முதல் நாள் விளையாட்டு தொடர்ச்சி
அடுத்த நாள் காலையில் முதல் நாளைப் போலவே அனைவரும் ஒன்று கூடி விட்டார்கள்.
இன்று என்ன விளையாடலாம் என்று கேட்டதற்கு முதலில் வெயில் சுட்டெறிப்பதற்கு முன்னர் பாண்டி ஆட்டம் என்றார்கள்.
எனக்கு பாண்டி ஆட்டம் நன்றாகத் தெரியும். எட்டு அல்லது ஒன்பது கட்டங்களில் கோடுகளில் படாமல் ஒற்றைக் கால்களால் தாண்டி கோடு மிதிபடாமல் ஆட்டம் ஆட வேண்டும். இதே போல இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு ரைட்டா என்று கேட்டு கோடு மிதிபடாமல் இருந்தால் ரைட்டு என்று சொன்ன பின்னர் அடுத்த கட்டத்திற்கு தாண்ட வேண்டும். அனைவரையும் போலவே நானும் ஆடி பரவாயில்லை நன்றாக ஆடுகின்றாய் என்று அனைவரும் பாராட்டனார்கள்.
அதன் பின்னர் பல்லாங்குழிப் பலகையைக் கொண்டு வந்து பல்லாங்குழி ஆட்டம் ஆரம்பித்தனர். பல்லாங்குழி ஆட்டம் கூட எனக்கு நன்றாகத் தெரியும். அனைவரும் மிக மிக ரசித்து பல்லாங்குழி ஆட்டம் ஆடினோம். இரண்டு பேர் ஆடுவார்கள். ஜெயிப்பவர் அடுத்தவருடன் ஆட்டத்தைத் தொடருவார். மற்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்ப்பார்கள்.
கடைசியில் நானும் அவரும் மாத்திரம் எதிர் எதிரே அமர்ந்து பல்லாங்குழி ஆட்டம் ஆடினோம். அது என்னமோ தெரியவில்லை அவருடன் விளையாடும் சமயம் பல்லாங்குழி ஆட்டத்தில் கூட ஜெயிக்க முடியவில்லை. காரணம் அவர் முன்கூட்டியே குழிகளிலிருந்து முத்துக்கள் எடுக்கும் சமயமே வெற்றியை தீர்மானித்து விடுகின்றார். ஓரிரு முறை நான் மன சஞ்சலப்படக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்.
மதிய உணவுக்குப் பின்னர் அனைவரும் பரமபதம் விளையாட ஆரம்பித்தார்கள். பரம பத ஆட்டத்தில் சோளிகள் விழும் தன்மையைப் பொறுத்தே வெற்றி தோல்வி இருக்கும். நாம் முன் கூட்டி யோசனை செய்து விளையாடி வெற்றி பெற முடியாது. பரமபத ஆட்டத்தில் என்னையும் அவரையும் ஓரணியில் அனைவரும் சேர்த்து விட்டார்கள். அது என்னமோ தெரியவில்லை அவர் சோளியை போட்டால் தாயம் அதாவது ஒன்று அல்லது ஐந்து அல்லது ஆறு அல்லது பன்னிரண்டு ஆகியவை விழுந்து மீண்டும் மீண்டும் சோளிகளைப் போடுவார். ஆனால் நான் போட்டால் மட்டும் இரண்டு மூன்று நான்கு விழும். எப்போதாவது ஒரு முறைதான் அவருக்கு விழுவது போல சோளிகள் விழும். இருந்தாலும் எந்த எண் விழுகின்றதோ அந்த எண்ணை பரமபத கட்டத்தில் காய்களை நகர்த்தும் சமயம் பாம்பு கீழிறக்கும். ஏணி மேலேயேற்றும். எது எப்படியோ நாங்கள் இருவரும் சேர்ந்து ஜெயித்தாலும் தோற்றாலும் அவர் மிக்க சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்வார்.
அதன் பின்னர் இரண்டு மூங்கில்களை ஒரே நேரத்தில் தாளத்துடன் இடம் மாற்றி வைப்பார்கள் ஆடுபவர்கள் கால்களில் அடிபடாமல் குதிக்க வேண்டும் இந்த ஆட்டத்தில் மூங்கில்களின் அசைவுகளுக்கு இடையே உள்ள நேரம் தான் முக்கியம். சற்று தாமதித்தால் அவுட் ஆகி விடுவோம். இதில் அவர் நன்றாக ஆடினார். என்னால் ஆட முடியவில்லை. இருவரும் சேர்ந்து ஆட முடியவேயில்லை. காரணம் அவ்வளவு வேகமாக நேரம் தவறாமல் கால்களை தரையில் படச் செய்து மேலே எழ வேண்டும்.
இந்த நாளில் பல்லாங்குழி பாண்டி பரமபதம் மூங்கில் டான்ஸ் என பல விளையாட்டுகள் விளையாடினோம்.
ஆண்கள் மாத்திரம் கோலிக்குண்டு பம்பரம் சில்லாங்குச்சி கிட்டிப்புள் ஆகியவற்றை விளையாடினார்கள்.
இந்த நேரத்தில் நானும் அவரும் ஒரு கல் மீது ஒரு கல் அடுக்கும் விளையாட்டு மற்றும் மணல் வீடு கட்டும் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினோம். அது என்னமோ தெரியவில்லை இந்த ஆட்டத்தில் மாத்திரம் நான் அவரைத் தவிர வேறு யாரையும் கூட்டுச் சேர்க்கவில்லை.
இரவு படுக்கைக்குச் சென்று படுத்த சமயம் இரண்டு நாட்களில் என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடினோம் என்பது நினைவலைகளாக வந்து கொண்டிருந்தது. நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்து விடும். அனைவரும் மாலையில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
மீண்டும் இது போன்று சந்தோஷமாக விளையாட வார இறுதி வரை காத்திருக்க வேண்டும் என்னும் மனக் கவலை தொற்றிக் கொண்டது. இரவு முழுக்க தூக்கமில்லை.
ஆனாலும் ஒரு சந்தோஷம். இது நாள் வரையில் இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாததை இப்போது தெரிந்து கொள்கின்றோம் என்பது.