பிரசவ வலியும் வயிற்று (பொய்) வலியும்
என் இரண்டாவது மருமகளுக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வலி வந்து கொண்டு இருந்தமையால் மருத்துவ மனையில் சேர்த்து இருந்தோம். அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் எப்படியும் ஒரு வார காலத்தில் பிரசவம் ஆகி விடும் எனவும் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் திடீரென மீண்டும் வலி ஏற்பட்டால் அழைத்து வருவதில் சிரமம் ஏற்படலாம் எனவும் சொல்லி இருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு நாள் முற்பகல் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் வந்தவுடன் அவரை நான் வரவேற்றேன். என்னுடன் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் இருந்தார்கள். உடனே அவர் எங்களிடத்தில் எங்கே மருமகள் எனக் கேட்டார்.
அப்போது மருமகள் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அடிக்கடி வயிற்று வலியினால் கஷ்டப் படுவதன் காரணமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சேர்த்து உள்ளதாகவும் தெரிவித்தேன். என் மருமகளின் தாயாருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக நான் ஒரு டம்ளர் காபியில் பாதி குடித்து விட்டு அவரிடத்தில் பாதி டம்ளர் காபி கொடுத்தேன். அந்த சமயத்தில் என் மருமகளின் தாயாருக்கும் காபி கொடுத்தேன். அவருக்கு மாத்திரம் ஏன் அரை டம்ளர் காபி எனக் கேட்ட சமயம் இது ரொம்ப ஸ்பெஷல் என்று தெரிவித்தேன். அவர்களுக்குப் புரியவில்லை.
நான் மதிய உணவு சமைப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தேன். அந்த சமயத்தில் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் அவரிடத்தில் சமையல் நடந்து முடியும் வரையில் அவருடன் பேசுவதற்கு அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர் பேசுவதற்குத் தான் வந்து இருப்பதாகவும் அனுமதி எல்லாம் கேட்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். அந்த சமயத்தில் என் மருமகளின் வளர்ப்புத் தாயார் என்னையும் அழைத்து அவருக்கு அருகில் என்னை நிற்குமாறு கேட்டுக் கொண்டு திடீரென நம் இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது அவர் எங்களை விட வயதில் முதியவர்கள் நீங்கள். இளையவர்களான எங்களின் கால்களில் விழக் கூடாது எனச் சொல்லி அவர் அவர்களை நிற்க வைத்தார்.
அதன் பின்னர் அவர்கள் அவரிடத்தில் நான்கு மகன்கள் இருந்தும் கூட எந்த பேரன் பேத்திகளையும் வெளி நாடுகளில் பெற்று எடுக்கும் சமயம் அருகில் இருந்து பார்த்ததில்லை எனவும் தமக்குப் பிறந்துள்ள பேரன் பேத்திகளை ஐந்தாறு மாதங்களுக்குப் பின்னர் தான் தமது கரங்களில் ஏந்தி இருப்பதாகவும் சொன்னார்கள். முதன் முதலாக என்னிடத்தில் வளர்ந்த பெண்ணிற்கு பிறக்கப் போகும் குழந்தையை பிறந்தவுடன் பார்க்கப் போவதாகவும் பிறந்தவுடன் கைகளில் ஏந்திப் சந்தோஷப்படப் போவதாகவும் சொல்லி விட்டு அதன் காரணமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொன்னார்கள். என் வீட்டில் வளர்ந்த என் வளர்ப்பு மகளின் குழந்தையை பிறந்தவுடன் பார்ப்பதற்கு வழி வகைகள் ஏற்படுத்திக் கொடுத்து அறிவுரைகள் சொன்ன காரணத்தால் தான் இவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார்கள்.
நான் மருத்துவ மனைக்குச் செல்லும் பொருட்டு அவசர அவசரமாக சமையலை முடித்தேன். சமையல் முடிந்த மறுகணம் மருத்துவ மனையில் உள்ள வளர்ப்பு மகளுக்கும் தனக்கும் உணவினை கேரியரில் கொடுத்து அனுப்புமாறு மருமகளின் வளர்ப்புத் தாயார் கேட்டுக் கொண்டார்கள். நான் அவர்களிடத்தில் நானும் புறப்பட்டு வருகின்றேன் சேர்ந்து போகலாம் எனச் சொன்னதற்கு நீண்ட நாட்கள் கழித்து வந்து இருக்கும் விருந்தினருக்கு உணவு பரிமாறி விட்டு இருவரும் சாப்பிட்டு முடிந்த பின்னர் மெதுவாக அவசரமில்லாமல் மருத்துவ மனைக்கு வருமாறு கேட்டுக் கொண்டு அவர்கள் சாப்பாட்டு கேரியருடன் மருத்துவ மனைக்குப் புறப்பட்டார்கள்.
அவர்கள் புறப்பட்டுச் சென்று மருத்துவ மனையை அடைந்த பின்னர் என் இல்லத்திற்கு போன் செய்து பேசினார்கள். எனக்கு ஒரே பதட்டம். குழந்தை பிறந்து விட்டதா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எனது மருமகள் நான் மருத்துவ மனைக்கு வரும் சமயம் கட்டாயம் அவரையும் அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். நான் ஏனென்று கேட்டதற்கு எனது மருமகள் அவர் வந்து என் மருமகளைப் பார்த்தால் மருமகள் வயிற்றில் உள்ள குழந்தை அவரைப் பார்க்க உடனே வெளியே வந்து விடும் என மிக மிக சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சொன்னதாகத் தெரிவித்தார்கள்.
என் மருமகள் சொன்ன விவரங்களை அவரிடத்தில் சொன்னதற்கு அவரும் மருத்துவ மனைக்கு வர சம்மதித்தார். நான் சமைத்த உணவினை அவசர அவசரமாக அவருக்குப் பரிமாறிக் கொண்டே நானும் சாப்பிட்டு முடித்த பின்னர் இருவரும் சேர்ந்து ஒரே ஆட்டோவில் மருத்துவ மனைக்குப் பயணித்தோம். மீண்டும் ஒரு ஏக்கம். இது போல ஒரே வாகனத்தில் திருமண கோலத்தில் நாங்கள் இருவரும் சென்றிருந்தால் வாழ்நாள் முழுக்க நான் சோகக் கடலில் மிதக்க வேண்டியிருந்திருக்காது என நினைத்தேன்.
நானும் அவரும் மருத்துவ மனைக்குச் சென்று என் மருமகளைப் பார்த்த சமயம் வலியினைப் பொருட்படுத்தாமல் மிக மிக சந்தோஷமாக புன்சிரிப்புடன் இருவரையும் வரவேற்றாள். நான் என் மருமகளிடத்தில் வலி போய் விட்டதா எனக் கேட்டேன். இல்லை என பதில் வந்தது.
அதற்குப் பின்னர் அவர் என் மருமகளிடத்தில் பேச ஆரம்பித்தார். என் மருமகள் படுக்கையில் படுத்தவாறு இருந்தமையால் எழுந்து அமர முயன்றாள். அவர் எழுந்து அமர முயற்சிக்க வேண்டாமென சொல்லி விட்டு அவர் என் மருமகளிடத்தில் வலி எங்கு இருக்கின்றது எனவும் தொடர்ந்து வலிக்கின்றதா எனவும் விட்டு விட்டு வலிக்கின்றதா எனவும் வலிக்கும் நேரம் மற்றும் வலிகளுக்கு இடையே இடைவெளி மாறு படுகின்றதா என பலப்பல கேள்விகள் கேட்டார். அதற்குப் பின்னர் வலி ஏற்பட்ட பின்னர் வலி வேறு இடத்திற்குப் பரவுகின்றதா எனவும் கேட்டார். எனது மருமகள் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதன் காரணமாக அவரது கேள்விகள் அனைத்துக்கும் வெட்கப்படாமல் மறைக்காமல் பதில் அளித்தாள். எனக்கு அவர் ஏன் இவ்வாறு கேட்டார் என்பது புரியவில்லை.
அனைத்தையும் கேட்டு முடித்த பின்னர் என்னிடத்திலும் எனது மருமகளிடத்திலும் பேச ஆரம்பித்தார். அப்போது என் மருமகளின் வளர்ப்புத் தாயார் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு முதுகில் வலி இல்லாமல் வயிற்றைச் சுற்றி மட்டும் வலிகள் இருந்தால் அது பிரசவ வலி அல்ல எனச் சொல்லி விட்டு அது பொய் வலி என்று சொன்னார். முதுகுப் பகுதியில் வலி இல்லாமல் வயிற்றில் மட்டுமே வலி ஏற்பட்டால் அது நம்மை பயமுறுத்துகின்ற பொய் வலி எனவும் இவ்வாறான பொய் வலியின் சமயம் திரவக் கசிவு எதுவும் இருக்காது எனவும் தெரிவித்தார்.
அதே போல ஒரு முறை வலி வந்த பின்னர் மறு முறை வலி வருவதற்கு இடைவெளி நேரம் அதிகமாகிக் கொண்டே இருந்தால் அதுவும் பிரசவ வலி அல்ல எனவும் வலி ஆரம்பத்தில் குறைவாக இருந்து போகப் போக அதிகமாகிக் கொண்டே இருந்தால் அதற்கு சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
முதுகுப்புறத்தில் கீழ்பகுதியில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்பக்கம் வரை வந்து அடி வயிற்றுப் பகுதியில் இறங்கி வலி பரவினால் அது பிரசவ வலி என்று சொன்னார். பிரசவ வலி என்பது குறிப்பிட்ட நேர இடைவெளியில் வலிக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் நீண்ட நேரம் வலி நீடித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கும் நேரம் குறைந்து கொண்டே வரும். அதே போல வலிக்க ஆரம்பிக்கும் இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாகவும் போகப் போக குறைந்து கொண்டும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பிரசவம் மிகவும் நெருங்கி விட்ட சமயம் தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கும் எனத் தெரிவித்தார். உண்மையான பிரசவ வலி ஏற்படும் சமயம் பெண்ணுறுப்பில் சளி போன்ற திரவம் கசிய ஆரம்பிக்கும் எனவும் இரண்டு அல்லது மூன்று இரத்தத் துளிகளும் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்தையும் சொல்லி விட்டு தலைப் பிரசவத்தின் போது தான் முதல் முதலாக பிரசவ வலியினை உணர முடியும் எனத் தெரிவித்தார். எனது முதல் பிரசவம் இரயில் பயணத்தின் போது ஏற்பட்ட காரணத்தால் சரியாக இவற்றை எல்லாம் என்னால் உணர முடியவில்லை. ஞாபகத்திலும் இல்லை.
அவர் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்த என் மருமகள் திடீரென படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள். எனக்கு பயமாக இருந்தது. என் மருமகளிடத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு திடீரென இவ்வாறு எழுந்து உட்காரக் கூடாது என சொன்னேன்.
என் மருமகள் அவரது வளர்ப்புத் தாயாரிடத்தில் சற்று நேரம் நடக்கப் போவது அனைத்தையும் எதனையும் கண்டு கொள்ளாமல் தவறாக நினைக்காமல் கவனித்துக் கொண்டே இருக்குமாறும் எதுவும் பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாள். என்ன செய்யப் போகின்றாள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் கேட்டுப் பார்த்ததற்கு ஒரே வார்த்தையில் “சஸ்பென்ஸ்” என்று சொல்லி முடித்து விட்டாள்.
எழுந்து அமர்ந்த பின்னர் என் மருமகள் என்னிடத்தில் ஒரு டம்ளர் காபியினை நாம் மூவரும் சேர்ந்து குடிக்க வேண்டும் எனவும் முதலில் அங்கிள் குடித்த பின்னர் நான் குடிக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் என் மருமகள் குடிக்கப் போவதாகவும் தெரிவித்தாள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே மிகப் பெரிய டம்ளரில் காபியினை அவரிடத்தில் கொடுத்து அவர் குடித்த பின்னர் நான் குடித்து விட்டு என் மருமகளிடம் கொடுத்தேன். அவள் மிக மிக ஆசையாக பருகினாள்.
என் மருமகளின் தாயார் நம் மூவரிடத்திலும் இந்த மாதிரியான டபுள் ஸ்பெஷல் காபி எங்கும் கிடைக்காது என்பது எனக்கு இப்போது தெரிந்து விட்டது என்று சொல்லிக் கொண்டே சிரித்தார்கள். நான் மட்டும் குடித்து விட்டுக் கொடுத்தால் ஸ்பெஷல். நானும் அவரும் சேர்ந்து குடித்து விட்டு என் மருமகளுக்குக் கொடுத்தால் அது டபுள் ஸ்பெஷல்.
அதன் பின்னர் என் மருமகள் நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட வேண்டும் எனச் சொன்னதற்கு நான் முடியாது என மறுத்தேன். அதற்கு அவள் என்னைத் தான் நீங்கள் முத்தமிடப் போகிறீர்கள் அவரை அல்ல எனச் சொன்னாள். வேறு வழியின்றி நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் மருமகளின் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டோம்.
அதன் பின்னர் எனது மருமகள் நாங்கள் இருவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்து சுகப் பிரசவம் நடக்க வேண்டும் என பொட்டு வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். என்னிடத்தில் அவர் நாம் இருவரும் சேர்ந்து அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என முதன் முதலில் பிரார்த்தனை செய்த ஒரு குறிப்பிட்ட பிள்ளையாரை இரகசியமாக நினைத்துக் கொள்ளுமாறு எனது காதில் சொல்லிய பின்னர் அந்தப் பிள்ளையாரை நாம் இருவரும் மனதில் நினைத்துக் கொண்டு இருவரும் சேர்ந்து எனது மருமகள் நெற்றியில் சுகப் பிரசவம் நடைபெற வேண்டிக் கொண்டு பொட்டு வைத்தோம்.
அதன் பின்னர் என் மருமகள் நம் மூவரிடத்திலும் முதுகு வலி வந்து மெதுவாக வயிற்றுப் பகுதிக்கு வலி பரவினால் அது பிரசவ வலி என்று அவர் சொன்னதைக் கேட்டு அமர்ந்து கொண்ட காரணத்தால் முதுகு வலி வந்து விட்டதாகவும் இருவருடனும் சேர்ந்து காபி குடித்து முடித்த பின்னர் வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டதாகவும் சொல்லி விட்டு என் மருமகளின் குழந்தை அவரைப் பார்க்கத் துடிக்கின்றது எனவும் சொன்னாள். சற்று நேரத்தில் வலி மிகவும் அதிகரித்த காரணத்தால் அவசர அவசரமாக பிரசவத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
நான் உடனடியாக எனது இரண்டாவது மகனுக்கு தகவல் தெரிவித்து அவன் புறப்பட்டு விட்டான். எனது இரண்டாவது மருமகளுக்கு நாம் இருவரும் சேர்ந்து முத்தமிட்டு பொட்டு வைத்த இரண்டு மணி நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையை டாக்டர் வெளியில் கொண்டு வந்து காட்டினார்கள். அப்போது அவர் அந்தக் குழந்தையை என் மருமகளின் வளர்ப்புத் தாயாரிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் குழந்தையை மிக மிக சந்தோஷமாக ஆனந்தக் கண்ணீருடன் பெற்றுக் கொண்டு முத்தமிட்டார்கள். குழந்தை அவர்கள் கைகளில் இருக்கும் சமயம் நானும் அவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் குழந்தையை முத்தமிட்டோம்.
அதன் பின்னர் அவரிடத்தில் குழந்தையை கொடுத்தார்கள். அவரும் குழந்தைக்கு முதல் முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் நான் வாங்கிக் கொண்டு முத்தமிட்டு டாக்டரிடத்தில் கொடுத்து விட்டேன்.
சற்று நேரத்தில் பிரசவம் முடிந்த பின்னர் என் மருமகளை செவிலியர்கள் மயக்க நிலையில் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள். அந்த சமயம் அவர் வெளியே சென்று புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கு புத்தாடை வாங்கி வந்தார். எனது முதலாவது பெண் குழந்தைக்கு எடுத்தது போலவே இருந்தது. எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எனது இரண்டாவது மகன் மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தவுடன் குழந்தையை பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டான். அதன் பின்னர் அவரிடத்தில் நமது வீட்டில் எந்த ஒரு நல்லவைகளும் அவர் வராமல் நடக்காது என்பது மீண்டும் நிரூபணமாகி விட்டது என்று சொன்னதைக் கேட்டு எனது மருமகளின் வளர்ப்புத் தாயார் ஆச்சர்யப் பட்டார்கள்.
அதன் பின்னர் உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கிய நிலையில் அவர் நம்மிடமிருந்து விடைபெற்று புறப்பட்ட சமயம் நான் அவரிடத்தில் மருமகளின் மயக்கம் தெளியும் வரையிலாவது இருக்கலாமே எனச் சொன்னேன்.
அவர் என் இரண்டாவது மருமகள் அவரைப் பார்த்து விட்டாள். அவளது குழந்தையும் அவரைப் பார்த்து விட்டது எனச் சொல்லி விட்டு குழந்தை பிறந்த தகவல் அறிந்து உறவினர்கள் அனைவரும் வருகை தருகின்ற நேரத்தில் அவர் இங்கிருப்பது நல்லதல்ல எனச் சொல்லி விட்டு பிரிய மனமில்லாமல் புறப்பட்டுச் சென்றார். எனக்கும் அதே நிலை.
ஒரு பக்கம் பேத்தி பிறந்த சந்தோஷம். மறுபுறம் அவரைப் பிரிய மனமில்லாமல் பிரிகின்ற வருத்தம். எனது கண்களில் நீர் ததும்ப அவரை மீண்டும் நான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்லி விரைவில் வருகை தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். அவர் சரியென ஒப்புக் கொண்டார். வழக்கமாக அவர் என்னை சந்தித்து விட்டுச் சென்றால் சில இரவுகள் தூக்கம் இருக்காது. ஆனால் அந்த சமயத்தில் பேத்தியை கவனிப்பதன் பொருட்டு அந்த தூக்கமின்மை உதவி கரமாக இருந்தது.