மகனின் திருமணம் பற்றிய உரையாடல்
அவர் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த சமயத்தில் நான் அவரை வரவேற்று இனிப்பு மற்றும் பிஸ்கட் கொடுத்து உபசரித்தேன். அதன் பின்னர் எனது மருமகளிடத்தில் நம் இருவருக்கும் தேனீர் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளின் படி தேனீர் வந்தது. நாம் இருவரும் தனித் தனியாக தேனீர் பருகினோம். அதன் பின்னர் இருவரும் எனது மருமகள் முன்னிலையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவர் மிக மிக சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் நானும் என்னுடைய முதலாவது மருமகளும் ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தோம். காரணம் கடவுள் பக்தியே இல்லாமல் இருந்த அவர் உழைப்பினால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும் என நினைத்திருந்தார். கோயில்களைப் பற்றி இவ்வளவு விவரமாகத் தெரிந்து கொண்டு விளக்கிக் கூறுகின்றார் என்றால் அது ஆச்சர்யம். நன்கு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் திடீரென அவர் தமது கடிகாரத்தைப் பார்த்து விட்டு ரொம்ப நேரமாகி விட்டது எனக்கூறி இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வருவதாகச் சொல்லி விடை பெற்றார்.
என் மருமகள் என்னிடத்தில் அவர் பேசியதை உன்னிப்பாக கேட்கவில்லை என கோபித்துக் கொண்டு உடனடியாக புறப்பட்டு விட்டாரா எனக் கேட்டாள். அதற்கு நான் அப்படி எதுவும் இருக்காது எனவும் அவருக்கு கோபம் என்பது நம்மிடத்தில் கட்டாயமாக இருக்காது எனவும் சொன்னேன். என் மருமகள் என்னுடன் இருந்த காரணத்தால் அவரால் மனம் விட்டுப் பேச முடியவில்லை என்பதனையும் நானும் ஒரு சில விஷயங்களை அவரிடத்தில் நேரடியாக கேட்க முடியவில்லை என்பதனையும் என்னால் உணர முடிந்தது. அவர் மீண்டும் இரண்டு நாட்களில் திரும்பி வருகின்றேன் எனச் சொல்லி விட்டுச் சென்றதனை கேட்ட எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
அவரது வருகையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். அவர் சொல்லிச் சென்றவாறு இரண்டு நாட்களுக்குப் பின்னர் பகல் நேரத்தில் மதிய உணவுக்குப் பின்னர் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தார். அவரை வரவேற்று சோபாவில் அமர வைத்து மதிய உணவு சாப்பிடலாமே எனக் கேட்டேன். பதிலுக்கு அவர் இங்கிருந்த சமயம் பணியாற்றிய அலுவலகத்திற்குச் சென்று வந்ததாகவும் அங்கு முஸ்லீம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் அவளுடன் சேர்ந்து அசைவ உணவு சாப்பிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். நான் டீ மாத்திரம் சாப்பிடலாமே எனக் கேட்டேன். அவரும் சரியென ஒப்புக் கொண்ட பின்னர் இருவரும் வழக்கம் போல் தேனீர் பருகினோம்.
நானாகவே அவரிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருக்கும் சமயம் திடீரென புறப்பட்டமைக்கான காரணம் கேட்டேன். அதற்கு மருமகள் கூட இருந்த காரணத்தால் சில விஷயங்களை மனம் விட்டுப் பேச முடியவில்லை எனவும் இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருந்த காரணத்தால் அதனை பகல் நேரத்தில் தான் பேச முடியும் என்பதனால் மீண்டும் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். நான் என்னவென்று கேட்டேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.
என்னுடைய இல்லம் அமைந்துள்ள இடத்திலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டில் இருக்கின்ற ஒரு பெண்ணின் ஜாதகம் தன் மகனின் ஜாதகத்துடன் மிகவும் பொருந்தி இருப்பதாகவும் அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு முன்னர் என்னிடத்தில் விசாரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கேட்டு வந்துள்ள பெண்ணைப் பற்றி என்னுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்தேன்.
பெண் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல குணம் படைத்தவள் என்றும் அவரது அந்தஸ்துக்கு ஏற்ற இடம் தான் என்றும் தெரிவித்தேன். அந்தக் குடும்பத்தில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன என்றும் நல்ல முறையில் லாப கரமாக இயங்கி வருகின்ற மொத்த விற்பனை கடைகள் இருப்பதனையும் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண் என்பதனையும் பெண்ணுடன் கூடப் பிறந்தவர்கள் அண்ணன்கள் தம்பிகள் அல்லது அக்கா தங்கைகள் யாரும் இல்லை என்பதனையும் தெரிவித்தேன்.
அந்த சமயத்தில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெண்ணுக்கு அண்ணன் தம்பிகள் மற்றும் அக்கா தங்கைகள் இருக்க வேண்டும். ஜாதகம் நன்றாகப் பொருந்த வேண்டும் என பலப்பல நிபந்தனைகளை வைப்பதன் காரணமாக அந்த இடம் சரியாக வராது எனத் தெரிவித்தார்.
அவர் விசாரிக்க வந்த அந்தப் பெண்ணுடன் எனக்கு மிக மிக நெருங்கிய பழக்கம் இருந்த காரணத்தால் தொலை பேசியில் எனது இல்லத்திற்கு பேச்சுத் துணைக்கு வந்து செல்லுமாறு அந்தப் பெண்ணை அழைத்தேன். அந்தப் பெண்ணும் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சற்று நேரத்தில் எனது இல்லம் வந்தடைந்தாள்.
அந்த சமயம் அந்தப் பெண் எனது வீட்டிற்கு விருந்தினர் யாரோ வந்திருப்பதன் காரணமாக மாலையில் சந்திப்பதாகச் சொல்லி விட்டுத் திரும்ப முயன்ற சமயம் நான் அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்த பின்னர் அவரது இல்லத்திற்கு விருந்தினர் வந்திருப்பதாக சொல்லி சமாளித்து அருகில் அமரச் சொன்னேன். அச்சமயம் அந்தப் பெண் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொல்லி புன்னகையுடன் புறப்பட்டாள். அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து இருந்தது என்பதனை அறிந்து கொண்டேன்.
பெண்ணின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண் என்பதன் காரணமாக திருமணத்திற்குப் பின்னர் வீட்டோட மாப்பிள்ளையாக மருமகன் இருந்து கொண்டு சொத்துக்களைப் பராமரித்து வியாபார விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என அந்தப் பெண்ணின் வீட்டினர் எதிர்பார்ப்பதன் காரணமாக நன்கு படித்த நன்கு சம்பாதிக்கின்ற வரன்கள் நிறைய வந்தும் கூட திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகின்றது என்பதனை தெரிவித்தேன்.
அதற்கு அவரது வீட்டில் அண்ணன் தங்கைகள் இல்லாத காரணத்தால் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று தமது மனைவி மற்றும் உறவினர்கள் சொல்லி விடுவார்கள் எனவும் அவரது குடும்பத்தார் கட்டாயம் வீட்டோட மாப்பிள்ளை நிபந்தனைக்கு ஒத்துக் கொள்ளாமல் மறுப்பு தெரிவிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
அவர் என்னிடத்தில் எனது மகனுக்கு மணமுடித்து வைக்கலாமே எனக் கேட்ட சமயம் முதல் மகன் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஒரே தெருவில் வசிக்கின்ற அடிக்கடி எனது வீட்டிற்கு நல்லெண்ணத்துடன் வந்து செல்கின்ற அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைத்தால் இதுவும் காதல் திருமணம் என ஊரார் அனைவரும் சொல்வார்கள் என்பதன் காரணமாக அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லையெனத் தெரிவித்தேன்.
அது தவிர அந்தப் பெண்ணை என்னுடைய இரண்டாவது மகனுக்குப் பேசி முடித்து விட்டால் வீட்டோட மாப்பிள்ளையாக அவன் மாமனார் வீட்டிற்குப் போய் விடுவான். அவனைப் பொறுத்த வரையில் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இருக்காது. ஆனால் கணவனை இழந்த நான் என்னுடைய கடைசி காலத்தில் எனது வயிற்றுப் பிழைப்பிற்காக யாருடைய தயவினையாவது சார்ந்து இருக்க வேண்டும்.
எதிர் காலத்தில் என்னுடைய மகன்களுக்கு என்னை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நான் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போய் விட்டால் சம்மந்தி வீட்டிற்குச் சென்று நான் தங்குவது என்பது எனக்கு தன்மானப் பிரச்சினையாக உருவெடுக்கும். அதுவும் தவிர ஒருவர் சம்மந்தி வீட்டிற்கு விருந்தினராகச் சென்றால் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல மூன்று நாட்களுக்கு மேல் தங்க முடியாது என்பதனால் எனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தேன். பிற்காலத்தில் எனது வாரிசுகள் நான் மட்டும் தான் உனக்கு சோறு போட வேண்டுமா எனக் கேட்டால் என்னால் அதனை தாங்கிக் கொள்ளும் சக்தி என்னிடத்தில் இல்லை என்பதனைத் தெரிவித்தேன்.
நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் நமது இறுதி மூச்சு நிற்கும் வரையில் அரசாங்கத்திலிருந்து பென்சன் வந்து கொண்டு இருந்திருக்கும். பெண்ணையோ அல்லது சன்னையோ நம்பியிருக்காமல் பிற்காலத்தில் நம்மில் யாரேனும் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்க நேரிடுகின்ற பட்சத்தில் யாருடைய தயவினையும் எதிர்பார்க்காமல் பென்ஷனில் இறுதிக் கால வாழ்க்கையினை நடத்தி இருக்க முடியும் என்பதனைத் தெரிவித்தேன்.
ஆனால் நான் இந்த வீட்டில் திருமணம் செய்து கொண்டு காலடி எடுத்து வைத்த சமயம் இருந்த சொத்துக்கள் மற்றும் வருமானம் மற்றும் ரொக்க இருப்பு அத்தனையையும் கணவரது மருத்துவத்திற்கும் பிள்ளைகளின் கல்விக்கும் பிள்ளைகளின் திருமணத்திற்கும் செலவு செய்து விட்டு தற்சமயம் திருமணத்திற்கு முன்னர் நீங்கள் எப்படி உழைப்பினை நம்பி எதிர் காலத்தினை திட்டமிட்டு அமைத்துக் கொண்டீர்களோ அது போல என்னுடைய நிலைமை வாரிசுகளின் பராமரிப்பினை நம்பி திட்டமிட வேண்டி இருக்கின்றது. எனவே அந்தப் பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கும் சமயம் எனது எதிர்கால வாழ்க்கையின் திட்டமிடல் அமைந்துள்ளது என்பதனை நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது எனச் சொன்னேன். அவரது கண்களில் கண்ணீர்.
அந்த சமயம் எனது இரண்டாவது மகன் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பினான். அந்த சமயம் அவரிடத்தில் மீண்டும் திருமணத்திற்கான அறிவுறைகளை ஒரு முறை திரும்பச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் என் மகனிடத்திலும் என்னிடத்திலும் தெரிவித்தார். அதன் படி நான் என் மகனுடன் திருப்பதி மற்றும் காளஹஸ்தி சென்று வருவது எனத் தீர்மானித்தோம்.
அந்த சமயம் அவர் என்னிடத்தில் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் செய்யும் படியும் திருப்பதியில் வழிபாடு செய்யும் முறை பற்றியும் விவரமாக சொல்லி முடித்தார். அதன் பின்னர் காளஹஸ்தியில் நடைபெறுகின்ற பூஜையில் மகனை அமர வைத்துக் கலந்து கொள்ளுமாறு சொன்னார். நானும் சரியென ஒப்புக் கொண்டேன்.
அவர் எனது இல்லத்திற்கு வந்ததனால் எனது வீட்டில் நடைபெற வேண்டிய இரண்டாவது மகனின் திருமணம் விரைவில் நடந்து விடும் என்னும் நம்பிக்கை எனக்கு முழுமையாக ஏற்பட்டு விட்டது. ஆனால் அவரது மகனுக்கு அவர் பார்க்க வந்த பெண் வரனாக அமையுமா அல்லது அமையாதா என்பதனை அவர் சொந்த ஊருக்குச் சென்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளின் படி தான் முடிவு செய்ய முடியும். ஆனாலும் எனக்கு அந்த வரன் அமையும் என்னும் நம்பிக்கை முழுவதுமாக இல்லை.
நம் இருவருக்கும் எவ்வளவுக்கெவ்வளகு கருத்து ஒற்றுமை மற்றும் அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் இருக்கின்றதோ அதற்கு நேர் மாறாக அவருக்கு மனைவி கிடைத்துள்ளது அவர் செய்த முன் வினைப் பயன். அதே சமயம் நான் அவருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட முடியாதது கூட நான் செய்த முன்வினைப் பயன் என நினைத்து சில நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.