ஆழமான பிரார்த்தனை
நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் ஒரு நாள் நானும் அவரும் வழக்கம் போல் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது என்னுடைய தாயார் திடீரென ஏதோ பேச வேண்டும் என்றும் நான் இடையில் இடைமறித்து எதுவும் பேசக் கூடாது என்றும் சொல்லி விட்டு பேச்சினை ஆரம்பித்தார்கள்.
நானும் அவரும் என்னுடைய தாயார் நம்முடைய திருமணத்தைப் பற்றித்தான் பேசுவார்கள் என்று எதிர் பார்த்த சமயம் நம் இருவருக்கும் அவர் பேசியது பேரிடியாக இருந்தது.
என்னுடைய தாயாரின் பேச்சு அவருடைய தந்தையின் தூண்டுதலின் பேரில் தான் என்பதனை அவர் நன்கு புரிந்து கொண்டார்.
என்னுடைய தாயார் பேசும் சமயம் எனது குடும்பம் வாழ்ந்து கெட்ட குடும்பம் எனவும் அவரது குடும்பம் வளர்ந்து வருகின்ற வசதியான குடும்பம் என்றும் சொல்லி விட்டு அவரது தந்தை எதிர் பார்க்கும் அளவிற்கு வசதியானவர்கள் அல்ல எனவும் அவரது தந்தை எதிர்பார்க்கும் அளவிற்கு சீர் வரிசைகள் செய்ய முடியாது நகைகள் போட முடியாது என்று சொல்லி விட்டு நான் அறிந்திராத எனது குடும்பத்தில் நடந்த துயர சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படுவது போல நான் எனது அந்தஸ்துக்கு மீறி ஆசைப் படக்கூடாது என்று சொன்னார்கள்.
ஆனால் என்னையோ அல்லது அவரையோ ஒரு வார்த்தை கூட பேச இடம் கொடுக்காமல் எனது தாயார் மட்டும் பேசி விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று விட்டார்கள்.
என் தாயாரின் பேச்சினைக் கேட்ட எனக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. என்னால் எதுவும் பேச முடியாமல் தவித்த போது அவராலும் சோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
திடீரென எதிர் பாராமல் என் தாயாரின் பேச்சினைக் கேட்ட அவராலும் எனக்குச் சமாதானம் சொல்லவோ அல்லது அவரது உணர்வுகளை வெளிப்படுத்தவோ முடியாமல் இருந்தார்.
வீட்டிற்கு உள்ளே சென்ற என் தாயார் உடனே வருமாறு என்னை அழைத்த காரணத்தால் நான் வீட்டிற்குள் அழுது கொண்டே சென்று உறங்கிய சமயம் எங்கே அவரை இழந்து விடுவோமோ என்னும் சோகத்தின் காரணமாக எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் படுக்கையில் படுத்திருந்தேன். நான் பழைய நிலைக்கு வர ஒரு வார காலம் பிடித்தது.
எனது உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த சமயத்தில் அவரது தாயார் ஒரே ஒரு முறை வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்து கண்களில் நீர் ததும்ப தனது இல்லத்திற்கு திரும்பியது பார்த்த எனக்கும் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
ஆனால் நானோ அல்லது அவரது தாயாரோ என் குடும்பத்தார் முன்னிலையில் எதுவும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ள முடியவில்லை.
எனக்கு மிகப் பெரிய மன வருத்தம். என்னவெனில் அவரது தந்தை என் வீட்டிற்கு வந்தால் தரப்படும் வரவேற்பு மற்றும் உபசரிப்பு அவரது தாயாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதனை நன்கு அறிந்து கொண்டேன். காரணம் அவர்கள் நம் காதலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்பது..
எனது உடல் நலம் பூரணமாகத் தேறிய பின்னர் அவரை நான் மீண்டும் சந்தித்த சமயம் இனிமேல் தந்தைக்கு தொழிலிலோ அல்லது வாணிபத்திலோ உதவியாக இருந்து என்னை திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை முற்றிலும் நீங்கி விட்டது. எனவே அவருக்கென்று சுயமாக வருமானம் வரும் வகையில் ஏதேனும் தொழில் தொடங்குவது அல்லது எங்காவது பணியில் சேர்ந்து சம்பாதித்து என்னை திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து முடிவெடுத்தோம்.
நல்ல வேளையாக பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவுடன் வீட்டில் உள்ள எவருக்கும் தெரியாமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை கிடைப்பதற்காக பதிவு செய்து வைத்திருந்தார்.
அதே போல புகுமுக வகுப்பில் தேர்ச்சி அடைந்த விவரத்தையும் தட்டச்சுப் பயிற்சியில் லோயர் மற்றும் ஹையர் தேர்ச்சி பெற்ற விவரத்தையும் சுறுக்கெழுத்துப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற விவரத்தினையும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து புதுப்பித்து இருந்தார். இவற்றையெல்லாம் எப்போது செய்தார் என்று எனக்கு தெரியவில்லை.
அரசு வேலைகளில் சேருவதற்காக அரசாங்கத்தின் பொதுத் தேர்வு ஆணையத்தில் விண்ணப்பித்து அதற்கான பரிட்சையும் எழுதி இருந்தார். வேலை கிடைக்க வேண்டி எப்போது விண்ணப்பித்தார் எப்போது பரிட்சை எழுதினார் போன்ற விவரங்கள் எதனையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை.
எப்போது படித்தார் எப்போது பரிட்சை நடந்தது எப்போது எழுதினார் என்பது போன்ற விவரங்களை இவ்வளவு தூரம் நெருக்கமாகப் பழகி வந்த என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.
நான் அவர் மேலும் மேலும் படித்து பொறியாளர் பட்டதாரி ஆகும் எண்ணத்தில் இருப்பதால் படிப்பில் மாத்திரம் தான் கவனம் செலுத்தியிருப்பார் என்று நான் நினைத்திருந்தது தவறு என்பதனை நான் அறிந்தேன்.
யாருக்குமே தெரியாமல் முன்னேற்பாடாக வேலைக்குச் சென்று எப்படியாவது என்னைக் கரம்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் முன் யோசனையுடன் செயல் பட்டு வேலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளார் என்ற விவரம் இந்த பிரச்சினைக்குப் பின்னர் தான் எனக்குத் தெரியவந்தது.
என்னிடம் இந்த விவரங்களை சொல்லும் சமயம் வேறு யாருக்கும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம் இது வரை நாம் இருவரும் தனிமையில் சந்தித்து உரையாடி மகிழ கோயில் குளங்களுக்குச் சென்று வந்தோம்.
இனிமேல் எனக்கு வேலை கிடைத்தவுடன் உன்னைக் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு எனக்கு விரைவில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக கடவுளிடம் பிரார்த்தனைகள் மேற்கொள்வோம் என்று சொன்னார்.
என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு மட்டுமே அவர் வேலையில் சேரப் போகின்ற காரணத்தால் நானும் அவரும் சேர்ந்தே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள விபூதி விநாயகருக்கு நம் இருவர் கரங்களால் விபூதி அபிஷேகம் செய்து வேலை கிடைப்பதற்கான முதலாவது வழி பாட்டினை மிகச் சந்தோஷமாக ஆரம்பித்தோம்.
அதன் பின்னர் அனைத்துக் கோயில்களுக்கும் நாம் இருவரும் தைரியமாகச் சென்று எங்கெங்கு என்னென்ன பூஜைகள் செய்து எப்படியெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்தோம்.
தாய் தந்தையருடனும் தங்கைகளுடனும் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பல கோயில்களுக்குச் சென்று பல தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளேன். ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று வருவதில் கிடைக்கும் சந்தோஷம் எனக்கு இதுவரையில் கிடைத்ததில்லை.
அவர் வேடிக்கையாகச் சொல்லும் சில விஷயங்கள் என்னைச் சிந்திக்க வைக்கும்.
ஒரு வீட்டிற்கு இது வரைக்கும் வராத விருந்தாளி திடீரென வருவாரேயானால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் அவரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். என்னுடைய கடவுள் நம்பிக்கை காலம் தாழ்ந்து உன்னை பார்த்த பின்னர் தான் வந்திருக்கின்றது.
எனவே அனைத்துக் கடவுள்களும் என்னை இதுவரை வராத விருந்தாளியாகக் கருதி உன்னுடன் சேர்ந்து நான் செய்யும் பிரார்த்தனைகளை கட்டாயம் ஏற்றுக் கொண்டு மிக விரைவில் நிறைவேற்றுவார்கள் என்று சொல்வார்.
அதே போல யாருமே வழிபடாத ஒரு விக்ரஹத்தை நாம் மட்டும் வழிபட்டால் எவனுமே என்னை மதிக்கல. இவன் மட்டும் தான் கையெடுத்துக் கும்புடுறான். எனவே இவனது கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று எண்ணிக் கொண்டு கேட்பார் இல்லாமல் கிடக்கும் விக்ரஹங்களை வழி பட்டால் உடனே பலன் கிடைக்கும் என்பார்.
ஆரம்பத்தில் அவர் சொன்னது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு விநாயகர் விக்ரஹம் தோன்றி அசரீரியாக என்னைக் கண்டு பிடித்து வழி பட்டால் உனக்கு வேலை கிடைக்கும் என்னும் குரல் மாத்திரம் கேட்டதாக என்னிடம் அவர் கூறினார்.
அதன் காரணமாக அவர் மீண்டும் அனைத்துக் கோயில்களுக்கும் திரும்ப திரும்ப சென்று இதுவரை சென்று பார்க்காத மூலை முடுக்குகளில் எல்லாம் அவர் கனவில் வந்த அந்த மாதிரி உருவம் கொண்ட விநாயகர் விக்ரஹத்தை தேடுவார். நானும் கூட செல்வேன்.
இருவரும் சேர்ந்து ஒன்றாக தேடுவோம். ஆனால் அவர் கனவில் வந்த உருவம் அவருக்கு மட்டும் தான் தெரியும். எனவே பல இடங்களுக்குச் சென்று வழிபடுவோம்.
அவர் கனவில் வந்த அந்த விநாயகர் விக்ரஹம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு மரத்தடியின் கீழ் ஒரே ஒரு விளக்கு மாத்திரம் ஏற்றப்;பட்டு கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் யாருமே சென்று வழிபடாத ஒரு ஒதுக்குப்புற இடத்தில் இருப்பதைக் கண்டு பிடித்து மொத்தம் மூன்று மாதங்கள் தான் வழி பட்டார். நானும் கூடச் சென்றேன்.
அவர் சொன்னபடியே அவர் சொந்தக் காலில் நின்று அவராகவே சம்பாதித்து என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய அளவிற்கு அவருக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டது. வேலையிலும் சேர்ந்து கொண்டார்.
கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவருக்கு என் மூலம் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு நாம் இருவரும் சேர்ந்து வழிபடத் துவங்கியவுடன் இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு நல்ல பலன் கிடைத்தது என்பதனை உணர்ந்த நான் உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டேன்.
அதே கடவுள் வழிபாடுகள் நம் இருவரையும் இல்லறத்திலும் சேர்த்து வைக்கும் பரிபூரண நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.