என்னுடன் அவரது தாயாரின் நெருக்கம்.
மேல் படிப்பு படிக்க வைப்பதிலிருந்து என்னை அவருக்குக் கட்டி வைப்பது வரையில் அவருக்கு எதிராகவே அவரது தந்தை செயல்பட்ட காரணத்தால் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதே போல பெற்றோர் சொந்தமாக வாங்கிய வீட்டு கிரஹப் பிரவேசதத்திலும் கூட கலந்து கொள்ளவில்லை. பெற்றோர் வீடடுக்கு செல்வதைக் கூட நிறுத்தி விட்டார்.
அதனால் மனமுடைந்த அவரது தாயார் அவருடன் என்னிடத்தில் வந்து நேரில் பேசி நான் வற்புறுத்தியதற்குப் பின்னர் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். அவர்களாகவே வரன் பார்த்து திருமணம் முடிப்பதிலும் அவருக்குப் பிடித்தமான பெண்ணை மணமுடிக்க அவரது தந்தை மறுத்து விட்டார். ஒரு கட்டத்தில் சொந்த ஊர் செல்லும் சமயம் இந்த முறை எந்தப் பெண்ணைக் காட்டினாலும் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டு வருவேன் எனச் சொல்லிச் சென்ற படி ஒப்புக் கொண்டார். இந்த காரணத்தால் பெற்றோர்களாகவே பெண் பார்த்து பேசி முடித்த திருமணத்திலும் கூட அவருக்கு திருப்தி இல்லை.
அவர் இன்று வருவாரா அல்லது நாளை வருவாரா என நான் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சமயம் காலை வேளையில் அவரும் அவரது மனைவியும் உறவினர்களும் என் இல்லத்தைக் கடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். என்னுடைய வீட்டிலிருந்து பத்து பதினைந்து வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் அனைவரும் செல்லும் வரையில் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் செல்லும் தோரணையைப் பார்த்தால் வீடு பால் காய்ச்ச செல்வது போல் இருந்தது. அவர் நான் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே சென்றார். இது போன்ற பால் காய்ச்சும் வைபவத்தில் தான் நான் அவரை முதன் முதலாத சந்தித்து அறிமுகமானேன் என்பது ஞாபகத்ததுக்கு வந்தது.
ஆரம்பத்தில் இதே போல எனக்குத் திருமணம் ஆனவுடன் இதே இடத்தில் நின்று கொண்டு அவரை முதன் முறையாகப் பார்த்த போது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது சோகக் கண்ணீர். அதே போல இப்போதும் கண்ணீர் வருகின்றது. ஆனால் இப்போது என் கண்களில் வருவது ஆனந்தக் கண்ணீர். காரணம் என் வீட்டிற்கு அருகிலேயே அவர் குடி வருகின்றார்.
எங்கள் வீட்டிலேயே கீழே உள்ள போர்ஷனில் குடி வருமாறு நானும் கேட்டுக் கொண்டேன். என் கணவரும் கேட்டுக் கொண்டார். ஆனால் எங்கள் வீட்டிற்கு குடி வராமல் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலேயே வேறு ஒரு வீட்டிற்கு அவர் குடி வருவது எனக்கு முழுச் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் மனத் திருப்தியைக் கொடுத்தது.
அடுத்த நாள் காலையில் நான் வழக்கம் போல் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நடந்து செல்வதைக் கண்ட என் செல்லப் பெண் என்னிடம் பாபா வருகின்றார் என்று சொன்ன சமயம் நானும் பார்த்தேன். அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாக சைகை செய்து காண்பித்து விட்டு என் செல்லப் பெண்ணுக்கு டாடா சொல்லிக் கொண்டே அலுவலகம் சென்றார்.
என் உள் மனம் இனிமேல் இந்த நேரத்தில் அவரை தினமும் காண முடியும் என சந்தோஷப் பட்டது. அடுத்த நாள் காலையில் இதே போன்றதொரு பார்வை. மீண்டும் ஒரு வழியனுப்பல்.
காலையில் அலுவலகம் சென்றால் மாலையில் திரும்பி வருவார் என எதிர் பார்த்தேன். அலுவலகத்திலிருந்து திரும்பும் போதும் கூட அவரை நான் பார்க்க வேண்டும் என தொடர்ந்து மாலை வேளைகளில் அவரைக் காண என் மனம் துடித்தது. ஆனால் அவரைக் காண முடியவில்லை. காரணம் அவர் பார்க்கும் உத்தியோகம். காலையில் சரியான நேரத்திற்குச் செல்லும் அவரால் மாலையில் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. காரணம் எதிர்பாராத பயணங்கள்.
தூரத்தில் இருக்கும் சமயம் மாதம் தவறாமல் என்னைப் பார்க்க வந்து கொண்டிருந்த அவரால் அருகில் குடிவந்த பின்னர் அதனைக் கடைப் பிடிக்க முடியவில்லை. காரணம் அவரது உறவினர்களின் வருகை மற்றும் வேலைப் பளு.
என்றைக்காவது ஒரு நாள் கருமேகங்கள் வானத்தில் தென்படும் இடி மின்னலுடன் மழை வருவது போல இருக்கும். ஆனால் காற்று வந்து மழை மேகங்களைக் கலைத்து விடும். மழை வராமல் போய் விடும்.
இன்றாவது என்னைப் பார்க்க வருவார் என நினைத்தேன். ஞாயிற்றுக் கிழமை காலையில் என்னைப் பார்த்துக் கொண்டே அவரது அண்ணனும் அண்ணியும் அவரது வீட்டிற்குச் சென்றார்கள். அவரது அண்ணனும் அண்ணியும் வந்திருக்கும் காரணத்தால் இன்று அவரை எதிர்பார்க்க முடியாது என உணர்ந்தேன்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. நான் வாழ்ந்திருக்க வேண்டிய அவரது இல்லம் எப்படி இருக்கின்றது என்பதனை அறிய எனது மனம் துடித்தது. எனவே ஒரு நாள் காலை 11.00 மணிக்கு அவரது வீட்டிற்குச் சென்றேன். அந்த வீட்டில் எனது கணவரது உறவினர்கள் வசித்து வருகின்றார்கள். இது வரையில் நான் அந்த வீட்டிற்கு செல்லாமல் முதன் முறையாக சென்ற காரணத்தால் அந்த குடும்பத்து உறவினர்களின் வரவேற்பு பலமாக இருந்தது.
என்னுடைய உறவினர்கள் என்னிடம் திடீரென வந்தமைக்கான காரணம் கேட்ட சமயம் செல்லப் பெண் எங்காவது போக வேண்டும் என அடம் பிடித்ததால் வந்து இருக்கின்றேன் என சமாளித்தேன்.
அதன் பின்னர் எதிர் வீட்டில் யாராவது தங்கி இருக்கின்றார்களா அல்லது காலியாக இருக்கின்றதா எனக் கேட்ட சமயம் உங்க ஊர்க் காரர்கள் தான் வந்திருக்கின்றார்கள். அவர் அலுவலகத்திற்குச் சென்றவுடன் அவரது மனைவியின் பெற்றோர் வந்து தமது மகளை அழைத்துச் சென்று விடுவார்கள். பாதி நாட்கள் வீடு பூட்டித் தான் கிடக்கும் என்று சொன்னார்கள்.
ஏனெனில் நான் அவரைக் காதலிக்கும் சமயம் என்றாவது ஒரு நாள் எனது உறவினர் வீட்டிற்குச் சென்றால் கூட அவரிடத்தில் எங்கு செல்கின்றேன் எப்போது வருவேன் என எல்லாவற்றையும் சொல்லி விட்டுத் தான் செல்ல வேண்டும்.
அவ்வளவையும் அறிந்து கொண்டு அங்கும் கூட தினமும் தவறாது வந்து என்னைப் பார்த்துச் செல்வார். என்னைப் பார்க்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. அந்த அளவுக்கு என் மீது அன்பாக இருப்பார். அவ்வாறான அன்பினைப் பெற கடந்த ஜென்மங்களில் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
அவர் புது வீட்டிற்கு குடி வந்த ஒரு மாத காலத்திற்குள் அவரும் அவரது தாயாரும் ஒரு நாள் மாலை வேளையில் என்னுடைய இல்லத்திற்கு வந்தனர். அந்த சமயம் என் கணவர் வெளியூர் சென்று இருந்தார். அவர்கள் வந்தவுடன் என்னுடைய செல்லப் பெண் பாபா வந்துட்டார் என்று சொல்லிக் கொண்டே அவரது மடியில் அமர்ந்து கொண்டாள்.
திடீர் வருகையின் காரணமாக அவர் வழக்கமாக வாங்கி வரும் சாக்லெட்டுக்கு பதிலாக அருகிலுள்ள ஒரு கடையில் வேறு சாக்லெட் வாங்கி வந்திருந்தார். அதனைப் பார்த்தவுடன் வழக்கமாக கொடுக்கும் சாக்லெட் இல்லையா எனக் கேட்டாள்.
உடனே அவரது தாயார் இவ்வளவு உரிமையோடு இருக்கின்றாள் என்றவாறே அவரிடத்தில் வருமாறு அழைத்தார்கள். அதற்கு என் மகள் மறுத்து விட்டாள். அதன் பின்னர் என்னிடத்தில் குழந்தையை பெற்றுத் தருமாறு கேட்டார்கள். அதற்கு நான் இவர் வந்து விட்டால் என் குழந்தை என்னிடத்தில் கூட வராது. நான் இவர் மீது வைத்திருந்த அன்பினை விட பல மடங்கு என் குழந்தை தற்போது வைத்திருக்கின்றாள் என்றாவாறே நான் அழைத்ததற்கு என்னுடைய பாபா போன பின்னர் எப்போதும் உன்னிடம் தானே இருக்கப் போகிறேன். இப்போது வர மாட்டேன் என மறுத்து விட்டாள்.
உடனே அவரது தாயார் இப்போது பார்க்கலாம் எனக் கூறிக்கொண்டே என்னை அவர் அமர்ந்திருக்கும் சோபாவில் அமர வைத்துக் கொண்டு என் மடியில் படுத்துக் கொண்டார்கள். எனக்கு ஒரே ஆச்சர்யம்.
என் மகளிடம் நீ உன் பாபாவிடமே இரு. நான் உன் அம்மா மடியில் படுத்துக் கொள்கின்றேன் எனச் சொன்னதற்கு நீங்கள் போனவுடன் நான் அம்மா மடியில் படுத்துக் கொள்வேன். இப்போது பாபாவிடம் தான் இருப்பேன் என்று சொன்னதைக் கேட்ட அவரது தாயார் என்னிடத்தில் உன்னை மருமகளாக அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்காவிட்டாலும் உன் மடியில் சற்று நேரம் தலை சாய்த்தால் எனக்கு நிம்மதியைத் தரும் என நினைக்கின்றேன். காரணம் என் தங்கை உனது தோளில் சாய்ந்து தான் உயிர் விட்டாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
ஆரம்பத்தில் உன்னை கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் சமயம் நீ தான் எனக்கு மருமகளாக வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பேன் எனச் சொன்னது கேட்டு நான் அழுது விட்டேன்.
அதன் பின் பத்து நிமிடங்களுக்குப் பின்னர் உன்னைத் தான் என் மகனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் எனக்குத் தெரியாமலேயே உனக்குத் திருமணம் ஆன விவரம் மிக மிக தாமதமாக தெரிய வந்தது. எனவே என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கண்ணீர் சிந்தினார்கள். அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய காலம் போய் நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலை வந்து விட்டது.
அதன் பின்னர் அவரது தாயார் என்னிடத்தில் மருமகளே எனக்கு இரவு டிபன் இங்கு தான். உன் கையால் தயார் செய்து நீ தான் பரிமாற வேண்டும். அதற்குப் பின்னர் தான் வீட்டுக்குத் திரும்புவேன் எனச் சொன்னவுடன் நான் டிபன் செய்யத் தயாரானேன்.
அப்போது என்னுடன் சமையலறைக்கு வந்து ஆரம்ப காலத்தில் எனக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைத்து எனக்கு உணவு ஊட்டிய அன்றே நீ தான் எனது மருமகள் எனத் தீர்மானித்து விட்டேன். ஆனால் என்னுடைய எண்ணங்கள் ஈடேறவில்லை. அதற்குக் காரணம் உன்னுடைய தாயாரும் இவருடைய தந்தையும் தான் என்று சொன்னார்கள்.
வெகு சீக்கிரத்தில் டிபன் செய்து பரிமாறினேன். அப்போது என்னுடைய செல்லப் பெண் அவரது மடியில் அமர்ந்து கொண்டு அவருக்கு உணவு ஊட்டி விட்டாள். அவரிடத்திலும் ஊட்டி விடச் சொல்லி சாப்பிட்டாள். நடுவில் அம்மாவுக்கும் ஊட்டு என்று சொன்ன சமயம் நான் ஊட்டுகின்றேன் என்று சொல்லி அவரது தாயார் எனக்கு உணவு ஊட்டி விட்டார்கள். ஆனால் அதனை என் மகள் பொருட்படுத்தவில்லை. இதனைக் கண்ட அவரது தாயாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இரவு டிபன் முடித்துக் கொண்டு அவரும் அவரது தாயாரும் என்னிடம் விடைபெற்ற சமயம் என் மகள் அவரிடத்தில் நீ அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கோ. அப்போ தான் இங்கு நான் உன்னோடு இருக்க முடியும் என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டது.
அச்சமயம் அவரது தாயார் என்னிடத்தில் பிஞ்சுக் குழந்தையே இவ்வளவு பாசம் காட்டி பிரிய மனமில்லாமல் இருக்கும் சமயம் உன்னுடைய நிலை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது. இருந்தாலும் பரவாயில்லை. அடிக்கடி பார்த்துக் கொள்ளும் தூரத்தில் தான் இருக்கின்றீர்கள் என்று சொல்லி விட்டு நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று தான் நான் நன்றாக உறங்க முடியும் என்று நினைக்கின்றேன் ஆனால் உனக்குத் தூக்கம் வருமா என்பது தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டே விடை பெற்றார்கள்.
இருவரும் என்னிடத்தில் பிரிய மனமில்லாமல் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சொன்னது உண்மை தான். அன்றிரவு எனக்கு முழுதுமாகத் தூக்கம் வரவில்லை.