வணிகத்தில் இழப்பைத் தடுப்பது எப்படி?
உறவினர்கள் அனைவரும் என் கணவர் இறந்த பின்னர் ஒரு வருடம் கழித்து வைக்க வேண்டிய திவசத்தை 48 நாட்களில் முடிக்குமாறு கேட்டுக் கொண்டபடி மகன்களையும் நெருங்கிய உறவினர்களையும் அழைத்து அந்தச் சடங்கினை நிறைவேற்றி முடித்தேன். அதற்கு மகள் மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் வந்திருந்தார்கள். அவரது நண்பரான எனது உறவினரும் அதில் கலந்து கொண்டார்.
ஹிந்து மத சம்பிரதாயப்படி ஒரு பெண்ணுக்கு கணவர் இறந்து விட்டால் அந்தப் பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறிது நேரமாவது தாய் வீட்டில் வைத்திருந்து திரும்ப அழைத்து வந்து புகுந்த வீட்டில் விட வேண்டும். எனக்கு தாய் வழி உறவினர்கள் யாரும் இல்லை என்பதன் காரணமாக அந்த சம்பிரதாயப்படி சொந்த ஊருக்கு நான் செல்ல முடியவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் கூட அவரை அந்த சமயத்தில் சந்தித்து நான் அறிவுரைகள் பெற்று இருக்க முடியும்.
திவசத்திற்கு வந்திருந்த என் உறவினரிடத்தில் நான் அவரை பார்க்க வேண்டும் எனவும் அவருடன் பேச வேண்டும் எனவும் அவரால் வர முடிந்தால் வரச் சொல்லுங்கள் எனவும் அவர் வருவதற்கு அவரது உடல் நிலை இடம் கொடுக்கவில்லை என்றால் நான் சொந்த ஊருக்கு வந்து அவரைக் காண வேண்டும் எனவும் தெரிவித்தேன்.
எனது உறவினர் அவரது நண்பரிடத்தில் எனது வேண்டுகோளை தெரிவித்து விட்டதாகவும் அவரே என்னைக் காண எனது இல்லத்திற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். நான் என் உறவினரிடத்தில் அவரை மாலை நேரத்தில் வராமல் பகல் நேரத்தில் வருமாறு சொல்லும்படி கேட்டுக் கொண்டேன். அவர் மாலையில் வந்தால் ரொம்ப நேரம் மனம் விட்டுப் பேச முடியாது எனச் சொன்னேன். என் உறவினரும் சரியென ஒப்புக் கொண்டு அவரிடம் தெரிவித்து விட்டார்.
அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். நான் கேட்டுக் கொண்டபடி முற்பகலில் அவர் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். அவர் ஞாயிற்றுக் கிழமையன்று எனது இல்லத்திற்கு வந்ததால் அச்சமயத்தில் என் கணவர் வழி உறவினரது மகள் விடுமுறையில் எனது வீட்டிற்கு வந்து எனது முதலாவது மகனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அதன் காரணமாக நான் வராண்டாவில் அமர்ந்து இருந்தேன். அவரும் என்னுடன் அமர்ந்து கொண்டார். அவர் என்றைக்கும் வரலாம் என்னும் எண்ணத்தில் சமையலை முன்னமேயே முடிக்க ஆரம்பித்து விட்டேன். அவர் வந்தவுடன் அவரிடத்தில் கேட்காமலேயே ஒரு டம்ளர் தேனீர் கொடுத்தேன். அவரும் ஆவலுடன் பருகினார்.
அவர் என்னுடைய இல்லத்திற்கு வரும் சமயம் நாங்கள் இருவரும் நிறையப் பேச வேண்டும். அவரிடத்தில் நான் நிறைய அறிவுறைகள் கேட்டு என்னை வழி நடத்தச் சொல்ல வேண்டும் என மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் என்னுடைய மகன் வீட்டில் இருந்த காரணத்தால் என்னால் என்னுடைய வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான எதனையும் கேட்கவோ பேசவோ முடியவில்லை. அதனை அவரும் அறிந்து கொண்டார்.
அதன் பின்னர் அவருக்கு நெஞ்சு வலி எப்படி இருக்கின்றது எனக் கேட்டு விட்டு அது வந்ததற்கு மன அழுத்தம் தான் காரணம் என்பதனையும் மன அழுத்தத்திற்கான முழு காரணத்தையும் அவர் சொல்ல நான் அறிந்து கொண்டேன். அது எனக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது. சோகத்திற்கான காரணம் நம் இருவருக்கும் ஒன்று தான் என்பதனால் நான் அதனைப் பற்றிக் கேட்கவில்லை. நம் இருவரது பிரிவினை விட அதிகமான சோகம் நம் வாழ்க்கையில் நம் இருவருக்கும் எப்போதும் ஏற்படாது என்பது நம் இருவருக்கும் தெரியும்.
வராண்டாவில் அமர்ந்தபடி அவர் எனது மகனின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அந்தப் பெண்ணுக்கும் என் மகனுக்கும் மிக நெருக்கமான உறவு இருக்கின்றது எனவும் அது காதலாகக் கூட இருக்கலாம் எனவம் தெரிவித்தார். அதற்கு நான் அவ்வாறு ஒன்றும் தெரியவில்லை எனச் சொன்ன போது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல நீயும் நானும் காதலிக்கும் சமயம் எவ்வளவு நெருக்கமாக இருந்தோமோ அதனை விட அதிக நெருக்கமாக இருவரும் இருக்கின்றனர் எனவும் அது பற்றி அவர் சென்ற பின்னர் கேட்டுத் தெரிவித்தால் நம்மைப் போல அவர்கள் எதிர்காலத்தில் பிரிந்து கஷ்டப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
அவரை நான் எதற்கு வரச் சொன்னேனோ அதனைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றி அவருடன் பேச ஆரம்பித்தேன். முதலில் இல்லறம் பற்றிக் கேட்ட சமயம் நம் இருவருக்குமிடையே உள்ள அன்பும் அரவணைப்பும் நெருக்கமும் நீண்ட நேரம் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய பொறுமையும் அவரது குடும்பத்தாரிடத்தில் காண முடியிவில்லை எனவும் வாழ்க்கை என்பது பணத்தினை மாத்திரம் முதன்மைப் படுத்தி காதலுக்கு நேர் எதிரானதாக இருக்கின்றது எனவும் சுறுக்கமாகத் தெரிவித்தார்.
புதிதாக ஆரம்பித்துள்ள வியாபாரம் எப்படி இருக்கின்றது எனக் கேட்டேன். வியாபாரம் ஆரம்பிப்பதில் ஒரு தவறு செய்து விட்டதாகச் சொல்லி அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.
தமது வாரிசுகளுக்கு தாம் ஆரம்பித்துக் கொடுத்துள்ள வியாபாரம் மொத்த வியாபாரம் என்பதால் தானும் வியாபாரத்தின் போக்கினைக் கண்காணிக்க முடியும் என்னும் எண்ணத்தில் வீட்டிலேயே ஆரம்பித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். வியாபாரம் பற்றி எது கேட்டாலும் எப்போது கேட்டாலும் சொல்வதற்கு அவரது குடும்பத்தார் தயாராக இல்லை எனவும் வியாபாரம் எப்படி செய்வது என்பது தொடர்பாக அனைத்தும் தெரியும் என்றும் குடும்பத்தார் அனைவரும் சொல்கின்றார்கள் எனவும் தெரிவித்து வீட்டில் வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தது தான் அவர் செய்த தவறு எனவும் தெரிவித்தார்.
வீட்டிலேயே வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்ததன் மூலம் இரவு பகல் பாராமல் எப்போதும் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியும் எனவும் தனியாக ஒரு இடத்தில் கடை பிடித்து அங்கு வியாபாரம் ஆரம்பித்தால் கடைக்கு வாடகை கொடுப்பது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நேரங்களில் தான் கடையினைத் திறந்து வியாபாரம் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
தனியாகக் கடை பிடித்து வியாபாரம் செய்தால் கடையினைத் திறந்தாலும் திறக்காவிட்டாலும் விற்பனை நடந்தாலும் நடக்காவிட்டாலும் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் மாத வாடகை கட்டாயம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் விடுமுறை நாட்களில் கடையினைத் திறக்க முடியாது எனவும் தெரிவித்தார். உள்ளுரில் விடுமுறையாக இருந்தாலும் வெளியூர்களில் கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
வீட்டிலேயே வியாபாரம் செய்வதன் மூலம் வரப்பெற்ற கொள்முதல் ஆர்டர்களுக்கு இரவு நேரத்தில் அல்லது அதிகாலை நேரத்தில் சரக்குகளை எடுத்து வைத்து வாடிக்கையாளர்களின் கடைகளுக்கு அவர்கள் கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே நாம் டெலிவரி கொடுக்க புறப்பட்டுச் செல்ல முடியும் எனவும் கடைகள் திறக்கப் பட்டவுடன் சரக்குகளை சப்ளை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் நீண்ட நேரம் சரக்குகளை சப்ளை செய்ய முடியும் என்பதால் வியாபாரம் நன்கு பெருக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.
வீட்டிலே வியாபாரத்தை ஆரம்பிக்கும் சமயம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் வியாபாரத்தில் வருகின்ற வசூல் தொகையினை வீட்டுச் செலவுகளுக்கு தமது இஷ்டப்படி செலவு செய்வார்களேயானால் வருகின்ற லாபத் தொகையினை விட அதிகமாக செலவுகளுக்கு எடுத்து விட்டு முதலீட்டுத் தொகையினைக் கூட வீட்டுச் செலவுகளுக்கு எடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் விரைவில் முதலீடு என்பது கரைந்து வியாபாரம் நஷ்டத்தில் முடியும் எனத் தெரிவித்தார்.
வீட்டு உறுப்பினர்கள் யாரும் வியாபாரத்தின் மூலம் வருகின்ற வசூல் தொகையிலிருந்து வருகின்ற பணத்தினை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்து வீட்டுச் செலவு செய்ய மாட்டார்கள் என்னும் நம்பிக்கை இருந்து அது கடைப்பிடிக்கப் பட்டால் மட்டுமே வியாபாரத்தில் லாபம் ஈட்ட முடியும் எனவும் அது சாத்தியமில்லையெனில் தனியே வேறு ஒரு இடத்தில் வியாபாரம் ஆரம்பிப்பது நல்லது எனவும் தெரிவித்தார்.
அப்படிச் செய்வதனால் கடைக்கு வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் மட்டும் தான் அதிகப் படியான செலவாக இருக்கும் எனவும் வியாபாரம் செய்வதில் வருகின்ற வசூல் தொகையினை கொள்முதல் செய்தவர்களுக்கு கொடுத்து முடித்த பின்னர் அப்படியே வங்கியில் செலுத்தி விட்டு குடும்ப செலவுகளுக்கு லாபத்தை மாத்திரம் கணக்குப் பார்த்து வருகின்ற அல்லது வரப்போகின்ற லாபத்திலிருந்து அதனை விட குறைவான தொகையினை செலவுகளுக்கு எடுத்துக் கொண்டால் கட்டாயம் நஷ்டம் ஏற்படாது எனத் தெரிவித்தார். அதுவும் சாத்தியமில்லையெனில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை பங்குதாரர்கள் சம்பளமாக எடுத்துக் கொண்டு வீட்டுச் செலவுகளுக்கு உபயோகிக்கப் படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
அதே போல லாபத்தைக் கணக்கிடும் சமயம் சரக்குகளுக்கான வண்டி வாடகை ஏற்று இறக்குக் கூலி சரக்குகள் விரயமாதல் உற்பத்திச் செலவுகள் மின்சாரக் கட்டணம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே உண்மையான லாபத்தைக் கணக்கிட முடியும் எனவும் பணியாளர்களுக்கு கொடுக்கப் படுகின்ற சம்பளம் மற்றும் இதர செலவுகள் வருகின்ற லாபத்தினை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வியாபாரத்தில் லாபத்தினைக் கணக்கிடும் சமயம் செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் விற்பனை வரி மற்றும் தொழில் வரி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மொத்த வியாபாரம் செய்பவர்கள் சில்லரை வணிகர்களுக்கு சப்ளை செய்த சரக்குகளுக்கு உண்டான தொகையினை உரிய காலத்தில் வசூலித்தால் மட்டுமே சொள்முதல் செய்தவர்களுக்கு முறையாக உரிய காலத்தில பணம் செலுத்த முடியுமெனவும் இல்லையெனில் மேலும் மேலும் முதலீடு செய்து கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார். அந்த வகையான முதலீட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய வட்டித் தொகை நஷ்டமாகும் எனவும் தெரிவித்தார்.
மேலே சொன்ன எதனையும் அவரது குடும்பத்தார் கடைப் பிடிக்காத நிலையில் வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்ததன் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுமோ என்பதும் அதன் காரணமாக மேலும் மேலும் பண விரயம் ஏற்பட்டு அதன் காரணமாக மன அழுத்தம் அதிகமாகி விடுமோ என்னும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் அலுவலக பணியிலிருந்து விலகியிருந்து ஓய்வெடுப்பது என்பது அவரது வாழ்நாளில் ஓய்வு பெறும் வரையில் அல்லது அவரது உயிர் பிரியும் வரையில் முடியாது போல இருக்கின்றது என்று தெரிவித்த சமயம் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவர் சொன்னது எனக்குப் பாதி புரிந்தது பாதி புரியவில்லை என்றாலும் அவர் அவரது குடும்பத்தாரின் நடவடிக்கைகளைப் பற்றிச் சொன்னது என் மனதுக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.
அதற்குப் பின்னர் அவருக்கும் என் மகனுக்கும் உறவுக் காரப் பெண்ணுக்கும் சேர்த்து உணவு பரிமாறினேன். மதிய உணவு முடிந்த பின்னர் என் மகன் உறவுக்காரப் பெண்ணை இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பஸ் ஏற்றி விட்டு வருவதாகச் சொல்லி புறப்பட்டான்.
அந்த சமயம் அவர் என்னிடத்தில் ஒரு வருடத்திற்குப் பின்னர் நடத்த வேண்டிய திவசத்தை 48 நாட்களில் முடிக்குமாறு உறவினர்கள் சொன்னதை மகன்களும் ஆதரிக்கின்றார்கள் என்று சொன்னதற்கு இருவரும் காதலிக்கின்றார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணத்தினை நடத்திக் கொள்ள முயற்சிப்பதும் தான் காரணம் என்று சொன்னார்.
இருவரது காதலை அவர் உறுதிப் படுத்திக் கொண்டதாகவும் மகனிடம் விசாரித்து தமக்கு தகவல் தெரிவித்தால் இருவரது முறைப்படியான திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வேன் எனவும் தெரிவித்து என்னிடத்தில் விடை பெற்றார்.
அவர் என் இல்லத்தை விட்டுச் செல்லும் சமயம் என்னைப் போலவே என் மகனும் வாழ்நாள் முழுவதும் கவலைப்படப் போகின்றானா அல்லது அவனாவது சந்தோஷமாக இருக்கப் போகின்றானா என எனது எண்ண ஓட்டங்கள் இருந்தன. அவர் திரும்பிச் செல்லும் சமயம் இன்னும் 15 நாட்களுக்குப் பின்னர் ஒரு மாதத்துக்குள் மீண்டும் வருவதற்குள் மகனிடம் கேட்டு விவரம் தெரிவிக்கச் சொல்லி இருக்கின்றார். மகனிடத்தில் இந்த விஷயத்தை எப்படிக் கேட்பது என்னும் கவலை என் மனதில் தொற்றிக் கொண்டது.
இரவு நேரங்களில் வழக்கம் போல நான் என் தலையணைகளை என் கண்ணீரால் சற்று அளவுக்கு அதிகமாக ஈரமாக்கினேன்.