அடுத்தது என்னவாக இருக்கும்?
வெள்ளிக் கிழமையன்று நான் கடவுளை வணங்கி முடிக்கும் தருவாயில் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். நானாகக் காபி கொடுக்கும் வரையில் காத்திராமல் தனக்குத் தலை வலியாக இருப்பதால் உடனடியாக காபி வேண்டும் எனக் கேட்டார். இத்தனை நாட்கள் பழகி இது வரையில் இப்படி தலை வலி என்று ஒரு நாள் கூட சொன்னதே கிடையாது. நான் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வந்தேன்.
உடனே அவர் நான் மனைவியுடன் வந்து சென்ற காரணத்தால் உனக்குத் தனியாக எனக்குத் தனியாக என காபியினை பிரித்து விட்டாயா எனக் கேட்டார். அப்படியில்லை தலை வலி என்று சொன்ன காரணத்தால் ஒரு டம்ளர் முழுவதையும் நீங்கள் குடித்து விட்டு இன்னொரு டம்ளரில் உள்ளதிலிருந்து எனக்குப் பாதி கொடுங்கள் அப்போது தான் தலை வலி சீக்கிரம் தீரும் எனச் சொன்னேன். அவரும் அப்படியே செய்தார். நீண்ட நேரம் நாம் இருவரும் உரையாடிய பின்னர் அவர் தமது இல்லம் திரும்பினார். அதன் பின்னர் தொடர்ந்து ஓரிரு வாரங்கள் வரவேயில்லை.
இதற்கிடையில் எனது வீட்டிற்கு அவரது மாமனார் சம்மந்தப்பட்ட உறவினர்கள் வந்து என் கணவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது என் கணவர் வந்திருப்பவருடன் அவரது உறவு பற்றி என்னிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
வந்திருந்த அவரது உறவினர்கள் என் கணவரிடத்தில் அவர் எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகுவதுடன் நிறைய நண்பர்களைப் பெற்று இருக்கின்றார். அவருக்கு அலுவலக நேரத்தில் சாப்பிடக் கூட நேரமில்லாமல் இருக்கும். மாமனார் வீட்டில் விருந்து என்று எல்லோரையும் அழைத்து நாங்கள் அனைவரும் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருப்போம்.
திடீரென மதிய உணவிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் சிவப்பு விளக்கு பொறுத்தப் பட்ட காரில் வந்து அவசர அவசரமாக விருந்து சாப்பிட்டு விட்டு யாரிடத்திலும் பேச நேரமில்லாமல் வெற்றிலை பாக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு திரும்பி விடுவார்.
சில நாட்களில் அலுவலகத்திற்குப் புறப்படும் சமயத்தில் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்லும் அவர் திரும்ப வரும் சமயம் அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் அவசர அவசரமாக குளித்து விட்டு வீட்டிற்குள் செல்வார்.
அதன் பின்னர் சாவகாசமாக யாரோ ஒருவர் இறந்து விட்ட காரணத்தால் இறுதிச் சடங்கிற்கு சென்று மலர் வளையம் வைத்து விட்டு வந்த காரணத்தால் குளித்ததாகவும் தெரிவிப்பார். அவர் வகித்துள்ள பதவி சுதந்திரமில்லாதபடி அவரை அப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது.
இவ்வளவு உயர்ந்த இடத்தில் நல்ல பதவியில் இருந்தாலும் அனைவர் சொல்லுக்கும் கட்டுப்படுவார். வீடு பார்ப்பதற்கு கூட நேரமில்லாமல் அவரது மாமனார் மாமியார் பார்த்த வீட்டிற்கு குடி வந்துள்ள போதிலும் அந்த வீடு பிடிக்கவில்லை என்றும் பெற்றோர் வீட்டுக்கு பக்கத்திலேயே வீடு இருக்க வேண்டும் எனவும் அவரது மனைவி பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்கின்றாள் எனவும் தெரிவித்தார்.
பெண்ணின் பெற்றோர் சொல்லிப் பார்த்து விட்டார்கள். பெரியவர்கள் என்னும் முறையில் நாங்கள் கூட சொல்லிப் பார்த்து விட்டோம். அவரது அண்ணன் அண்ணி இருவரும் கூட சொல்லிப் பார்த்து விட்டார்கள். அவர்கள் வீட்டிலேயே கூட தங்கச் சொல்லியும் பார்த்து விட்டார்கள். ஆனால் அவரது மனைவி எதனையும் கேட்பதாகத் தெரியவில்லை.
இந்த விவரங்களை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்குள் நானே நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இல்லத்திற்கு அருகாமையில் குடிவந்துள்ள காரணத்தால் வீடு மாற்ற வேண்டும் எனக்கூறி அவரது மனைவி அடம் பிடித்து வருகின்றார். இந்த வீட்டிலிருந்து எங்கு மாற்றினாலும் அந்த ஏரியாவில் அவருடன் பணியாற்றும் தோழிகளில் ஒருத்தி கட்டாயம் இருப்பாள். அவருக்கு தற்போது கிடைத்துள்ள தோழிகள் அனைவரும் மிக மிக நாகரீகமானவர்கள். அவருக்காக எதனையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
உதாரணத்திற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கொடுக்கப் படுகின்ற மாத்திரைகளைக் கூட தானும் சாப்பிட்டு சரிபார்த்த பின்னர் அவருக்கு கொடுக்கக் கூடிய அளவிற்கு அன்பு வைத்துள்ளவள் ஒருபுறம்.. அதே போல வீட்டிலிருந்து அவருக்கு உணவு கொண்டு வந்து பரிமாறி அந்த தட்டினைக் கூட கழுவி வைக்கும் அளவிற்கு நெருக்கமான தோழி மறுபுறம். இது போல இன்னும் எத்தனையோ.
இவ்வாறு இருக்கையில் இந்த ஊரில் அவர் எங்கு குடி ஏறினாலும் அங்கு ஒரு தோழி கட்டாயம் இருப்பாள். அப்போது அந்த தோழியின் வீட்டுக்குப் பக்கத்தில் குடி வந்தது தவறு என்று மீண்டும் வீட்டை மாற்றச் சொன்னால் அவரால் என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் அவருக்கு தலை வலிப்பதாகச் சொல்லி இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டார். அச்சமயம் காய்ச்சல் கூட இருந்தது. அவர் அலுவலகத்திற்கு வரவில்லை என்றதும் அவருடன் பணியாற்றி வரும் அவருடைய பெண் தோழிகள் சமார் 30 பேர் நேரடியாக வந்து உடல் நலம் விசாரித்தனர்.
அதில் ஒருத்தி ஒரு டாக்டரை அழைத்து வந்து இருந்தார். அவர் உடல் நிலையை பரிசோதித்து விட்டு இது வைரஸ் காய்ச்சல் எனவும் நீண்ட நாட்கள் ஓய்வு தேவை எனவும் சொல்லி அவருடைய பெரிய டாக்டரை உடனே வரவழைத்தார். அவர் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றி வருவதால் அவரை பரிசோதித்து விட்டு குறைந்த பட்சம் 30 நாட்கள் லீவு போடத் தான் வேண்டும் எனச் சொல்லி அதற்கான சான்றிதழைக் கொடுத்து நீண்ட நாட்கள் லீவு போட வைத்து விட்டார்கள் அவருடைய தோழிகள்.
எனக்கு 75 வயதுக்கு மேலாகியும் கூட உடல் நலமில்லை என்று உறவினர்களுக்குத் தகவல் சொன்னால் என்னைப் பார்க்க அதிக பட்சம் 10 பேர் தான் வருவார்கள் ஆனால் அவரைக் காண ஒரு பட்டாளமே திரண்டு வருவதோடு உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றார்கள். திருமணச் சீர் வரிசை போல ஹார்லிக்ஸ். குளுகோஸ். போர்ன்வீடா, ஓவல்டின் என ஒரு மாதத்திற்குத் தேவையானதை கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த அளவிற்கு அவர் நெருக்கமான நண்பர்களை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுள்ளார் என்பது மிக மிக ஆச்சர்யமான ஒன்று.
அவரைப் பார்க்க வந்துள்ளவர்களில் ஒரு பெண் உடனடியாக இவரை தாய் தந்தையர் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் படியும் இங்கேயே இருந்தால் அலுவலகத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் அவரால் ஓய்வு எடுக்க முடியாது என்றும் சொன்னதைக் கேட்ட அவரது மனைவி அந்த ஊருக்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே இருந்து ஓய்வு எடுக்கட்டும் எனச் சொன்னவுடன் அவருடைய மனைவியான நீங்கள் அவருடன் செல்ல முடிந்தால் செல்லுங்கள் இல்லையேல் அவரை மட்டும் அனுப்பி வையுங்கள் என்று சொன்னார்கள்.
இந்த ஊரிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தால் ஓய்வு கிடைக்காது என்று சொல்லி கட்டாயம் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அது சமயம் அவர் தமது மனைவியை அழைத்துச் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும் பெற்றோர் வலுக் கட்டாயமாக அவருடன் மனைவியை அனுப்பி வைத்துள்ளனர். அதன் படி அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று இருக்கின்றார்கள். அங்கேயும் அவரை கவனிக்க டாக்டரை அவர்களே ஏற்பாடு செய்து விட்டார்கள் எனத் தெரிவித்தார். .
சாதாரணமாக எனக்கு அவரை காணாமல் தூக்கம் வராது. தற்போது அவருக்கு உடல் நலமில்லை. சொந்த ஊருக்குப் போய் இருக்கின்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனடியாக அவரது நண்பரான எனது உறவினரை தொலை பேசியில் அழைத்து விவரம் சொல்லி அவரது இல்லத்திற்கு அடிக்கடி சென்று அவரது உடல் நலம் விசாரித்து எனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அவரும் அதே போல ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று அவரது வீட்டிற்குச் சென்று வந்த விவரத்தையும் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் பற்றியும் என்னிடம் தெரிவிப்பார். அவ்வாறு அவர் அவரது உடல் நிலை பற்றி தெரிவித்து முடித்தவுடன் நான் அவர் எப்போது திரும்புவார் என்றும் எப்போது என்னைக் காண வருவார் என்றும் விசாரிப்பேன்.
அவர் பூரண உடல் நலம் பெற்று இங்கு திரும்பி வரவேண்டும் என்னைக் காண விரைவில் எனது இல்லத்திற்கு வர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டேன். அவர் திரும்பி வந்த பின்னர் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை.