தாமதமான மற்றும் அவசர முடிவுகள் எதிர்காலத்தை கெடுக்கும்.
எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதனை முன் கூட்டியே அறிந்து திட்டமிட்டு அதிலிருந்து தப்பிக்க ஆண்கள் சில தந்திரங்களைச் செய்வார்கள். ஆனால் பெண்களால் அவ்வாறு செய்ய முடியாமல் பிற்காலத்தில் கஷ்டப் படுவார்கள்.
நானும் அவரும் நெருங்கிய காதலர்களாக இருக்கும் சமயம் கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் குடும்பத்தார் சொல்படி கேட்டு பெற்றோர் காட்டுகின்ற பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வேண்டி இருக்கும். என்னை மணக்க வேண்டும் என்றால் தனக்கென்று தனியாக ஒரு வருமானம் வரக்கூடிய ஏதேனும் ஒரு வழிவகைக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் படி தீவிரமாகச் செயல் பட்டு அரசுப் பணியில் சேர்ந்து கொண்டார். இது அவரது முன் யோசனை மற்றும் திட்டமிடல்.
பணியில் சேர்ந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவர் அவரது தந்தையிடம் நமது திருமணத்திற்கு சம்மதம் கேட்டு அவர் மறுத்து விட்ட நிலையில் என்னை தனிமையில் சந்தித்து அவருடன் அவர் பணியாற்றும் ஊருக்கு வருமாறும் அங்கே சென்றவுடன் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்லி அதற்காக நம் இருவருக்குமான பயண டிக்கட்டுகளை முன்பதிவு செய்து இரண்டினையும் என்னிடத்தில் ஒப்படைத்தார்.
ஆனால் நான் அவரது தந்தை சம்மதிக்காவிட்டாலும் என்னுடைய தாயார் கட்டாயம் சம்மதிப்பார்கள் என நினைத்து அதற்கான காரணங்களாக எனக்குத் தந்தை இல்லை தாயாரிடம் என்னை செலவு செய்து திருமணம் செய்து வைக்கக் கூடிய அளவிற்கு வசதி இல்லை என நினைத்தேன். அதனை அவரிடம் தெரிவித்த சமயம் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
அவர் என்னிடத்தில் அவருடைய தந்தையின் செவிகளுக்கு நமது காதல் விஷயம் தெரிந்து விட்ட காரணத்தால் ஏதேனும் சதி செய்து நம்மை பிரித்து விடுவார்கள் என்று சொன்னார். ஆனால் என்னால் அதனை நம்ப முடியவில்லை.
அவர் என்னிடத்தில் நாம் இருவரும் பயணம் செய்யப் போவதற்கான முன்பதிவு டிக்கட்டுகள் இரண்டினையும் என்னிடம் கொடுத்துள்ளதாகவும் தகுந்த நேரத்தில் புறப்பட்டு வந்தால் சேர்ந்து பயணிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் மறுமுறை வந்து எனது தாயாரை கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்றும் சொல்லி விட்டு சென்றார். நான் அப்போது அவர் பேச்சினைக் கேட்கக் கூடிய அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை என்பது தான் உண்மை.
இது நடந்து முடிந்த பின்னர் என்னுடைய தாயாரிடத்தில் என்னைப் பெண் கேட்டு வந்த சமயம் என்னுடைய தாயாரின் சுயரூபம் எனக்குத் தெரிய வந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்குத் தெரியாமலேயே எனக்கு அவசர அவசரமாக திருமணம் நடந்தேறியது. அதற்கு அவரது தந்தை உறுதுணையாக உடந்தையாக இருந்தார். அவரது தாய்க்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.
அவர் சொன்னபடி நான் முன் பதிவு செய்த டிக்கட்டுடன் அவருடன் அந்த நாளில் பயணம் மேற்கொண்டு இருந்தால் நானும் அவரும் நமது வாழ்க்கையின் இறுதி வரையில் இல்லற வாழ்க்கையில் இணைந்து பயணித்திருப்போம். ஆனால் ஒரே ஒரு முறை அவரது அழைப்பினை நான் ஏற்க மறுத்த காரணத்தால் வாழ்க்கை முழுவதும் அவரை இழந்து தனியே தவிக்க வேண்டிய நிலைமை எனக்கு வந்து விட்டது என்பதனை நினைக்கும் போது என் மீது எனக்கே வெறுப்புத் தோன்றுகின்றது.
தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊருக்குச் சென்றிருக்கின்றார். என்னால் அவர் உடல் நலமின்றி இருக்கும் சமயம் அருகில் இருந்து பணிவிடை செய்ய முடியவில்லை என்னும் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன தான் எனக்குத் திருமணம் நடந்தேறி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னரும் கூட முதலாவது காதலரை என்னால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.
அவர் சொந்த ஊருக்குச் சென்ற பின்னர் என்னுடைய உறவினர் வாரத்தில் இரண்டு முறை அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடல் நலம் பற்றி அறிந்து எனக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலையிலோ அல்லது மாலையிலோ தகவல் தெரிவிப்பார். அச்சமயம் என் கணவர் வீட்டில் இருந்தால் என்னால் சரியாகப் பேச முடியாது. எனவே சற்று நேரம் கழித்து பேசலாம் எனச் சொல்லி தொலைபேசியை வைத்து விடுவேன். அவரது உடல் நலம் பற்றி அறிந்து கொள்வது கூட என்னால் முடியாத அளவிற்கு நான் தனிமைப் படுத்துப் பட்டு விட்டேன்.
ஒரு மாத லீவு முடிந்து விட்டது. இன்னமும் வந்ததாகத் தெரியவில்லை என விசாரித்த சமயம் மேலும் 15 நாட்கள் லீவு போட்டு விட்டதாக தெரிய வந்தது. எனது உறவினர் அவர் பூரணமாகக் குணமடைந்து விட்டதாக நேரில் வந்து தெரிவித்த சமயம் எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அவர் எப்போது என்னைக் காண வருவார் எனக் கேட்டுச் சொல்லுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
அவரும் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாத காரணத்தால் நேரில் சென்று சந்தித்து அவரது வருகைக்காக நான் ஏங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த சமயம் அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று நேரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்தார். எனக்கு எல்லை இல்லாத ஆனந்தம்.
நான் என் உறவினரிடத்தில் உணவுக் கட்டுப் பாடுகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டதற்கு எனது உறவினர் மீண்டும் பழைய படி பாயாசம் கொடுத்து உறவினை புதுப்பிக்க்லாம் என்று சொன்னவுடன் எனக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அவரது வருகையை எதிர் நோக்கி என் இல்லத்தில் சேமியா ஜவ்வரிசி கிஸ்மிஸ் பழம் முந்திரி சீனி அனைத்தும் தயாராக இருக்கின்றது என்னையும் சேர்த்து.
அவர் சொன்னவாறே அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று பிற்பகல் என்னைச் சந்திக்க என்னுடைய இல்லத்திற்கு வந்தடைந்தார்.
என் செல்லப்பெண் அவரை வரவேற்று அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஏன் இத்தனை நாள் வரவில்லை எனக் கேட்டுக் கொண்டே அவரது மடியில் அமர்ந்து கொண்டாள். உடனே எனக்கு ஒரு அதிகாரம். பாபாவுக்கு காபி கொண்டு வா. இருவருக்கும் ஒரே சிரிப்பு.
நானும் என் செல்லப் பெண்ணின் சொல்படி அவசர அவசரமாக பாயாசம் தயாரித்து அவரிடத்தில் கொடுத்தேன். வழக்கம் போல் பரிவர்த்தனை. மீண்டும் ஒரு வசந்தம். நானாகவே அவரிடத்தில் கேட்க ஆரம்பித்தேன். சொந்த ஊரில் எப்படி பொழுது போனது?
இங்கிருந்து சொந்த ஊருக்குச் சென்ற ஒரு வார காலத்தில் என் அலுவலகத்தில் பணியாற்றும் என் தாய்மாமன் உறவுப் பெண் என்னைப் பார்க்க வந்திருந்ததாகவும் அதன் பின்னர் காம்பவுண்ட் தோழிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்து விட்டுச் சென்றதாகவும் நண்பர்கள் அனைவரும் வந்து தம்மை சந்தித்து விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அவரது மனைவி அவரது உறவினர் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதாக தெரிவித்தார். அச்சமயம் அவரது தாயார் என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்து இருந்தால் எங்கேயும் போகாமல் அவருக்கு பக்கத்தில் இருந்து கொண்டு தன்னையும் சேர்த்து பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள் என அவரிடத்தில் சொன்னதாகத் தெரிவித்தார். அவரது தாயாருக்கு இன்னமும் என் நினைவு வாட்டிக் கொண்டிருக்கின்றது என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.
ஊரிலிருந்து திரும்பியவுடன் நேரடியாக அண்ணன் வீட்டில் போய் இறங்கி விட்டதாகவும் அவரது மாமனார் மாமியார் வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்த சமயம் வீடு மாற்ற யோசனை தெரிவித்ததற்கு தாம் மறுத்து விட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் தமது மகளிடம் பேசிப் பார்த்ததில் பலனில்லை. எனவே தாம் முன்னதாகப் பணியாற்றிய ஊருக்கு திரும்பிச் செல்லப் போவதாக தெரிவித்த சமயம் இந்த ஊரில் பணியாற்றி வரும் காரணத்தால் தான் நாங்கள் பெண் கொடுக்க முன் வந்தோம் என்று சொன்னதாகவும் அதற்கு வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க தாம் விரும்பவில்லை என்று சொல்லி விட்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் என்னிடத்தில் நான் என்ன செய்யலாம் எனக் கேட்ட சமயம் என்னால் அவரைப் பிரிவதற்கு மனமில்லாமல் அவரிடத்தில் இந்த ஊரில் பணியாற்றினால் ஒரே அலுவலகத்தில் கடைசி வரையில் பணியாற்ற முடியும். பிற்காலத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பதிலிருந்து உத்தியோகத்தில் அமர்த்தும் வரையில் நன்றாக கவனம் செலுத்த முடியும் என எனது ஆலோசனைகளைச் சொன்னதற்கு அது நிறைவேறும் சாத்தியமில்லை எனவும் அந்த அளவிற்கு எதிர் காலத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய மன நிலையில் அவரது மனைவி இல்லை என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர் நான் அவரிடத்தில் என்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் வருகின்றது என்றால் உங்களுடைய மனக் கஷ்டம் தீர நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ அதனை தாராளமாக செய்யுங்கள். அதற்கு நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன். ஏனெனில் நம் இருவருக்கும் நம் இருவருடைய குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் முக்கியம் என்று சொன்னேன். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் வெளியூருக்கு பணியாற்ற சென்ற பின்னர் மாதா மாதம் என்னைச் சந்திக்க முடியாவிட்டாலும் வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை கட்டாயம் என்னைச் சந்திக்க வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
பள்ளித் தேர்வு முடிந்தவுடன் கோடை விடுமுறையில் ஒரு முறையும் காலாண்டு விடுமுறையில் ஒரு முறையும் கட்டாயம் என்னைச் சந்திக்க எனது இல்லத்திற்கு வரவேண்டும் என்னும் அன்பு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் மீண்டும் பழைய ஊருக்கே திரும்பிச் சென்று வேலையில் சேர்ந்து கொள்ள மனுக் கொடுத்துள்ளதாகவும் ஆணை வரப் பெற்றவுடன் அங்கு சென்று வேலையில் சேரப் போவதாகவும் அங்கு வேலையில் சேருவதற்கு முன்னர் ஒரு முறை என்னுடைய இல்லத்திற்கு வந்து என்னிடத்தில் சொல்லி விட்டு செல்வதாகவும் என்னிடத்தில் தெரிவித்தார்.
பயணச் சீட்டு வாங்கிக் கொடுத்து நான் அவருடன் செல்லாதது எனக்கு சோகத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இப்பேது அவரது மனைவி அவரது சொல்லுக்குக் கட்டுப் படாதது அவருக்கு சோகத்தையும் அலைச்சலையும் கொடுக்கப் போகின்றது. பெண் புத்தி பின் புத்தி என்று சொன்னது அன்று எனக்குப் பொருந்தியது இன்று அவரது மனைவிக்கு.
அவரது பிரிவு என்னை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றது.
அவர் மீண்டும் வருவது காலதாமதம் ஆக வேண்டும் அப்போது தான் அவர் இங்கேயே இருப்பார். என்னைச் சந்திக்க விரைவில் வந்தால் சீக்கிரம் இந்த ஊரை விட்டு போய் விடுவார் என நினைத்து எனது இரவுகள் தூக்கமின்றி கழிந்தன.