அரசாங்க வேலை
என்னை அவரிடமிருந்து பிரிப்பதற்கு எனக்கோ அவருக்கோ தெரியாமல் நமது இருவர் வீட்டிலும் மிகவும் ரகசியமாக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வந்தார்கள்.
அதில் முதல் கட்டமாக அடமானத்தில் இருந்த சொந்த வீட்டினை என் தங்கையின் வீட்டுக்காரர் கடன் முழுவதையும் செலுத்தி திருப்பி விட்டார் என்று சொன்னார்கள்.
திருப்பதி சென்று திரும்பி வந்த காரணத்தால் தான் அடமானத்தில் இருந்த வீட்டினைத் திருப்ப முடிந்தது என்று எல்லோரிடமும் பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைத்தார்கள்..
திருப்பதிக்குச் சென்று வந்த பின்னர் என் தங்கையின் மகள்களுக்கு வரன் அமைந்தது உண்மை தான். ஆனால் அடமானத்தில் இருந்த வீட்டினைத் திருப்பும் அளவிற்கு எந்த விதமான அபரிமித வருமானமும் இல்லை என்பதால் எனக்கு அதில் சந்தேகம் எழுந்தது.
துருவித் துருவி ஆராய்ந்து பார்த்ததில் சம்பந்திகளிடம் சொந்த வீடு இருப்பதாகச் சொன்னதை அவர்கள் நம்பாத காரணத்தால் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்திலிருந்து எடுத்து வீட்டினை திருப்பி விட்டார்கள் என்று என்னுடைய தங்கை சொன்னதிலிருந்து தெரியவந்தது.
அப்படியானால் திருமணச் செலவுக்கு என்ன செய்வார்கள் என்னும் கேள்வி என்னுள் எழுந்தது. தனியாரிடம் அடமானத்தில் இருந்து வந்த வீட்டினை மீட்டு வங்கியில் மீண்டும் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்கள்.
அதற்கு அவரது தந்தை ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் பெற உதவியுள்ளார் என்னும் விவரமும் தெரியவந்தது. இது போன்ற ஆலோசனைகளை என் குடும்பத்தாருக்கு அவரது தந்தை தான் வழங்கியுள்ளார் என்ற விவரம் தெரிந்து கொண்டேன்.
அதனால் அவருடைய தந்தைக்கு என்ன பயன் என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது.
அதனை அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் தற்போது நம் இருவரது குடும்பங்களும் வாடகை வீட்டில் இருப்பதால் இங்கு நாம் இருவரும் ஒரே காம்பவுண்டில் இருக்க வேண்டியுள்ளது. இதுவே சொந்த வீட்டிற்குக் குடிபோகிறோம் என்று சொல்லி விட்டால் அந்த வீட்டிற்கு என் குடும்பம் குடிபெயர்வதின் மூலம் என்னை அவரிடமிருந்த தந்திரமாக சுலபமாக பிரித்து விடலாம் என்னும் சதித் திட்டம் பின்னால் உள்ளது என்பதனை அவர் சொல்ல நான் தெளிவாக அறிந்து கொண்டேன்.
நாங்கள் இருவரும் பிரியப் போகின்றோம் என்னும் மனக்கலக்கத்தில் இருந்த சமயம் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்து பணியமர்த்தும் ஆணை பதிவுத் தபால் மூலம் வந்தது.
அதனை என் முன்னிலையில் கையெழுத்து போட்டு தபால் காரரிடம் பெற்றுக் கொண்டு என்னிடம் படித்துக் காட்டி விளக்கம் சொன்னார். அப்போது அவரது தந்தை வீட்டில் இல்லாதால் உடனடியாக என்னையும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்று அவருடைய தாயாரிடம் விவரம் சொன்னார்.
உடனே அவரது தாயார் அவரை ஆசீர்வதித்து விட்டு என்னிடம் இவன் இங்கு இருந்து கொண்டு தந்தைக்கு உதவி செய்து கொண்டு இருப்பாரேயானால் உன்னைக் கரம்பிடிக்க முடியாது. எனவே வேலையில் சேர்ந்து கொண்டு உன்னை சுலபமாக திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஆசீர்வதித்தார்கள். இது தான் உண்மையான தாய்ப் பாசம் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அப்போது அடுத்த புதன் கிழமைக்குள் வேலையில் சேர வேண்டும் என்பதனை கேட்ட எனக்கு துக்கம் சூழ்ந்து கொண்டது. எனது கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.
உடனே அவரது தாயார் என்னை கட்டிப்பிடித்து ஆறுதல் கொன்னார்கள். மீண்டுமொரு முறை வழிபாடுகளைக் கைவிட்டு விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே நான் உடனடியாக அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வந்தேன்.
அவருக்கு அரசாங்க வேலைக்கான நியமன ஆணை வந்த நான்கு நாட்களில் அவசர அவசரமாக சொந்த வீட்டிற்கு கிரஹப் பிரவேசம் செய்து குடி பெயர்ந்தார்கள். எல்லோரிடமும் தகவல் சொல்லி அழைத்தார்கள். ஆனால் அவரை மட்டும் வேண்டுமென்றே அழைக்கவில்லை.
இது எதனால் என்று நான் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவெனில் முதலாவது அவர் என்னிடம் விடை பெறாமல் சென்று வேலையில் சேர வேண்டும். இரண்டாவது எனக்கு ஏதேனும் கடிதம் எழுதினால் கூட எனக்குக் கிடைக்க விடாமல் செய்து விடலாம் என்னும் எதிர் காலத் திட்டம் என்று தெரியவந்தது.
எங்களைப் பிரிக்க என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதனை நினைக்கும் போது எனக்கு என்னுடைய தாயார் மீதும் அவருக்கு அவருடைய தந்தையின் மீதும் வெறுப்பு தான் வந்தது.
அவர் வேலையில் சேருவதற்காக மருத்துவர் சான்றிதழ் பெறுபவை போன்ற பணிகளில் இருந்தார். புதன் கிழமையன்று வேலையில் சேருவதாக உத்தேசம்.
ஆனால் அவரது தந்தை முதன் முதலாக வேலையில் சேருவதால் செவ்வாய் கிழமையன்று புறப்பட்டுச் செல்ல வேண்டாம் என்றும் நல்ல நாள் பார்த்து இரண்டு மூன்று தினங்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்லுமாறும் சொன்னார்.
அதாவது நாங்கள் வீட்டைக் காலி செய்து விட்டு புது வீட்டிற்கு குடி செல்லும் நாளன்றே வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு அவருக்கு கட்டளையிட்டார்.
ஆனால் அவர் என்னைப் பார்க்காமல் போக முடியாது என்ற காரணத்தால் மருத்துவச் சான்று பெறுவதில் கால தாமதம் ஆவதாகக் கூறி வழக்கம் போல் செவ்வாய் கிழமையன்று என்னுடன் இராகு கால பூஜையில் கலந்து கொண்டு நீண்ட நேரம் மனம் விட்டு உரையாடிய பின்னர் என்னைக் கண்ணீரில் மிதக்க விட்டு விட்டு புதன் கிழமையன்று காலையில் பணியில் சேர புறப்பட்டுச் சென்றார்.
அச்சமயம் அவருடைய தந்தையும் அவருடன் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. காரணம் என்னவென்று அவரது தாயரிடம் கேட்டதில் அவர் முதன் முதலில் வேலையில் சேரும் போதே என்னையும் அழைத்துச் சென்று விடுவார் என்னும் பயம் தான் என்பதனை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.