முட்டுக் கொடுத்த மூங்கில்கள்
உலகில் வாழும் அத்தனை ஜீவ ராசிகளுக்கும் உணவும் இருப்பிடமும் மிகவும் முக்கியம். எந்த ஒரு ஜீவராசியும் உணவு கிடைக்கவில்லை என்றால் உயிர் வாழ முடியாது. அதே போல இருப்பிடம் சரியாக அமையவில்லை என்றாலும் கூட ஜீவ ராசிகள் மடிந்து விடும். உதாரணமாக மீனுக்கு தண்ணீர் உள்ள இடம் அவசியம். தண்ணீரை விட்டு மீன் வெளியில் வந்து விட்டால் உயிர் போய் விடும். பாம்புக்கு புத்து. எலிக்கு வளை. பறவைகளுக்கு கூடு. விலங்கினங்களுக்கு குகைகள் என அத்தனை ஜீவ ராசிகளுக்கும் இருப்பிடம் மிகவும் அவசியம். இருப்பிடங்கள் சரியாக அமையவில்லை என்றால் பாது காப்பு என்பது இருக்காது.
ஆறறிவு படைத்த மனிதனுக்கு இவை இரண்டையும் தவிர வேறு ஒன்று கூட அவசியமாகி விட்டது. அது தான் உடை. தன்மானம் காக்க உடலை மூடி மறைக்க வேண்டிய கட்டாயம் மனிதப் பிறவிக்கு உண்டு.
பிறந்தவுடன் பாலூட்டுகின்றார்கள். இறந்தவுடன் பாலூத்துகின்றார்கள். பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடுகின்றார்கள். இறந்த சடலத்திற்கு ஒப்பாரி பாடுகின்றார்கள்.
பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து தமது உதிரத்தை பாலாக ஊட்டிய அன்னையின் வயிற்றுப் பசியினைப் போக்குவதில் குழந்தைகள் அக்கரை காட்ட மறுக்கின்றார்கள். ஒரு தாய்க்கு இரண்டிற்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால் ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒவ்வொரு மாதம் தங்கியிருந்து தமது கடைசி காலத்தை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இரண்டு மகன்கள் இருந்தால் காடாறு மாதம் நாடாறு மாதம் என இரண்டு மகன்கள் வீடுகளிலும் மாறி மாறி தங்கி வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒரே மகன் எனில் வீட்டுக்கு அன்னை இல்லம் எனப் பெயர் வைத்து விட்டு பெற்றெடுத்த தாயை முதியோர் காப்பகத்திலோ அல்லது அனாதை இல்லத்திலோ சேர்த்து விடுகின்றார்கள்.
சில இல்லங்களில் சீர்வரிசை நிறையச் செய்து நகைகள் போட்டு திருமணம் முடித்து வைத்த மகள் வீட்டில் போய்த் தங்க வேண்டியது தானே என பெற்ற தாயை மகன்கள் விரட்டுகின்றார்கள். ஆனால் மகன்களுக்கு வந்துள்ள மனைவிகளின் தாய்மார்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால் தனது நிலை என்னவாக இருக்கும் என்பதனை ஆண் பிள்ளைகள் நினைத்துப் பார்ப்பதில்லை. இது குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் மார்களின் நிலை. இதுவும் தவிர தமக்குப் பின்னால் தமது பிள்ளைகளை வரப் போகின்ற மருமகள்கள் கவனித்துக் கொள்வார்கள் என ஆசை ஆசையாக திருமணம் செய்து வைத்து வரப்பெற்ற மருமகள்களால் மாமியார்களுக்கு பலப்பல இல்லங்களில் இடைஞ்சல்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
தனக்குப் பின்னால் தன் குடும்பம் தளைக்க வாரிசுகள் வேண்டும் எனக் கனவு கண்டு பெற்றெடுத்த பிள்ளைகளை தமது ரத்தத்தைச் சிந்தி உழைத்துப் படிக்க வைத்து நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி அந்தஸ்தினை உயர்த்துவதற்குப் பாடுபட்ட தந்தைகளின் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. கிழவன் எப்போது சாவான். திண்ணை எப்போது காலியாகும் என்பது போல தந்தையின் மறைவினை எதிர்பார்த்து வாரிசுகள் காத்திருப்பது மிகவும் வருந்தத் தக்கது. அதற்கு காரணம் அவரது மறைவுக்குப் பின்னர் அவர் சம்பாதித்த சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது அல்லது அவர் எதுவும் சம்பாதிக்கவில்லை என்றால் அவருக்கு உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றை வழங்குவதால் ஏற்படும் செலவுகளை மிச்சப்படுத்துவது. எதிர்காலத்தில் தாமும் முதுமை அடைவோம் தமக்கும் இது போன்ற நிலைமை வரலாம் என்பதனை எண்ணிப் பார்க்க எல்லா வாரிசுகளும் மறந்து விடுகின்றார்கள்.
குடிசை வீடாக இருந்தாலும் சரி. மாட மாளிகையாக இருந்தாலும் சரி. கூட கோபுரமாக இருந்தாலும் சரி. அவற்றைக் கட்டுவதற்கு மூங்கில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
ஒரு திருமணம் நடைபெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னர் பந்தக்கால் என்று ஒன்று நடுகின்றார்கள். அது ஒரு சாதாரண மூங்கில் தான். இரண்டு கணுக்களுக்கு இடையே வெள்ளை மற்றும் சிகப்பு வர்ணங்கள் மாறி மாறி பூசப்பட்டருக்கும். அதற்கு மிக நீண்ட நாட்கள் ஆயுட்காலம் காரணம் அதனை வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே உபயோகப் படுத்துவார்கள். கடினமான வேலைகளுக்குப் பயன் படுத்த மாட்டார்கள். அதற்குப் பூஜைகள் தான் செய்வார்களே ஒழிய அதனை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார்கள். அது அதிர்ஷ்டம் செய்த மூங்கில்.
வளைந்து கொடுக்கும் மூங்கில்கள் பல்லக்கு செய்யப் பயன்பட்டு அந்த பல்லக்குகளில் கடவுள் விக்ரஹங்களை வைத்துக் கொண்டு வீதி உலா வரும் சமயம் அருகில் உள்ளவர்கள் கடவுள் விக்ரஹத்தையும் தூரத்தில் உள்ளவர்கள் பல்லக்கினையும் வணங்குவார்கள். பல்லக்கு செய்யப் பயன்பட்ட அந்த வளைந்து கொடுத்த மூங்கில் கூட அனைவராலும் வழிபடக் கூடிய அதிர்ஷ்டம் பெற்று இருக்கின்றது.
ஸ்ரீ பகவான் கிருஷ்ணர் தம்மிடத்தில் வைத்து இருக்கும் புல்லாங்குழல் மூங்கிலால் ஆனது. அதனை வைத்துக் கொண்டு இனிமையான ஒலியினை எழுப்பி செவிக்கு இசை விருந்து படைப்பார்கள். அந்த மூங்கில் அனைவரது இதயங்களையும் ஈர்க்கின்ற சக்தியினைப் பெற்று இருக்கின்றது.
வீடுகளில் அமர்வதற்கும் ஓய்வு எடுக்கவும் மூங்கில்களைக் கொண்டு நாற்காலிகள் சோபாக்கள் போன்றவைகள் தயார் செய்வார்கள். அவை நடப்பதினால் ஏற்படுகின்ற சோர்வினைப் போக்குகின்ற சக்தியினைப் பெற்று இருக்கின்றன.
நிறையப் பேர் ஒன்று சேரக்கூடிய எந்த விழாவானாலும் சரி மூங்கில்களைக் கொண்டு பந்தல் அமைத்து விழாக்கள் முடிந்தவுடன் பந்தலை அகற்றி விடுகின்றார்கள். அவ்வாறான மூங்கில்கள் பல முறை உபயோகப்படுத்தப் படுகின்றன. அந்த மூங்கில்கள் அனைவருக்கும் நிழலைக் கொடுத்து வெயிலின் தாக்கத்தினை குறைக்கின்றன. அந்த மூங்கில்கள் கூட பாராட்டுப் பெறுகின்றன.
ஒரு வீடு அல்லது பங்களா கட்டும் சமயத்தில் ஒவ்வொரு தளத்தினை அமைப்பதற்கும் மூங்கில்களால் முட்டுக் கொடுத்து அதன் மேல் சமதள பலகைகளை பொருத்தி கான்கிரீட் போட்டு தளம் அமைக்கும் பணியினை முடிக்கின்றார்கள். கான்கிரீட் போட்டு தளம் போடும் வேலை முடிந்தவுடன் முட்டுக் கொடுத்த மூங்கில்கள் அகற்றப்பட்டு அடுத்த தளத்திற்கு உபயோகப் படுத்தப்படும்.
வீடு கட்டும் சமயம் சுவர் கட்டுவதற்கான செங்கற்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டது. அதற்குப் பின்னர் சிமெண்ட் மற்றும் மணல் கலந்த கலவை ஆகியவற்றைக் கொண்டு செங்கற்களை மறைக்க வேண்டும். அதன் பின்னர் பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு பூசி கட்டிடத்தினை முழுமையாக முடிக்க வேண்டும் என்றால் மூங்கில்களை ஒன்றோடு ஒன்று இறுக்கமாகக் கட்டி சாரம் அமைத்து அந்தப் பணியினை பாதுகாப்பாக தொழிலாளர்கள் மேற்கொள்கின்றார்கள்.
உட்புறச் சுவர்களில் சிமெண்ட் கலவை பூசுதல் பெயிண்ட் அடித்தல் மின்சார வயரிங் வேலைகள் செய்தல் போன்றவற்றுக்கு இரண்டு மூங்கில்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏணியினைப் பயன் படுத்துகின்றார்கள்.
இவ்வாறாக மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் உருவாவதற்கு மூல காரணமாக பக்க பலமாக இருந்த மூங்கில்கள் கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டு விடுகின்றன. தளங்கள் அமைவதற்கு முட்டுக் கொடுத்த மூங்கில்கள் சாரங்களாக அமைந்து தொழிலாளர்களை தாங்கிப் பிடித்த மூங்கில்கள் எட்டாத உயரத்தினை எட்டுவதற்கு உதவியாக இருந்த இரண்டு மூங்கில்களால் செய்யப்பட்ட ஏணிகள் எல்லாம் கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டு விடும். ஏதேனும் மறதியாக விட்டுச் செல்லப்பட்டு இருந்தாலும் கூட அவற்றை குப்பை எனக் கருதி வெளியே வீசி எறிந்து விடுவார்கள்.
சிலர் வீடுகளில் செல்வம் பெருக வேண்டி சின்னஞ்சிறு மூங்கில்களை ஒன்றாக சேர்த்துக் கட்டி அது வளர்ந்தால் செல்வம் பெருகும் என நினைக்கின்றார்கள். அதிர்ஷ்டம் வரும் செல்வம் கொழிக்கும் என்பதற்காக மட்டுமே மூங்கில் செடி வீடுகளில் வளர்க்கப் படுகின்றதே தவிர மன நிம்மதிக்கோ குடும்ப ஒற்றுமைக்கோ வளர்க்கப் படுவதில்லை. இதனை வளர்ப்தற்கு பொறுமை மிகவும் அவசியம். ஒரு காம்பு அழுகி விட்டால் கூட அப்படியே தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள்.
மீண்டும் உபயோகப் படுத்தக் கூடிய நிலையில் மூங்கில்களோ அல்லது மூங்கில்களால் செய்யப் பட்ட பொருட்களோ இருந்தால் மீண்டும் உபயோகப் படுத்துவார்கள். மறு முறை உபயோகப் படுத்த முடியாத நிலைக்கு வந்து விட்ட மூங்கில்கள் அனைத்தும் அக்கினிக்கு இறையாகி விடும்.
அதே சமயம் குடிசை வீட்டின் நான்கு பக்கங்களிலும் மூங்கில்களை நட்டு மேல் புறத்தில் மூங்கில்களைக் கட்டி அதன் மீது தென்னை ஓலைகளை பரப்பி குடிசைகள் வடிவமைக்கிறார்கள். குடிசைகள் கட்டுவதற்கு மூங்கில்கள் மிகவும் அவசியம். அதற்கு உபயோகப் படுத்தப்படுகின்ற மூங்கில்கள் குடிசைகள் அழியும் வரையில் இருக்கும்.
சில இடங்களில் மூங்கில்களை கொண்டே சுவர் போல் வாழ்விடம் அமைத்துக் கொள்கின்றார்கள். சில இடங்களில் மூங்கில்களால் வேலி அமைத்துக் கொண்டு பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக உயிர் வாழ்வதற்கு உதவி கரமாக இருந்த மூங்கில்கள் மனிதனின் உயிர் மூச்சு நின்ற பின்னர் கூட மீண்டும் உதவிக்கு வருகின்றன. இரண்டு பச்சை மூங்கில்களை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டி அதனை புத்தம் புதிய பசுமையான தென்னை ஒலைகளைக் கொண்டு பரப்பி அதன் மீது படுக்க வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்று அக்கினியிடம் ஒப்படைக்கின்றார்கள்.
நான் நீண்ட நாட்கள் கழித்து அவளைத் தேடிச் சென்ற சமயம் அவளைக் காண முடியவில்லை. முதலாவது மகன் வீட்டில் இரண்டு மாதங்கள் இரண்டாவது மகன் வீட்டில் இரண்டு மாதங்கள் அவ்வப் போது மகள் வீட்டில் தனது தாயார் தங்கி வருவதாக முதலாவது மகன் மூலமாகத் தெரிய வந்தது. நான் சென்ற சமயம் எங்கே இருப்பார்கள் எனக் கேட்டதற்கு முதல் மகன் வீட்டிலிருந்து சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்ட காரணத்தால் அநேகமாக இரண்டாவது மகன் வீட்டிலிருந்து வெளியூரில் உள்ள மகள் வீட்டில் இருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்தார்கள்.
அவர்களிடத்தில் அச்சமயத்தில் எங்கு இருக்கின்றார் என விசாரித்து சொல்லுமாறு கேட்ட சமயம் இரண்டு இடங்களின் முகவரிகளையும் தெரிவித்து நேரில் சென்று தேடிச் சந்திக்குமாறு சொன்னது எனக்கு மன வேதனையைத் தந்தது. என்னையுமறியாமல் நான் அவர்களிடத்தில் மகள் ஊருக்குச் சென்றால் எப்போது திரும்புவார்கள் எனக் கேட்டதற்கு சில சமயங்களில் ஒரு வாரத்தில் திரும்புவார்கள் எனவும் சில சமயங்களில் மாதக் கணக்கில் தங்கி விட்டு வருவார்கள் என்றும் தெரிவித்தனர்.
இதன் மூலம் என்னை மணந்திருந்தால் ஒரே இடத்தில் சந்தோஷமாக இருந்திருக்க வேண்டிய எனது உயிர் காதலி வயிற்றுப் பிழைப்பிற்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தவிப்பது என் நெஞ்சை உறுக வைத்தது.
நானும் அவளும் பந்தக்கால் மூங்கில் அளவிற்கு சொகுசான வாழ்க்கை வாழக் கொடுத்து வைக்கவில்லை. நானும் அவளும் பல்லக்கு செய்யும் மூங்கில் அளவிற்கு மரியாதை மிக்க வாழ்க்கை வாழக் கொடுத்து வைக்கவில்லை. நானும் அவளும் நமது அறிவுறைகளை புல்லாங்குழலின் இசையினைக் கேட்பது போல சொல் பேச்சு கேட்கக் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை. நானும் அவளும் ஒரு குடிசையின் மேற்கூரையினைத் தாங்குகின்ற அளவிற்கு நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை. நானும் அவளும் இருந்தால் பாதுகாப்பாக இருந்து உதவ முடியும் என்னும் வேலி மூங்கில்களாக நமது வாரிசுகளால் கருதப்படவில்லை. நானும் அவளும் அடிக்கடி பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு உதவுகின்ற விழாப் பந்தல் மூங்கில்களாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
இவற்றை எல்லாம் அறிந்து கொண்ட நான் என் காதலியிடம் தொலை பேசியில் பேசிய போது அடுத்த ஜென்மத்தில் அவள் எனக்கு மனைவியாக வர வேண்டுமெனில் எனது மரணத்திற்குப் பின்னர் அவளது மரணம் சம்பவிக்க வேண்டும் எனச் சொன்னதை சுட்டிக்காட்டி அவள் இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடு இருந்து நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் எனக் கேட்டாள். அவளது கேள்வி எனது நெஞ்சை உலுக்கியதன் காரணமாக சில சொல்லக்கூடாத ரகசியங்களை அவளிடத்தில் எடுத்துரைத்தேன்.
நான் தொலைபேசியில் அவளிடத்தில் நான் நம்பிக்கை வைத்து வணங்கி வருகின்ற தெய்வம் என்னிடத்தில் என்னுடைய வயது அறுபத்து ஒன்பது தாண்டி ஆறு மாதங்களுக்குள் எனக்கு மரணம் சம்பவிக்கும் எனச் சொன்னது என்பதனைத் தெரிவித்தேன்.
அவளது குழந்தைகள் மாதங்கள் முறை வைத்து பராமரிக்கின்றார்கள். ஆனால் எனது வாரிசுகளோ அதனைக் கூட செய்ய மாட்டார்கள் என்பதனைக் கருத்தில் கொணடு நான் வணங்கிய தெய்வம் எனக்குப் பதிலாக அவளை முதலில் ஏற்றுக் கொண்டது.
மீண்டுமொரு முறை நான் வணங்கும் தெய்வம் வந்து எனக்கு இறுதி மூச்சு நிற்கும் நாள் எனக்குச் சொல்லி விட்டது. எனவே நானும் அவளும் முதன் முதலாக சந்தித்த அந்த நாளுக்கு முன்னர் என் உடலை விட்டு என் உயிர் பிரியும்.
அதே நேரத்தில் நான் அவளுக்கு ஆலிலைக் கிருஷ்ணன் டாலர் வாங்கிக் கொடுத்த அவளது அடுத்து வரப்போகின்ற பிறந்த நாளுக்கு முன்னர் அவளது உயிர் பிரியும் என்பதனைத் தெரிவித்து இடைப்பட்ட காலத்தில் கண்கலங்க வேண்டாம் எனத் தெரிவித்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என்னைப் பிரிந்து சிறிது காலம் தன்னந்தனியே படப்போகின்ற கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தேன்.
நமது வாரிசுகள் வளர்ந்து தழைக்க நானும் அவரும் முட்டுக் கொடுத்த மூங்கில்களாகவும் தாங்கிப் பிடித்த சாரம் கட்டும் மூங்கில்களலாகவும் உயரத்தினை எட்டுவதள்கு பயன்பட்ட ஏணிகளில் உள்ள மூங்கில்களாகவும் தான் இந்த பூவுலகில் படைக்கப் பட்டு இருக்கின்றோம். நமது வாரிசுகள் நம்மால் அவர்களுக்கு எந்த விதமான பயனும் இல்லை என நினைத்தால் அதிர்ஷ்டம் தரும் என நம்பி வீட்டில் வளர்க்கும் மூங்கில் செடியினுள் ஒரு காம்பு அழுகி விட்டால் கூட அத்தனையும் தூக்கி குப்பைத் தொட்டியில் எறிவது போல நாம் எறியப்படுவோம். நம்மால் நமது வாரிசுகளுக்குப் பயன் இல்லை என்றால் நாம் அக்கினிக்கு இறையாகப் படுவோம் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
இறுந்த பின்னரும் நினைவு கூறத் தக்க வகையில் வாழ்ந்தவன் எனனோ அவன் இறந்தாலும் இறக்காதவனே என குர் ஆனில் சொல்லப் பட்டுள்ளது போல என்னுடைய மறைவிற்குப் பின்னரும் என்னை மற்றவர்கள் நினைவு கூறுவதற்கு என்னால் முடிந்த சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்னும் மனத் திருப்தி என்னிடத்தில் இருக்கின்றது.
என்னுடைய தாயார் இறக்கும் தருவாயில் நான் சொந்த ஊருக்குப் பயணித்த சமயம் நான் வணங்கி வந்த தெய்வம் என்னிடத்தில் சொன்னது போல நான் ஊருக்குப் போன சமயம் எனது தாயின் உயிர் பிரிந்து விட்டது. தாயின் மறைவுக்குப் பின்னர் என்னை தாயாக இருந்து வழி நடத்தப் போவது நான் வணங்கி வந்த அந்த தெய்வம் தான் எனச் சொன்ன காரணத்தால் தாயாரின் மறைவுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க முடியவில்லை. மரணப் படுக்கையில் இருந்த என் தாயாரை சொந்த ஊருக்குப் போய் பார்க்கச் சென்ற தருணத்தில் என் தாயார் அருகில் இருந்த உறவினரிடத்தில் என் மகன் வந்து விட்டான் நான் செல்கின்றேன் என சொல்லி விட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
எனவே என்னை பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த தாய்க்கு வருடா வருடம் கொடுக்க வேண்டிய திதியினைக் கூட நான் கொடுக்க முடியவில்லை. பிண்டம் வைக்காமல் இருந்துள்ளேன். அதனால் எனக்கு கட்டாயம் பித்ரு சாபம் ஏற்படலாம். அதன் காரணமாக நான் மீண்டும் கட்டாயம் மனிதனாகப் பிறந்து கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நான் விரும்பிய பெண்ணை மணந்து கொண்டு அவளது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அடுத்த ஜென்மத்தில் சந்தோஷமான வாழ்க்கையினை ஒரு நாளாவது வாழ்ந்தே தீருவேன் என்னும் நம்பிக்கை எனக்குப் பரிபூரணமாக உண்டு.
மனக் கஷ்டத்திற்காகவும் பொருட் கஷ்டத்திற்காகவும் உடற் கஷ்டத்திற்காகவும் யாரையும் நம்பி யாரிடத்திலும் கையேந்த வேண்டிய சூழ்நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும். இதனிலிருந்து விடுபட ஹிந்து மதத்தில் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்குக் கூட ஒரு கோரிக்கை மந்திரம் உண்டு.
“அனாயாசேன மரணம்
வினாதன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வயீ பக்திம் அஞ்சலாம்”
“இறைவா உன்னிடம் இரண்டு வரங்கள் கேட்கிறேன். இவற்றைக் கொடு.
முதலாவது வரம்:
நோய் நொடியின்றி நான் சாக வேண்டும். சுருங்கச் சொன்னால், சட்டென உயிர் போய் விட வேண்டும்.
இரண்டாவது வரம்:
அப்படிப் போகும் வரை, அதாவது நான் உயிரோடிருக்கும் வரை ஒருவரிடம் போய்க் கையேந்தி வாழும் வாழ்வை மட்டும் எனக்குக் கொடுத்து விடாதே. சாகும் வரை பிச்சையெடுத்து, பிறர் தயவினால் வாழும் வாழ்க்கையினை எனக்குக் கொடுத்து விடாதே”.
அடுத்த ஜென்மத்திலாவது தேக்குமரக் கட்டிலில் பஞ்சு மெத்தையுடன் நானும் அவளும் கட்டாயம் இல்லறத்தில் ஈடு படுவோம் என்னும் நம்பிக்கையினை அவளிடத்தில் தெரிவித்து விட்டேன் என்ற காரணத்தால் என்னைப் பற்றிய கவலையிலிருந்து அவள் விடுபட்டு அவளது கஷ்டங்கள் மறையும் நாளை எதிர்பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அவளும் அவ்வாறே குறுகிய கால எஞ்சியுள்ள வாழ்நாளில் மிகவும் சந்தோஷமாக இருக்கப் போவதாகவும் என்னையும் அப்படியே இருக்குமாறும் சமூக ஊடகத்தில் பதிவிட்டு அறிவுறுத்தியுள்ளாள்.
கட்டாயம் அவளை எனது இறுதி மூச்சு நிற்பதற்கு முன்னர் ஒரு முறை சந்தித்து கலந்துரையாடுவேன் என்னும் திடமான நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.