுவிட்டு சந்தோஷமடைந்தேன். அவரைப் பார்க்காமல் எதுவும் உண்ண மறுத்து விட்டார்.
அவர் என்னிடமிருந்து விடைபெறும் சமயம் என் உயிர் போய்க் கொண்டே இருப்பது போன்ற உணர்வு.