அவரது வருகை எதிர்பார்க்கப் படுகின்றது.
எனது இரண்டாவது மகனின் திருமணத்திற்குப் பின்னர் அவர் எனது இல்லத்திற்கு இரண்டாவது முறை வந்த சமயம் என் மருமகள் அவருக்காக என் உதவி இல்லாமல் அவள் கையால் உணவு சமைத்து பரிமாறினாள். அது மட்டுமல்லாமல் மிகவும் வசதி படைத்தவர்களாக இருக்கின்ற அவளது வளர்ப்புத் தாயாரை உடனடியாக தொலை பேசி மூலம் வருமாறு அழைத்து அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடத்தில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தும் கூட மன நிம்மதியில்லாமல் இருப்பதை போக்குவதற்கு நீண்ட நேரம் அவர்களிடத்தில் உரையாடி ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டோம்.
அவ்வாறு ஆலோசனையில் ஈடுபடும் வேளையில் என் மகன் வீடு கட்டுவதில் உள்ள நிதிப் பற்றாக் குறையினை அறிந்து கடன் வாங்கி தவணை மற்றும் வட்டி கட்டி கஷ்டப் படாமல் இருக்க மருமகளின் வளர்ப்புத் தாயார் நிதியுதவி செய்யப் போவதாகவும் அதற்குப் பதிலாக அவர்கள் என் மகன் வீட்டில் தங்கிக் கொள்ள ஒரு அறையினையோ அல்லது ஒரு பகுதியினையினையோ ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக அவர்கள் தனிமையிலிருந்து விடுபட்டு நம்முடன் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டு உரையாடிக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியும் எனவும் தனியே சமைத்துக் கஷ்டப்பட வேண்டியதில்லை என்பதனையும் உணர்ந்தார்கள்.
அவர் ஊருக்குத் திரும்பிய பின்னர் நான் என் மருமகளுடன் அவளது இல்லத்திற்குச் சென்று ஓரிரு வாரங்கள் தங்கி மகன் வந்த பின்னர் அனைவரும் இல்லம் திரும்பினோம். மருமகளின் வளர்ப்புத் தாயார் ஊரிலேயே தங்கிக் கொண்டார்கள். என் மருமகள் சின்னக் குழந்தை போல இருந்த போதிலும் அவள் வயிற்றில் ஒரு குழந்தையை சுமக்க ஆரம்பித்தாள். ஒரு பக்கம் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரு பக்கம் மருமகள் வயிற்றில் கரு உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் அவரது வருகைக்காக நானும் என் மருமகளும் காத்துக் கொண்டிருந்தோம். அவர் வரவில்லை. என் மருமகள் அவரை எப்படியாவது வர வையுங்கள் என என்னிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய உறவினரான அவருடைய நண்பரை தொலை பேசியில் அழைத்து விவரம் சொல்ல முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்ட சமயத்தில் அவர் உடல் நலம் குன்றி மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிய வந்தது.
மருமகள் 3 மாதம் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அடிக்கடி வாந்தி எடுப்பது மயக்கம் வருவது போன்ற உணர்வு மற்றும் தலை சுற்றல் போன்ற உடல் உபாதைகள் இருந்து வந்தது. வாய்க்கு ருசியாக முறையாக உணவு உட்கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப் பட்டாள். நான் என் மகனிடத்தில் உடல் நலமின்றி இருக்கின்ற உறவினரைக் காண சொந்த ஊருக்குச் செல்லப் போவதாகத் தெரிவித்த சமயம் உடனடியாக என் மருமகளின் வளர்ப்புத் தாயாரை வரவழைத்து எனது இல்லத்தில் தங்க வைத்த பின்னர் சொந்த ஊருக்கு சென்றடைந்தேன்.
நான் ஊருக்குச் சென்றடைந்த சில மணி நேரங்களில் அவரது நண்பரான எனது உறவினர் இயற்கை எய்தி விட்டார். நான் அவரை சந்தித்த நாள் முதல் அவரது உயிர் பிரியும் வரையிலும் நம் இருவருக்குமிடையே அன்புப் பாலமாக இருந்து செயல்பட்டது எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. உடன் பிரியாத உயிர் நண்பரின் இறுதிச் சடங்கில் கட்டாயம் கலந்து கொள்ள வருவார். அந்த நேரத்தில் அவரிடத்தில் எனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பதென காத்திருந்தேன். ஆனால் அவர் கோயிலுக்குச் செல்வதற்கு மாலை போட்டுள்ள காரணத்தால் வர முடியவில்லை என்பதனை அங்கு வந்திருந்த மற்ற நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
அவரை வழியில் எங்கும் சந்திக்க முடியவில்லை. அவரது இல்லத்திற்குச் சென்றால் அவருக்கு குடும்பத்தினரால் பிரச்சினைகள் வரக்கூடும் என எண்ணி மன வேதனையுடன் மீண்டும் ஊருக்குத் திரும்பினேன். அவரைக் கட்டாயம் காண வேண்டும் என்று எண்ணி சொந்த ஊருக்குச் சென்றும் கூட அவரைக் காணாமல் திரும்பியது எனக்கு மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது.
என் மருமகள் என்னிடத்தில் எனக்கு நடந்த வளைகாப்பு வைபவம் பற்றிக் கேட்ட சமயம் நான் எதனையும் மறைக்காமல் நான் முதல் முறை கருத்தரித்த சமயம் என் தாய் வீட்டாரின் வறுமை காரணமாகவும் கணவரின் சுய கௌரவ பிடிவாதத்தின் காரணமாகவும் வளைகாப்பு வைபவம் என்னும் சடங்கு சம்பிரதாயம் நடைபெறவில்லை என்பதனையும் அதற்குப் பதிலாக அவர் அவரது அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண் தோழிகள் அனைவருக்கும் வளையல்களை வாங்கிக் கொடுத்து அனைவரும் ஒரே நாளில் புது வளையல் அணிந்து எனது வளை காப்பினை கொண்டாடினார்கள் எனவும் தெரிவித்தேன். அவர் எனக்கு வாங்கிக் கொடுத்த வளையல்களை நான் மாத்திரம் அவர் சொன்ன ஒரு குறிப்பிட்ட நாளில் நானாகவே அணிந்து கொண்டேன் எனத் தெரிவித்தேன்.
பிரசவத்திற்குப் பின்னர் பிறந்த குழந்தைக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுக்காமல் எனக்கும் சேர்த்து புத்தாடை வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தினார் எனத் தெரிவித்தேன். எனக்குத் திருமணம் ஆகும் வரையில் என்னை அவருடைய வருங்கால மனைவி என்றே அனைவரிடத்திலும் சொல்லி வந்தார் எனத் தெரிவித்தேன். அவர் அதனை ஆங்கிலத்தில் சொல்லும் சமயம் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு வார்த்தையினைச் சொல்வார். அதனைக் கேட்கும் அவரது நண்பர்களுக்கும் சில வேளைகளில் புரியாது. அவர்கள் மீண்டும் ஒரு முறை அவரிடத்தில் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் எனச் சொன்னேன். அந்த சமயம் என் மருமகள் அந்த வார்த்தை “Would be” தானே எனக் கேட்டாள். அப்படிச் சொன்னால் இரண்டு வார்த்தைகளாக பிரிந்து விடும் என்பதன் காரணமாக ஒரே வார்த்தையில் வருங்கால மனைவி என்பதனை தேடிக் கண்டு பிடித்துச் சொல்வார் எனத் தெரிவித்தேன். உடனே என் மருமகள் ஏதோ ஒரு ஆங்கிலத் தமிழ் அகராதி புத்தகத்தைப் படித்து அந்த வார்த்தை “Fiance” எனச் சொன்னாள். நானும் ஆமாம் என ஒப்புக் கொண்டேன்.
என்னைப் போல வளைகாப்பு நடக்கவில்லை என்னும் ஏக்கம் என் மருமகளுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் மருமகளுக்கு ஐந்தாவது மாதத்தில் வளை காப்பு வைபவத்தினை நடத்தி வைத்தேன். வளைகாப்பு முடிந்த ஒரு வார காலத்திற்குள் அவரிடமிருந்து எனது வீட்டிற்கு தொலை பேசி அழைப்பு வந்தது. என் மருமகள் தொலைபேசியில் பேசினாள். அந்த சமயம் அவர் அவருக்கு மிக மிக நெருக்கமான உறவினரது மறைவின் காரணமாக ஊருக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். அந்த சமயம் நான் அவரிடத்தில் தொலைபேசியில் மருமகளுக்கு வளைகாப்பு நடத்தியதைப் பற்றித் தெரிவித்து விட்டு வீடு கட்டுவது தொடர்பாக சில ஆலோசனைகளுக்காக எனது இல்லத்திற்கு வருமாறு அழைத்தேன். அதற்கு அவர் மாலை வேளையில் எனது மகன் வீட்டில் இருக்கும் சமயம் மீண்டும் தொலைபேசியில் பேசுவதாகத் தெரிவித்தார். வீட்டிற்கு அழைத்ததற்கு துக்க காரியத்திற்கு வந்த பின்னர் எனது இல்லத்திற்கு வருவது சரியல்ல எனத் தெரிவித்தார். அவர் சொல்வது ஒரு வகையில் சரியாக இருக்கும்.
மாலையில் எனது மகன் வீட்டிற்கு வந்த பின்னர் அவரது தொலைபேசி அழைப்பினை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தோம். அவர் சொன்னவாறு தொலைபேசியில் பேசினார். என் மகன் அவரிடத்தில் வீடு கட்டும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகத் தெரிவித்து எப்போது புது வீட்டுக்கு கிரஹப் பிரவேசம் செய்யலாம் எனக் கேட்டான்.
எனது இரண்டாவது மகன் வீடு வாங்கியிருப்பதன் காரணமாகவும் இரண்டாவது மருமகள் கர்ப்பம் தரித்திருப்பதாலும் குழந்தை பிறந்த பின்னர் தான் வீட்டுக்கு குடி போக முடியும் எனத் தெரிவித்தார். விளக்கம் கேட்டதற்கு புரோகிதர் வந்து வேத மந்திரங்கள் சொல்லி விட்டு யாகம் முடிந்த பின்னர் அவர் கும்ப கலசத்தில் உள்ள புனித தீர்த்தத்தினை மாவிலை கொண்டு வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் அனைத்து பகுதிகளிலும் தெளிக்கச் சொல்வார் எனவும் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு மாடிப் படி ஏறி இறங்க முடியாது எனவும் ஹோமத்தின் சமயம் கர்ப்பிணிப் பெண் அடிக்கடி எழுந்து அமர்ந்து ஹோம குண்டத்தை சுற்றி வந்து ஹோமத்தில் ஈடுபடுவது உடல் உபாதையைக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார். அதன் பின்னர் அவரை வீட்டுக்கு வருமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டதற்கு அடுத்த முறை வரும் சமயம் கட்டாயம் எனது இல்லத்திற்கு வருவதாகத் தெரிவித்தார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல அவர் இந்த ஊருக்கு வந்தும் கூட அவரால் என்னுடைய இல்லத்திற்கு வந்து செல்ல முடியாமல் சாஸ்திர சம்பிரதாயங்கள் அவரைத் தடுக்கின்றன என்பதனை நினைத்து நான் மிகவும் வருந்தினேன். என் மருமகள் வயிற்றில் கருவைச் சுமப்பதனால் அவரது வருகை தள்ளிப் போனதற்காக வருத்தப்படக் கூடாது என அறிவுரை சொன்னேன். அறிவுரை அவளுக்கு மட்டும் தான் எனக்கில்லை.
நான் அவரைக் காதலித்த சமயம் நம் இருவருக்குள் இருந்த மன ஒற்றுமை பற்றியும் ஒருமித்த செயல்கள் பற்றியும் கேட்டுக் கேட்டு சந்தோஷப் படுவாள். நான் என் மருமகளிடத்தில் எங்கு நான் வாழ்ந்தாலும் அவருடன் கூட வாழ்ந்தால் எப்படி இருந்திருக்குமென்ற நினைப்பினிலே தான் வாழ்கின்றேன் எனச் சொன்னேன். அவரை நினைப்பதனால் வருகின்ற எனது சோகங்களை மறக்க எண்ணிக் கொண்டு அவரை மறக்க முடியாமல் நினைத்துக் கொண்டு எப்போதும் அவரை இழந்து விட்டோம் என்னும் வருத்தத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என என் மருமகளிடத்தில் நான் சொன்ன சமயம் அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவர் நேரில் வந்து அறை மணி நேரம் பேசி விட்டுச் சென்றால் என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் மறைந்து விடும். ஆனால் அன்றிரவு தூக்கமிழந்து தவிப்பேன் எனச் சொன்னேன்.
வழக்கமாக பெண்களின் தலைப் பிரசவத்தை பெண்ணின் பெற்றோர் வீட்டில் வைத்துக் கொள்வார்கள். ஆனால் என் மருமகளின் தந்தை வளர்ப்புத் தாயாரின் வீட்டில் பணி செய்த சமயம் காலமாகி விட்ட காரணத்தால் அவர்களே படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்கள். வளர்ப்புத் தாயாரின் வாரிசுகள் என் மருமகளின் பிரசவத்தை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளாத நிலையில் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் எங்கள் வீட்டிற்கு மருமகளின் பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே வந்து தங்கிக் கொண்டார்கள்.
அவர்களது நான்கு மகன்களும் வெளி நாடுகளில் வசிக்கின்ற நிலையில் சொந்த மருமகள்கள் கருத்தரித்த சமயம் அந்தந்த நாடுகளில் குழந்தை பெற்றுக் கொண்டால் விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகள் வராது என்பதற்காக மருமகள்களின் பெற்றோர்களை வரவழைத்து பிரசவம் பார்த்துக் கொண்டார்கள். எனவே என் மருமகளை நானும் அவளது வளர்ப்புத் தாயாரும் சேர்ந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கின்றோம்.
பகல் முழுவதும் மருமகளைப் பார்த்துக் கொண்டும் அவளது வளர்ப்புத் தாயாரிடம் பேசிக் கொண்டும் இருந்து பொழுது போக்கி விட்டு இரவு படுக்கையில் சென்ற பின்னர் எனக்கு அவரது நினைவுகள் வாட்டத் தொடங்கி விடும். அவரது உடல் நிலை எப்படி இருக்கின்றதோ ஆரோக்யமாக இருக்கின்றாரா இல்லையா என பலப்பல எண்ணங்கள் என்னை சுற்றி வட்டமிடும். முழித்துக் கொண்டிருந்தால் அவரது நினைவு. தூங்கிக் கொண்டிருந்தால் அவரது கனவு வரவேண்டும் என நினைப்பேன். ஆனால் தூக்கமே வராமல் தவிப்பேன்.
சில சமயங்களில் எனது எண்ணங்கள் வேறு மாதிரியாக இருக்கும். அதாவது அவரைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவர் என்னைத் தூங்க விட்டிருக்க மாட்டார். ஆனால் அவரை நான் இழந்து விட்ட காரணத்தால் பலப் பல இரவுகள் எனக்கு தூக்கம் இல்லாமல் இருக்கின்றன.