எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
அனைவரும் எதிர்பார்த்த தீபாவளித் திருநாள் நெருங்கி விட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள் அவர் என்னைத் தேடி வருவாரென ஏக்கமுடன் காத்திருந்தேன். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நேரத்தில் கடைத் தெருவில் தீபாவளிக்கு முந்தைய கடைசி நேர தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பார்கள்.
ஒரு வேளை அந்த நேரத்தில் அந்த கூட்டத்தில் அவர் என் கண்ணில் படுவாரென்னும் எதிர்பார்ப்புடன் என்னுடைய குடும்பத்தார் அழைப்பின் பேரில் அன்று மட்டும் மிக்க ஆவலுடன் கடைத் தெருவுக்குச் சென்றேன். கடைத் தெருவில் பல மணி நேரம் சுற்றி அசதியானது தான் மிச்சம்.
பழைய காம்பவுண்ட் வீட்டில் இருந்த அனைவரும் என் கண்ணில் பட்டு விட்டார்கள். அவர்களுடன் நான் பேசும் போது அவரைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களிடமும் நான் அவரைப் பார்த்தீர்களா என்று கேட்டுப் பார்த்தேன். யாரும் பார்க்கவில்லை என்று சொன்னார்கள். நான் எல்லோரையும் காண முடிந்தது. ஆனால் அவரை மட்டும் நான் என் கண்களால் காண முடியவில்லை.
வீட்டுக்குத் திரும்பும் கடைசி நேரத்தில் அவரது நண்பர் ஒருவர் என்னைப் பார்த்த சமயம் அவர் நாளைக்குத் தான் வருகிறார் என்று தெரிவித்த விஷயத்தை கேட்ட எனக்கு உள் மனதில் சந்தோஷம். நாளையாவது நான் அவரைப் பார்க்க முடியும் என்று பூரித்துப் போனேன்.
தீபாவளியன்று காலை எண்ணெய் ஸ்நானம் முடிந்து புத்தாடைகளில் எதனை உடுத்துவது என்று யோசித்தேன். முதல் முதலாக அதிக அளவு விலை கொடுத்து பட்டுப் புடவை வாங்கியுள்ளார்கள். அந்த பட்டுப் புடவையினை உடுத்திக் கொண்டு அவருடன் சென்று அவருடைய தாயாரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று அந்த புடவையினை தொட்ட சமயம் எனது தாயார் இன்றைக்கு நீ பாவாடை தாவணி மாத்திரம் உடுத்திக் கொள் என்று சொன்னார்கள். நானும் சரியென்று உடுத்தியவுடன் என் கண்கள் அவரை எதிர் பார்த்தன. அவர் வரவில்லை.
எனக்கு ஒரு சந்தேகம். என்னவெனில் அவரது தந்தை சென்ற முறை அவர் வந்திருந்த சமயம் என்னை மணமுடித்து வைக்க மறுத்து விட்ட காரணத்தால் வராமல் இருந்திருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவரது தந்தை இடையில் வந்த சமயம் தீபாவளிக்கு கட்டாயம் வரலாம் என்று எதிர் பார்க்கிறேன் என்று சொன்னார். அத்துடன் அவரது நண்பர் கூட அவர் வருவதை என்னிடம் நேற்று உறுதி செய்தார். எனவே கட்டாயம் வந்திருப்பார் என்று நான் என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
சற்று நேரம் கழித்து என்னுடைய தங்கையும் என் தங்கையின் கணவரும் புதிதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள மணப்பெண்கள் மற்றும் அவர்களின் எதிர்கால மணமகன்கள் அனைவருமாக சேர்ந்து கோயிலுக்கு புறப்பட்டனர்.
என்னையும் அழைத்தார்கள். அவர் வீட்டிற்கு வரும் சமயம் நான் இல்லாவிட்டால் அவர் ஏமாற்றமடைவார் என்று நினைத்து நான் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்த சமயம் என்னுடைய தாயார் சற்று கட்டளையிடும் தோரணையில் அதிகாரத்துடன் கூப்பிட்டால் சென்று வருவது தான் குடும்பப் பெண்ணுக்கு அழகு என்று சொன்னவுடன் நான் எதுவும் பேச முடியாமல் அவர்களுடன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
கோயிலுக்குச் சென்று வழிபாடு முடிந்தவுடன் என்னுடைய தங்கையும் அவரது வீட்டுக் காரரும் புதுமணப் பெண்களின் சம்மந்தி வீட்டுக்குச் சென்று எதிர் கால மணமகன்களையும் புது மணப் பெண்களையும் அவரவர் வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பினார்கள்.
அப்போது நான் என் தங்கை மற்றும் தங்கை வீட்டுக்காரர் மற்றும் இதர உறவினர்கள் மாத்திரம் திரும்பிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்றவுடன் சிறிது நேரத்தில் அவர் என் வீடு தேடி வந்துள்ளார். அச்சமயம் என்னுடைய தாயார் மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள். வேறு யாரும் வீட்டில் இல்லை.
அவர் என்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள என் தாயாரிடம் சம்மதம் கேட்டு இருக்கின்றார். அதற்கு என்னுடைய தாயார் தகாத வார்த்தைகள் பேசி விட்டு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டிருக்கிறார்கள்.
நான் அப்பொழுது தான் எனது வீட்டிற்கு மிக மிக அருகில் உறவினர்களுடன் வந்து கொண்டிருந்தேன். அவர் என் தாயாரால் தள்ளி விடப் பட்டு என் கண்ணெதிரிலேயே நடு ரோட்டில் விழுவதை பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அவர் தரையில் பின் பக்கமாக விழுந்து விட்டார்.
அவரை தூக்கவோ அல்லது என்னவென்று கேட்கவோ என் குடும்பத்தினர் யாரும் முன் வரவில்லை. என் தாயாரால் தள்ளி விடப்பட்டு நடு ரோட்டில் விழுந்த அவருக்கு கை கால்களில் ரத்த காயங்கள். அத்துடன் அருகில் மற்றவர்கள் பட்டாசுகளையும் வெடிகளையும் வெடித்துக் கொண்டிருந்தார்கள். அவற்றையும் ரத்த காயங்களுடன் எழுந்திருக்க முடியாமல் தவிக்கும் அவரையும் ஒரே நேரத்தில் பார்த்த நான் என் உயிரே போய் விட்டது போல் துடித்து அவரை தூக்கச் சென்றேன்.
அப்போது என் தாயார் குறுக்கே வந்து என்னைத் தடுத்து விட்டார்கள். என்னை தர தரவென்று என் தாயார் மற்றும் என் தங்கை மற்றும் இதர உறுப்பினர்கள் ஏறக்குறைய 10 பேருக்கு மேல் என்னை வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு போய் ஒரு அறையில் போட்டு கதவினை பூட்டி விட்டார்கள்.
அதே போல தெருவில் உள்ள வாசல் கதவினையும் சாத்தி விட்டார்கள். நான் பூட்டி வைக்கப் பட்ட அறையிலிருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சமயம் அவர் கை கால்களில் இரத்த காயங்களுடன் தலையிலும் அடிபட்ட காரணத்தால் எழுந்து நடப்பதற்குக் கூட கஷ்டப்பட்டு என்னுடைய வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாத காரணத்தால் விரக்தியுடன் திரும்ப சென்று விட்டார். அந்த காட்சியைப் பார்த்த எனக்கு இது போன்ற காட்சியை அறங்கேற்றம் செய்யத் தான் அவரது தந்தை என்னுடைய வீட்டிற்கு இத்தனை முறை மீண்டும் மீண்டும் வந்து சதி ஆலோசனைகள் செய்து திரும்பியுள்ளார் என்னும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதனால் தான் வீட்டிற்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார் என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.
நான் என்னைப் பூட்டி வைத்துள்ள அறையின் கதவினை திறக்குமாறு சொல்லி பல முறை கதவினை தட்டிக் கொண்டே இருந்தேன். யாரும் கதவினை திறக்கவில்லை. என் உறவினர்களிடம் என் தாயார் பேசியது என் செவிகளில் விழுந்தது கேட்ட நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
என்னுடைய தங்கை மற்றும் அவளது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து என்னை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்ற சிறிது நேரத்தில் அவர் வந்ததாகவும் தனக்கு நல்ல அரசாங்க வேலை கிடைத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதாகவும் இருவருக்கும் திருமணத்திற்கான வயது 18 மற்றும் 21 ஐ தாண்டி விட்டதாகவும் கூறி என் தாயாரிடம் என்னை மணமுடித்து வைக்குமாறு கேட்டதாகவும் கூறினார்கள்.
இது மாதிரியான சம்பவம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அவருடைய தந்தை இரண்டு மாதங்களாக வந்து சென்று அறிவுரைகள் சொல்லி வந்ததாகவும் தெரிவித்தார்கள்.
அவரது தந்தை சொல்வதைக் கேட்பதற்கு ஒரே காரணம் அடமானத்தில் இருந்த இந்த வீட்டினை திருப்பவும் மீண்டும் வங்கியில் அந்த வீட்டுப் பத்திரத்தினை வைத்து கடன் வாங்கவும் ஜாமீன் கையெழுத்து போட்டு சொந்தமாக வீடு உள்ளது என்பதனை வரவிருக்கும் புதிய சம்மந்திகளிடம் நிரூபிக்க தக்க உதவிகள் செய்ததும் தான் எனவும் அவ்வப்போது இரண்டு பெண்களின் திருமணமும் தடையின்றி நடக்க ஆலோசனைகள் சொன்னதும் தான் என்றும் சொன்னார்கள். இதுவும் தவிர வேறெதுவும் கூட ;நடந்திருக்கின்றது. ;அதனைச் சொல்ல மறுக்கின்றார்கள்
அவரது தந்தை எனது தங்கையின் கணவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு உதவியதற்கு ஒரே காரணம் இரண்டு பேரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இருவரும் பங்காளி முறையில் வருகின்றார்கள். எனவே அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சொண்டு எங்களது வாழ்க்கையினை சீரழித்து விட்டார்கள். இதனால் நாங்கள் மட்டுமல்ல எங்களை மணமக்களாக பார்க்க துடித்துக் கொண்டிருக்கும அவரது தாயும் கஷ்டப் படப் போகின்றார்கள்.
தீபாவளியன்று பகல் உணவை நான் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையினைத் திறந்து கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர் இரத்த காயங்களுடன் கஷ்டப்பட்டிருக்கும் சமயம் எனக்கு உணவு தேவையில்லை என்று எதுவும் உண்ணவில்லை. இரவும் அது போலத்தான்.
மறு நாள் காலையில் என்னைப் பூட்டி வைத்த கதவினைத் திறந்தார்கள். நான் எவ்வளவு சீக்கிரம் குளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளித்து விட்டு வெளியில் புறப்படத் தயாரானேன்.
அப்போது அனைவரும் எங்கே புறப்படுகின்றாய் என்று கேட்க நான் அவரைப் பார்க்கப் புறப் படுகின்றேன் என்று சொன்னதற்கு அவன் நேற்றே புத்தாடை கூட உடுத்தாமல் வந்த ஊருக்கே திரும்பி விட்டான் என்று சொன்னார்கள்.
நான் அவருடைய தாயாரையாவது பார்த்து வருகின்றேன் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கு எனக்கு கிடைத்தது அனைவர் கைகளாலும் அடி உதை. அவரே இரத்த காயங்களுடன் திரும்பி இருக்கும் போது அடி உதை எல்லாவற்றையும் சந்தோஷமாக நான் தாங்கிக் கொண்டேன்.
இதற்கு இடையில் நாளை உன்னைப் பெண் பார்க்க வருகின்றார்கள். அவர்களுக்கு உன்னை பிடித்திருந்தால் உடனே திருமணம் என்று சொன்னார்கள்.
நான் எவ்வளவோ முயன்றும் என்னால் எதிர்த்து நிற்கவோ அல்லது அந்த வீட்டினை விட்டு வெளியேறவோ முடியவில்லை.
இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமான விலை கொடுத்து புதிதாக பட்டுப்புடவை வாங்கியதை பலி கொடுக்கும் ஆட்டிற்கு புது மாலை போடுவது போல என்னை கட்டாயப் படுத்தி உடுத்த வைத்தார்கள்.
உள்ளுரில் சில மாடுகள் விலை போகாது என்பார்கள். அது போல என்னையும் அவரையும் இந்த ஊரில் உள்ள அனைவரும் பல முறை சேர்ந்து சுற்றுவதை பார்த்து இருப்பதால் உள்ளுர்க் காரன் எவனும் என்னை மணமுடிக்க மாட்டான். ஆனால் வந்தது வெளியுரிலிருந்து. எனவே என்னைப் பற்றியோ என் காதலைப் பற்றியோ தெரியாமல் என்னைக் கண்டவுடன் பிடித்து விட்டது என்று அனைவரும் சொல்லி விட்டார்கள்.
புதிதாக நிச்சயிக்கப்பட்ட என்னுடைய தங்கையின் மகள்களின் திருமணத்திற்கு முன்னர் என் திருமணம் இரண்டே நாட்களில் ஒரு கோயிலில் நடைபெற்றது. ஏனெனில் நான் வசதியில்லாதவள்
அப்போது இந்த கோயிலுக்கு நான் இத்தனை முறை அவருடன் வந்து வழிபாடு செய்திருக்கின்றேன். இந்த கடவுள் கூடவா என் விருப்பமில்லா திருமணத்திற்கு சாட்சியாக இருக்கின்றது என்று என் இரண்டு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்க நான் கடவுளையே கோபித்துக் கொண்டேன்.
அப்போது நானும் கூட அவரைப் போல கடவுளை நம்பாமல் கடவுள் பக்தி இல்லாமல் இருந்திருக்கலாம் என்று கடவுளையே நிந்திக்கும் அளவிற்கு விரக்தியின் எல்லைக்கே போய் விட்டேன்..
கட்டாயத் திருமணம் முடிந்த கையோடு என்னை கைபிடித்தவரது உறவினர்கள் என்னை தமது ஊருக்கு அழைத்துச் செல்வதில் மும்முரமாக இருந்தார்கள். ஒரு நாள் கூட தங்கவில்லை.
திருமண தினத்தன்று இரவு கூட நான் என் வீட்டில் இல்லாமல் உடனே புறப்பட்டு விட்டதால் இரவு முழுவதும் பயணம்.
இரவு முழுவதும் பயணத்தின் போது கண்ணீர் விட்டு அழுது கொண்டே சென்ற காரணத்தால் என்னையும் அறியாமல் மயங்கி விட்டேன். காலையில் என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப் பட்டார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அங்கிருந்து டாக்சியில் புறப்பட்டோம்.
அதிகாலையில் புகுந்த வீடு. எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை.
.
எனது எண்ணம் முழுவதும் விருப்பம் இல்லாமல் யாரோ ஒருவர் கையால் கடவுள் சாட்சியாக தாலி கட்டிக் கொண்ட காரணத்தால் இதற்குப் பின்னர் நான் அவரை மறுபடியும் திருமணம் முடிக்க என் மனம் மறுக்கின்றது.
இதன் காரணமாக என் மனம் நான் தற்கொலை செய்து கொள்வதற்காக கிடைக்கும் தனிமைக்கு காத்திருந்தது.
நான் ஏதாவது விபரீத முடிவுகள் எடுத்து விட்டால் திருமணம் நிச்சயிக்கப் பட்ட இரண்டு பெண்களின் நிலைமை மோசமாகி விடும் என்பதால் எனக்கு பாதுகாப்பாகவே என் குடும்பத்தார் இருந்து வந்தார்கள்.
திருமணம் நிச்சயிக்கப் பட்ட நாள் நெருங்கி வருவதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள்.
கட்டாயத் திருமணம் செய்து கொண்டவர் என்ன செய்கின்றார் என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என்பதிலேயே எனது நாட்டம் இருந்தது.
என்னை வெளியில் எங்கும் அனுப்பாத காரணத்தால் நான் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்து அடிக்கடி மாடியிலிருந்து குதித்தால் உயிர் போகுமா அல்லது பிழைத்துக் கொண்டு கஷ்டப் படவேண்டியிருக்குமா என்னும் சிந்தனையில் மாடியிலிருந்து தனிமையில் இருக்கும் போதெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
அவ்வாறு ஒரு நாள் மாடியிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த சமயம் நான் அவர் என் வீட்டின் அருகிலே நடந்து செல்வதைப் பார்த்து அழுது விட்டேன். அதனைக் கண்ட அவரது நண்பர் அந்த விவரத்தை அவரிடம் சொல்லி இருவரும் எனது வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.
எனக்கு நடந்தது போன்ற கட்டாயத் திருமணம் அவருக்கு நடந்து இருந்தால் காலம் முழுவதும் அவர் என்னை ஏமாற்றி கை விட்டு காசுக்கு ஆசைப்பட்டு வேறொருத்தியை மணந்து கொண்டு உண்மையான காதலியை கை கழுவி விட்டார் என்று தான் உலகம் சொல்லும்.
ஆமாம் எங்கள் இருவர் வாழ்க்கையிலும எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாந்தது தான் மிச்சம்;. அதுவும் என்னால். நான் செய்த பாவத்தால். நான் வாங்கி வந்த வரத்தால் தான்.
அவரை மணந்து கொள்ளும் கொடுப்பனை எனக்கு இல்லை. கடவுள் கொடுத்ததை பூசாரிகள் பிடுங்கிக் கொண்டார்கள்.